அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் மாணவர்கள் இணைந்து “தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பு'”என்கிற புதிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இவ்வமைப்பின் ஒருங்கிணைப் பாளர்களாக,மாணவர்கள் இளங்கோ,நெப்போலியன், சிவக்குமார் ஆகியோர் செயல்படுகின்றனர்.ஈழம் தொடர்பான முதல் கருத்தரங்கத்தை இந்த அமைப்பினர் சென்னையில் நடத்தினர். இதில், ‘ஈழச்சிக்கலும் ஊடகங்களும்’என்னும் தலைப்பில் தலித்முரசு ஆசிரியர் புனிதபாண்டியன், ‘ஈழச்சிக்கலும் ஒப்பந்தங்களும்’ என்னும் தலைப்பில் முன்னாள் துணைவேந்தர் இராமசாமி ஆகியோர் பேசினர்.


‘ஈழச்சிக்கலும் உலக நாடுகளும்’ என்கிற தலைப்பில் பேசிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன், “இன்றைக்கு ஈழச்சிக்கல் சர்வதேசச் சிக்கலாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், உணர்வாளர்கள் எல்லோருமே இரண்டு விஷயங்களுக்காகப் போராடுகிறோம்.ஒன்று, சர்வதேசக் குற்றவாளியாக ராஜபக்சே அறிவிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். மற்றொன்று, ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்தித் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். இந்த இரண்டு செய்திகளும் எந்த வகையில் சாத்தியமானவை என நீங்கள் புரிந்துகொள்வது அவசியம்.

ஒரு நாட்டின் மீது போர்க்குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்கள் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் தீர்மானமாகக் கொண்டுவரும் போது, விசாரணை,புலனாய்வு என இரண்டு படிநிலைகளில்தான் கவனிக் கப்படும்.அதில் விசாரணையை நீதிபதி தருஸ்மான் தலைமையிலான குழு முடித்துவிட்டது.இனி அதன் அடிப்படையில் சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப் பட வேண்டும்.புலனாய்வு செய்த பிறகு தரப்படும் அறிக்கை,ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டு அங்கு ஏற்கப்படும் பட்சத்தில்...அதனைத் தொடர்ந்து பாதுகாப்புக் கவுன்சில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்.ஆனால் பாதுகாப்புக் குழுவில் நிரந்தர நாடுகளில் ஒன்றாக உள்ள சீனா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கையைக் காப்பாற்றும்.

அப்படியானால்,ராஜபக்சேவை தண்டிக்கவே முடியாதா?முடியும்.எப்படி?புலனாய்வுக் குழுவின் விசாரணை ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளி எனத் தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்தால் போதும். ராஜபக்சே உடனே அதிபர் பதவியை இழப்பார். ஒரு நொடி கூட அதிபராக அவர் நீடிக்க முடியாது.அப்போது அவருக்குரிய ராணுவப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் பறிபோகும்.அதிகாரமற்ற ராஜபக்சேவை ஆதரிக்கச் சீனா முன் வருமா என்பது கேள்வி.அந்தக் காலம் வரும்.வந்தே தீரும்.மக்கள் மன்றம் அந்தக் கொடூரனைத் தண்டிக்கும். அது வரை உணர்வுமிக்க உங்களது போராட்டங்கள் தொடரட்டும். வீழ்வது இழிவு அன்று.வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு”என்று ஈழச்சிக்கலை விளக்கிப் பேசினார்.

Pin It