டெல்லி வாய்க்குள்ளிலிருந்தும்
சீனவாய்க் குள்ளிலிருந்தும்
கொள்ளிவாய்த் தீக்கணைகள்
குவிந்ததனால் கொழும்பரசின்
முள்ளிவாய்க்கால் போரில்
மௌனித்து அமைதிக்காய்
வெள்ளைக் கொடியேந்தி
வந்தோமே காண்கிலையோ?

வெள்ளைக் கொடிவீசி
வந்தாரும் விதிமீறிக்
கள்ளக்கொலை செய்த
காட்டுவெறி காண்கிலையோ?
பிள்ளைக்கறி கேட்கும்
பேயர்களின் பலிக்களமாம்
முள்வேலிக்குள் கதறும்
மரணஒலி கேட்கிலையோ?

அய்யோ, உலகே,
அய்யகோ, பேருலகே
பொய்யோ உலகசபை?
புனைவுகளோ சபைநெறிகள்
கையேந்தி வந்தாரைக்
கரமேந்திக் காத்தஇனம்
கையேந்தக் காண்கிலையோ
கஞ்சிக்கும் கருணைக்கும்?

பன்னிரெண்டு கோடிக்கண்
பார்த்திருந்தும் பயனுண்டா?
பன்னிரெண்டு கோடிக்கை
பலமிருந்தும் பலனுண்டா?
என்னிருந்து என்ன பயன்?
ஈழவர்க்குத் தாய்த்தமிழர்
மண்ணிருந்தும் என்னபயன்?
வரலாறு காரித்துப்பும்

பெருங்குற்றம் புரிந்துவிட்டோம்
பேரழிவின் சாட்சிகளாய்
இருந்துவிட்டோம்; இனியேனும்
திருந்திவிட்டோம் எனக்காட்டத்
தென்தமிழர் அறுகோடி
திரண்டுவிட்டோம் ஒரு குடையில்
என்பதொன்றே தீர்வாகும்

முல்லைப்போர் முடிவன்று;
முழுப்போரே இனிமேல்தான்!
எல்லைக்குள் எரிந்திருந்த
ஈழப்போர் இடம்மாறி
எல்லைதாண்டிப் புவியின்
எண்பது நாட்டுத் தமிழர்
உள்ளத்தீயாய் இணைந்து
உலகப்போராய் மூளும்

Pin It