நீண்ட காலம் கருணை மனு நிலுவையில் இருப்பவர்களின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அது தொடர்பாக அண்மையில் உச்ச நீதிமன்றம் புல்லர் வழக்கில் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

கருணை மனு மீது நடவடிக்கை எடுக்க எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தண்டனைக் குறைப்பு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. மரணதண்டனையே கூடாது, அதனை சட்டப் புத்தகத்திலிருந்தே அகற்றிட வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், இவ்வறிவிப்பு மனித நேயத்திற்கும், மனித உரிமைக்கும் புறம்பானதாக உள்ளது.

ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிமைச் சிறையில் வாடும் மரணதண்டனைக் கைதிகள், ஆயுள் தண்டனைக்கான கால அளவைவிடக் கூடுதலான காலம் தண்டனையை அனுபவித்திருந்தாலும், அவர்களைத் தூக்கிலும் தொங்கவிட வேண்டும் என்று சொல்வது எத்தனை கொடூரமானது?

குற்றத்தின் தீவிரத்தன்மையைக் குறைக்கின்ற சூழ்நிலையை பரிசீலிக்கவும், மரணதண்டனையை மாற்றவும், அரசின் அறிவுரை இல்லாமலே, முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு இருக்க வேண்டாமா? என்று கேட்கிறார், மறைந்த குடியரசுத் தலைவர் திரு வெங்கட்ராமன்.அதாவது கருணை மனு மீது எடுக்கப்படும்  முடிவுகள் அரசின் அறிவுரையின் படியே எடுக்கப்படுகின்றன என்பது அவருடைய கேள்வியில் மறைந்திருக்கும் செய்தி.

இதில் ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்பு பெரும்பங்காற்றுகிறது எனும்போது, இது அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கே எதிர்மறையானது.
பதவி ஏற்றதில் இருந்து, கருணை மனுக்களை கருணையே இல்லாமல் நிராகரிப்பதையே முகாமையான கடமையாகச் செய்துகொண்டிருக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வேகத்திற்கு இத்தீர்ப்பு வலுவூட்டுவதாக இருக்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் பிணைக்கப்பட்டிருக்கும், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் இத்தீர்ப்பு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது என்று செய்திகள் வருகின்றன. ஆனால் ராஜீவ் கொலை வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. ஜெயின் கமிசன் சுட்டிக்காட்டிய நபர்கள் எந்த விசாரணைக்கும் இதுவரை உட்படுத்தப்படவில்லை. விசாரணையே முடிவடையாத வழக்கில் தண்டனையும் உறுதி செய்யப்பட முடியாது என்பதே உண்மை.

ஆதிக்க சக்திகள் தாங்கள் விருப்பப்படும் போது தூக்கில் தொங்கவிடுவதற்கு மனித உயிர்கள் ஒன்றும் மலிவானவை அல்ல.அரசியல் சதுரங்கத்தில் மனித உயிர்களை வைத்து விளையாடுவதற்குக் கருணை மனுக்கள் தாயக் கட்டைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ப தற்கு நாடறிந்த சான்று ராஜீவ் கொலை வழக்கு.

மரண தண்டனை என்பது மனித உரிமைக்கு எதிரானது. சட்டத்திலிருந்தே அகற்றப்பட வேண்டிய ஒன்று.

Pin It