இந்திய அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட, உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

இந்த ஐந்து மாநிலங்களிலும் உத்திரப்பிரதேசத் தேர்தல் மட்டும் அதி முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்பட்டது.

காரணம், அங்கு ஆட்சியைப் பிடிக்கப் போவது முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியா அல்லது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியா என்பதல்ல பிரச்சினை. மாறாக, ஆட்சியை நாங்கள் தான் அமைப்போம் என்று 403 தொகுதிகளில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன ஆகப்போகிறது என்பதுதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

pho_1இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், எதிர்காலப் பிரதமர், மீண்டும் புத்துயிர் ஊட்டி அசுர பலத்துடன் காங்கிரஸ் கட்சியை, இந்தியா முழுவதும் செயல்பட வைக்கப்போகிறவர் என்றெல்லாம் காங்கிரஸ் கட்சியாலும், ஊடகங்களாலும் தூக்கி நிறுத்தப்பட்ட இராகுல் காந்தி இங்கு மையப்புள்ளியாக மாறியிருந்தார்.

கிராமங்களுக்குச் செல்வார், திடீர் திடீரெனக் குடிசைகளுக்குள் நுழைந்து குசலம் விசாரிப்பார். தெருவில் இருக்கும் மூதாட்டியின் கைகளைப் பிடித்துக் கொள்வார். பாமர மக்களோடு தானும் ஒன்றி இருப்பதுபோலக் காட்டிக்கொள்வார் ராகுல்காந்தி.

உத்திரப்பிரதேசத் தேர்தல் களத்தில் இராகுல்காந்தி, அவரின் தாயார் சோனியாகாந்தி, இராகுலின் சகோதரி பிரியங்கா, பிரியங்காவின் கணவர் இராபர்ட் வதேரா என்று நேருவின் குடும்பமே தேர்தல் பிரச்சாரத்தில் வரிந்து கட்டிக்கொண்டு மேடையேறினார்கள்.

நடந்ததோ வேறு ! மக்களை ஏமாற்ற முனைந்தவர்களை மக்கள் ஏமாற்றி விட்டார்கள்.

உ.பி.யின் முக்கிய மாநிலக் கட்சியான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இவைகளைக் கடந்து, தேசியக் கட்சியான பாரதிய சனதா கட்சியையும், கடந்து 4ஆவது இடத்தில் காங்கிரசைப் படுபாதாளத்தில் தள்ளிவிட்டார்கள் அம்மாநில மக்கள்.

முன்னூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில், போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரிய லோக்தளம் என்ற மாநிலக் கட்சியுடன் கூட்டணி வைத்தும்கூட அது வெற்றிபெற்ற தொகுதிகள் 38தான்.

சோனியாவுக்கும், ராகுலுக்கும் மேடைகளின் எதிரே கூட்டம் கூடியதே ஒழிய, வாக்குகள் "கூட'வில்லை என்பதை இந்தத் தேர்தல் உறுதி செய்துவிட்டது.

அடுத்த தேசியக் கட்சியான பாரதிய சனதாக் கட்சியின் நிலையும் இதேதான்.

2007ஆம் ஆண்டுத் தேர்தலில் 22 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் 2012 தேர்தலில் 16 இடங்கள் கூடுதலாகப் பெற்று 38 என்ற இடத்தில் நின்று விட்டது.

2007ஆம் ஆண்டுத் தேர்தலில் 51 இடங்களைப் பெற்றிருந்த பா.ச.க. 2012 தேர்தலில் 4 இடங்களைப் பறிகொடுத்து 47 தொகுதிகளாக இறங்கிவிட்டது.

அத்வானி, நிதின் கட்காரி என்று அக்கட்சியின் முன்னணித் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வெளிப்படையாகிவிட்டது.

அதேசமயம் சென்ற உ.பி. மாநிலப் பொதுத்தேர்தலில் 206 இடங்களைக் கொடுத்து ஆட்சி புரிய வைத்த பகுஜன் சமாஜ் கட்சியை, இந்தத் தேர்தலில் 79 இடங்களை மட்டும் கொடுத்து எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வைத்துவிட்டார்கள் மக்கள். 97 இடங்களோடு முன்பு எதிர்க்கட்சியாக இருந்த சமாஜ்வாதி கட்சியை இத்தேர்தலில் 224 இடங்களோடு ஆட்சிக்கட்டிலிலும் ஏற்றி விட்டார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில், 2007ஆம் ஆண்டு மாநிலக் கட்சியான அகாலிதளத்தை ஆளும்கட்சியாக்கி, காங்கிரசை எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தி, பாரதிய சனதா கட்சியைப் புறக்கணித்ததுபோல, இந்தத் தேர்தலிலும் அதே வரிசைப்படியே அக்கட்சிகளை அமர்த்தியிருக்கிறார்கள் மக்கள்.

உத்திரகாண்ட் மாநிலத்தில் வலிமையான மாநிலக் கட்சிகள் உருவாகாத காரணத்தால், பா.ஜ.கவும், காங்கிரசும் நிலைகொண்டு நிற்கிறது. என்றாலும் கூட இந்தத் தேர்தலின் முடிவில் இவ்விரு கட்சிகளில் எந்த ஒரு கட்சியாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை.

pho_270 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில் 31 இடங்களைப் பா.ஜ.கவும், 32 இடங்களை காங்கிரசும் பிடித்திருக்கின்றன. ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை மக்கள் யாருக்கும் அளிக்கவில்லை. எஞ்சி இருக்கும் சிறு கட்சிகள், சுயேச்சை இடங்களான 7 உறுப்பினர்களில் சிலரை இழுத்தால் மட்டுமே இங்கு ஆட்சி அமைக்க முடியும்.(இக்கட்டுரை எழுதும்போது இருந்த நிலை இது)

சிறிய மாநிலங்களான கோவாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. மணிப்பூரில் மட்டுமே காங்கிரசால் தனித்து ஆட்சி அமைக்க முடிந்திருக்கிறது.

இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளைக் குறித்துக் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, காங்கிரசின் இந்தத் தோல்விக்கு வேட்பாளர்கள் தேர்வு சரியில்லை, காங்கிரசில் ஏராளமான தலைவர்கள் இருக்கிறார்கள், உ.பி. யில் காங்கிரசை வழிநடத்தச் சரியான தலைவர் இல்லை என்று பேசியிருப்பது அவரின் தலைமைத்துவப் பண்புக்கு முரணாக இருக்கிறது ‡ சரியான விளக்கமாகத் தெரியவில்லை.

இராகுல் காந்தி பேசும்போது, உ.பி.யில் காங்கிரஸ் பிரச்சாரத்தை நான்தான் வழிநடத்தினேன். இம்மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றதற்குத் தானே பொறுப்பு. இத்தோல்வி தனக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

ஏறத்தாழ இதே பாணியைத்தான் பா.ஜ.கவும் பயன்படுத்தியிருக்கிறது.

தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஒருவர் கூறினார். இது வாக்காளர்களை அவமானப்படுத்தும் பேச்சு என்பது காங்கிரசுக்குப் புரியவில்லை.

அயோத்திப் பிரச்சினையை இழுத்துப்பிடித்துக் கொண்டு அரசியல் வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொண்டு இருக்கும் வேலையை பா.ஜ.க. செய்துகொண்டு இருக்கிறது.

ஆகவே காங்கிரஸ், பா.ஜ.க., போன்ற தேசிய கட்சிகளை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதையே இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் தெளிவுபடுத்துகின்றன.

இத்தேர்தல் முடிவுகள் இந்த ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் வர இருக்கின்ற குஜராத், இமாச்சலப்பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகம், இராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கும், 2014ஆம் ஆண்டு வர இருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கும் முன்னோட்டம் என்றால் மிகையாகாது.

இந்தியாவின் எதிர்காலம் இனிமேல் தேசியக் கட்சிகளிடம் இருக்கப்போவதில்லை. மாநிலக் கட்சிகளின் வலிமைக்குள்தான் அது அமையப்போகிறது.

Pin It