"வெங்கிட்டரமணா கோவிந்தாஆ கோஓவிந்தா"
"வெங்கிடாசலபதிக்குத் தர்மம் செய்யுங்கள்"
காங்கிரசின் பேரால் எலக்ஷன் நடத்துகின்றவர்கள் தங்களுடைய (அதாவது அபேட்சகர்களாக நிற்கும் ஆசாமிகள் தனிப்பட்ட முறையில் தங்களுடைய) யோக்கியதைகள் தேசத்தார்கள் அறிந்திருப்பதால் தங்களுக்குச் சொந்தத்தில் ஓட்டு கிடைக்காது என்று தீர்மானம் செய்து கொண்டு "காந்திக்கு ஓட்டுச் செய்யுங்கள்" என்று கேட்டு மக்களை ஏமாற்றி வருவது ஒரு புறமிருக்க, இவ்வேமாற்றுதலை ஜஸ்டிஸ் கட்சியார் வெளியாக்கும் முறையில் காந்தியார் காங்கிரசை விட்டுப் போய் விடுகிறேனென்று சொல்லுவதையும் அந்தப்படி காங்கிரசை விட்டு அவர் வெளியேறுவதற்கு உண்டான காரணங்களை அவர் எடுத்துச் சொன்னபடியே வெளியிடுவதையும் பார்த்த காங்கிரஸ்காரர்களும், பார்ப்பனப் பத்திரிக்கைகளும் அடக்க முடியாத ஆத்திரம் கொண்டு வாயில் வந்தபடி எல்லாம் இழிதகமையில் வைகின்றனர். இதை நாம் ஒரு வெட்கம் கெட்ட ஆத்திரம் என்றும், மானங்கெட்ட பிரசாரம் என்றும் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.காந்தியார் வெட்ட வெளிச்சமாக முழு முட்டாள்களுக்கும், புரியும் மாதிரியில் தான் விலகும் காரணங்களை விளக்கியிருக்கிறார்.
1. என்னைத் தலைவர் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் என் இஷ்டப்படி நடப்பதில்லை. ஆனால் என்னை உபயோகித்துக் கொள்ளுகிறார்கள்.
2. காங்கிரஸ்காரர்கள் பலரிடத்தில் நாணையமில்லை.
3. என்னை உபயோகித்துப் பயன் பெறுவதற்காகவே என்னிடம் பக்தி விசுவாசம் உள்ளவர்கள் போல் நடிக்கிறார்கள்.
4. கதரில் நம்பிக்கை இல்லாதவர்கள் கதரைக் கட்டி ஏமாற்றுகிறார்கள்.
5. சத்தியத்திலும், அஹிம்சையிலும் நம்பிக்கையில்லாதவர்கள் சத்தியவான்கள் போல வேஷம் போட்டு ஏமாற்றுகிறார்கள் என்றும் சொன்னதோடு, இன்னமும் காங்கிரஸ்காரர் என்பவர்களின் வண்டவாளங்களையும் நாணையக்குறைவுகளையும் அவர் நன்றாய் எடுத்துக் காட்டிவிட்டு, எந்தக் காரணத்தை முன்னிட்டும் தான் இனிமேல் காங்கிரசில் இருக்க முடியாது என்று முடிவாய் சொல்லியும் விட்டார்.
இப்படி இருந்தும் எலக்ஷனில் நிற்பவர்கள் "காந்தியாருக்காக ஓட்டுப் போடுங்கள் நிற்கும் ஆசாமிகளைக் கவனிக்காதீர்கள்" என்று கேட்டால் இதில் கடுகளவாவது நாணையமோ, மானம் வெட்கமோ இருக்கின்றதா என்றுதான் கேட்கின்றோம்.
ஓட்டர்கள் எப்படி வேண்டுமானாலும் ஓட்டுச் செய்யட்டும். நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. இன்று நம்நாட்டு மக்கள் 100க்கு 92 பேர்கள் தற்குறிகள். அதிலும் விஷயம் தெரிய கவலையுள்ளவர்கள் நூற்றுக்கு ஒருவர் இருவர் கூட இருக்க மாட்டார்கள். இவர்களிலும் உண்மையான விஷயம் தெரிந்து கொள்ளக் கூடியவர்களும் தெரிந்து கொள்ள சௌகரியமுடையவர்களும் 1000ல் இரண்டொருவர் கூட இருக்க முடியுமா? என்பது சந்தேகம்.
மேலும் பார்ப்பனர் பிரசாரமும், பார்ப்பனக் கூலிகள் பிரசாரமுமேதான் நடைபெற சாத்தியமாகின்றது. அவர்கள் தங்கள் வாழ்வுக்கும், ஆதிக்கத்துக்கும் மற்றவர்களை அடக்கி ஆண்டு எல்லா உத்தியோகங்களையும் பதவிகளையும் தாங்களே அனுபவிக்கவும் அனுகூலமாகவே தங்கள் பிரசாரங்கள் நடக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்கு பார்ப்பனரல்லாதாரிடமே பெரிதும் பணம் பரித்து பார்ப்பனரல்லாதாரிலே கூலிகளைப் பிடித்து பிரசாரம் நடத்தி வருகிறார்கள். பத்திரிக்கைகளும் பெரிதும் பார்ப்பனர்களே நடத்துகிறார்கள் என்பதோடு பத்திரிகை நிருபர்களும் எல்லோரும் பார்ப்பனர்களாகவே இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர்களுடைய ஏதாவது ஒரு புரட்டை பார்ப்பனரல்லாதார் வெளிப்படுத்தினால் அதற்கு இவ்வளவு ஆத்திரப்படுவ தென்றால் மனம் போனபடி வைவதென்றால், இதை ஏன் மானங்கெட்ட ஆத்திரம் என்று சொல்லக்கூடாது என்று மறுபடியும் கேட்கின்றோம்.
தெருவில் திரியும் சோம்பேரிகள், நாணையமாய் பிழைக்க மார்க்கமில்லாத அயோக்கியர்கள் ஆகியவர்கள் தங்கள் நிஜ வேஷத்தோடு போனால் பிச்சை போடாமல் உதைத்து அனுப்புவார்கள் எனப் பயந்து மேலெல்லாம் பட்டை நாமங்களையும், உருத்திராட்ச விபூதிகளையும் அணிந்து கொண்டு "வெங்கடாசலபதிக்கு கோவிந்தா வெங்கடாசலபதிக்கு தர்மம் போடுங்கள்" "பழனியாண்டவனுக்கு அரோகரா முருகனுக்கு தர்மம் செய்யுங்கள்" என்று கூப்பாடு போட்டு பிச்சை கேட்பதற்கும், இந்த தேர்தல் ஆட்கள் "மகாத்மா காந்திக்கு ஜே காந்தியாருக்கு ஓட்டுப் போடுங்கள்" என்று கூப்பாடு போட்டு ஓட்டுக் கேட்பதற்கும் என்ன வித்தியாசம் என்றுதான் தெரிய ஆசைப்படுகிறோம்.
அதுவும் தோழர் காந்தியாரே இந்த விஷயம் தெரிந்து "காங்கிரஸ்காரர்கள் என்னிடம் பக்தி விசுவாசம் இருப்பதாக வேஷம் போட்டுக் காட்டி பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆதலால் நான் காங்கிரசை விட்டு வெளியேறுகிறேன்" என்று சொன்ன பிறகும் கூட மறுபடியும் இந்தப் பாடம் படித்து ஓட்டுப் பிச்சை கேட்கிறார்கள் என்றால் இந்தக் கூட்டத்திற்கு என்றுதான் மானம் வெட்கம் நாணையம் வரும் என்று கேட்கின்றோம்.
இந்த நிலையில் "ஜஸ்டிஸ் கட்சியார் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்" என்றும் "தோழர் ராமசாமி முதலியார் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்" என்றும் பார்ப்பனப் பத்திரிகைகளும், கூலிகளும் எழுதுவதின் யோக்கியதை நமக்கு விளங்கவில்லை. கடவுள் பெயரைச் சொல்லி பல சோம்பேரிகளும் அயோக்கியர்களும் பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதற்காகவே உலகில் கடவுள் ஒழிப்புச் சங்கங்கள் தோன்றி வேலை செய்து ஒரு அளவு வெற்றி பெறுவது போலவே பார்ப்பனீய ஒழிப்புச் சங்கங்கள் தோன்றி வேலை செய்து ஒரு அளவுக்கு வெற்றி பெற்று வருகின்றன என்றாலும் இன்னமும் பலமான வேலைகள் செய்ய இம் மானங்கெட்ட செய்கைகள் தூண்டுகின்றன. நல்ல வேளையாக தோழர் காந்தியாரே இந்த விஷயம் தெரிந்துதானே காங்கிரசை விட்டு ஒழிந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டதால், இனி காந்தி ஒழிப்புச் சங்கங்களுக்கு வேலை குறைந்ததென்றே மகிழ்ச்சி அடைகின்றோம்.
மற்றுமொரு போக்கிறித்தனம் என்னவென்றால், பம்பாய்க்குப் போன பார்ப்பனர்கள் அங்கிருந்து கொண்டு சர். ஷண்முகத்திற்கு ஓட்டு இல்லையென்று பத்திரிகைகளுக்குச் சேதி அனுப்புகிறார்களென்றால் இதை விட சூட்சிக்கு வேறு ஆதாரம் என்ன?
முடிவாக வரப்போகும் தேர்தல்களில் வாக்காளர்கள் இந்தப் புரட்டுகளுக்கு ஏமாந்து போகாமல் அபேட்சகர்களின் யோக்கியதையையும், செய்யப் போகும் வேலையையும் நன்றாய் அறிந்து தங்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும் என்றே வேண்டிக் கொள்ளுகிறோம்.
(பகுத்தறிவு துணைத் தலையங்கம் 28.10.1934)