‘கெடக்கிறதெல்லாம் கெடக்கட்டும் கெழவனத் தூக்கி மேடையில வையி’ன்னு சொல்றது, நம்ம அசாரே தாத்தாவுக்குத்தான் ரொம்பப் பொருத்தமா இருக்கும். நாட்டுல ஒவ்வொரு மாநிலத்துலயும் ஒவ்வொரு பிரச்சனை, மேற்கு வங்கத்துல மாவோயிஸ்ட்டுகள் பிரச்சினை, கேரளாவுலயும், தமிழ்நாட்டுலயும் முல்லைப் பெரியாறு பிரச்சினை, தமிழ்நாட்டுல பரமக்குடித் துப்பாக்கிச் சூடு, மீனவர் பிரச்சினை, ஒட்டு மொத்த இந்தியாவுலயும் அன்னிய முதலீடு பிரச்சினை. இப்படி நாடே அல்லோகலப்பட்டுக் கெடக்குது. நம்ம ஊடகக் காந்தி என்னடான்னா, இதப்பத்தியயல்லாம் வாயத் தொறக்காம, மீண்டும் வருவேன்ற மாதிரி, மறுபடியும் ராம் லீலா மைதானத்துக்குப் போயி ஒரு நாள் கூத்துக்கு வேசங்கட்டிட்டு வந்திருக்காரு.

ஊழல ஒழிக்கணும், நாட்டைக் காப்பாத்தணும் - எல்லாஞ் சரிதான். இதெல்லாம் நடக்கணும்னா மக்கள் நல்லாருக்கணுமா இல்லையா? காந்தி குல்லாயப் போட்டுக்கிட்டு, கதர் சட்டய மாட்டிக்கிட்டா மட்டும் போதுமா? காந்தின்னா யாரு, தேசப்பிதா. தேசத்துல எந்த மூலையில மக்களுக்குப் பிரச்சினைன்னாலும், ஓடி வர வேணாம், ஒக்காந்த இடத்துல இருந்தாவது குரல் கொடுக்கணும். ஆனா அவதார காந்தி அசாரேக்கு தில்லிதான் தேசம். ஊழல் மட்டுந்தான் ஒரே பிரச்சினை. லோக்பால் மசோதா - அதுக்குள்ள பிரதமரக் கொண்டு வரணும். நீதித்துறை உள்பட ஒட்டுமொத்தமா எல்லாரையும் லோக்பால் வரம்புக்குள்ள வளைச்சுப் போட்றணும். இதுக்காகத்தான் அன்னா அசாரே தலைமையில, தேச பக்தர்கள் எல்லாம் ஒன்னுசேந்து சாப்பிடாமக் கொள்ளாம போராடிட்டு இருக்காங்க.

எல்லாரையும் வரம்புக்குள்ள கொண்டுவந்து நிறுத்திட்டு, இவுங்க மட்டும் வரம்பில்லாத அதிகாரத்தோட ஆதிக்கம் பண்ணனும்னு நினைக்கிறாங்க. பின்ன லோக்பால் மசோதாங்கறது என்ன ? அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு வெளியில, எதுக்கும் கட்டுப்படாத ஒரு அதிகார மையம். அதாவது, அந்தக் காலத்துல ராஜகுருக்கள்னு ஒரு கூட்டம் இருந்ததே...அட, அண்ணாவோட சந்திரமோகன் நாடகத்துலகூட காகப்பட்டர்னு ஒருத்தர் வருவாரே, அவர மாதிரி. அவுங்க அரசனுக்குப் பக்கத்துல இருப்பாங்க. ஆனா, அரசனோட அதிகாரத்துக்கும் மேல, அதாவது அரசனோட தலமேல ஏறி உக்காந்துட்டு, நாட்டையே ஆட்டி வைக்கிறவனுங்க. மறுபடியும் அப்படி ஒரு அநியாயத்த செய்யத்தான் அன்னா அசாரே கும்பல் அடிபோடுது.

ஏற்கனவே, காஷ்மீர், மணிப்பூர் மாநிலங்கள்ல, இராணுவத்துக்கு குடுத்துருக்கிற, சிறப்பு அதிகாரச் சட்டத்தால, அந்த மக்கள் தினந்தினம் செத்துக்கிட்டிருக்காங்க. அவங்க வாழ்க்கை ஒவ்வொருநாளும் போராட்டத்தோடதான் தொடங்குது. மணிப்பூர்ல ஒரு பொண்ணு ஐரோம் சர்மிளான்னு. 11 ஆண்டுகளா, பட்டினிப் போராட்டம் நடத்திட்டு இருக்கு. இந்தக் கொடுமைகளே தீர்க்க முடியாமக் கிடக்கும்போது, இன்னொன்னத் தூக்கிட்டுக் கிளம்பிட்டாங்க. இராணுவச் சிறப்புச் சட்டத்த திரும்பப் பெறக் கூடாதுன்னு, நம்ம ஊர் துக்ளக் சோ தொடர்ந்து கத்திட்டிருக்காரு. இவரு அன்னா அசாரேவ எதிர்க்கிற மாதிரி எதிர்த்து, அப்புறம் சரி செய்துக்குவாறு.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில, ரெண்டு மாநில மக்களும் வாழ்வா சாவான்னு போராடிட்டு இருக்காங்க. இதெல்லாம் இவர் கண்ணுக்குத் தெரியல. இந்திய தேசியம் பேசுற வாய்க்கு, இந்தப் பிரச்சினையில பேசறதுக்கு ஒன்னுமில்லாமப் போயிருச்சோ! அதே மாதிரி கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினை. ஆன்னா...ஊன்னா... சாப்பிட மாட்டேன்னு சொல்றது இல்லன்ன மெளன விரதம்னு சொல்லி கிராமத்துல போயி உக்காந்துக்கறது. அப்புறம் கேள்வி கேட்கறதுக்கு லஞ்சம் கேட்ட அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை கொடுக்கனும்னு அசாரே சொல்லியிருக்காரு. இன்னொன்னையும் சொல்லியிருக்காரு, மது அருந்துபவர்களைச் செருப்பால் அடிப்பேன்னு சொல்லியிருக்காரு. என்ன இருந்தாலும் காந்தியவாதி இல்லையா? காந்தியவாதின்னா யாரு, காந்திக் குல்லா, கதர்ச்சட்டய மட்டும் வச்சிக்கிட்டு, அவரோட கொள்கைகள காத்துல பறக்கவிட்டவங்க அப்படித்தானே இப்ப நம்ம நாட்டுல நடந்துட்டிருக்கு. இவரோட குழுவுல இருக்குறவங்க எல்லார் மேலயும் ஏதோ ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கு. இருந்தாலும் இவங்கதான் ஊழலை ஒழிக்கப் பிறந்த மகாத்மாக்கள்னு மக்கள் நம்பிட்டிருக்காங்க. நம்ப வைக்கப்பட்டிருக்காங்க. பனியன் கிழிஞ்சத மறைக்க சட்டயப் போட்டுக்கற மாதிரி, பெருமுதலாளிகளோட பொருளாதாரச் சுரண்டலை மறைக்க, அன்னா அசாரேவோட, கதர்ச்சட்ட முன்வந்திருக்கு.

இத எப்ப மக்கள் புரிஞ்சிக்கிறது ! பொழுது எப்ப விடியுறது !

Pin It