நூல் அறிமுகம்

காந்தி படுகொலையில் பார்ப்பனப் பின்னணி

கொளத்தூர் மணி

வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்,
29, இதழியலாளர் குடியிருப்பு,
திருவான்மியூர், சென்னை - 41
விலை ரூ. 20/-

"காந்தி படுகொலையில் பார்ப்பனப் பின்னணி" என்ற நூலைப் பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. நூலின் ஆசிரியர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அவர் ஆற்றிய உரையே இந்நூலாக ஆக்கப்பட்டுள்ளது.

காந்தியின் படுகொலையில் பார்ப்பனியம் எவ்வாறு பின்னணியில் இயங்கியுள்ளது என்பதையும், அதில் ஆர்.எஸ்.எஸ். பங்கையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

குறிப்பாக, காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே எழுதிய" நான் ஏன் காந்தியைக் கொன்றேன்" என்ற நூலின் மூலம், நாதுராம் கோட்சேவும், அவர் தம்பியும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் என்பதை உறுதி செயகிறார் நூலின் ஆசிரியர்.

1938ஆம் ஆண்டு ஐதராபாத் நிஜாமை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். நடத்திய போராட்டத்தின் போது, அதில் கலந்து கொண்ட நாதுராம் கோட்சே 20 ஆண்டுகள் சிறைப்பட்டு, சிறையில் கைதிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் வகுப்புகளை கோட்சே நடத்தியுள்ளார் என்பன போன்ற செய்திகளின் மூலம் கோட்சே ஒரு தீவிரமான ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை நிறுவி, பார்ப்பனியச் சதியை ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ள பாங்கு அருமை.

இன்னமும் காந்தியின் படுகொலை நிகழ்வில் பார்ப்பனியத்தின் பங்கும் பின்னணியும் பல்வேறு கோணங்களில் இந்நூல் விளக்குகிறது.

இந்நூல் தோழர் கொளத்தூர் மணியின் மேடை உரை என்பதனால், காந்தியின் படுகொலை பற்றி மட்டும் இல்லாமல், தந்தை பெரியாரின் கருத்துகளைத் தாங்கிப் பல்வேறு செய்திகள் இடம் பெற்றுள்ளது.

1924இல் வைக்கத்தில் கோயிலைச் சுற்றியுள்ள 4 தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்கக் கூடாது என்ற கொடுமைக்கு எதிராகத் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய வைக்கம் போராட்டம் பற்றி அனைவரும் அறிவர். அப்போராட்டத்தின் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் என்பது உலகறிந்த செய்தி.

ஆனால் இந்த வைக்கம் போராட்டத்தைப் பற்றி தன்னுடைய "யங் இந்தியா" இதழிலும், சத்திய சோதனை நூலிலும் 98 பக்கங்கள் எழுதிய காந்தி, அதில் எந்த ஓர் இடத்திலும் தவறியும் கூட, போராட்டத் தளபதி ஐயா பெரியாரின் பெயரைக் குறிப்பிடவில்லை. இதுதான் காந்தியின் யோக்கியதை என்கிறார் ஆசிரியர்.

தந்தை பெரியார் கடவுள் இல்லை என்று சொல்வது குறித்து அவரிடம் ஒரு முறை கேட்டபோது, ஒரு கிறித்துவர் இஸ்லாமிய கடவுளையும், இந்துக் கடவுளையும் இல்லை என்பார். ஒரு இஸ்லாமியர், இந்து கிறித்துவக் கடவுளை இல்லை என்பார். ஓர் இந்து மற்ற இருமதக் கடவுள்களையும் இல்லை என்பார். இப்படித் தனித்தனியாக இவர்கள் சொல்வதைத்தான் நான் ஒட்டு மொத்தமாக கடவுள் இல்லை என்கிறேன் என்று ஐயா பெரியார் சொன்ன செய்தி இந்த நூலில் சுவையாக மட்டுமல்ல சிந்திக்க வைக்கவும் இடம் பெற்றுள்ளது.

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர்," நாங்கள் ஆங்கிலேயர்கள். காந்தியை இவ்வளவு நாள் பாதுகாத்து வைத்திருந்தோம். ஆனால் விடுதலை பெற்று ஓராண்டு கூட உங்களால் காப்பாற்ற முடியவில்லையே" என்று மவுன்ட் பேட்டன் சொன்னதாகக் குறிப்பிடும் நூலாசிரியர், அதை ஒட்டிச் சொல்லிச் செல்லும் காந்திபற்றிய செய்திகள் அனைவரும் படித்தறிய வேண்டியவை.

சாதி, மதம், தீண்டாமை, இந்துத்துவம், போராட்டம், ஐயா பெரியார், அவரின் கொள்கை சார்ந்த செய்திகள் இவைகளுடன் நாடும் நடப்பும் என்று அரசியல் நெடியுடன் உருவாக்கப்பட்ட" காந்தி படுகொலையில் பார்ப்பனப் பின்னணி" என்ற இந்நூல் பெரியார் யார்?, -

புலியும் புலிவே­க்காரனும், - காந்தியார் யார்?, - மத நம்பிக்கை வேறு; மதம் வாதம் வேறு, - கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் இல்லையா? -"சுதந்திரம்" இருவேறு பார்வை - மத மாற்றம் செய்தது யார்?, - பார்ப்பனரும் தமிழரும் - காந்தி கொலை

முஸ்லிம்கள் மீது பழி - தடா பொடா - எது பயங்கரவாதம்? ஆகிய 10 துணைத் தலைப்புகளில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் பகுத்தறிவாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் என்று சொல்வது மிகையல்ல - உண்மை.

தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரையை எழுத்துக்கு எழுத்து அப்படியே போடாமல், சிறிது செப்பம் செய்திருக்கலாம். பரவாயில்லை. நமக்குக் கருத்துதானே முக்கியம்.

தோழர்கள் வாங்கிப் படியுங்கள் இந்நூலை !

Pin It