எல்லா வகைக் கல்வியையும் கீழே இறக்கிச் சமன்படுத்துவது, கல்விச் சீர்த்திருத்தமும் அல்ல; மாணவர்களின் எதிர்காலத்திற்கு உகந்ததும் அல்ல. ஆகையால், அந்த முயற்சியைச் செய்த ‘சமத்தாழ்வு கல்வி’முறை கைவிடப் படுவது நல்லதே என்பது நமது கருத்து.

15.06.2011 துக்ளக் இதழில் சோ... 

 

‘சோ கும்பலின் லேட்டஸ்ட் காமெடி’

பேரா.அ. மார்க்ஸ்

“மக்கள் மத்தியில் பல்வேறு வேறுபாடுகள் இருக்கும்போது, கல்வி மட்டும் எப்படி ஒரே மாதிரியாக இருக்க முடியும்? சமச்சீர்க் கல்வி மாதிரி சமச்சீர் மருத்துவம் கொண்டு வர முடியுமா?” - இது சோ வகையறாக்களின் சமீபத்திய நகைச்சுவை.

இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரம், ஒரே சட்டம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் இந்துத்துவக் கும்பல், திடீரென குட்டிக்கரணம் அடித்து இந்தியாவின் பன்மைத்துவம் காக்கப்படுதல் குறித்துக் கவலை தெரிவிப்பது நகைச்சுவைதானே!

சொத்து, வாரிசு, திருமணம் முதலான பிரச்சினைகளில் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மை மக்களுக்குத் தனி சிவில் சட்டம் இன்று நடைமுறையிலுள்ளது. அதை ஒழித்துக் கட்டிவிட்டு “பொது சிவில் சட்டம் “கொண்டு வரவேண்டும் எனக் கூப்பாடு போட்டுவரும் துக்ளக் கும்பல் திடீரென கலாச்சாரத் தனித்துவம் குறித்து வாயாடுவதை என்னென்பது!

சமச்சீர்க் கல்வி என்கிற பெயரில் தி.மு.க. அரசு அமுலாக்கியது பொதுப்பாடத்திட்டம் மட்டுமே (இதற்கே இத்தனை எதிர்ப்புகள்!). கல்வியாளர்கள் கோருவது இது மட்டுமன்று. எல்லோருக்கும் ஒரே மாதிரியான “பொதுப்பள்ளிகள்” என்பதே அவர்களின் கோரிக்கை. வளர்ச்சியடைந்த “ஜி8 “நாடுகள் உட்பட எல்லா மேலை நாடுகளிலும் நடைமுறையிலுள்ள கல்விமுறை இதுவே. ஐரோப் பாவுக்குச் சென்றீர்களேயானால், அகதிகளாக அங்கு வாழ்ந்து வரும் நமது ஈழத் தமிழர்களது பிள்ளைகளும், உள்நாட்டு வெள்ளைக் குழந்தை களும் அருகிலுள்ள பள்ளியில் ஒன்றாகப் படிப்பதைப் பார்க்கலாம்.

இத்தகைய பள்ளிகளின் மூலமே “பல்வேறு சமூகக் குழுமங்களும் இணைந்து சமத்துவச் சமூகம் உருவாகும். அவ்வாறன்றி பல்வேறு வகைப் பள்ளிகள் மூலம் குழந்தைகளைப் பிரிப்பது குழந்தைகள் சமூக எதார்த்தங்களைப் புரிந்து கொள்ள உதவாது “எனவும், இது ஒரு ஆரோக்கியமற்ற சமூகம் உருவாவதற்கு வழிவகுக்கும் எனவும் புகழ்பெற்ற கோத்தாரி கல்வி ஆணையம் (1966 - 68) எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

பொதுப்பள்ளி முறை இல்லாதபோதும், பொதுப்பாடத்திட்டமாவது சாத்தியமாயிற்றே என்றுதான் கல்வியாளர்கள், “கல்விச் சமத்துவத்தை நோக்கிய முதற்படி “என இதனை வரவேற்றனர்.

சமச்சீர்க் கல்வி மற்றும் பொதுக்கல்வி குறித்து கல்வியாளர்கள் குறிப்பிடும் மூன்று அம்சங்கள் இங்கே குறிப்பிடத்தக்கன (பார்க்க: அ. மார்க்ஸ், கல்வி - உணவு உரிமைச் சட்டங்கள் - ஒரு விமர்சனம், புலம் வெளியீடு, 2010) அவை:

1. பொதுக்கல்வி என்ற பெயரில் எல்லாப் பள்ளிகளும் ஒரே மாதிரியான (விமிereலி மிதீஸ்ரீeவி) அச்சுப் பதிவுகளாக மாற்றப்பட மாட்டாது. முஸ்லிம்களோ, கிறித்தவர்களோ, இல்லை வேறு மொழி, பண்பாட்டுச் சிறுபான்மையினரோ தமது பண்பாடுகள், வழிபாடுகள், புனித நூல்கள் முதலியவற்றைச் சொல்லித் தருவதற்குத் தடையில்லை. அரபி, உருது அல்லது சமற்கிருதத்தை விருப்பப் பாடமாகச் சொல்லிக் கொடுக்கவும் தடையில்லை.

2. தமது புவியியல் சூழல், தட்பவெட்பம், குறிப்பிட்ட பகுதியின் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இயைபான தொழில்கள், பயிற்சிகள் ஆகியவற்றைச் சொல்லித் தரத் தடை இருக்காது. கைத் தொழிற் பயிற்சி என்றால் ஒர் ஊரில் அது தச்சுத் தொழிலாக இருக்கலாம், இன்னொரு ஊரில் விவசாயமாகவோ, பாய் முடைதலாகவோ இருக்கலாம்.

3. பொதுப்பள்ளி என்கிற வடிவில் அனைத்துப் பள்ளிகளும் அரசுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என்பது உண்மையல்ல. பொதுவான, அரசின் கல்விக் கொள்கை, இட ஒதுக்கீடு நெறிமுறை முதலானவற்றை மீறாது செயல்பட வேண்டும். தனித்துவம் என்கிற பெயரில் பிற சமூகங்களின் பால் வெறுப்பை விதைக்கக் கூடாது என்பன மட்டுமே நிபந்தனைகள்.

உண்மைகள் இப்படியிருக்க, சமச்சீர்க்கல்வி என்ற பெயரில் பண்பாட்டுப் பன்மைத்துவம் அழிக்கப்படும் எனப் பூச்சாண்டி காட்டுவது அபத்தம். பன்மைத்துவத்தை அழித்து ஒரே அடையாளமுள்ள அகண்ட பாரதத்தை உருவாக்குதல் குறித்து புலம்பிக் கொண்டிருந்தவர்கள் திடீரென பன்மைத்துவம் பற்றிப் பேசுவது மிகப் பெரிய ஆபாசம்.

பார்ப்பனிய முதலாளித்துவம் - பேரா. அரங்க மல்லிகா

"அறிவுத்திறன், நீதிபோதனை, சமூக ஜனநாயகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கல்வியே நவீன இந்தியாவிற்கான இன்றையத் தேவை. இந்தியாவின் நலம் விரும்பிகள் அனைவரும் இத்தகைய கல்வியையே செயல்படுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டும் “என்று டாக்டர் அம்பேத்கர் கூறுவதை அறிவின் மேன்மையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இப்பொழுது ஏற்பட் டுள்ளது. சமூக அக்கறையாளர்கள், அறிவுஜீவிகள், கல்வியாளர்கள் அனைவரும் விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் தரமான கல்வி இல்லாத சூழலில், அவர்கள் உயர்கல்வி பெறுவது எட்டாக்கனியாக இருக்கிறது என்று உணர்ந்து, தொடர்ந்து முந்தைய அரசை வற்புறுத்தியதால், தி.மு.க. அரசு சமச்சீர்க்கல்வியை ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குச் சென்றவருடம் அறிமுகப்படுத் தியது. இந்த வருடம் பிறவகுப்புகளுக்கும் நடைமு றைப்படுத்த ரூபாய் 210 கோடி செலவில் நூல்கள் அச்சிடப்பட்டு எல்லா பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், தற்போது பொறுப்பேற்றுக் கொண்ட அ.தி.மு.க. அரசு அவசரமாக அந்தத் திட்டத்தை எந்த வல்லுனர்களையும் கலந்து ஆலோசிக்காமல் அவசரமாகத் தள்ளுபடி செய்தது ஒருபக்க நியாயத்தோடு செயல்படுவதையே காட்டுகிறது.

அனைவருக்கும் சமவாய்ப்புத் தரும் சமச்சீர்க்கல்வி தரமானதும், நம் அரசியல் அமைப்புக்கு ஏற்றதுமாகும். உருசோ, ப்ரொபெல், டூயி போன்ற உலகப் பேரறிஞர்கள் குழந்தையின் உள்ளத்தையும், உணர்ச்சியையும் அறிந்து அவற்றிக்குத் தகுந்தவாறு படிப்பு முறையை அமைக்க வேண்டும் எனக் கருதினார்கள். நகர்ப்புற மாணவருக்கு நிகராக, கிராமப்புற மாணவர் கல்விபெறும் நோக்கத்தில் முனைவர் முத்துக்குமரன் தலைமையில் குழு அமைத்து, பல்வேறுபட்ட ஆய்வுகளை நிகழ்த்தி, முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குச் சமச்சீர்க் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது. இன்றைய வணிக மயச் சூழலில் கல்வி வியாபாரமாகியிருப்பதால், ஏழை, எளியோரின் வாழ்வாதாரமான அடிப்படைக் கல்விபெறுவதில் சிக்கல் தொடர்கிறது.

பார்ப்பனர்கள், பிற்படுத்தப் பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடிகள், அரவாணிகள் அனைவரும் சாதி ரீதியில், வர்க்க ரீதியில் பிரிக்கப்பட்டு, ஆண்டான் அடிமை எனப் பாகுபடுத்தி, சமூகத்தின் மேல்நிலையில் இருப்பவர் தரம் நிறைந்த கல்வியைப் பெறுவதும், கீழ் நிலையில் உள்ளவர்கள் அடிப்படை சுகாதாரம் இல்லாமல் கட்டிட வசதியில்லாமல் மரநிழலிலும், சுற்றுப்புறத் தூய்மையற்ற பகுதிகளிலும் கல்வி பயிலும் அவலம் இன்றும் தொடர்கிறது. இந்நிலையில் மாற்றம் வேண்டி சமச்சீர்க் கல்வி தொடர்ந்து வற்புறுத்தப் பட்டது. இதன் மூலம் அனைத்து தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை, மாநிலவாரியக் கல்விமுறை, மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண் டல் கல்விமுறை, நர்சரி தொடக்கக் கல்விமுறை ஆகியவற்றில் சாதிய, பொருளாதார வேற்றுமை களைக் களைந்து, அனைத்துப்பள்ளிகளுக்கும், சமச்சீரான கல்வித்திட்டப் பாடப்பொருள் அமைக்கப்பட வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர். அத்துடன் அனைத்து வசதிகளுடன் பள்ளிக் கூடம் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அமைக்கப்பட்ட, அனைத்துக் கல்விக்குழுக்களும், கோத்தாரி குழு(1964-66), இராமமூர்த்தி குழு(1991), யஷ்பால் குழு(1993) ஆகியவை சமச்சீர்க் கல்விமுறையைத்தான் வலியுறுத்தி உள்ளன. தேசியக் கல்விக் கொள்கை கூட, சாதி, மத, இன, இட வேறுபாடு இன்றி எல்லா மாணாக்கருக்கும் சமச்சீரான கல்வி கிடைக்கும் வாய்ப்பை உருவாக்குவதை வலியுறுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தில் முக்கியமாகச் சிந்திக்க வேண்டியது என்னவென்றால், கிராமப்புற மாணவர்களின் தரம் உயர்த்தப்பட எடுக்கும் முயற்சியோடு, நகர்ப்புற மாணவரின் தரம் தாழ்ந்துவிடக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டுதான் பாடத்திட்டம் செழுமைப்படுத்தப் பட்டிருக்கிறது. இதில் கருத்து வேறுபாடு அல்லது ஒரு குழுவின் தீர்மானத்தை மற்றொரு குழு நிராகரிப்பது என்பது அரசியல் அவலமாகும். ஆனால் ஓர் அரசு, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவது முறை. அதுதான் மக்கள் மீது கொண்டிருக்கும் மரியாதை, அக்கறை. அதைவிடுத்துத் தனக்குப் பிடிக்காத ஒரு கட்சி அறிமுகப்படுத்தியது என்பதற்காக மறுப்பது இந்தக் கல்விக் குழுவை, அவர்களின் உழைப்பைக் கேவலப்படுத்துவதாகும். இந்தத் திட்டத்தில் மாற்றம் செய்ய விரும்பினால் ஆரோக்கியமாக என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம் எனக் கருத்து தெரிவிக்க மீண்டும் வல்லுனர்களை அழைத்து ஆலோசித்து, இந்த ஆண்டே மாணவர்கள் சமச்சீர்க் கல்வியைக் கற்க வகைசெய்ய வேண்டும்.

சமூக ஜனநாயகத்தை நிறைவேற்றாமல் பார்ப்பனியத்தின் உச்சகட்ட அறிவின் மேன்மை யாளராகித் தங்களின் ஆதிக்கத்திற்குச் செயல்வடிவம் கொடுத்து, சாதிய, மத ஒடுக்குமுறையோடு சமச்சீர்க்கல்வி அல்ல’சமத்தாழ்வுக் கல்வி’எனக்கூறுவது பார்ப்பனிய முதலாளித்துவத்தின் வக்கிரப் பொதுபுத்தியையே காட்டுகிறது. மக்கள் கல்விக்காக செலவு செய்த ரூபாய் 210 கோடி மக்கள் பணம் வீணடிக்க அரசுக்கு ஏதேனும் தனி அதிகாரம் இருக்கிறா? கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் நல்ல கல்வி பெறுவதைத் தடுக்கிறான் எனக் கொள்வதா? சமத்தாழ்வு கல்வி என்று சொல்வது முறையா என்பதை அறிவு நேர்மையோடு சிந்திக்க வேண்டும்.

Pin It