amit shaசில நாள்களுக்கு முன் நடந்த இரண்டு நிகழ்வுகள் அடுத்து வருகின்ற ஐந்தாண்டுகள் நாடு பயணிக்க இருக்கும் பாதையை அறிவிப்பதாக இருக்கிறது. ஒன்று குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்தியில் ஆளும் பா.ஜ.கட்சியின் தலைவராகி இருப்பது - இது தில்லியில் நடந்தது. இரண்டாவது, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த நேர்காணல் - இது தமிழ்நாட்டில் நடந்தது.

ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ்.சின் நிழலில் அரசியல் கற்றவரான மோடி நாட்டின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்துவிட்டார். இப்போது, மாணவப் பருவத்திலிருந்தே ஆர்-.எஸ்.எஸ்.சின் கொள்கைகளில் ஊறி வளர்ந்த அமித் ஷா ஆளும் கட்சியின் தலைவராகி விட்டார். பா.ஜ.க.வில் உள்ள மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, 50ஆவது வயதிலேயே ஒரு பெரிய தேசிய கட்சியின் தலைவராக வரும் அளவுக்கு அமித் ஷா அப்படி என்ன சிறப்புத் தகுதியுடையவர்?

சிந்திக்கத் தொடங்கிய வயதிலிருந்தே, ஆர்.எஸ்.எஸ். காற்றைச் சுவாதித்து வளர்ந் தவர். கல்லூரிப் பருவத்தில் கரசேவகர். 1982இல், ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்த மோடியைச் சந்தித்தார் அமித் ஷா. 1986இல் மோடியின் நிழலாக பா.ஜ.க.விற்கு வந்து சேருகிறார். சுருக்கமாகச் சொன்னால், மோடி குரு - அமித் ஷா சீடர். மோடி நினைப்பதை இம்மியும் பிசகாமல் நடத்திக் காட்டுபவர் அமித் ஷா. எனவேதான், மோடி அமைச்சரவையில், உள்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளுக்கு அமைச்சரா னார். சிறுபான்மையினரைக் குறிவைத்து குஜராத்தில் நடத்தப்பட்ட கலவரங்களும், படுகொலைகளும் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவின் கண் அசைவி லேயே நடந்தன.

குஜராத்தில் நடைபெற்ற காவல்துறை போலி மோதல் சாவுகளின் பின்னணியில் நின்றவர் அமித் ஷாவே என்பது மெய்ப்பிக் கப்பட்ட உண்மை. 2005 நவம்பரில், சொராபுதீன் ஷேக் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். சொராபுதீன் ஷேக் வழக்கின் முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜபதியும் 2006இல் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக் கில் 2010 ஜுலை 25இல் உள்துறை அமைச் சராக இருந்த அமித் ஷா, மத்திய புலனாய் வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தனது பதவியை விட்டு விலகினார். 2012இல் உத்திரபிரதே சத்தின் பா.ஜ.க. பொறுப்பாளரான அமித் ஷா, அங்கும் தன்னுடைய வெறியூட்டும் இந்துத்துவ பிரச்சாரத்தால், பதற்றமான சூழ்நிலையை உருவாக்கினார். 2013இல் நடைபெற்ற முசாபர்நகர் கலவரத்தின் பின்னணியில் உள்ள ரத்தம் படிந்த கைகள் அமித் ஷாவுடையவை. சிறுபான்மை யினருக்கு எதிரான மதவெறிப் பிரச்சாரத் தால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில், 72 இடங்களை பா.ஜ.க.விற்குக் கைப்பற்றித் தந்தார்.

arjun sambathஇன்னும் தொடர்ந்து, அமித் ஷாவின் ‘இந்துத்துவ’ சேவைகள் பா.ஜ.க.விற்கும், பிரதமர் மோடிக்கும் தேவைப்படுகின்றன போலும். அதனால்தான், தான் நடத்திய, 2002 குஜராத் கலவரத்திற்கு இணையாக, முசாபர்நகர் கலவரத்தை நடத்தியவர், தனக்காக ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து உளவு வேலை பார்த்தவரல்லவா, இன்னும் இதுபோல எத்தனையோ செய்ய வேண்டிவரலாம் என்பதால், அமித் ஷாவைத் தன் அருகிலே யே வைத்துக் கொள்ள விரும்புகிறார் மோடி. இப்போது, மத்தியில் நடப்பது பா.ஜ.க., ஆட்சியன்று, சுத்தமான ஆர்.எஸ்.எஸ். ஆட்சி. அதற்கு சாட்சி, அமித் ஷாவின் நியமனம். கலவரக்காரர் களும், கொலைகாரர்களும் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடு என்னென்ன சீரழிவுகளைச் சந்திக்கப்போகிறதோ தெரியவில்லை.

இந்நிலையில், ‘ஆயுதம் ஏந்துவது இந்து தர்மம். எனவே நாங்கள் ஆயுதம் ஏந்துவோம்’ என்று கூறியிருக்கிறார் அர்ஜுன் சம்பத். இது தொடர்பாக, புதிய தலைமுறை அலைவரிசையில், 09.07.2014 இரவு நடந்த நேர்படப் பேசு நிகழ்ச்சியிலும், தான் சொன்னதை ஆணித்தரமாக மீண்டும் சொல்லியிருக் கிறார். மத்தியில், ‘அசுர பலத்தோடு’ பாரதிய ஜனதாவும், தமிழ்நாட்டில் ‘துணிச்சலுக்கு’ப் பேர்போன ஜெயலலிதாவும் ஆட்சியில் இருக்கும் போது, இந்துத் துவவாதிகள் ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை என்ன வந்திருக்கிறது? உங்களுக் காக ஆட்சியாளர்களே ஆயுதம் ஏந்தத் தயாராக இருக்கும் போது, நீங்கள் ஏன் மெனக்கெட வேண்டும்? ஆடு, கோழி பலியிடத் தடை, மதமாற்றத் தடைச் சட்டம் இவையெல்லாம்கூட மீண்டும் புத்துயிர் பெறக்கூடும் உங்களுக்காக. ‘ராமர்’ பாலத்தைக் காக்க, உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடுகிறது ‘புரட்சித் தலைவி’யின் அ.தி.மு.க. அரசு. தமிழைப் புறந்தள்ளி, சமற்கிருதத்தில் பெயர் சூட்டும் துணிச்சல் மிக்கவரின் ஆட்சியில் இந்துத் துவவாதிகள் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் என்ன? உண்மையைச் சொன்னால், இன்று இந்தியாவில் அச்சத்தின் பிடியில் இருப்பவர்கள் சிறுபான்மையினர்தான். இந்துத்துவ சக்திகள் அதிகாரத்தின் அரவணைப்பில் மிகவும் பாதுகாப்பாகவே உள்ளன. மக்களை மதத்தின் பெயரால் பிரித்தாள நினைப்பவர்கள்தான், இந்து தர்மத்தைத் துணைக்கழைத்து, ஆயுதம் ஏந்துவோம் என்கிறார்கள்.

அமித் ஷாவும் அர்ஜுன் சம்பத்தும் இந்தியாவின் எதிர்கால அச்சுறுத்தல்கள்!

Pin It