உலகமே வெட்கித் தலைகுனியும் அளவுக்கு, ஒரு மாபெரும் இனப்படுகொலையை ஈழத்தில் நடத்தி முடித்திருக்கிறது,மகிந்த ராஜபக்சேவின் போலிப் பவுத்த சிங்களக் கொடுங்கோல் அரசு.

ஈழத்திற்கு எதிரான போரில்,இலங்கை அரசுக்கு உதவிகள் வழங்கித் துணையாக நின்றது இந்தியா என்று மகிந்த ராஜபக்சேவின் தம்பி வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். இதுவரை இந்தியா காட்டும் மெளனம் அதை உறுதி செய்கிறது.

ஐக்கிய நாடுகள் அவையில்,இரண்டு முறை இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் கொண்டு வந்த அமெரிக்காவின் தீர்மானங்களைத் திருத்தியும்,நீர்த்துப் போகச் செய்தும், இலங்கைக்கு ஆதரவுக் கரம் நீட்டி இருக்கிறது இந்தியா.

ஈழத் தமிழர்களுக்கு உரிய உரிமைகளையும்,

மறுவாழ்வையும் மீட்டுத் தருவோம் என்று இராஜீவ்காந்தி காலத்தில் இருந்து இன்றுவரை நீட்டி முழக்கிக் கொண்டு இருக்கும் இந்தியாவின் பிரதமர் ஜப்பானில் கை குலுக்கிக்கொண்டு இருக்கிறார்.

இனப்படுகொலை செய்த குற்றவுணர்வு கொஞ்சமும் இல்லாமல் சீனாவில் சிரித்துக் கொண்டிருக்கிறார் இலங்கை அதிபர்.

மரண ஓலம், அழுகை, கண்ணீர், கூக்குரல், ஆள்கடத்தல், இன அடையாள அழிப்பு, பாலியல் வன்கொடூரச் செயல்கள் எனத் தொடர்கிறது இலங்கையின் நடப்பு.

உன் கச்சையில் இருந்து/பழுப்பேறிய பக்கத்தை/எடுத்துக்காட்டு/இதுதான் மூல முலை, இதுதான் அங்கே தமிழச்சியின் நிலை,என்கிறது ஒரு கவிதை.ஈழம் இன்னும் தணலில் இருக்கிறது.

இவ்வளவு கொடுமைகளையும் செய்து கொண்டிருக்கும் இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் தொடர்ந்து இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கேட்டால், இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்கிறது. அப்படியானால், ஈழத்தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் என்ன பகை நாட்டினரா?

அண்மையில் தஞ்சைக்கு வந்த இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இலங்கை இராணுவத்தினருக்குச் சில குறிப்பிட்ட இராணுவப் பயிற்சிகள் மட்டுமே இந்தியாவில் அளிக்கப்பட்டு வருகிறது.ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து,அவர்களுக்குத் தமிழகத்தில் பயிற்சி அளிக்க மாட்டோம் என்று செய்தியாளர்களிடம் சொல்லி இருக்கிறார்.

இதன்மூலம் தமிழகம் தவிர்த்துப் பிற மாநிலங்களில் இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி அளிப்பதாக உறுதி தருகிறார் அமைச்சர்.

நம் கேள்வி இதுதான்! தமிழகம் இந்தியாவில் இருக்கிறதா, இல்லையா? தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறது என்றால் தமிழக உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்தியாவில் எங்கும் இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்க மாட்டோம் என்றல்லவா அமைச்சர் அந்தோணி சொல்லி இருக்க வேண்டும்.

தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை,புறந்தள்ளுகிறது.தொடர்ந்து தமிழகம் அவமானங்களைப் பொறுத்துக் கொண்டிருக்காது என்பதை மத்திய அரசு உணரவேண்டும்.

தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு உண்மையில் உணர்ந்து மதிப்பளிக்குமானால், இனி இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும், எந்த ஓர் இடத்திலும் இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கக் கூடாது.

இதுதான் ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வு, கோரிக்கை, வேண்டுகோள், எதிர்பார்ப்பு.

Pin It