கடந்த மார்ச்சுத் திங்களில் சென்னையில் நிகழ்ந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு பாடல்தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன்.

 அங்கு நிகழ்வரங்கின் நுழைவாயிலில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நூல்களுள் நாம் வெளியிட்ட தூயதமிழ்ப் பெயர்கள் -நூலினையும் விற்பனைக்கு வைத்திருந்தோம். மேற் பார்வைக்கு எம்முடன் வந்த சிறுவன் ஒருவனை அமர்த்தி யிருந்தேன். அந்தத் தூயதமிழ்ப் பெயர்கள் நூலின் முன்அட்டை யில் திருவள்ளுவர் படமும் பின்அட்டையில் பாவாணர், பாவேந்தர், பாவலரேறு படங்களுடன் பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் படமும் அச்சிட்டிருந்தோம். அந்த நூலைப் பார்த்த தோழர் ஒருவர், அதிலிருந்த பெரியாரின்

படத்தைப் பார்த்து, “இவனைப் போட்டிருப்பதால்தான் இதை வாங்க யோசிக்கிறேன்...” என்றாராம். நிகழ்வின் இறுதியில் நாங்கள் புறப்படும்போதுதான் இதை அந்தச் சிறுவன் எங்களிடம் கூறினான்.

 இப்படி அவன் இவன் என்று ஒருமையில் பேசுமளவுக் குப் பெரியார் இவர்களுக்கு என்ன இரண்டகம் செய்துவிட்டார்? என்ன இடையூறு செய்துவிட்டார்? இவர்களெல்லாம் எந்த அடிப்படையில், என்ன எண்ணத்தில் இப்படியெல்லாம் பிதற்றுகின்றனர்?

எதிரியைக் கூட மதிக்கின்ற பண்புடையவன், நாகரிகமுடையவன் தமிழன் என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் நம் தமிழினத்தில் பிறந்த இவர்கள், இப்படிப் பேசும் இழிபண்பை எங்கிருந்து கற்றார்கள்...?

 தாழ்த்தப்பட்டு, இழிந்து, நைந்த இம் மக்களின் விடிவுக்காக, வாழ்வுக்காக, முன்னேற்றத்திற்காகத் தம் தொண்ணூற்று நான்கு அகவை வரை பாடாற்றிய ஒரு மாபெரும் தலைவரை, இப்படியெல்லாம் பேசுவதற்கு இவர் களுக்கு எப்படி மனம் வருகிறது? இதை இவர்கள் எந்தப் பள்ளிக் கூடத்தில் கற்றார்கள்? பாவாணரை - பாவலரேறுவைப் போற்ற வந்ததாகச் சொல்லும் இவர்கள், பெரியாரை இப்படி இகழ்வது, பாவாணரையும் பாவலரேற்றையும் இகழ்வதற்கே ஒப்பாகாதா...?

பெரியார் நம்மிடைப் பிறந்திரா விட்டால்
நரியார் நாயகம் இங்கே நடந்திடும்!
திரியாத் தமிழ்க்கும் திகழ்நா டதற்கும்
உரியார் நாமெனும் உண்மை, பொய்த் திருக்கும்!

என்னும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கூற்றை இவர்களெல்லாம் அறிந்திருக்கவில்லையா...?

 நூல் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு சின்னப் பையன் முன்பு, ஓர் எதிர்காலத் தலைமுறை முன்பு இப்படி ஒரு தரங்கெட்ட சொல்லைச் சொல்லலாமா? - ஒரு முரண்பட்ட கருத்தை அச் சிறுவன் மனத்தில் விதைக்கலாமா... -என்னும் அடிப்படை அறிவு வேண்டாமா...? இப்படி ஒரு கருத்தைக் கேட்ட அந்தச் சிறுவன் மனத்தில் இது பதிந்தால், அது எப்படிப் பட்ட இழிவான பதிவாக அமைந்திடும்...? இந்தளவுக்கு இவர்களுக்கு என்ன கேட்டைச் செய்துவிட்டார் பெரியார் ?

 மூடத்தனமும் சாதிக்குப்பையும் அடிமைத்தளையும் புரை யோடிக் கிடந்த இத் தமிழ்க் குமுகத்தில், குமுக விழிப்புணர்வு ஏற்படுத்திடவே தன் வாழ்நாளெல்லாம் போராடிய பெருந் தலைவர் தந்தை பெரியார். தன் சீர்திருத்தங்களுக்கு நடுவே,- தான் உள்ளார்ந்த பற்று வைத்துள்ள இத் தமிழக மக்கள், இப்படித் தன்மதிப்பையும் தன்மானத்தையும் இழந்து,- ஆரிய னுக்கு அடிமையாகி, எல்லாவற்றிலும் தன்னுடைய தனிச்சிறப்பை -மாண்பை இழந்து கிடக்கின்றனரே என்ற ஆற்றாமையில், தமிழ் மொழியில் எழுதப்பெற்றுள்ள பெரும் பாலான இலக்கியங்களில், மூடக் குப்பைகளும் தமிழ்க் குமுகத்திற்கே கேடு விளைவிக்கும் ஏற்றத்தாழ்வு இழிவுகளும் இடம் பெற்றிருப்பதைக் கண்டு பொறுக்காமல், வெம்பிப்போய், ஒரு தாய் தன் பிள்ளையர் தவறு செய்துவிட்டால், எப்படி அந்த நேரத்தில் தன் சினத்தை வெளிப்படுத்தி அவர்களைத் திட்டுவாளோ அப்படிக் கடிந்து பேசினார்.

 தமிழையும் திருக்குறளையும் ஆய்ந்தறிந்த பேரறிஞராம் நம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா அவர்களே, தந்தை பெரியாரின் செயற்பாடுகளை, குமுகத் தொண்டுகளைப் போற்றிப் பாராட்டியுள்ளார். இதனை ஏன் மேற்கண்ட தோழர்கள் புரிந்திடவில்லை...?

கருகிப்போய்க் கிடந்தஇந் நாட்டிடை வந்தே
உருகி உருகி உயிரைத் தேய்த்தே
ஒளியைப் பரப்பிய ஊழித் தலைவராம்
அளிசேர் எங்கள் அருமைப் பெரியார்
பேசிய பேச்சுகள் நச்சுகள் என்றால் -
ஊசிய கருத்தை உரைத்த புராணங்கள்,
வேத அழுக்குகள், பொய்ம்மை      விளக்கங்கள் -
ஊதை உளுத்தைகள் நச்சிலா உரைகளா?
சேற்றில் புழுக்களாய் - சிற்றுயிர் இனங்களாய் -
மாற்றிட இயலா   மந்தை ஆடுகளாய் -
வழிவழிப் பார்ப் பனர் வந்து புகுத்திய
ஆரியக் கொடுநச் சரவம் கொத்திச்
சிறந்தநல் லறிவையும்
ஆயிரம் ஆயிரம் அறிவுநூல் தொகையை யும்
ஏயுநல் லிலக்கிய இலக்கண இயல்பையும்
நாகரி கத்தையும் நல்லபண் பாட்டையும்
ஆட்சி நலத்தையும்,
கொண்டஓர் இனத்தைப்
பெருங்கொள் கையினால் பிழைக்க வைத்த -
தன்மான ஊற்றினைத் தகைமைத் தலைவனை,
மண்மானங் காத்த மாபெரும் மீட்பனை,
அரியாருள் எல்லாம் அருஞ்செயல் ஆற்றிய
பெரியார் என்னும் பெரும்பே ரரசனை
இழிப்புரை சொல்வதா? சொல்லியிங் கிருப்பதா ?
பழிப்புரை வந்துநம் செவிகளிற் பாய்வதா?
நச்சு விதைகளா, நயந்துஅவர் சொன்னவை?
பச்சிலை மருந்தன்றோ, எமக்கவர் பகர்ந்தவை?
பார்ப்பனப் பதடிகள் எம்மைப் படுத்திய
ஆர்ப்பொலி அடங்கியது அவரினால் அன்றோ?
ஆரியக் குறும்பர்கள் ஆக்கிய கொடுமையின்
வேரினைத் தீய்த்தது அவர்வினை யன்றோ?

(தென்மொழி - இதழ் சுவடி:18, ஓலை:8, 1982. பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய பெரியார்-எனும் நூலிலிருந்து... )

என்னும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கூற்று மெய்யன்றோ!

(கொழுமம் ஆதியின் வலைப்பூவிலிருந்து சில பகுதிகள்)

Pin It