அதிகாரப்பூர்வ ஏடு என்று அறிவிக்கப் படாவிட்டாலும், சாகுல்அமீதை ஆசிரியராகக் கொணடு வெளிவரும் ‘ தமிழ் முழக்கம் வெல்லும் ’ மாதம் இருமுறை இதழ், முழுக்க முழுக்க, நாம் தமிழர் கட்சியின் ஏடாக, சீமானின் முழக்கமாகத்தான் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த இதழில் ( மார்ச் 16 - 31, 2011 ) வெளியாகி உள்ள சில செய்திகள் குழப்பம் நிறைந்தனவாகவும், முன்னுக்குப் பின் முரண் உடையனவாகவும் அமைந்துள்ளன.

seeman_200_copyவரும் சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க.வை ஆதரிப்பது சரியா, தவறா என்பது குறித்து அந்த இதழின் சிறப்பாசிரியர் மருதமுத்து ஒரு கட்டுரை எழுதி இருக்கின்றார். அதில், “காங்கிரஸ் நிற்கும் பல இடங்களில் அ.தி.மு.க. வெல்ல நாம் உதவினால், காங்கிரஸ் தோற்றாலும், சட்ட சபையில் ஜெயலலிதா முதலமைச்சர் ஆகும் வாய்ப்பே அதிகமாகிறது................................................. ......................................... சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்று ஜெயலலிதா வெல்வதை சோனியா வரவேற்கவே செய்வார். எனவே நிபந்தனையின்றி அ.தி.மு.க. வெற்றிபெற நாம் உதவுவது அரசியலில் தற்கொலைக்குச் ஒப்பாகும்” என்று எழுதுகிறார்.

அதாவது, காங்கிரஸ் எப்போதும் தி.மு.க. அணியில்தான் இருக்கும் என்ற உறுதி ஏதும் இல்லை. நாளையே அ.தி.மு.க.வோடு உறவு வைத்துக் கொள்ளக் காங்கிரஸ் தயங்கப் போவதில்லை. ஆதலால் அ.தி.மு.க.வின் வெற்றி காங்கிரசின் தோல்வி ஆகிவிடாது. காங்கிரசோடு எந்த ஒரு கட்டத்திலும் உறவு வைத்துக்கொள்ள மாட்டோம் என்று உறுதி கொண்டிருக்கிற ஒரு மூன்றாவது சக்தியை வளர்த்தெடுக்க வேண்டும். அதுவே காங்கிரசிற்கு எதிரான நிலைப்பாடாக அமையும். அதை விட்டுவிட்டு அ.தி.மு.க.வை ஆதரிப்பது தற்கொலைக்குச் சமமானது என்கிறார் மருதமுத்து.

அதே இதழில் சீமான் பேட்டியும் இடம் பெற்றிருக்கிறது. அந்தப் பேட்டியில்,

“காங்கிரசை எதிர்க்கும் ஒரு வலுவான கட்சிக்கு வாக்கு கேட்க வேண்டும். அது அ.தி.மு.க.வாக இருக்கிறது. எதிரியின் தோல்வியை உறுதிப்படுத்த அக்கட்சியை ஆதரித்து, வாக்குக் கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்கிறார் சீமான்.

அது அவருடைய கருத்து, இது இவருடைய கருத்து என்று பத்திரிக்கை ஆசிரியர் விளக்கம் அளிக்கக் கூடும். ஆனாலும், எது நாம் தமிழர் கட்சியின் கருத்து, எது தமிழ் முழக்கம் இதழின் கருத்து என்று நாம் யாரைக் கேட்பது?

.........................................

Pin It