உலக மூத்தகுடி தமிழ்த் தேசிய இன மக்களின் பூர்வீக தாய்நிலங்களுள் ஒன்றான ஈழப் பெருநிலத்தின் மீது சிங்களப் பேரினவாதத்தின் கொடும் நிழல் படியத் துவங்கிய 2008க்குப் பின்னான கால கட்டத்தில்தான் இன உணர்வுள்ள இளைஞர்கள் தாயக தமிழகத்தில் கண்கலங்க கைப் பிசந்து நின்று கொண்டிருந்தார்கள். ஈழமும், தமிழகமும் கடலால் பிரிக்கப்பட்ட இரு நிலப்பரப்புகளாய் நின்றனவே ஒழிய உணர்வால்..உறவால்..மரபணு தொடர்ச்சியால் ஒற்றை நிலமாகவே இருக்கின்றன. ஈடு இணையற்ற வீர தீரத்துடன் போர் புரிந்து கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் தியாகத்தினால் ஈழம் சிவப்பாகிக் கொண்டிருந்த வேளையில்.. தாயகத் தமிழ் இளைஞர்களின் நெஞ்சில் ஆற்றவே முடியாத பெருநெருப்பு மூண்டிருந்தது. அரசியல்வாதிகளின் சுயநல பிழைப்புவாத நடவடிக்கைகளால் முற்றிலும் நம்பிக்கை இழந்துபோன உணர்வுள்ள இளைஞர்களில் ஒருவன் தான் மாவீரன் முத்துக்குமார். அவனுடைய ஈகையில் இருந்துதான் நாம் தமிழர் அமைப்பின் துவக்கம் அமைகிறது.

உணர்வும், அறிவும் ஒரே அலைவரிசையில் அமைந்து ஒழுங்கமைவுடன் வெளிப்பட்ட அவனுடைய மரண வாக்குமூலம்தான் தமிழின இளைஞர்கள் பலருக்கு அரசியல் சிந்தனையை தமிழக மண்ணில் விதைத்தது. இனமான உணர்வுடன், ஊருக்கு நால்வராய் முச்சந்திகளில் கூடி நின்ற இளைஞர்கள் தமக்கான அரசியலின் அவசியத்தினை உணர்ந்த தருணம் அது. சுயநல அரசியல்வாதிகளிடமும், சாதீய அமைப்புகளிடமும் பிளவுப்பட்டுக் கிடந்த தமிழ்ச் சமூகம் சாதி கடந்து, மதம் மறந்து, இனம் சார்ந்த அரசியலுக்காக இறுதியில் ஒன்றுபட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது. இனமானம் காக்க நின்ற அவ்விளைஞர்கள் தமக்கு தாமாகவே தோற்றுவித்த அரசியல் அமைப்புதான் 'நாம் தமிழர்'. சாதீய இறுக்கங்களினால் முற்றிலும் பிளவுபட்டிருக்கும் ஒரு சமூகத்தில் இன ஒற்றுமையை எழுப்பும் ’நாம் தமிழர்’ என்ற முழக்கம் சவாலான ஒன்றுதான்.

seeman_200_copyஅதனால்தான் என்னவோ தொடங்கியது முதல் பல்வேறு விதமான விமர்சனக்கணைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியமும் எமக்கு ஏற்பட்டது. காங்கிரசு என்ற மாபெரும் இன எதிரியை அடையாளம் காட்டி அழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த எமக்கு, எதிரிகளின் சீறிப் பாயும் தோட்டாக்களுக்கு மத்தியில் சகத்தோள்களின் அக்கறையில்லாத அவதூறுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதே என்ற உறுத்தலும் வருத்தமும் இருந்தது உண்மைதான். இந்த பத்தி கூட அவதூறுகளுக்கு எதிரான விளக்கம் அல்ல. மாறாக எதுதான் உண்மை என்பதற்கான மீள் வாசிப்பு. அவ்வளவே. எங்கள் தோள்கள் மேல் கைபோட்டு சொல்லும் அக்கறையுடனான விமர்சனங்களுக்கும், உண்மைக்குப் புறம்பான அவதூறுகளுக்குமான வேறுபாட்டினை நாம் அறிவோம். எம் மீதான, புதிதாக தோன்றியிருக்கும் இன ஆதரவு அரசியலின் மீதான அக்கறையில் விமர்சனக் கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் தோழமைகளின் கருத்துக்களில் நாங்கள் என்றென்றும் நம்பிக்கையும், அன்பும் கொண்டவர்களாக இருக்கிறோம் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறோம்.

 முதலில் எம் அமைப்பு குறித்து தவறான செய்திகளை தவறாமல் வெளியிட்டுக் கொண்டிருக்கும் நக்கீரன் இணையதளத்திற்கு நன்றி. நக்கீரன் இணையதளத்தில் வந்த இந்த பதிவு இது தான்.(http://nakkheeran.in/users/frmNews.aspx?N=66073). நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கேவலப்படுத்தும் நோக்கத்தோடு, திட்டமிட்டு.. எதற்குப் பேசினார், என்ன பேசினார் என்பதை மறைத்து, தனக்கு தேவையானதை வெட்டி, ஒட்டி, இந்த காணொளியைப் பதிவேற்றி எத்தனையோ முக்கிய செய்திகள் இருக்க இந்த செய்தியை முதல் பக்கத்தில் முதன்மையாக வைத்திருந்தார்கள். ஆனால் சீமானை கேவலப்படுத்துவதாய் நினைத்துக்கொண்டு அவர்கள் வெளியிட்டு இருக்கிற பதிவு கூட சீமான் காட்டுகிற எதிர்ப்பும், ஆதரவும் சூழலின் பாற்பட்டது என்றும், தமிழர்களை அடக்க முனைந்தால், யாரையும் சீமான் எதிர்க்கத் தயங்க மாட்டார் என்றும் உண்மைகளை உலகிற்கு காட்டியிருக்கிறார்கள். நன்றி. மூன்று தமிழர் உயிர்க் காத்த தமிழக அரசின் தீர்மானத்திற்காக நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தினால் அதை தவறு என கூறியவர்கள், இன்று விலைவாசி உயர்விற்காக எதிர்த்துப் பேசினால் மாற்றிப் பேசுகிறார்கள் என மாய்மாலம் பேசுகிறார்கள்.

தேர்தலுக்குப் பிறகு சீமான் ஜெயலலிதாவைக் கண்டு, வழக்குகளுக்காக பயந்து கொண்டு எதிர்க்கவில்லை என்று இதுநாள் வரை தூற்றிக் கொண்டு இருந்தவர்கள், இன்று ஆளும் அரசு நாம் தமிழர் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கபடுவதையும், உணர்வாளர்கள் யாரும் மாவீரர் நாள் நடத்தக் கூடாது என்று அடக்குவதையும் எதிர்த்து சீமான் பேசும்பொழுது (http://www.youtube.com/watch?v=og4pplDd2eI) கள்ளமவுனம் காக்கிறார்கள். ஜெயலலிதாவினையும், கருணாநிதியையும் சீமான் ஆதரிப்பதும், எதிர்ப்பதும் என்பது அவரவர் இனம் சார்ந்த செயல்களைப் பொறுத்த வினைகளே தவிர இதில் கிண்டலுக்கும், கேலிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா..?. திமுகவின் இரண்டாம் அதிகாரப்பூர்வ ஏடான நக்கீரனின் தரத்தைப் (?) பற்றி நாம் புதிதாக ஏதும் சொல்லத்தேவை இல்லை. அவர்களுக்கு பதில் அளிக்கவும் தேவை இல்லை தான். இருந்தாலும் இது போன்ற பிழையான கருத்துக்களைத் தொடர்ந்து தாங்கி வரும் செய்திகளுக்கு தக்க எதிர்வினை ஆதாரங்களுடன் ஆற்றாவிடில்,உண்மைகளை ஊருக்குக் காட்டாவிடில்.. அவதூறு தோய்ந்த பிழைகள் 'நிரூபிக்கப்பட்ட உண்மைகள்' ஆகி விடும் அபாயம் இருக்கிறது.

                                                மே 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு, எந்த அரசு அதிகாரம் இல்லாமல் நாம் வீழ்ந்தோமோ, அதே அதிகாரத்தினை நாம் கைப்பற்றியாக வேண்டும் என்ற முடிவோடு சீமான் பொதுவெளி அரசியலுக்கு வந்தபொழுது அவர் கலைஞர் கருணாநிதியின் கைப்பாவை என்றார்கள். இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் மொத்தமாக ஐந்து முறை கருணாநிதியே சீமானை கைது செய்து சிறைப்படுத்திய பின் அது இல்லை என்றானது. சிறையில் இருந்து சீமான் விடுதலையான காலகட்டத்தில் வருகின்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி என்றார்கள். கூட்டணி என்பது ஒரு கட்சியோடு பேசி தொகுதிகளை பிரித்துக் கொண்டு தேர்தலில் நிற்பது. ஆனால் சீமான் காங்கிரசு போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் காங்கிரசை எதிர்த்து நிற்கிற முக்கிய எதிர்க்கட்சிக்காக சீமான் பிரச்சாரம் செய்தார். புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரசு கட்சியை எதிர்த்து நின்ற அய்யா. என் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரசு கட்சிக்கு ஆதரவாகக் கூட சீமான் பிரச்சாரம் செய்தார். இனத்தின் எதிரி காங்கிரசை கருவறுப்போம் என்பதான தேர்தல் நிலைப்பாடு எடுத்து காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் கூட்டமும், காட்டமுமாக எதிர்த்து களமாடிய பொழுது அவதூறு வாய்கள் இறுக மூடிக் கொண்டன.

தமிழ்ப்பெண்களை எருமை தோள்களைக் கொண்ட தடிச்சி என்று சொன்ன நடிகர் ஜெயராம் அவர்களின் வீடு தாக்கப்பட்ட பொழுது உணர்ச்சிவசப்பட்டு இனவாதம் பேசி ராஜ்தாக்கரே பாணி அரசியல் செய்கிறார் என்று பரபரத்து அவதூறு பேசியவர்கள், தமிழர் பண்பாடு, விழுமியங்கள் போன்றவற்றில் உள்ள தமிழர் வாழ்வின் சாரத்தினை இந்த தலைமுறையின் இளம் தமிழர்கள் உணரும் வண்ணம் நாம் தமிழர் குடும்ப விழாக்கள் அமைதியாக நடத்திய பொழுது தமிழர் வீர விளையாட்டு, கட்டுரை, கவிதைப் போட்டிகளை விட்டுவிட்டு கோலப்போட்டி நடத்துகிறார்கள் என்றார்கள். நேற்றுவரை தமிழக முதல்வரை ஆதரிக்கிறார் என்று ஆலாபனை செய்தவர்களின் குதர்க்கக் குற்றச்சாட்டு இன உணர்விற்கு எதிராக நிகழும் இந்த அரசின் அடக்குமுறைக்கு எதிராக சீமான் இன்று பேசுவதால் புஸ்வாணமாகி விட்டது. இப்படி தொடர்ந்து சீமான் மட்டும் குறி வைத்து ஏன் தாக்கப்படுகிறார் என சிந்திக்கும்போது சீமானை நோக்கி தொடர்ந்து கிளம்பும் அவதூறுகளுக்குப் பின்னால் அருவருப்பான மூன்றாம் தர அரசியல் இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்காட்ட நாங்கள் முயன்றதன் விளைவே இந்த பத்தி.

                பெரியாரை எதிர்த்து, பெரியாரை விமர்சித்து, தமிழ்த்தேசியம் என்ற கருத்தை சீமான் முன்னிறுத்துகிறார் என்பது பெரியார் என்ற அறிவுத்தளத்தில் இருந்து சீமானை வெளியேற்றிட முயலும் சிலரின் வாதமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு திராவிட இயக்கத்தினை சாராமல் பெரியாரின் கொள்கைகளை பல கட்சி மேடைகளில் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருபவர்களில் முதன்மையானவர் சீமான் என்பது அனைவரும் அறிந்தது. இந்துத்வாவாதிகளால் நேரடியான தாக்குதலுக்கு திருத்துறைப்பூண்டியிலும், கோவையிலும் இலக்கான சீமானின் ஆவேசம் மிகுந்த பிரச்சாரம் உலகம் அறிந்தது. அரசியலிலும் - சமூகத்திலும் ஒரு கருத்துருவாக்கத்தின் வீழ்ச்சியே, மற்றொரு புதிய கருத்துருவாக்கத்தின் தொடக்கமாக இருக்கிறது. அப்படி தமிழக அரசியல் தளத்தில் 'திராவிடம்’ என்ற கருத்தாக்கத்தின் வீழ்ச்சி தமிழ்த்தேசிய அரசியலுக்கு விதையாகி இருக்கிறது.

தமிழர்களிடையே தந்தை பெரியாரின் சிந்தனை வெளியிலான திராவிடம் என்ற கருத்துரு சமூக நீதித் தளத்தில் மிகச்சிறப்பான புரட்சிகர உட்கூறுகளைக் கொண்டு அரசியல் விழிப்புணர்வை உண்டாக்கி பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் காந்தியாலும் மேட்டிமைமக்களாலும் கட்டமைக்கப்பட்ட இந்தியத் தேசியம் என்னும் பெரும் சித்தாந்தப் புனைவை, தமிழர்கள் இருபதே ஆண்டுகளில் தூக்கியெறிந்து, எதிர்த்து, அதற்கு மாற்றாக உருவான நேரெதிர் சிந்தனையான திராவிடத்தை அரசியல் தளத்தில் ஏற்றுக்கொண்டனர். இவ்வாறான சிறப்புகளுடன் தமிழக அரசியலில் காலடி வைத்த திராவிடக் கருத்தாக்கம் சில சுயநல அரசியல்வாதிகளாலும், திரைப்படக் கவர்ச்சியாலும், வேற்று மொழியைச் சேர்ந்த சுரண்டல்- அரசியல் வியாபாரிகளாலும் களவாடப்பட்டு கடந்த ஐம்பது ஆண்டில் கொள்கைத் தளத்தில் அதல பாதாள வீழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் அரசியல் தளத்தில் திராவிடக் கருத்தாக்கம் அதன் அடிப்படைத் தன்மைகளிலிருந்து வேறுபட்டு விலகி விட்டது என்பதை உணரும் தமிழர்கள், புது கருத்துருவாக்கத்தின் தேவையை நாடும் அளவில் இருக்கிறார்கள்.

திராவிடம் என்ற பொதுமை சொல்லுக்கான அவசியம் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின்னர் கேள்விக்குறியானது. அது பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் குறியீட்டு சொல் என்கிறபோது பார்ப்பனர்களும், மூடநம்பிக்கையாளர்களும், சாதிப் பற்றாளர்களும், மிக எளிதில் தலைமை வகிக்க முடிகிற இழிநிலையில் திராவிட அரசியல் மாறிவிட்ட நிலையில் பெரியார் முன் வைத்த திராவிடம் என்ற சமூக கருத்தியல் அரசியல் தளத்தில் இல்லாமல் போய்விட்டது. அப்படி அரசியல் தளத்தில் வேறுபட்டு மாறி விட்ட திராவிடத்தின் வீழ்ச்சியில் உருவாகும் புது கருத்துருவாக்கம், கட்டாயம் தந்தை பெரியார் சிந்தனை வெளியிலான மரபுகளை உள்வாங்கி, தந்தை பெரியார் முன் வைத்த பெண் விடுதலை, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு, சாதீய ஒழிப்பு, பகுத்தறிவு போன்ற சிறப்பான அம்சங்களை தன்னகத்தே கவர்ந்து இருந்தால் மட்டுமே அது தமிழர்களால் ஏற்றுக்கொள்ளபடும் என்பது திண்ணம்.

'உழைக்கும் மக்கள் தமிழகம்' (அக்-நவ.2005) இதழுக்கு திராவிடர்-தமிழர் பிரச்சினை: கழகத்தின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் அண்ணன் எம் மதிப்பிற்குரிய பெருந்தமிழர் கொளத்தூர் மணி அளித்துள்ள நேர்க்காணலில் பின்வருமாறு கூறுகிறார். (http://www.keetru.com/periyarmuzhakkam/nov05/mani.php). 

கேள்வி : திராவிடம் என்ற கருத்தியல் தமிழ்த் தேச அரசியலுக்கு முரணானது என்கிற கருத்து நிலவுகிறதே! அது குறித்துத் தங்களின் நிலைப்பாடு என்ன?

தவறு. பெரியாரும் அவரைத் தொடர்ந்து நாங்களும் 'திராவிடர்' என்ற அடையாளத்தை சமுதாய விடுதலைத் தளங்களிலும் 'தமிழர்' என்ற அடையாளத்தை அரசியல் விடுதலை தளங்களிலும் பயன்படுத்தி வருகிறோம் என்பதே உண்மை

நாங்கள் பெரிதும் மதிக்கும் எங்கள் அண்ணனான கொளத்தூர் மணி அவர்களின் இந்த கருத்தைத்தான் இம்மிபிசகாமல் நாம் தமிழர் தன் அரசியலாக முன்வைக்கிறது. சீமான் முன்வைக்கும் தமிழ்த்தேசியம் தந்தை பெரியார் சிந்தனை மரபிலான திராவிடக் கருத்தாக்கத்தின் புரட்சிகர உட்கூறுகளை உள் வாங்கியதாகவே இருக்கிறது. இதை பல முறை சீமான் பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார் (http://www.youtube.com/watch?v=BVot5rzq810). எல்லா மேடைகளிலும் பெரியாரின் கருத்துக்களை பேசுகிறார். நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னும் பெரியார் திராவிட கழகம் நடத்திய நாத்திகர் விழாவில் பங்கேற்றுப் பேசுகிறார். (http://www.youtube.com/watch?v=xqWZ8X6kWtQ). நாம் தமிழர் கட்சியின் கலந்துரையாடல் கூட்டங்களிலும் இவற்றை சீமான் தன் அமைப்புத் தோழர்களுக்கும் அறிவுறுத்துகிறார். தமிழர்களுக்காக தமிழர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு தமிழர்களின் அறிவார்ந்த முற்போக்கான அரசியல் நிலைபாடுகளை மீறியும், முரணாகவும் கட்டமைக்க முடியாது என்பதை நாம் தமிழர் அமைப்பு உணர்ந்திருப்பதற்கு இதைப்போலே பல சான்றுகள் உள்ளன.

ஆனால் பெரியாரை உள்வாங்காத, பெரியாரைப் பேசாத, சொல்லப்போனால் பெரியாரைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு வேற்று மொழி நடிகர் இந்த மண்ணில் திராவிடத்தின் பெயரால் முற்போக்கு, வயிற்றுப்போக்கு என்றெல்லாம் சொல்லி பெருந்திரள் அரசியல் நிகழ்த்த முடியும். அவர்களிடம் இதில் எல்லாம் என்ன நிலைப்பாடு, அதில் என்ன குறைபாடு என்று எந்த படித்த, அறிவு வெள்ளாவியில் வைத்து வெளுத்த எந்த வெங்காயங்களும் கேட்பதில்லை. இன அழிவிற்குப்பிறகு, இன உணர்வின் உந்துதலால், முற்போக்குப் பார்வையும் கொண்டு, தந்தை பெரியாரை சமூகத்தளத்தில் உள்வாங்கி 'நான் பெரியார் பேரன்' என்று மேடைக்கு மேடை முழங்கி வரும் தமிழன் ஒருவன் தமிழ்த்தேசிய அரசியலை முன் வைத்தால் ஆயிரம் விமர்சனங்களும், கேள்விகளும், தர்க்கங்களும் வருவது எதனால் என்று சிந்தித்தால், இது திட்டமிட்ட அவதூறே அன்றி வேறில்லை.

ஆதிக்க சாதி அரசியல் செய்கிறார் என்பது அடுத்த அவதூறு. அதற்கு இவர்கள் ஆதாரமாக முன் வைப்பது சீமான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு செய்த மரியாதை. வாக்கு அரசியலுக்காகவும், ஆதிக்க சாதிக்கு துணை போவதற்காகவும் சீமான் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செய்கிறார் என்பது தான் குற்றச்சாட்டு. சாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரனுக்கும், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனுக்கும், அய்யா அயோத்திதாச பண்டிதருக்கும், மார்ஷல் நேசமணிக்கும், பெரும்பிடுகு முத்திரையருக்கும், தீரன் சின்னமலைக்கும், பாட்டன் இராச ராசனுக்கும், வேலுநாச்சியாருக்கும், மாமன்னர் மருதுபாண்டியருக்கும் தான் சீமான் மரியாதை செய்கிறார். அவர் செய்யும் மரியாதை என்பது தமிழ்த்தேசிய பார்வையில் மறைந்த தலைவர்கள் எல்லோரும் தமிழர்கள், தமிழ் மக்களின் பெருமதிப்பிற்குரிய ஆளுமைகள் என்பதால் தான். மறைந்த தலைவர்களுக்குள் நிலவிய முரண்களை சம காலத்திற்கு கடத்தி வந்து அதன் வாயிலாக கட்டமைக்கப்படும் சாதீய அரசியலுக்கு ‘நாம் அனைவரும் தமிழர்’ என்கிற முழக்கம் எதிராக இருக்கிறது. சொல்லப்போனால் சீமான் நிகழ்த்தும் அரசியலானது முரண்களைக் கடந்து தமிழர் என்கிற தேசிய இனத்தின் மக்களாக தமிழர்கள் அனைவரும் திரள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறதே தவிர மற்றபடி மறைந்த தலைவர்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கவோ, அவர்கள் அரசியலை பின்பற்றவோ, அவர்களுக்குள் இருந்த முரண்களினை முன் வைத்து அரசியல் செய்யவோ இல்லை. அதற்கான தேவையும் இல்லை.

மதுரையில் வீரகுல அமரன் இயக்கம் நடத்திய செந்தமிழ் காவலர் இலக்குவனார் நூற்றாண்டு நிகழ்வில் முத்துராமலிங்க தேவரைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் சீமான் பேசினார். (http://www.youtube.com/watch?NR=1&v=n1k67VckWns). அங்கே முத்துராமலிங்கத் தேவரை புகழ்ந்து பேசி வாக்குக்கு அடிகோல் இட்டிருக்கலாம் ஆனால் அந்த மேடையில் முத்துராமலிங்கத் தேவரை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை சீமான். அந்த மேடையிலும் என் தலைவன் பிரபாகரன் என்றும், எது இன உணர்வு என்றும், தமிழன் சாதியால் பிளவுபட்டத்தால் தான் இந்த இழிநிலை என்று பொட்டில் அடித்தார் போல் சொல்கிறார். சாதியைக் கடந்து தமிழர்களாய் ஒன்றிணைவோம் என்றும், அது தான் தமிழருக்கு வெற்றி தரும் என்றுதான் ஒவ்வொரு கருத்தாக சொல்லி ஒரு பாடம் போல் எடுக்கிறார் (http://www.youtube.com/watch?v=_ekkxcS-VoI&feature=related). அந்த மேடையிலும் புரட்சியாளர் அம்பேத்கார் தமிழர்களைப் பற்றி கூறிய செய்தியை மேற்கோள் காட்டி சாதி கடந்து எல்லோரையும் ஒன்றிணைக்கிறார் (http://www.youtube.com/watch?v=OXFUyWwfcKA பார்க்க 29:05). ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் ஒற்றுமையில்தான் உண்மையான தமிழ்த்தேசியம் பிறக்கும் என்று நாம் தமிழர் அமைப்பு சரியாக உணர்ந்து அதன் படிதான் செயற்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்று. இந்த காணொளியைப் பார்த்த பிறகும் சீமான் ஆதிக்க சாதி அரசியல் செய்கிறார் என்று சொன்னால் அது புறம் தள்ள வேண்டிய அவதூறின்றி வேறென்ன?

"இந்திய தேசியத்தை தமிழன் ஏற்றுக்கொள்கிறான். ஆனால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தவனும் தமிழனை ஏற்பதில்லை. தமிழ்நாட்டு மக்கள் தம் பிள்ளைகளுக்கு காந்தி, நேரு, இந்திரா, ராசீவ் என்று வடநாட்டுத் தலைவர்கள் பெயராய் வைக்கிறார்கள். வடநாட்டு மக்கள் காமராசரின் பெயரை வைத்திருக்கிறார்களா? தமிழ்நாட்டில் அம்பேத்கர் பெயரை வைக்கிறார்கள். வடநாட்டில் அயோத்திதாசர், கக்கன் போன்றவர்களின் பெயரை வைக்கிறார்களா? இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாசிக்கு தமிழ்நாட்டில் சிலை இருக்கிறது. அதை தமிழ்நாட்டில் கட்டியெழுப்பிய முத்துராமலிங்கத் தேவருக்கு வங்காளத்தில் சிலை உண்டா?" என்று சீமான் பேசினார். உடனே இந்த முன் – பின் நவீனதத்துவ 'முற்போக்கு சிந்தனையாளர் சிகரங்கள்' “அம்பேத்கர் உட்பட பல வட இந்தியத் தலைவர்களின் பெயரை வைப்பவர்கள் தமிழர்களாக இருக்கின்றனர். ஆனால், முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களின் பெயர்களை வட இந்தியாவில் யாரும் வைப்பது இல்லை!” என்று சீமான் பேசுகிறார் என்று மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டார்கள். (http://www.vikatan.com/article.php?mid=1&sid=155&aid=5434). நேதாஜியையும் முத்துராமலிங்க தேவரையும் சீமான் ஒரே நேர்கோட்டில் நிறுத்திப் பேசுவது அவர்களின் இந்திய தேசிய அரசியல் அடிப்படையிலானது. ஆனால் அதை அப்படியே திரித்து சாதி அடிப்படையில் அம்பேத்கரையும் முத்துராமலிங்கத் தேவரையும் நேர்கோட்டில் நிறுத்துகிறார் என்று வாய்களை மென்றார்கள். இன உணர்வு பேசும் சீமானை ஏதோ ஒரு சாதி வட்டத்திற்குள் அடைத்து அவருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அந்த அவதூறு பரப்பப்பட்டது.

ஈழ மண்ணில் நம் இனத்தினை அழித்த காங்கிரசை தமிழ் மண்ணில் இருந்து அழித்தொழிக்க வேண்டும் என்று இந்தத் தேர்தலில் சீமான் செய்த செயல்கள் பற்றி அனைவரும் அறிவோம். விரிவாக அதை சொல்லத் தேவை இல்லை. அந்த நேரத்தில் ஈழ ஆதரவு கட்சிகளாக இருக்கக்கூடிய பல கட்சிகள் மவுனம் காத்த நிலையில் சீமான் களம் கண்டார். இந்தத் தேர்தல் சோனியாகாந்தி மகன் ராகுல் காந்திக்கும், பிரபாகரன் தம்பி சீமானுக்கும் நடக்கிற யுத்தம் என அறிவித்து காங்கிரசு போட்டியிட்ட 63 இடங்களிலும் களமாடினார், வென்றார். அதை பாராட்ட இங்கே ஒருவருக்கும் மனமில்லை. ஆனால் ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது காங்கிரசை ஒழிக்கவேண்டும் என்று இந்தியாவில், தமிழகத்தில் பாடுபட்ட தலைவர்களை எல்லாம் நேதாஜி, அம்பேத்கார், பெரியார், காமராசர், காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர் என்று வரிசைப்படுத்தி இவர்கள் விருப்பட்டதை நாம் நிறைவேற்றுவோம். காங்கிரஸ் நம் அரசியல் எதிரி அல்ல இன எதிரி என்று தேர்தல் பரப்புரை செய்தார். (http://www.livestream.com/naamtamilar/video?clipId=pla_f726b1c4-dce3-4466-a4a8-d16233fbc421&utm_source=lslibrary&utm_medium=ui-thumb பார்க்க 35:11). இதை பிடித்துகொண்டு பெரியாரையும் முத்துராமலிங்க தேவரையும் ஒரு நேர்கோட்டில் நிறுத்துகிறார் என்று அவதூறு கிளப்புகிறார்கள் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17621).

காங்கிரசை எப்பாடுபட்டாவது ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பெரியாரும், முத்துராமலிங்கனாரும் காங்கிரசை தோற்கடிக்க பாடுபட்டார்கள் நானும் ஒழிப்போம் என்ற மொழியில்தான் அப்படி பேசினார் ஒழிய முத்துராமலிங்கத் தேவரை முன்னிலைப்படுத்தவோ, பெரியாரையும் முத்துராமலிங்கத் தேவரையும் நேர்கோட்டில் வைக்கவோ இல்லை. இந்த இனத்தினை அழித்த்து காங்கிரசுதான். காங்கிரஸ் என்ற கட்சியை தமிழ்நாட்டில் இல்லாதொழிப்போம் என்று பேசி களமாட தமிழ்நாட்டில் ஒரு அரசியல் தலைவரும் தயாராக இல்லாத பொழுது, எல்லோரும் சீட்டு அரசியலில் மூழ்கியிருந்த, மூழ்கிப்போன பொழுது சீமான் களமாடினார். ஆனால் யாரும் அதைப் பேசவில்லை. தேர்தலில் காங்கிரஸ் தோற்க வேண்டும் என்று களத்தில் நின்று களமாடியவர் மேல், எதுவுமே செய்யாதவர்கள் அவதூறைக் கிளப்புகிறார்கள்.

இந்த அவதூறை கிளப்பிய கட்டுரையாளர் தான் முன்பொருமுறை இன்னொரு அவதூறையும் கிளப்பினார் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13870&Itemid=546) முத்துராமலிங்கத் தேவரை இடதுபுறமாகவும் பெரியாரை வலது புறமாகவும் வைத்து நாம் தமிழர் அமைப்பு சார்பாக சுவரொட்டி அச்சிட்டிருப்பதை முகநூலில் (பேஸ்புக்கில்) பார்த்ததாகச் சொன்னார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல போல அவர் எழுதிய பொய் மூட்டைப் புளுகுக்கு இந்த முதலாம் பொய்யே சாட்சியாக இருக்கிறது. இதுவரை நாம் தமிழர் அமைப்பு சார்பாக அப்படி ஒரு சுவரொட்டி எங்கும் ஒட்டப்படவில்லை. உண்மை என்னவெனில் கட்டுரையாளர் முகநூலில் பார்த்ததாக சொல்வது நாம் தமிழரின் சுவரொட்டி அல்ல. இது 1972ல் வெளியான மூக்கையாத்தேவரின் பொன்விழா மலரில் முத்துராமலிங்கத்தேவரை பெரியாராக விளித்து தந்தை பெரியார் எழுதிய வாழ்த்துச் செய்தியின் நகல் (http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/67784_170193156329448_100000162949157_616728_4801989_n.jpg). அதை நண்பர்கள் முகநூல் பக்கத்தில் ஒரு விவாதத்திற்கு பதிலளிக்கும் முகமாக வெளியிட்டு இருந்தார்கள். அதில் தந்தைப் பெரியாரின் படமும், முத்துராமலிங்கத் தேவர் படமும் இருந்தது. அதைத்தான் இந்தப் புளுகு மூட்டை கதாசிரியர் நாம் தமிழர் அமைப்பினர் சுவரொட்டி அடித்ததாகவும், அதைப் பல்வேறு நண்பர்கள் கண்டித்ததாகவும் கதை அளந்திருக்கிறார். மேற்கண்ட வாழ்த்துச் செய்தி பொன் விழா மலரில் வந்த வரலாற்றுச் சான்று. இதை சரியாகக் கூடப் பார்க்காமல் என்ன விவாதம் நடைபெறுகிறது என்று கூட அறியாமல், நாம் தமிழருக்கும் அதற்கும் முடிச்சுப் போட்டு, கதை கட்டி பெரியாரையும் முத்துராமலிங்க தேவரையும் நேர்கோட்டில் சீமான் நிறுத்துகிறார் என்று கலகம் செய்யத் துடிக்கும் இவரின் கட்டுரை அவதூறில்லாமல் வேறு என்ன?

seeman_jawaharulla_500

வாக்கு அரசியலும், வாக்கு வங்கியும் தான் முதன்மை என்றால் இங்கே ஒரு தேர்தலில் தன் சாதிக்கு கட்சி ஆரம்பித்து வாக்கு கேட்டு வாக்குவங்கியை நிரூபித்தால், போட்டிபோட்டுக் கொண்டு தொகுதிகளைக் கொடுத்து சாதி அரசியலை ஊக்குவிக்க முற்போக்கு பேசும் திராவிடக் கட்சிகள் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு காத்திருகின்றன. மார்க்சியம், பொதுவுடைமை பேசும் கட்சிகள் கூட பின் கதவு வழியாக யாருக்கும் தெரியாமல் வந்து இளித்துக்கொண்டு கூட்டணி வைக்கத் தயாராய் இருக்கின்றன. சரி அப்படி இல்லை என்றால் இருக்கிற திராவிடத்தில் முன்னாடியோ பின்னாடியோ முற்போக்கு என்ற வார்த்தையைப் போட்டு, ஜோசியரைக் கூப்பிட்டு கட்சியை ஆரம்பித்து , ஒரு தேர்தலில் ஒரு சீட் வென்று, ஊடகத்தின் துணையோடு ஐந்து வருடம் ஒட்டி, அதற்குப் பிறகு பொண்டாட்டி, மச்சான் துணையுடன் பேரம் பேசினால் ஆச்சு. எதற்கு தமிழ்த்தேசியத்தை கையில் வைத்துக் கொண்டு, தேசியத்தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தி அரசியல் கோட்பாடுகள் வகுத்து “இப்பொழுது அவர் படத்தை போட தடை செய்கிறீர்கள், ஒருநாள் அவர் படத்தோடு நான் சட்டமன்றத்திற்குள் போவேன், அப்பொழுது என்ன செய்வீர்கள்” என்று பேசிக்கொண்டு இருக்கவேண்டும்?

“இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என சீமான் சொல்லிவிட்டார் என்ற அரதப் பழசான கேள்வி இன்றளவும் கடுமையான ‘நினைவாற்றல் உடையவர்களால்’ கேட்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் தான் சீமான், “இங்கே இலை மலர்ந்தால் அங்கே ஈழம் மலரும்” என்ற வாக்கியத்தை பயன்படுத்தினார். அப்பொழுதிருந்த அரசியல் சூழலும் ஈழத்தின் சூழலும் நாம் யாவரும் அறிவோம். அங்கே மக்கள் சிங்கள பேரினவாதத்தின் கொடுங்கரங்களில் சிக்கிக் கொண்டு கொல்லப்பட்டு கொண்டிருந்தார்கள். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் துணையோடு இலங்கை அரசாங்கம் இனப்படுகொலையை அரங்கேற்றிக்கொண்டிருந்தது. போர் நிறுத்தம் ஏற்பட்டே ஆகவேண்டும். முள்ளிவாயக்கால் கொடூரம் நிகழக்கூடாது, மக்கள் உயிர்ப்பலி தடுக்கப்படவேண்டும் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் துடித்துக்கொண்டிருந்த நேரம். இந்திய பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் போரில் மாற்றம் நிகழும், போர் நிறுத்தம் ஏற்படலாம் என்கிற நிலை. தமிழகத்தில் திமுகவும் காங்கிரசும் கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்ற குறி. தமிழீழப் பிரச்சனையை தேர்தல் பிரச்சனையாக மாற்றவேண்டும் என்ற நோக்கு. தேர்தல் பரப்புரை மூலமாக ஈழத்தில் நடக்கும் அவலங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்ற வெறி. இந்த சூழலில் தான் திமுக காங்கிரசை எதிர்த்து நிற்கும் அதிமுக கூட்டணியின் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஈழத்தில் நடக்கும் கொடூரத்தைப் பட்டியலிட்டு இதற்கெல்லாம் தீர்வு தனி ஈழம் தான் தீர்வு அதை ராணுவத்தை அனுப்பி பெற்றுத்தர முயற்சிப்பேன் என்று தேர்தல் வாக்குறுதி தருகிறார். (http://www.youtube.com/watch?v=TLiKntkqygw&feature=related). நாற்பது தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பினை தனக்கு அளித்தால் தன் பேச்சைக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால் அது சாத்தியப்படும் என்றும் அதற்கு வழி செய்யுங்கள் என்கிறார்.

ஒரு பக்கம் காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்று மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முள்ளிவாய்க்கால் கொடூரம் தடுக்கப்படவேண்டும் இன்னொரு பக்கம் பெற்று தருகிறாரோ இல்லையோ ஜெயலலிதாவின் வாக்குறுதியை மக்களிடம் கொண்டு சென்று ஈழப்பிரச்சனையும் பேசி அதை தேர்தல் பிரச்சனையாக மாற்றி இதற்காகத்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்று காட்டவேண்டும். இந்நிலையில் தான் சீமான் இன உணர்வுள்ள இயக்குனர்களோடு தேர்தல் பரப்புரை சென்றார். அப்பரப்புரையில் ஈழத்தில் நடக்கிற அவலம் சொல்லி அதற்க்குக் காரணம் இந்தியாவை ஆள்கிற காங்கிரஸ் அரசாங்கம் என்பதைச் சொல்லி, அந்தக் கட்சி ஏன் தோற்க வேண்டும் என்பதைச் சொல்லி, தோற்று ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டால் ஈழத்திலும் இந்தியாவிலும் சூழல் மாறும், அம்மையார் ஜெயலலிதா ஈழம் பெற்றுத் தர உதவுவேன் என்று சொல்லி இருக்கிறார்கள், அதனால் இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுங்கள், “இங்கே இலை மலர்ந்தால் அங்கே ஈழம் மலரும்” என்று சொன்னார் சீமான் (http://www.youtube.com/watch?v=pOjQJWJUcIs). அதை அப்படியே திருத்தி ஜெயலலிதா ஈழம் பெற்று கொடுத்துவிடுவார் என்று சீமான் சொல்லிவிட்டார் என்று திரிப்புவாதிகள் இன்றும் உண்மைக்குப் புறம்பாக பரப்புகிறார்கள்.

அப்படியே அவர் பரப்புரையில் “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று சொல்லி இருந்தால் கூட அதை விமர்சனம் செய்து, "நாங்கள் போராடிக் கொண்டிருக்கும்பொழுது எப்படி நீ இதை சொல்லலாம்" என்று தடுக்கும் தகுதி விடுதலை புலிகள் அமைப்புக்கு மட்டும்தான் உண்டே தவிர வேறு யாருக்கும் இல்லை. அந்தத் தேர்தலை உற்று நோக்கிக்கொண்டிருந்த அவர்களே அதைத் தடுக்கவில்லை, விமர்சிக்கவில்லை எனும்பொழுது எதற்காக, யாருக்காக சீமான் அப்படி பரப்புரை செய்தார் என்று யூகிப்பது மிகச்சுலபம். யுத்தக்களத்தில் நின்ற கடற்புலிகளின் தலைவர், அண்ணன் சூசை கூட சீமானை தொடர்ந்து எடுத்துக் கொண்டு போகச் சொல்லுங்கள் என்று அப்பொழுதிலும் சொன்ன சொற்கள் அனைவரும் அறிந்ததே.

 நொடிக்கு நொடி ஏவப்பட்ட அவதூறுகளில் பின்வரும் சம்பவம் உங்களை கண்டிப்பாக சிந்திக்க வைக்கும். சீமான் திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்றார். அந்த விழாவில் நடிகர் விஜய்யும் பங்கேற்றார். உடனே தன் பட வாய்ப்புக்காக நடிகர் விஜய்யை மௌனபுரட்சி செய்து ஆட்சியை மாற்றிவிட்டார் என்று சீமான் பாராட்டிப் பேசினார் என செய்தி இணையதளங்களில் வந்தது. உடனே பாய்ந்து கொண்டு கொட்டின அவதூறு தோய்ந்த அம்புகள். ஆனால் அந்த விழாவில் சீமான் விஜய்யைப் பற்றி பேசவே இல்லை.(http://www.youtube.com/watch?v=T6wFtiVBV08&feature=player_embedded#at=726. அப்படிப் பேசியது இயக்குனர் RV உதயகுமார். வரிக்கு வரி RV உதயகுமார் பேசியதைத் தான் பத்திரிக்கைகள் சீமான் பேசியதாக திரித்து எழுதியது. (http://www.youtube.com/watch?v=TzU7quNfNLM). இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தியை எடுத்து சில உண்மை விளம்பிகள், பெரிய பத்திரிகை நிறுவனத்தில் வேலைபார்ப்பதாக சொல்லிக்கொண்டு பொய்ச்செய்திகள் பரப்புவதையே முழுநேரப்பணியாக செய்து வரும் சிலர் கூட திட்டமிட்டு இவ்வாறாக அவதூறு கிளப்பினார்கள். எந்த படத்திற்காக சீமான் பாராட்டினார் என்று இவர்கள் படம் காட்டினார்களோ கடைசி வரை அந்தப் படம் உருவாகவே இல்லை.

 சீமான் ஈழத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார் என்கிறார்கள். நாம் தமிழர் கூட்டங்களைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வரும்பொழுது அதிகமாக ஈழம் பற்றி இருப்பதால் அப்படியான தோற்றம் நிலவுகிறது. ஆனால் சீமான் தன் கூட்டங்களில் தமிழர் பிரச்சினைகள் மட்டுமல்லாது அனைத்தைப் பிரச்சினைகள் பற்றியும் தான் பேசுகிறார். உதாரணமாக டாஸ்மாக் பற்றி (http://www.youtube.com/watch?v=kboFpYj0ErA). கருப்புப் பணம் பற்றி (http://www.youtube.com/watch?v=CLn6NqPyW0w), காமன்வெல்த் பற்றி (http://www.youtube.com/watch?v=YZOixkw_aS4), மணல் கொள்ளை பற்றி (http://www.youtube.com/watch?v=LrgkL5JC2xU), உலகமயமாக்கல் பற்றி (http://youtu.be/0ztMi3H2Vjc பார்க்க 1:39), தமிழ் மொழி கற்பதன் அவசியம் பற்றி (http://www.youtube.com/watch?v=F_Xql0vo15g&feature=youtu.be), பரமக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி (http://youtu.be/4nxdo65NkUc) என அனைத்து விசயங்களையும் பேசுகிறார். ஆனாலும் ஈழத்தினைத் தவிர சீமான் வேறு எதையும் பேசுவதில்லை என தொடர்ந்து பரப்பப்படுகிறது. தமிழர் நலன் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளுக்காகவும் நாம் தமிழர் போராடுகிறார்கள்- பேசுகிறார்கள். ஆனால் எது முதன்மைப் பிரச்சனையோ, அதை கையில் எடுத்து முதலில் போராட வேண்டிய அவசியம் நாம் தமிழருக்கு உள்ளது. ஈழ விடுதலை என்பது ஒட்டுமொத்த இனத்தின் விடுதலை. ’ஈழ விடுதலை என் விடுதலை’ என்று முழங்கி எங்கோ தூர தேசத்து விடுதலையாக பார்க்கப்பட்ட ஈழ விடுதலையை நம் இனத்தின் ஒட்டுமொத்த விடுதலையாக சீமான் பிரகடனம் செய்கிறார். நாம் தமிழரைப் பொருத்தவரை மற்றதைக் காட்டிலும் ஈழத்தின் விடுதலை என்பது அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கவல்ல நம் இனத்தின் விடுதலை. அதுவே நாம் தமிழர்க்கு முதன்மை.

ஈழப்பிரச்சனை பேசி பிழைப்பு நடத்துவதாக மற்றொரு கருத்தும் பலகாலமாக சொல்கிறார்கள். புலிகளிடம் இருந்து பணம் வாங்கி இருக்கிறார், புலம் பெயர் தமிழர்கள் பணம் தருகிறார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். தமிழ்நாட்டில் ஈழத்தினைப் பற்றி பேசினால் பிழைப்பு நடத்த முடியாது; பிழைப்பு போகும். அத்தனை அடக்குமுறை, சிறை, வழக்குகளை சந்திக்க வேண்டும். உண்மை என்னவெனில் சீமான் தன் பிழைப்பை இழந்துதான் இந்தப் பணியை மேற்கொள்கிறார். கடைசியாக வந்த பட வாய்ப்பும் இந்த அரசியல் செய்கிறார் என்பதால் தள்ளி சென்றுவிட்டது. பெரும் பொருளாதார நெருக்கடியில் தான் ஒவ்வொரு நாளும் கட்சி இயங்குகிறது. அப்படியே பணம் வாங்காமல் இதை எல்லாம் எப்படி மேற்கொள்கிறார் என்பவர்கள் கட்சியில் இணைந்து உள்ளே வந்து நாங்கள் சாதாரண ஒரு கூட்டம் நடந்த பணத்திற்காக எத்தனை சிரமப்படுகிறோம் என்பதை அறிந்துகொள்ளலாம். அது தான் இந்த குற்றச்சாட்டைப் பற்றி நீங்கள் உண்மை அறிய ஒரே வழி. துண்டறிக்கைகள் அச்சிடக்கூட துண்டேந்தி திரியும் தமிழ்ப்பிள்ளைகளான நாம் தமிழர் உங்களை எம்மோடு, நாங்கள் எதிர்கொள்ளும் "நெருக்கடிகளோடு" இணைந்து பணியாற்ற இருகரம் நீட்டி வரவேற்கிறது..

இதோ அடுத்து வருவது உதிர்க்கிற வார்த்தைகளின் மீதாக கட்டமைக்கப்பட்ட அவதூறு.

ஒருவருக்கு மரியாதை செலுத்துவதாலோ, ஒருவரை மரியாதையாக விளிப்பதாலோ, அவரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதாகிவிடாது. தந்தை பெரியார் தன்னை விட இளையவர்களைக் கூட மரியாதையாகத்தான் விளித்தார், ஆனால் சீமான் ஒருவரை மரியாதையாக விளித்ததை குற்றம் என்று குதர்க்கம் பேசப்பட்டதும் இங்கே நடந்தது. மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில் சீமான் பேசுகையில் "விடுதலைப் புலிகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று எங்களைக் கைது செய்கிறீர்களே, இந்த மண்ணின் மைந்தர் மதிப்பிற்குரிய பெருமகன் பால்தாக்கரே அவர்கள் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். அதன் தலைவர் பிரபாகரனைக் கூட்டி வந்து இந்திய எல்லையில் நிறுத்த வேண்டும், ஒரு தீவிரவாதியும் ஊடுருவமாட்டான், பத்திரமாக பார்த்துக்கொள்வார் என்று சொல்லி இருக்கிறார், அவரை நீங்கள் கைது செய்ய முடியுமா?" என்று வினா எழுப்பினர். (http://www.youtube.com/watch?v=wPmBENtAiEs&feature=related). உடனே கிளம்பி விட்டார்கள் நம் நண்பர்கள். பால்தாக்கரேவை பாராட்டிவிட்டார் சீமான், மதவாத அரசியலை ஆதரிக்கிறார் சீமான் என்று கிளப்பி விட்டார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த கூட்டம் பெரியார், காமராஜர், அம்பேத்கார் புகழ் போற்றும் விழா.. அந்த மூவரையும் போற்றி ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசி இருப்பார் சீமான். அதை எல்லாம் விட்டுவிட்டு மரியாதையாக ஒருவரை விளித்ததை பிடித்துக்கொண்டு தொங்குவது அவதூறில்லாமல் வேறென்ன?

இதே சாயலில் மற்றொன்று. காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பரப்புரை மேடைகளில் "நடுவண் ஆட்சியில் இருக்கும் கட்சியோடு கூட்டணி வைத்திருப்பவர்கள் மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்தால் தான் நலத்திட்டங்கள் சரியாக வரும் என்று காங்கிரசார்களும் திமுகவினரும் பரப்புரை செய்கிறார்கள், அப்படியானால் குசராத்தை ஆளும் அந்த மண்ணின் பெருமகன் நரேந்திர மோடி பல நலத்திட்டங்களை அம்மாநில மக்களுக்கு எப்படி செய்து தருகிறார்?" என்று எதிர் வினா எழுப்பினார். (http://www.youtube.com/watch?NR=1&v=W518o3il4ZQ பார்க்க: 7:10). உடனே இஸ்லாமிய சகோதரர்களைக் கொன்ற மோடியை ஆதரிக்கிறார் சீமான் என்ற அவதூறு பரப்பினார்கள். நாம் தமிழர் தொடங்கி மூன்று வருடம் நெருங்குகிறது. இதுவரை ஒருமுறை கூட மதவாத அரசியலையோ அதற்கு ஆதரவாகவோ, பேச்சோ, செயலோ இம்மி அளவு கூட இருந்ததில்லை; இனி இருக்கப்போவதும் இல்லை. மதத்தையும் சாதியையும் கடந்து இனத்தால் ஒன்றிணைவது தான் நாம் தமிழரின் அரசியல். ஜனவரி 16, 2011அன்று திருச்சியில் தமுமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அயோத்தி தீர்ப்பும்- தேசிய அவமானமும் என்ற தலைப்பில் சீமான் பேசினார். அந்த நிகழ்வில் இஸ்லாம் என்பது இனம் அல்ல மார்க்கம். இனத்தால் நீங்களும் நானும் தமிழன் நாம் தமிழர் என்று சொல்கிறார்.(http://www.youtube.com/watch?v=RV0ZnPF4eKQ). அதற்குப் பிறகும் இந்துத்துவா அரசியல்வாதிகளையும், அரசியலையும் சீமான் ஆதரிக்கிறார் என்று எவரேனும் சொன்னால் அது அவதூறு இல்லாமல் வேறு என்ன?

கடைசியாக நவம்பர் 27 அன்று கடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் மாவீரர் நாள் கூட்டத்தில் சீமான் பேசினார். மாவீரர் தியாகங்களைப் போற்றி, தேசியத்தலைவர் பிரபாகரனின் தீரத்தைப் போற்றி, இயக்கத்தின் அர்ப்பணிப்பைப் போற்றி பேசிவிட்டு, நாம் தமிழர் ஏன்? எதற்காக நாம் அரசியல் செய்யவேண்டும், நாம் தமிழர் கட்சியில் ஏன் தமிழர்கள் இணைய வேண்டும் என்று விளக்கினார். அப்பொழுது "தமிழ் தகப்பனுக்கும் நல்ல தமிழ் தாய்க்கும் பிறந்த ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் நாம் தமிழர் கட்சியில் தான் இணைவான், இருப்பான்." என்று சொல்கிறார் (http://www.youtube.com/watch?v=mS523Gh25QQ). உடனே "இந்த தமிழ்நாட்டில் தமிழர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் யாரும் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன் அல்ல" என்றார் என முதன் முதலாக நக்கீரன் இணையதளத்தில் திரித்து எழுதினார்கள். அதை எடுத்து அடுத்த அடுத்த இணையதளங்களில் செய்தியாக்கினார்கள். சிறிது நேரத்தில் நக்கீரன் இணையதளமே அந்த செய்தியை நீக்கிவிட்டது. ஆனால் அதை நம்பி இதுவரை ஆதரவாய் நின்ற பல உணர்வாளர்கள் அனல்கக்கினார்கள். எதற்கு அந்தச் செய்தியை திரித்தார்களோ அது செவ்வனே நடந்தேறியது.

இங்கே சீமான் மீதும், நாம் தமிழர் மீதும் தொடுக்கப்படும் அரசியல் ரீதியான அவதூறுகளுக்கு ஆதாரத்துடன் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. சீமான் அவர்களின் தனிப்பட்ட வாழ்கையின் மீது பல அவதூறை கிளப்பும் தரம் தாழ்ந்தவர்களுக்கு பதில் சொல்லி இந்தப் பத்தியை தரம் தாழ்த்திக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. சமீப காலத்தில் அரசியலில் அதிகமான அவதூறு தாக்குதல்களை எதிர்கொண்டது சீமானும், நாம் தமிழருமாய் தான் இருக்க முடியும். இந்தப் பத்தியின் வாயிலாகவும் பல அவதூறுகள் உருவாகும் என்பதும் தெரியும். நாங்கள் காதுகளைத் திறந்தே வைத்திருக்கிறோம். எங்கள் வாசல்கள் திறந்துதான் இருக்கின்றன. நாங்களும் உங்கள் அருகில்தான் இருக்கிறோம். எங்களிடம் தங்களின் கருத்துக்களைக் கூறி, உங்கள் தமிழ்ப்பிள்ளைகள் தங்களுக்காக உருவாக்கும் அரசியலை ஊக்குவியுங்கள். முதலில் எங்களை தட்டிக்கொடுங்கள்; பிறகு தவறு செய்தால் தட்டிக்கேளுங்கள். எம்மைப் போன்ற சாதியை மறுத்த, இனத்தினை தன் உயிருக்கு மேலாக நேசிக்கின்ற ஒரு பெரும் திரள் இளைஞர் கூட்டம் வரலாற்றின் போக்கில் அமைவது கடினம். எம்மை செதுக்க வாருங்கள். சிதைக்க வராதீர்கள். வீழ்த்த வராதீர்கள். மாறாக வீழ்ந்து கிடக்கும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்ட்தில் அவரவருக்குண்டான பங்கினை குறைவின்றி செய்திட சிந்திப்பீர்கள்.

“விமர்சனம் என்பது வெறும் சொற்கள் தான் அது நம்மை காயப்படுத்தும் கற்கள் அல்ல..” – தேசியத்தலைவர்.

வார்த்தைகளை வரவேற்கிறோம்; கற்களை அல்ல.

- மணி.செந்தில் & பாக்கியராசன் சே