விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் முதல் முறையாக ஓரணியில் நின்று பேரவைத் தேர்தலைச் சந்திக்கின்றன. வரும்  13ஆம் நாள் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இவ்விருகட்சிகளும் இடம்பெற்றிருப்பது, வரலாற்றில் குறித்துக் கொள்ள வேண்டிய முக்கிய திருப்பமாகும். ‘ இந்நாட்டு மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக உள்ள தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் ’ என்னும் அம்பேத்கரின் கனவு மெய்ப்பட, முன்னுரை எழுதியிருக்கிறது இந்தத் தேர்தல். இந்த நல்ல தொடக்கம் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நம் இன எதிரிகளுக்கு அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது.

ramdoss_374இவ்விரு கட்சிகளும் ஒரே இடத்தில் இருந்தால், சாதிக் கலவரம் வந்துவிடும், இரண்டு கட்சியினரும் எதிரெதிர்த் துருவங்கள், இவர்களால் ஒற்றுமையாக இருக்கவே முடியாது என்றெல்லாம்  சிலர் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியினரும் ஒற்றுமையாகிவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். அதனால்தான்  பொழுதுவிடிவதே இந்த இரண்டு கட்சியினரும் மோதிக் கொள்வதற்காகத்தான் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கப் பொய்யான பரப்புரைகளில் ஈடுபடு கின்றனர்.

இதுபோன்ற தவறான பரப்புரை களுக்குத் தங்களின் செயல்பாடுகள் மூலமாக இரு கட்சியினரும் பதிலடி கொடுத்துக் கொண்டுதான் வருகின்ற னர். சமூக, பண்பாட்டுத் தளங்களில் ஒன்றுபட்டு நின்று களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் இப்போது அரசியல் தளத்திலும் ஒன்றுபட்டுள்ளனர். தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தில், அக்கட்சிகளின் தலைவர்கள், தொல். திருமாவளவனும், மருத்துவர் இராமதாசும் கைகோர்த்து நின்றனர். இவ்வமைப்பின் சார்பில் திருச்சி பொன்மலையில்  நடைபெற்ற மூன்றாம் மொழிப்போர் அறிவிப்பு மாநாட்டில்,  இருகட்சியினரும் இலட்சக்கணக்கில் திரண்டனர். சிறு சலசலப்பு கூட இல்லாமல் எழுச்சியோடு அம்மாநாடு நடந்தது.

தாய்மொழிக் கல்வி, தமிழீழ விடுதலையை வலியுறுத்தி இரு  தலைவர்களும் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். உயர்கல்வியில் இடஒதுக்கீடு, மகளிர் இடஒதுக்கீடு, நுழைவுத் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்று, சமூக நீதிக்கான போராட்டங்களில் மருத்துவர் இராமதாசும், தொல். திருமாவளவனும் ஒரே நிலைப்பாட்டுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளனர். அத்தனை போராட்டங்களிலும், நிகழ்வுகளிலும் இரு கட்சிகளின் தொண்டர்களும் ஒற்றுமையுடன் பங்கேற்றிருக்கின்றனர். இதுதான் நடப்பு உண்மை.

மருத்துவர் இராமதாசுக்குத் தமிழ்க்குடிதாங்கி என்று தமிழ்ப்பெயர் சூட்டியவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன். அதே போல் திருமாவளவனைப் போராளி என்று அழைப்பவர் மரு.இராமதாசு. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்குச் சென்ற திருமாவளவனைத் திருப்பி அனுப்பிய இலங்கை அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் மருத்துவர். அப்போது  கூட்டணி எதுவும் முடிவாகவில்லை. விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் ஓரணியில் சேர்ந்து நிற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் திருமாவளவன். மருத்துவர் இராமதாசுக்கு வெளிப்படையாக அழைப்பும் விடுத்தார். இன்று இருவரும் ஓரணியில்.

இப்போது வி­மிகளின் பரப்புரைகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கின்றன. தலைவர்கள் ஒன்று சேர்ந்தால் மட்டும் போதுமா, அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்பட வேண்டாமா என்று அக்கறையோடு கேள்வி எழுப்புகிறார்கள். பொங்கிவரும் இவர்களின் அக்கறைக்கு 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலேயே அணைகட்டிவிட்டனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், பாட்டாளி மக்கள் கட்சியினரும்.

அந்தத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க.கூட்டணியிலும், பாட்டாளி மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியிலும் இடம்பெற்றிருந்தன. சிதம்பரம் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமியும் போட்டியிட்டனர். இதனால் சிதம்பரம் தொகுதியில் பதட்டமான சூழல் நிலவுவது போல ஒவ்வொரு நாளும் செய்திகள் வெளியிடப்பட்டன.  ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடாதா என்ற எதிர்ப்பார்ப்போடு காத்திருந்தது ஒரு கூட்டம். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிக் காட்டினர் விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியினரும். போட்டியிட்ட தலைவர்களின் அரசியல் நாகரீகம் அவதூறு பேசியவர்களின் வாயை அடைத்துவிட்டது. வேட்பா ளர்கள் திருமாவளவனும், பொன்னுச் சாமியும் பிரச்சாரத்தின்போது, நேருக்கு நேர் சந்தித்த வேளையில், வாகனத்தில் இருந்து இறங்கி வந்து ஒருவருக்கொ ருவர் வாழ்த்துகளைப் பறிமாரிக் கொண்டனர். நீயா, நானா என்று கடுமையான போட்டி நிலவும் தேர்தல் களத்திலேயே கண்ணியம் காத்தவர்கள் அவ்விரு கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, தொண்டர்களும்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

thirumavalavan_351தலைவன் வழியில் நடப்பவனே உண்மைத் தொண்டன். தன் மக்களுக்கு சரியான பாதையைக் காட்டுபவனே நல்ல தலைவன். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களும், தலைவர்களும் இந்த இலக்கணத்திற்குள் அடங்குபவர்கள். இதோ இந்தத் தேர்தலிலும் இரண்டு கட்சியினரும் இணைந்த கைகளாகச் சுற்றிச் சுழன்று களப்பணியாற்றி வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர்கள் மருத்துவர் இராமதசையும், பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் தொல். திருமாவளனையும் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றிருக்கின்றனர். இரண்டு தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்து பிரச்சாரம் செய்கின்ற காட்சியையும் தமிழகம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இவர்கள் ஒன்றுசேர்ந்துவிடக் கூடாது என்று தலைகீழாகத் தண்ணி குடித்தவர்கள் யாரும் இதுவரை ஒரே மேடையில் கூட அல்ல, ஒரே தொகுதியில் கூட இணைந்து பிரச்சாரம் செய்யவில்லை. இது காலமாற்றத்தினால் விளைந்த சமூக மாற்றம்.

இதற்கு தலைவர் கலைஞருக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரணியில் ஒன்றுதிரள வேண்டும் என்ற அண்ணல் அம்பேத்கரின் கூற்றினை, பெரியாரின் மாணவர் கலைஞர் முன்மொழிந்திருக்கிறார். தி.மு.க.கூட்டணி வெற்றிக் கூட்டணி மட்டுமல்ல சமூக நீதிக் கூட்டணி. சேர வேண்டியவர்கள், சேர வேண்டிய நேரத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இருபெரும் போராட்ட சக்திகள் இணைந்திருக்கின்றன. தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டியது அவசியம்.

தமிழகத்தில் சமூக நீதிப் போராட்டத்திற்கான தேவை இன்னும் இருக்கிறது. எங்களுக்கான உரிமைகளை நாங்களே இணைந்து போராடி பெற்றுக்கொள்வோம். ஆடு நனைகிறதே என்று ஓநாய்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் முடிவெடுத்துவிட்டனர். மனுநீதியைக் கொளுத்தும் வெளிச்சத்தில் சமூக நீதிக்குப் புதிய பாதை போட மக்கள் தயாராகிவிட்டனர். இது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்கான கூட்டணி.

Pin It