pavanar_periyar_600

தனித்தமிழியக்க முன்னோடிகளில் ஒருவரும், தன்னிகரற்ற தமிழ் அறிஞருமான ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களை மொழி ஞாயிறு என அழைக்கின்றோம்.

அறிஞர் பாவாணருக்கு ‘ மொழிஞாயிறு பட்டம் ’, எந்த ஆண்டு, எந்த அமைப்பால் வழங்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முயன்றபோது, புதிய செய்தி ஒன்று கிடைத்தது.

pavanar_4001957 ஆம் ஆண்டு சேலம் தமிழ்ப் பேரவையினர் பாராட்டு விழா நடத்திப் பாவாணருக்கும், பொன்னம்பலனாருக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இருவருக்குமான விருதுகள் மற்றும் பொற்கிழிகளைத் தந்தை பெரியார் வழங்கியுள்ளார். அவ்விழாவில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரும் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கியுள்ளார். பொன்னம்பலனாருக்கு அன்று வழங்கப்பட்ட பட்டம்தான் ‘தமிழ் மறவர்’ என்பது. இச்செய்திகள் அனைத்தும், பாவாணரின் இளைய மகனார் மணி என்ற தே.மணிமன்றவாணன் எழுதியுள்ள, ‘பாவாணர் நினைவலைகள்’ (பக்.197) என்னும் நூலில் உள்ளன.

இவற்றுள் ஒரு செய்தி முதன்மையானது. அறிஞர் பாவாணருக்கு அன்று வழங்கப்பட்ட பட்டம் ‘திரவிட மொழிநூல் ஞாயிறு’ என்பதுதானே அன்றி ‘மொழி ஞாயிறு’ என்பதன்று. சுருக்கம் கருதி ‘திரவிட’ என்னும் சொல் நீக்கப்பட்டுள்ளதாக எண்ணிவிடக் கூடாது. ‘மூதறிஞர் ராஜாஜி நகர்’ என்பது, எம்.ஆர்.நகர் என்று சுருங்குவதில்லை. ஆனால் தியாகராயர் நகர் என்பது ‘தி.நகர்’ என்றும், கலைஞர் கருணாநிதி நகர் என்பது ‘கே.கே.நகர்’ என்றும் சுருங்கிவிடுகின்றது.

‘திராவிட’ மறைப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இனி நாம் பாவாணரைக் குறிப்பிடும்போதெல்லாம் ‘திரவிட மொழிநூல் ஞாயிறு’ என்றே எழுதுவோம். சுருக்கம் தேவைப்படின் ‘ திராவிட ஞாயிறு ’ என்போம்.

(அன்று வழங்கப்பட்ட விருதின் படத்தையும், எடுக்கப்பட்ட ஒளிப்படத்தையும் கொடுத்துதவிய திரு. மணி அவர்களுக்கு நன்றி!)

                                            ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

திராவிட எதிர்ப்பு - பார்ப்பனிய ஆதரவே!

1907 ஆம் ஆண்டு, இந்தியாவெங்கும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான உணர்வுகளும், போராட்டங்களும் வெகுண்டு எழுந்தன. மராத்தியத்தைச் சேர்ந்த பாலகங்காதரத் திலக் அன்றைய தலைவராய்க் களத்தில் நின்றார். அக்காலகட்டத்தை மறுமலர்ச்சிக் காலம் என்று பலரும் கருதினர். ஆனால், நேருவோ, அதனை இன்னொரு கோணத்தில் நின்று விமர்சனம் செய்தார். விடுதலைப் போராட்டமேயானாலும், மதச் சார்புடைய ஒன்றை முற்போக்கானதாக ஏற்க முடியாது என்பது நேருவின் வாதம்.

“1907 இல் நிலவிய இந்திய தேசியப் புத்துணர்வு, மிக உறுதியாகப் பிற்போக்குத் தன்மை வாய்ந்தது - அது ஒரு மதவழித் தேசியம்” என்று தன் ‘சுயசரிதை’யில் நேரு கூறியுள்ளார். (“ Socially speaking, the revival of Indian Nationalism in 1907 was definitely reactionary...was a religious nationalism ” - An Autobiography, p.24)

இந்திய தேசியப் புத்துணர்வுக்கு மட்டுமன்றி, இக்கூற்று, தமிழ்த் தேசியப் புத்துணர்வுக்கும் பொருந்தும்.

சிலம்புச் செல்வர், ம.பொ.சி., 1946 நவம்பரில், தமிழரசு கழகம் என்னும் கட்சியைத் தோற்றுவித்தார். தமிழ்த் தேசிய உணர்வும், அதன் உள்ளீடாக ஆங்கில எதிர்ப்பும் அக்கழகத்தின் நோக்கங்களாக இருந்தன. எனினும் அது வெறும் தமிழ்த் தேசிய உணர்வாக அல்லாமல், திராவிட இயக்க எதிர்ப்புத் தமிழ்த் தேசிய உணர்வாக இருந்தது. அதனால்தான் 1950 - 51 இல், தமிழகம் முழுவதும் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை, ம. பொ.சி நடத்தினார். அம்மாநாடுகளில் விபூதி வீரமுத்து, அணுகுண்டு அய்யாவு போன்றோர், திராவிட இயக்கம் குறித்தும், அதன் தலைவர்கள் குறித்தும் மிகத் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். அம் மாநாடுகளுக்குக் கள்ளக்குறிச்சி வழக்குரைஞர் தாத்தாச்சாரி போன்ற பணக்காரப் பார்ப்பனர்கள் நிதியுதவி செய்துள்ளனர்.

திராவிட இயக்க எதிர்ப்பு என்பது, பெரியாரையோ, திராவிடர் கழகத்தையோ எதிர்ப்பது எனப் பொருள் கொள்ள முடியாது, பார்ப்பனிய ஆதரவே திராவிட இயக்க எதிர்ப்பாக வெளிப்பட்டுள்ளது. இதனை ம.பொ.சி. அவர்களே, ‘நானறிந்த ராஜாஜி’ என்னும் நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டிலே ஒரு சாரார், பிராமணர் தமிழர் அல்லர்; தமிழருக்கு அந்நியரான ஆரியரே என்று பிரச்சாரம் செய்தது, தலைவர் ராஜாஜிக்கு மிகுந்த வேதனையைத்தந்தது. பிராமணர் - பிராமணரல்லாதார் என்னும் வேற்றுமையைப் போக்குகின்ற குறிக்கோளுடன்தான், தமிழர் என்ற இன உணர்ச்சியை நான் வலியுறுத்துகின்றேன் என்பதில் ராஜாஜிக்கு ஐயமிருக்கவில்லை” (பக்.350)

என்பது சிலம்புச் செல்வரின் கூற்று. ராஜாஜிக்கு மட்டுமின்றி, நமக்கும் எந்த ஐயமும் எழ இடமில்லாமல் ம.பொ.சி. தன் நிலையை விளக்குகின்றார்.

தமிழர் என்ற இன உணர்ச்சியைத் தான் வலியுறுத்துவது, பிராமணர் - பிராமரல்லாதவர் என்னும் வேற்றுமையைப் போக்குவதற்காகத்தான் என்பதனை, இதனைவிடத் தெளிவாக எப்படி விளக்க முடியும்?

தன் நூல்களில் இன்னும் பலவிடங்களிலும் இக்கருத்தை ம.பொ.சி. கூறியுள்ளார்.

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், மதத்தால் இந்துக்களாக இருப்பார்களானால், அவர்கள் தங்கள் வேத மொழியான சமஸ்கிருதத்தை வெறுப்பது முறையோ, நெறியோ ஆகாது” (‘தமிழும் சமஸ்கிருதமும்’ - பக்.19) என்கிறார் ம.பொ.சி. தமிழனுக்குத் தாய்மொழி தமிழாக இருந்தாலும், வேதமொழி சமற்கிருதமாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து.

சிலம்புச் செல்வரின் தமிழ்த் தேசியமும், பார்ப்பனீயமும் இப்படியாகக் கைகோத்து நடக்கின்றன.

திராவிட இயக்கக் கோட்பாடுகளை எதிர்த்துக் கொண்டே, தமிழ்த் தேசியம் பேசும் எவரும், எந்த அமைப்பும், பார்ப்பனீயத்திற்கு ஆதரவாகத்தான் ஆகிவிடுவர் என்பதற்குச் சிலம்புச் செல்வரே சிறந்த சான்று!

(கருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 1, 2010 இதழில் வெளியானது)

Pin It