தந்தை பெரியார் அவர்களின் மொழிக் கொள்கை குறித்து கடந்த பல ஆண்டுகளாகவே பல்வேறுவிதமான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ‘தமிழைக் காட்டுமிராண்டி மொழி’ என்று கூறியவர் பெரியார் எனத் துக்ளக் இதழ் பலமுறை எழுதியிருக்கிறது. வீட்டில் வேலை செய்வோரிடம்கூட ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று பெரியார் கூறினார், எனவே அவர் தமிழுக்கு விரோதி என விமர்சனம் செய்கிறவர்களும் உண்டு. துக்ளக் போன்ற காவிப் படையினர் மட்டுமல்லாமல், பெரியாருக்கு எதிரான இக்கருத்துப் பரப்புரையைத் தமிழ்த் தேசியம் பேசும் நண்பர்கள் சிலரும் தொடர்ந்து செய்துவருகின்றனர். திராவிட இயக்கத்தை எதிர்ப்பதில் பார்ப்பனர்களைக் காட்டிலும் தமிழ்த்தேசியத்தினர் சிலரே இப்போதெல்லாம் கூடுதல் முனைப்புக் காட்டுகின்றனர்.

periyar 342எந்த ஒன்றையும் ஓங்கிச் சொல்லுதல் என்பது பெரியாரின் இயல்பு. அப்படிச் சொன்னால்தான், பத்துக்கு நான்காவது பழுதில்லாமல் நடக்கும் என்பது அவருடைய எண்ணம். அந்த வகையில் சொல்லப்பட்டவைதான் மேலே உள்ள இரண்டு கூற்றுகளும்.

மொழி பற்றிய அய்யாவின் கருத்துகளை தொடர்ந்து படித்தால் மட்டுமே நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியும். தன் உரையிலும் எழுத்திலும் சமற்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் குறித்தும் பல இடங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார். சமற்கிருதத்தைப் பல நேரங்களில் அவர் வடமொழி என்று குறிக்கின்றார்.

வட மொழியின் மீது மிகக் கடுமையான விமர்சனங்களைப் பெரியார் முன்வைத்துள்ளார். தமிழ் மொழியின் மீதும் அவருக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால், இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். தமிழுக்காகத் தான் கிளர்ச்சிகளை நடத்தியிருப்பதாகவும், வடமொழி நீக்கிய தமிழால் நம் இழிவுகள் நீங்கும் என்றும் பெரியார் கூறுகிறார்.

“தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்று கிளர்ச்சி செய்தேன். அது என் தாய் மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்டது என்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது. எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? தமிழ் இந்நாட்டுச் சீதோக்ஷ்ண நிலைகேற்ப அமைந்துள்ளது-. இந்திய நாட்டுப் பிற எம்மொழியையும் விடத் தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் - மற்ற வேற்றுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையே உள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும், மேலும் நன்மையடைவோம் என்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது.”

மேற்காணும் கூற்று தமிழ் பற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை விளக்கும். மொழி பெயர்ப்பில் கூட, சரியான மொழிபெயர்ப்பு இல்லை என்று அவர் வருத்தப்படுகிறார்.

“கலைச்சொல் நிர்மாணக் கமிட்டியார் கண்டுபிடித்துள்ள வார்த்தைகளைப் பாருங்கள். மீறீமீநீtக்ஷீஷீறீஹ்sவீs, லீஹ்பீக்ஷீஷீரீமீஸீ, பீவீsவீஸீயீமீநீtணீஸீt என்பவற்றிற்கு முறையே, வித்யுக்தி யோகம், ஆப்ஜனகம், பூதிநாசினி என்று புது வார்த்தைகளைத் தோற்றுவித்துள்ளனர். இதைவிட சென்னைத் தமிழ்ச்சங்கத்தார் கண்டுபிடித்துள்ள முறையே, மின்பருக்கை, நீரகம், நச்சுநீக்கி என்ற வார்த்தைகளே சிறந்தனவாக இருக்கின்றன”, என்கின்றார்.

ஆதலால், தமிழ் சரியாக எழுதப்பட வேண்டும் என்றுதான் அவர் வலியுறுத்தியிருக்கிறார். தமிழ் என்னும் பெயரில், சமற்கிருதம் ஆதிக்கம் செலுத்துவதை அவர் அனுமதிக்க மறுக்கிறார்.

சமற்கிருதத்தை எதிர்த்த அளவுக்குப் பெரியார் ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை. பல இடங்களில் ஆங்கிலத்தை அவர் ஆதரிக்கிறார் என்பது உண்மைதான். அதற்கான காரணத்தையும் அவர் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.

“இராஜா வேண்டாம், குடியரசுதான் வேண்டும் என்கின்ற அறிவு; சமதர்மம் வேண்டும், சனாதனம் ஒழிய வேண்டும் என்கின்ற அறிவு; ஆணும் பெண்ணும் சமம் என்கின்ற அறிவு ஆகிய சகல அரசியல், பொருளாதார முன்னேற்ற அறிவுக் கருத்துகளையும் ஆங்கில மொழிதான் நமக்குத் தந்தது.”

ஆங்கிலம் பற்றிய இந்தக் கருத் தோட்டம்தான் அவருடைய ஆங்கில ஆதரவுக்குக் காரணம். தமிழிலும் கூட, இடைக்காலத்தில் வந்து கலந்துவிட்ட, மதச்சார்பு, சமற்கிருத ஆதிக்கம் ஆகியனவற்றைத்தான் அவர் கடுமையாக எதிர்க்கின்றார். “தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பால் இடதுகைபோலப் பிற்படுத்தப்பட்டுவிட்டது. இந் நோய்க்கு முக்கிய காரணம் மதச்சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான்...... தமிழில் இருந்து சைவத்தையும், ஆரியத்தையும் போக்கிவிட்டால், நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும்”, என்பதே பெரியாரின் கூற்றாகும்.

சமற்கிருதம் தமிழர்களிடம் பின்னடைவையே ஏற்படுத்தியது. மதம், புராணம், மூடநம்பிக்கைகள் அனைத்துக்குமான ஊற்றாக அம் மொழி இருந்தது. ஆங்கிலமோ அறிவியல் செய்திகளை நமக்குக் கொண்டு வந்தது. விடுதலை உணர்வையும், சமத்துவச் சிந்தனையையும் தமிழர்களுக்கு ஊட்டியது. எனவே, பழந்தமிழை மீட்டெடுக்கும்வரை, ஆங்கிலத்தை வழித்துணையாகக் கொள்வதில் தவறு ஏதுமில்லை என்ற கருத்தே பெரியாரின் மொழிக்கொள்கையாக இருந்திருக்கிறது.

(வே.ஆனைமுத்து(பதிப்பு), பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் - தொகுதி 2, பக்.968-72)

Pin It