இராஜீவ்காந்தி கொலை வழக்கில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு முக்கியமான திருப்பம் நிகழ்ந்திருக்கிறது. இக்கொலைவழக்கின் விசாரணை அதிகாரிகளுள் ஒருவரான, திரு தியாகராஜன் இப்போது வெளிப்படுத்தி இருக்கும் செய்தி, வழக்கின் தன்மையைத் தலைகீழாகப் புரட்டிப்போடக் கூடியதாக உள்ளது. இவர்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த அதிகாரி.

இப்போது அவரே ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்திருக்கிறார். மரண தண்டனைக்கெதிரான ‘உயிர்வலி’ ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள அவரின் வாக்குமூலம் இதோ...

“பேரறிவாளனின் வாக்குமூலம் வரிக்குவரி அப்படியே பதிவு செய்யப்படவில்லை......

....9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரிகளை வாங்கி, சிவராசனிடம் கொடுத்தேன். அவற்றை வெடிகுண்டுகளில் சிவராசன் பயன்படுத்தினார் என்று பேரறிவாளன் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தான் வாங்கிய பேட்டரி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்தப் பட்ட வெடிகுண்டில் பயன்படுத்தப்பட உள்ளது என்பது தெரியும் என்று பேரறிவாளன் கூறவே இல்லை.

அவரிடம் வாக்குமூலம் பெற்ற போது, ‘நான் பேட்டரியை வாங்கிக் கொடுத்தது உண்மை. ஆனால், எதற்காக சிவராசன் அதைக் கேட்டார் என்று தெரியவில்லை’ என்றுதான் பேரறிவாளன் கூறினார். ஆனால் அதனை அவர் வாக்குமூலத்தில் நான் எழுதவில்லை. அதாவது அவரது ஒப்புதல் இல்லாமல், பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை நான் சேர்த்துக் கொண்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருந்தால், அதை நிச்சயம் மாற்றி இருந்திருப்பேன்....”

தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கைப் பொறுத்தவரை, காவல்துறை அதிகாரி களால் வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம்தான் முகாமையான அடிப்படைச் சான்றாக எடுத்துக் கொள்ளப்படும். அதன் அடிப்படையில்தான் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டோ ருக்குத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இப்போது “ சிவராசன் புலிகளின் தலைமையிடத்துக்கு அனுப்பிய வயர்லெஸ் செய்தியில், ராஜீவ் கொலை பற்றிய செய்தியை இதுவரைக்கும் நாங்கள் யாருக்கும் சொல்லவில்லை என்று பதிவாகியுள்ளது......ஆகவே சந்தேகத்தின் பயனை... ஏன்? ஏன் சந்தேகத்தின் பலன்... தெளிவாகத் தெரிகிறது, அறிவுக்கு ராஜீவ்கொலை பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை....சதித்திட்டம் பற்றியே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்னும் போது, சதியில் அவருக்கு எப்படிப் பங்கு இருக்க முடியும்? எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தூக்கிலிட்டால், அது மிகக்கொடுமையான நீதிப் பிழையாகும்” என்று வாக்குமூலங்களைப் பதிவு செய்த அதிகாரி, தியாகராஜனே கூறுகிறார். அறிவைப் பற்றிச் சொல்லும்போது, “குற்றமற்ற ஓர் உயிர்... அதில் எந்தக் காரணத்திற்காகவும் அறம் தப்பக் கூடாது” என்று குற்ற உணர்ச்சி மேலிட தெரிவிக்கிறார்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது அவருடைய நெஞ்சு சுட்டு உண்மை வெளிப்பட்டதில் மகிழ்ச்சியே! ஆனால் ஒவ்வொரு வழக்கிலும், ஏதேனும் ஓர் அதிகாரியின் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தால்தான் அப்பாவி களுக்கு நீதி கிடைக்கும் என்னும் நிலைமை உருவாகிவிட்டால், நீதி மன்றங்களின் மதிப்பு என்னாகும் என்ற எண்ணமும் எழுகிறது.

சிபிஐயின் முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராஜனின் வாக்குமூலம், ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட் டுள்ளவர்களின் மீது சுமத்தப்பட் டுள்ளவை பொய்யான குற்றச்சாட்டு கள்தான் என்கிற உண்மையை உடைத்துச் சொல்கிறது, உரக்கச் சொல்கிறது. எனவே நாம் வைக்கின்ற கோரிக்கைகள் இரண்டு மட்டுமே. ஒன்று, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இரண்டாவதாக, மீண்டும் இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும். தி.மு-.க. தலைவர் கலைஞர் உள்பட ஜனநாயக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் உணர் வாளர்கள் ஆகியோரின் ஒருமித்த கோரிக்கை மறுவிசாரணை வேண்டும் என்பதே! இதை வலியுறுத்தி தமிழக வழக்கறிஞர்கள் சார்பில், உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘மறுவிசாரணை செய்வது என்றால் உங்களுக்கு விளையாட் டாகத் தெரிகிறதா’ என்கிறார், இவ்வழக்கின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் இயக்குனரான கார்த்திகேயன். யார் விளையாடுகிறார்கள்? வாக்கு மூலங்களில் கற்பனையைக் கலந்து, அப்பாவிகளின் உயிர்களோடு விளை யாடுவது நீங்களா? நாங்களா? மனித அறத்திலிருந்து விலகி, அரசியல் சட்டம் வழங்கியுள்ள உயிர் வாழும் அடிப்படை உரிமையைப் பறித்து, பேரறிவாளன் உள்ளிட்ட இளைஞர் களைத் தூக்கு மேடையில் நிற்க வைத்து அதிகார விளையாட்டு விளையாடுவது நீங்களா, நாங்களா?

ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம், இத்தனை ஆண்டுகள் கழித்தாவது நீதி காப்பாற்றப்பட்டதே என்று மகிழாமல், இதனால் நீதிமன்றங்களின் முறைமைகள் என்னாகுமோ என்று கவலைப்படு கிறார். தியாகராஜனுக்குத் தாமதமாக வேணும் மனச்சான்று விழித்துக் கொண்டது, ஆனால் இவர்களைப் போன்றவர்களுக்கு மனச்சான்று செத்தே போய்விட்டது போலிருக்கிறது.

நீதிமன்றங்களின் மதிப்பும், மரியாதையும் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளின் நீதியில் இருக்கின்றன. அந்த நீதி, நீதிபதிகளின் நேர்மையில் வாழ்கிறது. ஆனால் அண்மைக் காலமாக நீதிபதிகளே குற்றச்சாட்டு களுக்கு உள்ளாகும் நிலையை நாடு பார்க்கிறது. தில்லி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் மீது, பெண் வழக்குரைஞர் ஒருவர் பாலியல் குற்றம் சாட்டியிருக்கிறார். விசாரணை ரகசியமாக நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சாந்தி பூஷன், “இந்தியாவின் கடைசித் தலைமை நீதிபதிகள் 16 பேரில், எட்டு பேர் லஞ்ச ஊழல் கறை படிந்தவர்கள். 6 பேர் நேர்மையானவர்கள். மீதம் இருக்கிற 2 பேரைப் பற்றி எந்தவித முடிவுக்கும் வரமுடியவில்லை” (eight of the last 16 Chief Justice were definitely corrupt. Six were definitely honest and about the remaining two, a definite opinion cannot be expressed whether they were honest or corrupt) என்று, 2010 செப்டம்பரில், தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியாவிற்கு அனுப்பிய மனுவில், 16 நீதிபதிகளின் பெயர்களோடு குறிப்பிட்டிருந்ததை நாம் அறிவோம்.

நீதிமன்றங்களின் முறைமைகளைக் கேள்விக்குள்ளாக்குவது யார் என்பதை இதற்குமேலும் விளக்க வேண்டுமா?

குற்றங்களை விசாரிக்கின்ற விசாரணை அமைப்புகளும், அந்த விசாரணைகளின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்குகின்ற நீதி அமைப்பும், தங்களைப் பற்றிய பெருமிதத்தையே பெரிதாக எண்ணுகின்றன. தங்களுக்குள் இருக்கின்ற நீ பெரியவனா, நான் பெரிய வனா என்ற மோதலில் நீதி சாகடிக்கப் படுவதையோ, அப்பாவிகள் தண்டிக்கப் படுவதையோ உணர மறுக்கின்றனர். முதலில் இவர்களுக்கு மனித உயிர் களின் மதிப்பையும், அறத்தின் வலிமை யையும் அடிப்படையாக மனத்தில் பதிய வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று மனசாட்சியின் உறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட ஒரு காவல் ஆய்வாளரின் கடிதம்தான், ஆறுமுகம் என்ற அப்பாவியை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என்று விடுதலை செய்ய உதவியது. தமிழரான ஆறுமுகம் பொய்க் குற்றச்சாட்டில் தண்டிக்கப் பட்டது, மும்பை ஓசிவாராவில். ஆயுள் தண்டனை என்பதால் ஆறுமுகம் அரைகுறையாகவாவது தப்பினார், ஒரு வேளை தூக்கிலிடப்பட்டிருந்தால்...? இதுபோன்று நீதி பிறழும் இடங்கள் தான் நீதிமன்றங்களின் முறைமைகள் கேள்விக் குள்ளாக்குகின்றன என்பதை ‘நீதியரசர்கள்’ மறுக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம்.

காரணம், இந்தியாவில் மட்டும் 500க்கும் மேற்பட்டவர்கள் தூக்குமேடையில் நிறுத்தப்பட்டுள்ள னர். உலகம் முழுமைக்கும் ஏறத்தாழ 20,000 பேர்களுக்கு நீதியின் பெயரால் கல்லறைகள் தயாராக உள்ளன. ராஜீவ் கொலை வழக்கில் உயிரூட்டப்பட இருக்கின்ற நீதியானது, ஒட்டுமொத்த மரணதண்டனைக்கும் சாவு மணியாக இருக்கவேண்டும்.

அதற்கு ஜெயின் கமிஷன் சுட்டிக்காட்டிய சந்தேகத்திற் குரியோர் பட்டியலில் முதலாவதாக உள்ள சந்திராசாமியும், இரண்டாவது இடத்தில் உள்ள சுப்பிரமணியன் சாமியும் தீர விசாரிக்கப்பட வேண்டும். தங்கள் தலைவரின் சாவுக்கு நீதி வேண்டும் என்று காங்கிரசாரும், ராஜீவ் குடும்பத்தாரும் விரும்புவது உண்மையெனில், தண்டிக்கப்பட்ட நிரபராதிகளை உடனே விடுதலை செய்யவும், ‘சாமி’களின் மீது விசாரணை தொடங்கவும் வலியுறுத்த வேண்டும்.

வழக்கு விசாரணை முடிவதற் குள்ளாகவே தண்டனை வழங்கியது எப்படிச் சரியாகும் என்கிற கேள்வியை நாம் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். இதற்கு மேலும் வலுசேர்ப் பதுபோல, தியாகராஜனின் வாக்கு மூலம் அமைந்துள்ளது.

தூக்குத் தண்டனை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான, ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி.தாமஸ், “இது ஒரு நீதிக்கொலை (It is a Judicial murder) அவர்களை விடுதலை செய்யும் நேரம் வந்துவிட்டது.” என்-று சொல்கிறார். வாக்குமூலம் வாங்கிய அதிகாரியே, “சிபிஐயிடம் இருக்கும் மற்ற ஆதா ரங்களின்படி பார்த்தாலும், அறிவுக்கு ராஜீவ் கொலை பற்றி முன்பே தெரிந்திருக்கவில்லை...This is a very solid, uncontested, unchallenged and unchallengable evidence” என்று சொல்கிறார். அன்று புனையப்பட்ட ஆதாரங்களை அவர்கள் கொடுத்த போது ஏற்றுக்கொண்ட - தியாக ராஜன் சொல்வதுபோல, “வாக்குமூலத் தில் இல்லாத ஒன்றை தன்னிச்சையாக அர்த்தப்படுத்திக்கொண்ட” - உச்சநீதி மன்றம், இன்று உண்மையைச் சொல்லும் அவருடைய வாக்குமூலத் தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குற்றத்தை ஒப்புக்கொண்டு வழங்கப்படுவதுதான் ஒப்புதல் வாக்கு மூலம். ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்று அறிவு சொன்னது வெறும் வாக்குமூலம்தானே தவிர ஒப்புதல் வாக்குமூலம் அன்று.

22 ஆண்டுகளாக, தங்கள் இளமைக் காலம் முழுவதையும் சிறையில் கழித்த அப்பாவிகளின் மன உளைச்சல்களுக் கும், ஒவ்வொரு நாளும் காற்றில் ஆடும் தூக்குக் கயிறு கண்களை உறுத்த, உறக்க மின்றி தவித்த அவர்களின் வயதான பெற்றோர்கள் அடைந்த வேதனை களுக்கும், வடித்த கண்ணீருக்கும் நீதி பிறழ்ந்த இந்நாட்டின் நீதி அமைப்பு என்ன பதில் சொல்லப்போகிறது?

Pin It