அன்பிற் சிறந்த திரு சிவகுமார் அவர்களுக்கு,

வணக்கம். நேற்று விஜய் தொலைக்காட்சியில் இரண்டு மணி நேரம் எங்கும் அசையாமல், வெடிச்சத்தத்திற்கும், விளம்பரங்களுக்குமிடையில், உங்கள் பேச்சைக்( ‘என் கண்ணின் மணிகளுக்கு’) கூர்ந்து கேட்டு, அதை நெஞ்சத்தில் அசை போட்டு, இன்று காலை இந்தத் திறந்த மடலை உங்களுக்கு எழுதுகின்றேன். 65 வயதிலும் அசர வைக்கும் நினைவாற்றல், சந்தப் பாடல்களைச் சரளமாய்ச் சொல்லும் அழகு, ஆழ்ந்த உணர்ச்சிகள், அறுபடாத தமிழ் எல்லாம் இணைந்து, உங்கள் பேச்சுக்கு ஒளியூட்டுகின்றன. நல்ல நடிகரென நீங்கள் பாராட்டப்பட்டது போலவே, நல்ல பேச்சாளராகவும் நாடு இன்று உங்களை ஏற்றுக் கொண்டுள்ளது.

எனினும், இன்னொரு கோணத்தில்தான் உங்கள் பேச்சு என்னைக் கூடுதலாய்க் கவர்ந்தது. உங்கள் முன்னே விரிந்து கிடந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மீது உண்மையான அக்கறையோடு நீங்கள் பேசினீர்கள். தன் பிள்ளைகளுக்கு ஒரு தந்தை சொல்வதைப் போலப் பாசத்தோடு சொன்னீர்கள். உங்கள் சொற்களில் ஒரு சத்தியம் இருந்தது. பணம், புகழ், எல்லாவற்றையும் பார்த்துவிட்ட பிறகு, பதவிகளை நோக்கிப் படையயடுக்காமல் அல்லது முதுமைக் காலத்தை இனிமையாய்க் கழித்துவிடலாம் என்று முடிவெடுக்காமல், நாட்டுக்கு நல்லது சொல்ல, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட அரங்குகளுக்கு வந்திருக்கின்றீர்கள். அந்த நேர்மை பிடிக்கிறது.

வழிகாட்டும் தகுதி தனக்கு உண்டென்பதற்கும் சில சான்றுகள் தந்தீர்கள். “பல ஆண்டுகளாய்க் காபி, தேநீர் என் நாவில் பட்டதில்லை. புகை, மதுப் பழக்கம் இல்லை. வேறு மாது எவரையும் இதுவரை தொட்டதில்லை” என்று குறிப்பிட்டீர்கள். திரையுலகமே ஒப்புக் கொண்ட உண்மைகள் இவை.

அதே நேரம், இப்படிச் சில பழக்கங்கள் இருந்திருந்தாலும் கூட, நீங்கள் நல்ல மனிதர்தான் என்பது என் பார்வை. பழக்கங்களையும், குணங்களையும் போட்டு நான் குழப்பிக் கொள்வதில்லை. நல்ல பழக்கங்களே இல்லாத நல்ல மனிதர்கள் சிலரையும், கெட்ட பழக்கங்களே இல்லாத கெட்ட மனிதர்கள் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

வஞ்சகம், சூது, தன்னலம் கொண்ட மனிதர்கள் கெட்ட மனிதர்கள். ஏமாற்றும் எண்ணம் இல்லாமை, அடுத்தவர்க்கு உதவுதல், பொதுநல விருப்பம் கொண்ட மனிதர்கள் நல்ல மனிதர்கள். இது மேலோட்டமாக இருந்தாலும், என் கணக்கு இவ்வளவுதான். பெற்றோர் பற்றியும், கல்வி பற்றியும், மொழி பற்றியும் நீங்கள் சொன்ன கருத்துகள், பிள்ளைகள் நெஞ்சில் பதிய வேண்டியவை.

புறத்தேவைக்கு ஆங்கிலம் பயன்படலாம். ஆனாலும் அகத் தேவைகளை அன்னைத் தமிழே நிறைவு செய்யும் என்னும் உங்களின் சொற்கள் பொருள் பொதிந்தவை. எந்த நாட்டிற்குப் பிழைக்கப் போனாலும், தாய் மண்ணையும், தாய் மொழியையும் மறந்துவிடாதீர்கள் என்பது இன்றைக்குத் தேவையான அறிவுரை.

ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும் போது அப்பா இறந்து போக, விதவைத் தாயால் வளர்க்கப்பட்ட மகன் என்று உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அம்மாவின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பின் விரிவுக்கானஅடிப்படைக் காரணம் புரிந்தது. எல்லாப் பிள்ளைகளும் பெற்றோரையும், ஆசிரியர்களையும் இறுதிவரை நேசிக்க வேண்டும் என்பது உங்கள் உள்ளத்தின் வெளிப்பாடு.

ஆனாலும், பெற்றோர்களிடம் சொல்லிவிட்டுத்தான் பிள்ளைகள் காதலிக்க வேண்டும் என்பதெல்லாம் நடைமுறைக்கு உதவாதவை. மேலும், காதல் என்பது வெறும் வயது சார்ந்த பிரச்சினை அன்று. காதலுக்குக் குறுக்கே நிற்கும் சாதி போன்ற சமூகக் காரணங்களையயல்லாம் விட்டுவிட்டுக் காதலைப் பற்றி நாம் பேச முடியாது.

இருக்கட்டும்... இவைகளையயல்லாம் தாண்டி இரண்டு முக்கியமான செய்திகளுக்காகவே நான் இம்மடலை எழுதத் தொடங்கினேன். ஒன்று, நீங்கள் பேசிய பெண் விடுதலை பற்றியது.

தாய் வழிச் சமூகம் எப்படி ஆணாதிக்கச் சமூகமாக மாறியது என்னும் வரலாற்றைத் தொட்டுக் காட்டிய நீங்கள், சாக்ரடீஸ், அரிஸ்டாடில் ஏசுநாதரில் தொடங்கி, காந்தியார் வரை பெண் விடுதலைக்கு எதிராகச் சொல்லியுள்ள சில வரிகளை எடுத்துக் காட்டினீர்கள்.

இன்றைக்குப் பெண்கள் வேலைக்குப் போகின்றனர். TIDEL PARK முழுவதும் பெண்கள்தான் காணப்படுகின்றனர் என்று குறிப்பிட்டீர்கள். பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்த பாரதியாரின் பாடல் வரிகளைப் பிள்ளைகளுக்குச் சொன்னீர்கள். அத்தோடு அடுத்த செய்திக்குப் போய்விட்டீர்கள்.

அவ்வளவுதானா? பெரியாரை விட்டுவிட்டுப் பெண்விடுதலை பற்றிப் பேசுவது நியாயந்தானா? பாரதியின் பங்களிப்பை நான் மறுக்கவில்லை. ஆனால் பாரதியார் பாடல்தான் எழுதினார். பெரியார்தானே, அதற்காக இயக்கம் கட்டினார்? மூவலூர் ராமாமிர்தத்தம்மையாரும், முத்துலட்சுமி ரெட்டியும் பெரியாரின் உருவாக்கங்கள் இல்லையா? அவர் இல்லையானால், அவருடைய கருத்துகள் வேரூன்றவில்லையானால், தேவதாசி ஒழிப்புச் சட்டமும், சாரதாச் சட்டமும் வந்திருக்குமா? 1929 ஆம் ஆண்டே, பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தவர் யார்? அந்த நாள்களிலேயே ‘விதவா விவாகம்’ என்னும் பெயரில், கைம்பெண் மறுமணங்களை நடத்தியவர் யார்? பெண்களுக்கான மாநாடுகளை ஏற்பாடு செய்தவர் யார்? ‘விபச்சாரிகள்’ என்று அழைக்கப்படுவோரையும், மனித நேயத்துடன் அணுகியவர் யார்? அய்யா பெரியார் இல்லையா. . . அவரை நீங்கள் மறக்கலாமா?

பெரியார், பாரதியார், வ. உ. சி. , திரு. வி. க. ஆகியோருக்கும் முன்பாக, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, பெண் விடுதலைச் சிந்தனைகளைத் தன் நாவலில் எழுதிய மாமனிதர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையையும் இனி நீங்கள் குறிப்பிடவேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.

அவ்வாறே, தமிழ்க் கவிஞர்களைப் பற்றிப் பேசும் போது கம்பன், பாரதி, கண்ணதாசன் என்றே உங்கள் வரிசை அமைகிறது. பாரதிதாசன் என்னும் பெயரைக் கூடச் சொல்வதில்லை. திருவள்ளுவர், சித்தர்கள், பாரதிதாசன், பட்டுக்கோட்டை என்று இன்னொரு வரிசையும் இருக்கிறது. எண்ணிப் பாருங்கள்.

இரண்டாவதாக, உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பிய செய்தி ‘சாதி’ பற்றியது. “கல்வியும், பொருளாதாரமும் மேம்பட்டுவிட்டால், சாதி, மத பேதங்கள் மறைந்துவிடும்” என்று அழுத்தமாய்க் குறிப்பிட்டீர்கள்.

சாதீய நஞ்சை அகற்றும் வழி அவ்வளவு எளியதா? படித்தவனிடம் சாதி உணர்வு போய்விட்டதா? கல்வியும், பணமும் வந்துவிட்டால் சாதிகளுக்கிடையே கொள்வினை, கொடுப்பினை என்னும் மண உறவுகள் சாத்தியப்படுமா?

இன்றைக்கும் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். தலித் சமூகத்தில் பிறந்த ஒருவன், கல்வியிலும், பொருளாதாரத்திலும் மேம்பாடு அடைந்துவிட்டால், பெரிய வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம். ஆனால் அந்த வீட்டை அவன் சேரியில்தான் கட்டிக் கொள்ள முடியுமே தவிர, ஊருக்குள் கட்டிக் கொள்ள முடியாது. அவன் ஊருக்குள் வாழவும் முடியாது. அவனை வேறு சாதியினரின் சுடுகாட்டில் எரிக்கவும் முடியாது.

‘இரட்டைக் குவளை’யை ஒழிக்க வேண்டுமென்று இங்கு வந்து யாராவது பேசினால், அவர்களைத் துண்டு துண்டாக வெட்டிப் போட்டுவிடுவோம் என்று சொல்கிற சாதியினரைக் கொண்ட ‘ஃபண்டு கிராமங்கள்’, நீங்கள் பேசிய அதே சேலம், ஈரோடு மாவட்டங்களில் இன்றும் ஏராளமாக உள்ளன.

இவைகளையயல்லாம் உங்களுக்கு நான் எழுதுவதற்குக் காரணம், வெறும் விவாதத்திற்காகவோ, உங்களைக் குறை சொல்வதற்காகவோ அல்ல. இன்று உங்கள் பேச்சை மாணவர்கள், பெண்கள், பொதுவானவர்கள் அனைவரும் விரும்பிக் கேட்கின்றனர். அமெரிக்காவின் ‘ஃபெட்னா’ விழாவில், நீங்கள் பேசிய குறுந்தகடுகள் ஆயிரக்கணக்கில் விற்பனையாகி உள்ளன. தொலைக்காட்சிகள் உங்கள் பேச்சை ஒலிபரப்புகின்றன. எனவே இவ்வளவு விரைவாய்ப் பரவும் உங்கள் பேச்சில், வெறும் இலக்கிய அழகு மட்டுமல்லாமல், சமூக வலிகளும் சம இடம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாகவே இம்மடலை எழுதுகின்றேன்.

நான் நம்புகின்ற நல்ல மனிதர்களில் நீங்களும் ஒருவர் என்பதால், நியாயங்களை எடுத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையிலும் எழுதுகின்றேன். 

நிறைந்த அன்புடன்,
சுப. வீரபாண்டியன்.

Pin It