சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் அந்திமந்தாரை என்ற ஒரு திரைப்படம் வெளிவந்தது. அது அந்த ஆண்டின் சிறந்த தமிழ்மொழித் திரைப்படமாக மத்திய அரசால் கருதப்பட்டு அதற்கான விருதும் அப்படத்திற்கு வழங்கப்பட்டது.

அந்தப்படம் விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் அவருடைய வாழ்வின் கடைசிக் காலத்தில் படும் சிரமங்கள் குறித்தது. அவர் போற்றிப் பராமரித்த மதிப்புகளுக்கும் கருத்துக்களுக்கும் இன்றைய சமூகத்தில் எவ்வாறு இடமில்லாமல் போய்விட்டது என்பதை விளக்கும் கதை.

அதில் ஒரு காட்சியில் அரசியல் வாதி ஒருவரின் முறை தவறிய செயலை எதிர்த்து அறவழியில் போராடும் அவருக்கும் அந்த அரசியல் வாதிக்கும் இடையிலான உரையாடல் ஒன்று வரும். அந்த உரையாடலில் அந்த அரசியல்வாதி அவரிடம் இத்தனை ஆண்டுகாலம் சிறையில் இருந்தவன் என்று நீ மட்டும் பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை; நானும் கூடச் சிறை சென்றவன்தான் என்று கூறுவான்.

அதற்கு அந்த விடுதலைப் போராட்ட வீரர் ஆம் நீயும் தான் சிறை சென்றிருக்கிறாய்; ஆனால் நான் சிறை சென்றதற்கும் நீ சென்றதற்கும் வேறுபாடு உள்ளது. நான் வெள்ளையர் ஆட்சியை அகற்றுவதற்காகப் போராடிச் சிறை சென்றேன். ஆனால் நீயோ கஞ்சா விற்றோ அல்லது கள்ளச் சாராயம் காய்ச்சியோ அதுபோன்ற சமூக விரோத செயல்கள் செய்து சிறை சென்றிருப்பாய் என்று கூறுவார்.

எப்போதோ பார்த்த அப்படத்தின் காட்சிகள் பல மறந்து போன நிலையில் அப்படத்தின் இந்த வசனம் மட்டும் தற்போது தமிழ்நாட்டில் நிலவும் ஒரு குறிப்பிட்ட அரசியல் பின்னணியில் நினைவிற்கு வருகிறது.

நடவடிக்கை அவசியம்

முந்தைய தி.மு.க. அரசாங்கம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பல வழக்குகள் முந்தைய ஆட்சியில் அதிகாரம் செலுத்திய பல அரசியல் பிரமுகர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ளன.

சமீப காலங்களில் இவ்வாறு பழைய பிரச்னைகளைத் தோண்டி எடுத்து ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் ஆட்சியிலிருந்த அரசியல் கட்சிகளுக்கு எதிராக நெருக்கடிகள் கொடுக்கும் போக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே பல மாநிலங்களில் நிலவிக் கொண்டுள்ளது. இதன் பொருள் பழைய ஆட்சியாளர்கள் செய்த முறைகேடுகள் அனைத்தையும் மறப்போம் மன்னிப்போம் என்ற பாணியில் புதிய ஆட்சியாளர்கள் கருத்திற் கொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என்பதல்ல. மக்களைப் பாதித்த பழைய ஆட்சியாளர்களின் நியாயவிரோத, சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவது தவறு செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடக் கூடாது என்ற அடிப்படையில் மட்டுமல்ல; அடுத்து வரும் ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்பதாலும் தான். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நமக்கும் இந்த நடவடிக்கைகளே காத்திருக்கின்றன என்ற எண்ணத்தைத் தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். அதற்காகவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் காழ்ப்புணர்ச்சியே இல்லாமல் முழுமையான நடுநிலைத் தன்மையுடன் மேற்கொள்ளப் படுகின்றன என்று கூறவும் முடியாது.

ஏனெனில் இன்றைய அரசியல் கொள்கைகள் கருத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள முக்கியக் கட்சிகள் என்று கருதப்படக் கூடிய கட்சிகளால் நடத்தப்படுவதில்லை. எனவே ஆங்காங்கே பழிவாங்கும் நடவடிக்கைகளும் கூடத் தற்போதைய ஆட்சியாளர்களால் எடுக்கப் பட்டிருக்கலாம். அதற்கான வாய்ப்பில்லை என்று கூற முடியாது.

இருந்தாலும் தற்போது தொடுக்கப்பட்டுள்ள முந்தைய ஆளும் கட்சியினருக்கு எதிரான வழக்குகளில் பெரும்பாலானவை ஒரு நடுநிலையான மனதோடு அவற்றை பார்க்கும், அவை குறித்த விபரங்களைப் படிக்கும் அனைவருக்கும் இது முழுமையான பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; இந்த வழக்குகளில் சில அடிப்படைகள் உள்ளன என்ற எண்ணத்தை ஏற்படுத்துவனவாகவே உள்ளன.

இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தப்படுவோரின் கட்சித் தலைமைகள் வழக்கமாக இவற்றை ஆளும் கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கைகள் என்று வர்ணிப்பது புதிதல்ல. அது வழக்கமாக நடைபெறும் ஒன்றே.

ஆனால் தமிழகத்தின் முன்னாள் ஆளும் கட்சியும் தற்போதைய எதிர்க்கட்சியுமான தி.மு.க.வின் தலைவர் திரு மு.கருணாநிதி அவர்கள் இந்த வழக்குத் தொடுக்கும் நடவடிக்கைகளை வர்ணிக்கும் விதம் நமக்கு அந்திமந்தாரை திரைப்படத்தை நினைவிற்குக் கொண்டுவருகிறது.

காரணங்கள்

அதாவது அவர் இது அவசரகால நடவடிக்கைகளை நினைவு படுத்துகிறது என்று ஓரிரு முறைகள் அல்ல பல முறைகள் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். அவசரகால நிலை 1975 ம் ஆண்டு ஜூன் 25 ல் அன்றிருந்த பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களால் கொண்டுவரப்பட்டது.

அதை அவர் கொண்டுவந்ததற்குப் பொதுவான காரணங்களாக இருந்தவை அதற்கு முன்பு இந்தியாவில் ஏற்பட்ட சில குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் போக்குகளாகும். இந்திய வரலாற்றிலேயே சுதந்திரம் அடைந்ததற்குப் பின் நடத்தப்பட்ட மிகப்பெரும் தொழிற்சங்கப் போராட்டமான 1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் அதற்கான ஒரு முக்கிய காரணமாகும்.

அது மட்டுமின்றி சமூகத்தில் பல்கிப்பெருகிப் போன ஊழல் நடவடிக்கைகளை எதிர்த்து முன்னாள் சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் தொடங்கிய முழுப்புரட்சி இயக்கமும் அவசரநிலை கொண்டுவரப் படுவதற்கு திருமதி இந்திராகாந்தி அவர்களைக் கொண்டு சென்ற மற்றொரு முக்கிய நிகழ்வாகும்.

இந்தப் பொதுக் காரணங்களைத் தவிர ஒரு உடனடிக் காரணமும் அவசரநிலை கொண்டுவரப் பட்டதற்கு முக்கியப் பின்னணியாக இருந்தது.

அதாவது இந்திராகாந்தி அவர்கள் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ் நாராயண் அவர்கள் தொடுத்த வழக்கும் அதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அத்தகைய உடனடிக் காரணங்களாக இருந்தன.

ராஜ் நாராயணுக்காக சாந்திபூசன் என்ற தற்போது அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் ஒரு தலைவராக உள்ள வழக்கறிஞர் வாதாடினார். அத்தீர்ப்பு பல முறைகேடான தேர்தல் நடவடிக்கைகளில் திருமதி இந்திரா காந்தி ஈடுபட்டுள்ளார்; அதன் காரணமாக அவர் ரேபரேலியில் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று கூறியது.

அதைத் தொடர்ந்து நாட்டில் தோன்றிய பரபரப்பான சூழ்நிலை இந்திரா காந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்யும் சூழ்நிலைக்கு இட்டுச் சென்றது.

அவர் அவசரநிலையைப் பிரகடனம் செய்ததோடு குடியரசுத் தலைவர் பிரதமர் ஆகியோரின் தேர்தல்களைக் கேள்வி கேட்கும் உரிமையை நீதிமன்றங்களுக்கு இல்லாமல் செய்யும் வகையிலும் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்தார்.

நடவடிக்கைகள்

இந்தப் பின்னணியில் பத்திரிக்கைத் தணிக்கை முறை கொண்டுவரப் பட்டது. நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மிகப் பெரும்பாலோர் மக்கள் இயக்கங்கள் கட்டுவதிலும் தொழிலாளர் இயக்கங்கள் கட்டுவதிலும் முன்னணியில் இருந்தவர்கள். அதாவது ஜார்ஜ் பெர்னான்டஸ் போன்ற பிரபலமான தொழிற்சங்கத் தலைவர்களும் ஜோதிர்மாய் பாசு போன்ற பிரபல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப் பட்டவர்களில் முக்கியமானவர்கள்.

வேறுவழியின்றி எதிர்ப்பு

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஜே.பி. இயக்கத்தின் வீச்சு அதிக அளவில் இருக்கவில்லை. மேலும் அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.கழகம் அவசர நிலையை அத்தனைக் கடுமையாக எதிர்க்கவும் இல்லை.

இந்திரா காந்தியின் தலைமையிலான மத்திய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகத் தாங்கள் எதுவும் செய்யப் போவதில்லை என்று தங்களால் முடிந்த வகையிலெல்லாம் மத்திய அரசுக்குக் காட்டிக் கொண்டேதான் அவர்கள் இருந்தனர்.

எடுத்துக்காட்டாக அவசர நிலையை ஒட்டி இந்திரா காந்தி அமுல் செய்த இருபது அம்சத் திட்டம் சஞ்சய் காந்தி அறிவித்த ஐந்து அம்சத் திட்டம் ஆகிய இரு திட்டங்களையும் முழு அளவில் அமுல் படுத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றெல்லாம் கூட அப்போதைய தி.மு.க. தலைமையிலான அரசாங்கத்தின் முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் அறிவித்தார்.

இருந்தாலும் தமிழ்நாட்டில் அப்போது சரிவடைந்திருந்த தி.மு.கழகத்தின் செல்வாக்கு அப்போதிருந்த இந்திரா காங்கிரஸால் மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. அப்போது தி.மு.க விலிருந்து எம்.ஜி.ஆர். விலகி தனிக்கட்சி தொடங்கியிருந்தார். அவரது கட்சி 1973ல் நடைபெற்ற திண்டுக்கல் இடைத் தேர்தலில் மாபெரும் வெற்றியும் பெற்றிருந்தது.

இந்த நிலையில் மக்கள் செல்வாக்கை இழந்திருந்த தி.மு.கழகத்தின் ஆதரவு தனக்கு ஒரு பொருட்டல்ல என்று இந்திரா தலைமையிலான காங்கிரஸ் நினைத்தது. அதனால் தி.மு.க.வை அது பெருமளவிற்கு செல்லாக் காசாகவே கருதியது. ஏனெனில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. அரசு எந்திரத்தை பயன்படுத்துவதில் தொடங்கி அனைத்து வகையான முயற்சிகளையும் வெற்றி பெறுவதற்காக மேற்கொண்ட போதிலும் அது வெறுமனே தோற்க மட்டும் இல்லை; ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த படியாக ஓட்டு வாங்கி மூன்றாவது இடத்திற்கே வந்தது.

அதாவது இன்னும் சில ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தால் அதன் வேட்பாளர் பொறுப்புத் தொகையை இழந்திருப்பார் என்ற அளவிற்கான தோல்வியை அது தழுவியது. அந்த வகையில் அத்தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்வி படுதோல்வி என்றே கூறவேண்டும்.

மேலும் காங்கிரஸின் நிலை அதைவிட மோசமாக இருந்தது. அதன் வேட்பாளரான கரு.சீமைச்சாமி என்பவர் பொறுப்புத் தொகையை இழந்தது மட்டுமல்ல அவர் வாங்கிய வாக்குகளோடு செல்லாத வாக்குகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு ஒரு வடஇந்தியப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. சில இடங்களில் இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் வென்றார்; மற்றும் சில வாக்குச் சாவடிகளில் செல்லாத ஓட்டுக்கள் இந்திரா காங்கிரஸ் வேட்பாளரை வென்றன என்று அச்செய்தி காங்கிரஸைக் கேலி செய்தது.

அந்த நிலையிலிருந்த இந்திரா காங்கிரஸூக்கு அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் அதற்கு ஒரு சக்திவாய்ந்த கூட்டணிக் கட்சி தமிழகத்தில் தேவைப்பட்டது. அத்தகைய கட்சியாக எம்.ஜி.ஆர். அவர்களின் அ.தி.மு.கழகம் அப்போது அதன் கண்ணிற்குப் பட்டது.

அதனால் தான் இழந்துவிட்ட செல்வாக்கை குறைந்த அளவிற்கேனும் தக்கவைக்க வேண்டும் என்பதற்காக வேறு வழியின்றி தி.மு.கழகம் அவசர நிலையை எதிர்த்தது. இதுவே அவசர நிலை காலகட்டத்தில் தி.மு.க. எடுத்த காங்கிரஸ் எதிர்ப்பு நிலையின் பின்னணி.

மக்களின் மறதியை மையமாக வைத்து

உண்மை இவ்வாறிருக்க மக்களின் மறதியை வைத்தே காலங்காலமாக அரசியல் நடத்துவதை கைவந்த கலையாகக் கடைப்பிடித்த தி.மு.கழகமும் அதன் தலைவர் மு.கருணாநிதி அவர்களும் அவசர நிலையை மிக முனைப்புடன் கொள்கை ரீதியாக எதிர்த்த ஒரு கட்சி போல் பின்னாளில் காட்டிக் கொள்ளத் தொடங்கினர்.

அதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது பல்வேறு நில அபகரிப்பு வழக்குகளில் தி.மு.க. முக்கியத் தலைவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில் இந்தக் கைது நடவடிக்கைகளை அவசர நிலைக் காலத்தில் செய்யப்பட்ட கைது நடவடிக்கை களோடு ஒப்பிட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் பேசி வருகிறார்கள்.

அவ்வாறு பேசுவது ஒரு பொருத்தமற்ற செயல் என்பதோடு அது அவசர நிலைக் காலகட்டத்தில் சிறை சென்றவர்களைக் கொச்சைப் படுத்துவதும் ஆகும்.

தற்போது நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளோர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் குறித்துக் கூறுகையில் தி.மு.க. தலைவர் அவர்கள் முன்வைக்கும் முக்கியமான கருத்து ஒரு சமயத்தில் நிலவிய விலைகளை மையமாக வைத்துத் தங்கள் இடங்களை விற்று விட்டவர்கள் தற்போது அவ்விடங்களின் விலைகள் அதீதமாக உயர்ந்துள்ள சூழ்நிலையில் கூடுதல் பணத்திற்கு ஆசைப்பட்டுக் கொடுக்கும் புகார்களே இவை என்பதாகும்.

இதில் ஒரு சிறிய அளவிற்கு உண்மை இருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் அதே சமயத்தில் மிகப் பெருமளவு வழக்குகள் வெளிப்படையாகவே ஆதாரம் உள்ளவைகளாகவே உள்ளன.

சொத்துக் குவிப்பு அரசியல்

அதுமட்டுமின்றி இதில் மற்றொரு முக்கியக் கேள்வியும் சம்பந்தப் பட்டுள்ளது. அது பொது வாழ்க்கையின் தரம் மற்றும் மதிப்பு குறித்தது. அதாவது ஒரு கட்சியின் மூத்த தலைவர் தனது கட்சியின் முக்கியத் தலைவர்கள் உள்பட பலர் இந்தக் காலகட்டங்களில் உரிய விலை கொடுத்தோ அல்லது இல்லாமலோ சொத்து வாங்கிக் குவிப்பதிலேயே அக்கறையோடு இருந்திருக்கிறார்கள் என்பது குறித்து கூச்சப்படுபவராக இருக்க வேண்டும்.

பொதுவாக தன்னலமற்று அரசியலில் ஈடுபடுபவர்கள் கைப்பொருள் இழந்தவர்களாகவே இருந்துள்ளனர். அதற்கு மாறாக தி.மு.கழகத்தைச் சேர்ந்த மந்திரிகள் கட்சிப் பிரமுகர்கள் (அதில் அவரது புதல்வர்களும் அடங்குவர்) ஆகிய பலர் சொத்து வாங்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்திருக்கின்றனர் என்பது இவ்வழக்குகளிலிருந்து தெரிய வருகிறது.

இப்படி ஏன் நிகழ்ந்தது என்பதற்கான ஒரு விளக்கத்தைத் தான் அரசியலில் நேர்மையையும் தூய்மையையும் எதிர்பார்ப்பவர்கள் ஒரு தலைவரிடமிருந்து எதிர்பார்ப்பர்.

அப்படிப்பட்ட ஒரு பகுதியினர் இந்த சமூகத்தில் எத்தனை குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் ஒரு நல்ல தலைவராக இருக்கக் கூடியவர் அவர்களது எதிர்பார்ப்பையும் கணக்கிலெடுத்துத் தனது கருத்தைக் கூற வேண்டும்.

அதைவிடுத்து அவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் வாதாடுவது போல நில அபகரிப்பு வழக்குகளில் தொடர்புடைய வர்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்படுபவர்களுக்காகப் பரிந்து பேசியிருப்பது அவர் கட்சி நடத்தும் அரசியலின் தரத்தையே அம்பலப்படுத்துகிறது.

தேன் பானையில் கை வைத்தவன்

இவ்வாறு அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பொது வாழ்க்கையைப் பயன்படுத்தி கூசாமல் சொத்து சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது இக்கட்சி ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலம் முதற்கொண்டே இருந்து வருகிறது.

இப்போக்கு மறைக்க முடியாத விதத்தில் வெளியில் வந்துவிட்ட நேரத்தில் வெளிப்படையாகவே அக்கட்சியின் பல தலைவர்கள் குறிப்பாக அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் அனைவரும் கணக்குக் காட்ட வேண்டும் என்று அப்போது தி.மு.கழகத்தின் பொருளாளராக இருந்து அதன் பின்னர் அதைவிட்டு விலகி தனிக்கட்சித் தொடங்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் கேட்டார். அப்போது தேன் பானையில் கையை விட்டவன் அதை நக்கத்தான் செய்வான்; தலையில் தடவமாட்டான் என்று அவர்களில் பலர் வெளிப்படையாகவே கூறினர்.

அன்று முதல் இன்று வரை கட்சியின் தலைமைக் குடும்பத்தில் தொடங்கி அடிமட்டம் வரை பதவியைப் பணம் சம்பாதிப்பதற்காகப் பயன்படுத்துவதை எந்த வகையான கூச்சமுமின்றி அக்கட்சியின் தலைவர்கள் செய்து வருகின்றனர்.

மத்திய அமைச்சரவையில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றால் கூட எந்த அமைச்சகம் கூடுதலாகச் சம்பாதிப்பதற்கு வாய்ப்பளிக்கக் கூடியதாக இருக்கிறது என்பதைக் கருதுபவர்களாக இருந்திருக்கிறார்களே தவிர மாநிலத்தின் தேவையை மனதிற் கொண்டு அதற்குந்த அமைச்சரவைகளை கோரிப் பெறுபவர்களாக அவர்கள் இருக்கவில்லை.

அதனால் தான் தமிழ்நாட்டின் பிரதானமான கோரிக்கையே நதிநீர்ப் பங்கீடு என்று இருக்கும் போது அதனை வலியுறுத்தும் நீர்ப்பாசனத் துறையை தி.மு.கழகம் கோரிப் பெறவில்லை.

அதற்கு மாறாகத் தாங்கள் நடத்தும் ஊடகங்களுக்கும் தங்களுக்கும் முறைகேடாகப் பொருளீட்ட வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் தொலைத் தொடர்புத் துறையையே கோரிப் பெற்றனர்.

புது யுக்திகள்

இடங்கள் வாங்குவதில் பல புது முறைகளையும் யுக்திகளையும் அவர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினர். ஒரு பகுதியில் உள்ள ஒட்டுமொத்த இடங்களையும் நிலவும் விலைக்கு வாங்கி அங்கு அரசின் முக்கிய அலுவலகம், பல்கலைக் கழகம் அல்லது ஆராய்ச்சி நிலையம் ஏதாவது ஒன்றை கொண்டுவந்துவிடத் திட்டம் தீட்டி அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த இடங்களுக்கு உருவாகும் கூடுதல் மதிப்பைப் பயன்படுத்தி அவற்றை இன்னும் கூடுதல் விலைக்கு விற்றுச் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கையாண்டனர்.

பல கொலை வழக்குகளில் சம்பந்தப் பட்டோர் குறுக்கு வழிகளைக் கையாள்வதன் மூலம் விடுதலை செய்யப்படும் சூழ்நிலை உருவானது.

தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு அதில் பணியாற்றிய அப்பாவி ஊழியர்கள் சிலர் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த குற்றவாளிகளும் தப்பிச் செல்வதற்கு ஏற்ற நிலை உருவாக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் மக்கள் மனதில் தோன்றியிருந்த பீதியைப் பயன்படுத்தி நகர்ப்புறங்களில் மதிப்பு மிக்க இடங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்த பலர் அன்றைய ஆளுங்கட்சிப் பிரமுகர்களால் மிரட்டப்பட்டு குறைந்த விலைக்கு விற்க நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

இவ்வாறெல்லாம் செய்தது மக்களுடைய மனதிலிருந்து நீங்காதிருக்கும் நிலையில் தற்போது நடைபெறும் கைதுகள் அவசர நிலைக்காலக் கைதுகளை ஒத்தவையாக இருக்கின்றன என்று கூறுவது அவசரகால கட்டத்தில் அடிப்படை உரிமைகளுக் காகவும், சிவில் உரிமைகளுக்காகவும், சமூக அவலங்களை எதிர்த்தும் போராடிச் சிறை சென்ற மாபெரும் தலைவர்களை மிக மோசமாகக் கொச்சைப் படுத்துவதாகும்.

அதனால் தான் முன்னாள் முதல்வரின் இக்கூற்று முன்வைக்கப் படுகையில் அந்திமந்தாரை திரைப்பட வசனம் தவிர்க்க முடியாமல் நம் நினைவிற்கு வருகிறது.

இதன் பொருள் இந்த கைது நடவடிக்கைகளில் எந்த வகையான உள்நோக்கமும் ஆளும் கட்சிக்கு இல்லை என்று நாம் கூறுவதாகாது.

தற்போதைய ஆளும் கட்சிக்கு இப்படிப்பட்ட கைதுகளை மேற்கொள்வதில் அரசியல் ஆதாயம் கருதும் உள்நோக்கம் இருந்தாலும் இக்கைது நடவடிக்கைகள் ஒரு வி­சயத்தை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகின்றன.

அதாவது இன்றைய முதலாளித்துவ அரசியலில் அரசியலின் தரம் மட்டுமல்ல அரசியல் தலைவர்களின் கருத்துக்களின் தரமும் சீரழிந்து அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதே அது.

Pin It