மாமேதை லெனின் சித்தாந்தம் குறித்துத் தான் எழுதிய எம்ப்ரியோ கிரிட்டிஸிஸம் என்ற நூலில் தத்துவப் பேராசிரியர்கள் குறித்து பரிகாசத் தொனியில் நிறையப் பேசுவார். அதைப் படிக்கும் போது அவர் ஏன் பேராசிரியர்களை இத்தனை கிண்டல் செய்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது. ஆனால் சமீப காலங்களில் பேராசிரியர்கள் பல்கலைக் கழக வளாகங்களில் ஆற்றும் உரைகளைக் கேட்கும் போது அவர் ஏன் அவர்களின் பேராசிரியத் தனத்தை அத்தனை பரிகசித்தார் என்பது தெளிவாகப் புரிகிறது.

சமீபத்தில் மதுரைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு நூலாராய்ச்சி உரை வீச்சைக் கேட்க நேர்ந்தது. அதில் பலர் ஆற்றிய உரைகள் அங்கு அமர்ந்திருந்த மாணவர்களில் பலருக்குச் சுத்தமாகவே புரியவில்லை என்பது அவர்களின் முகங்களைப் பார்க்கும் போது வெளிப்படையாகவே தெரிந்தது. இருந்தாலும் கூடப் பாறைபோல் தங்களது முகங்களை வைத்துக் கொண்டு அவர்கள் அவ்வுரை வீச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

சக ஆசிரியர்களோ நமக்குத் தெரியாததை எதை இந்த ஆள் சொல்லிவிட முடியும் என்று ஏளனத் தொனியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தன்னகங்காரமும் அதிகார மமதையும் அவர்களது முகங்களில் மண்டிக் கிடந்தன. இதையெல்லாம் வைத்து லெனின் பேராசிரியர் தனத்தை நையாண்டி செய்ததை நாம் சரியயனக் கூறவில்லை.

அக்கூட்டத்தில் அவர்கள் பேசியது மார்க்சிய அடிப்படையில் என்று பலரும் கருதினர். அதில் ஒரு பேராசிரியர் கூறினார்: அடையாள அரசியல் முக்கியமானது. பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அதைப் பார்க்கத் தவறிவிட்டனர்; அதனால் தான் அவர்கள் வளரவில்லை; அடையாள அரசியலைச் சரிவரச் செய்ததால் தான் தி.மு.க. போன்ற கட்சிகள் வளர்ந்தன என்று. அவர் கூறவந்த அடையாள அரசியலின் வேரை அவர் வரலாற்று ரீதியாக தேடினார்; இறுதியில் கண்டுபிடித்தும் விட்டார். ஆம் அவர் நமது நாட்டில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற அடையாளங்கள் காலங்காலமாக இருந்து வந்துள்ளன என்ற அரிய விசயத்தை அவர் கண்டு கொண்டு விட்டார். பெளத்தம், சமணம் ஆகியவை பார்பனியத்திற்கு எதிரான கருத்தோட்டங்கள்; அவற்றின் அடையாளங்களாக வழிவழியாக வந்தோர் தான் இன்று பிற்பட்டோர் மற்றும் தலித் அரசியலை உயர்த்திப் பிடிப்பவர்கள்; அந்த அரசியலைக் கையில் எடுக்காமல் அறவே புறக்கணித்தது தான் பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் செய்த மிகப்பெரும் தவறு; அவர்கள் அவ்வாறு செய்ததற்குக் காரணம் இந்தியச் சூழ்நிலையை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற மேதைகள் ஐரோப்பியச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எழுதிய தத்துவத்தை சிக்கெனப் பிடித்துக் கொண்டு செயல்பட்டதுதான் எனப் பலவாறு அவர் தனது கருத்துக்களை அடுக்கிக் கொண்டே போனார்.

அல்தூசரும் கிராம்ச்சியும் ஆசியரா?

பாவம் அவர். அத்துடன் நின்றிருந்தாலும் பரவாயில்லை. அடுத்துப் போட்டாரே ஒரு போடு. அல்தூசர், கிராம்ச்சி போன்றவர்களின் கருத்துக்களைப் பின்னாளில் கூட பொதுவுடமை இயக்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று.

நமக்கோ தலை சுற்றத் தொடங்கிவிட்டது. ஆசியச் சூழ்நிலையை ஐரோப்பியராக இருந்ததால் மார்க்சும் எங்கெல்சும் சரிவரக் கணிக்க முடியவில்லை என்றால் ஆசியராக இல்லாத பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அல்தூசராலும் இத்தாலியைச் சேர்ந்த கிராம்ச்சியாலும் எவ்வாறு ஆசியச் சூழ்நிலைக்கு வழிகாட்ட முடிந்தது? என்று எண்ண எண்ண தலைச் சுற்றல் அதிகமானது.

இவர்கள் ஏன் இப்படிப் பேசுகிறார்கள் என்று புரியாமல் தவித்த நமக்கு அடுத்து சிலர் ஆற்றிய உரை ஓரளவு புரிதலைத் தந்தது. அப்படி அடுத்துப் பேசியவர் என்னதான் பேசினார் என்று பார்த்தால் அவர் பஞ்சும் பசியும் நாவலை எழுதிய தோ.மு.சி.ரகுநாதன் கூறியதாக ஒரு கருத்தைக் கூறினார். அதாவது உலகெங்கிலும் முற்போக்கு எழுத்தாளர்களின் எழுத்தை வழி நடத்துவதாக விளங்கும் சோசலிச யதார்த்தவாதத்தை மிகச் சரியானதல்ல என்று தாம் கருதியதாக தோ.மு.சி. ஒருமுறை கூறினார் என்றும் அத்துடன் தனது எழுத்திற்கு அங்கீகாரம் கிடைப்பதற்கு எதிராகப் பல பார்ப்பனர்கள் இருந்ததாக அவர் தெரிவித்தார் என்றும் அவர் கூறினார். ஆனால் இறக்கும் தறுவாயில் சோசலிச யதார்த்தவாதம் தவறு என்று அவர் முன்பு கொண்டிருந்த கருத்துத் தவறானது என்று தொ.மு.சி. உணர்ந்து அதனை வெளிப்படையாகவே தன்னிடம் கூறியதாக தேனீர் நாவலை எழுதிய டி.செல்வராஜ் கூறியதாகவும் அவர் கூறினார்.

பாரதியா, பாரதி தாசனா?

மேலும் வேறொரு பேராசிரியரின் பாரதி குறித்த கருத்தையும் அவர் எடுத்துரைத்தார். அதாவது பாரதி ஆரிய தர்மத்தை வலியுறுத்தியவர்; அந்த வகையில் அந்தணப் போக்கு அவரிடம் மிகுந்திருந்தது; அதனால் தான் பார்ப்பன அடையாளத்திற்கு எதிராகத் தோன்றிய சீக்கிய மதத்தின் முக்கியமான குரு ஒருவரின் பாடலைத் தழுவி தமிழில் அவர் எழுதிய பாடலில் சீக்கியக் குருவின் பாடலில் இருந்த பார்ப்பன எதிர்ப்புப் போக்கைப் பிரதிபலிக்காததோடு அதை ஆரிய தர்மத்திற்கு உகந்ததாக மாற்றியும் பாரதி எழுதினார்; ஆனால் பாரதியை உயர்த்திப் பிடித்த பொதுவுடமையாளர்கள் பார்ப்பன எதிர்ப்பாளராக விளங்கிய பாரதிதாசனை உயர்த்திப் பிடிக்கவில்லை; உண்மையில் பாரதிதாசன் பார்ப்பன எதிர்ப்பு அரசியல் அடையாளத்தை இந்தியச் சூழ்நிலையைச் சரிவரப் புரிந்து கொண்டு மிகச் சரியாக உயர்த்திப் பிடித்தவர் என்ற அந்த எழுத்தாளரின் கருத்தையும் கோடிட்டுக் காட்டினார்.

இவ்வாறு மார்க்சிய ஆதரவாளர்களால் நடத்தப்படும் கூட்டம் என்று கருதி படித்தவர்களாக இருப்பதால் மார்க்சியத்தைச் செறிவு செய்யும் விதத்தில் எதையாவது பேசுவர் என்று கருதி அவர்களது மார்க்சிய அடையாளத்தால் கவரப்பட்டுச் சென்ற நமக்கு நமது அடையாளமே தொலைந்து போய் விட்டது போன்றதொரு உணர்வு அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஏற்பட்டது.

பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் ஒரு வசனம் வரும். அதாவது நான் உன்னை விரும்புகிறேன் என்று தன் காதலை முழுமையாக அறிவிக்காத ஒரு பெண் குறித்து அக்கதையின் கதாநாயகன் தனது நண்பர்களிடம் விளாவாரியாகப் பேசிக் கொண்டிருப்பான். அதை வேண்டாவெறுப்பாக கேட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களிடம் அவன் கூறுவான்: அவள் என்னைப் பார்த்து உங்கள் பெயர் என்ன? என்று கேட்டாளே ஒரு கேள்வி; அக்கேள்வியை அவள் கேட்ட தொனியில் என் பெயரே எனக்கு மறந்து விட்டது என்று.

அதுபோல் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இவர்கள் எல்லாம் மார்க்சிய அடையாளம் கொண்டவர்கள் என்றால் மார்க்சிய வாதத்தை உள்ளபடியே உயர்த்திப் பிடிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் நமது அடையாளம் தான் என்ன? என்ற கேள்வி நமக்கு மிகப் பெரிதாக எழுந்துவிட்டது.

நாம் இங்கு மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய மாமேதைகள் அனைத்து நாடுகளைப் பற்றியும் அனைத்துக் காலங்களுக்கும் பொருந்தக்கூடிய துல்லியமான கருத்துக்களைக் கொண்டிருந்தனர் என்று கூற வரவில்லை.

மார்க்ஸ் தந்தது ஒரு பார்வையே

அவர்கள் நமக்குத் தந்தது ஒரு பார்வையே தவிர, இதற்கு இதுதான் தீர்வு என்ற சூத்திரம் அல்ல. இந்தியா போன்ற ஆசிய நாடுகள் குறித்த மார்க்ஸின் சில கணிப்புகளின் போதாமைகள் என்று ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்று ஆசிரியர்களால் சில வி­யங்கள் சுட்டிக் காட்டவே பட்டுள்ளன. ஆனால் அவர்கள் சுட்டிக் காட்டியது நாம் மேலே விவரித்த பேராசிரியர்களின் பேராசிரியத் தனத்தை ஒத்ததல்ல; அதற்கு நேர் எதிரானது.

ஆசியக் கொடுங்கோன்மை என்று மாமேதை மார்க்ஸ் இந்தியா குறித்து வைத்திருந்த அதாவது பிற நாடுகளிலிருந்து ஆசியா பெரிதும் வேறுபட்டது என்ற கண்ணோட்டம் முற்றிலும் சரியானதல்ல. இந்தியச் சூழ்நிலை உலகில் நிலவிய பல நாட்டுச் சூழ்நிலையிலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும் மார்க்ஸ் முன்வைக்கும் அளவிற்கு அது வேறுபட்டதல்ல. பல விதங்களில் பிறநாட்டுச் சூழ்நிலைகளோடு இந்தியச் சூழ்நிலையும் ஒத்துப் போவதாகவே இருந்தது என்ற கருத்தை ரொமிலா தாப்பர் முன்வைத்தார். அதையும் மார்க்ஸ் வழங்கிய பார்வையாகக் கொண்டு வரலாற்றை அவர் பார்த்ததனாலேயே முன்வைப்பதாகக் கூறினார்.

நாம் மேலே கூறிய பேராசிரியர்கள் அடையாளம் என்பதை இயற்கை விஞ்ஞானத்தில் நாம் பார்க்கும் பாறைப் படிவங்களில் படிந்திருந்த உயிரினங்களைப் போல் பார்க்கின்றனரோ என்ற எண்ணமே அவர்களின் உரைகளைக் கேட்கும் போது நமக்குத் தோன்றியது. அதாவது உயிரினங்களின் வளர்ச்சிப் போக்கில் டைனோசர் என்ற மிகப் பெரிய உருவத்தைக் கொண்ட உயிரினங்கள் ஒரு காலத்தில் இருந்தன என்பதை ஃபாசில்கள் (Fossils) என்று அழைக்கப்படும் உயிரினங்களின் இறுகிய வடிவங்களில் பார்க்கிறோம்.

அதைப்போல் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற அடையாளங்கள் யாரும் மறுக்க முடியாத விதத்தில் பாறைப் படிமங்கள் போல் மக்கள் மனதில் படிந்து வழிவழியாக வந்து கொண்டிருக்கின்றன என்று அவர்கள் கூற வருவது போல் தோன்றியது.

ஆனால் வருந்தத் தகுந்த விதத்தில் இவர்கள் பேச வருவது சமூக விஞ்ஞானம். அதாவது இயற்கை விஞ்ஞானத்தில் நாம் காணும் பொருட்களைப் போல் உணர்வும் உயிரும் சிந்தனையும் இன்றி இருக்கும் பொருட்கள் குறித்ததல்ல. மாறாக உணர்வு, உயிர், சிந்தனை, முன்சிந்தனை ஆகிய அனைத்தையும் கொண்ட மனிதர்களை உள்ளடக்கிய சமூகம் குறித்தது. அந்த சமூகத்தில் வரலாற்று ரீதியாக ஏற்பட்ட மாற்றங்களால் மனிதர்கள் தங்களது பல்வேறு அடையாளங்களைச் சிறிது சிறிதாக இழந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் அவற்றை அறவே இழந்து விடுகின்றனர்.

அடிப்படையை மாற்றிய வெள்ளையர் ஆட்சி

இந்திய மார்க்சிய வரலாற்று ஆசிரியர்களும் சிந்தனையாளர்களும் ஒரு விசயத்தைக் குறிப்பாக ஆணித்தரமாக எடுத்துரைப்பர். இந்திய மண்ணில் பல்வேறு படையயடுப்புகள் பல்வேறு அந்நிய நாட்டவரால் நடைபெற்றிருந்தாலும் அவை இந்தியாவைப் பெருமளவில் பாதிக்கவில்லை. அவ்வாறு படையெடுத்து வந்தவர்கள் பல வேளைகளில் இந்தியச் சூழ்நிலைக்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக் கொள்ளவே செய்தனர்; ஆனால் முதன் முதலாக இந்திய சமூக அடிப்படையையே மிகப்பெரிய அளவில் மாற்றியது வெள்ளையர் படையயடுப்பே என்று அவர்கள் கூறுவர்.

இதற்குக் காரணம் முகமதியர்கள், ஹூணர்கள் போன்றவர்களின் படையயடுப்புகள் இந்திய பூமிப்பரப்பைக் கைப்பற்றுவதிலேயே அக்கறை கொண்டவையாக இருந்தன. அவை புதிய உற்பத்திமுறை எதையும் அறிமுகம் செய்யவில்லை.

மாறாக அவர்களது படையெடுப்புகளின் போது இங்கிருந்ததோ பெரிய அளவில் முரண்பாடுகளுக்கும் பிரச்னைகளுக்கும் இடமளிக்காத உற்பத்தி முறையாகும். எனவே அவர்கள் இங்கிருந்த உற்பத்தி முறைகள் மூலம் கற்றுக் கொள்ள வேண்டியவை பல இருந்தனவே தவிர அவர்களால் வலிந்து மாற்றப்படுவதற்கு என்று இங்கு ஏறக்குறைய எதுவுமே இல்லை. முகமதியர் ஆட்சியில் நிர்வாக முறையில் மட்டும் சில வரி வசூலுக்குத் தேவைப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வெள்ளையர் படையெடுப்பு முதலில் நாடு பிடிக்கும் நோக்குடன் நடத்தப்படவில்லை. அவர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை விற்கும் நோக்குடனேயே இங்கு வந்தனர். தங்களது வியாபார நிறுவனங்களை ஏற்படுத்துவதற்காக அப்போது ஆட்சியில் இருந்த மன்னர்களிடம் சில பிராந்தியங்களையும் நகர்களையும் அவர்கள் ஆரம்பத்தில் கோரிப் பெற்றனர். அதன் பின்னர் இங்கிருந்த மன்னர்களின் பலவீனங்களையும் இங்கிருந்த ஆட்சிமுறையின் வலுவற்ற தன்மையையும் புரிந்து கொண்டனர். அதன் பின் தான் அவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசை வந்தது.

முக்கியமாக வெள்ளையர் ஆட்சி மற்ற அந்நிய படையயடுப்பாளர்களின் ஆட்சியைப் போல் இல்லாமல் ஒரு புதிய உற்பத்தி முறையை அதாவது எந்திரத்தொழில் உற்பத்தி முறையை அறிமுகம் செய்தது. அதன் விளைவாக மிக நீண்டகால அடிப்படையிலான அடிப்படை மாற்றங்கள் இந்திய சமூகத்தில் ஏற்பட்டன. அவர்களது ஆட்சியின் போதுதான் முதன் முதலாக நிலவுடமை ஆவணமயப் படுத்தப்பட்டது.

கூலி அடிமைத் தனமும் அன்னியமாதலும்

எந்திரத் தொழில் உற்பத்தி முறை செழித்தோங்கிய மேலை நாடுகளில் பரந்த எண்ணிக்கையில் மனிதர்களைத் தொழிலாளர்களாக அதாவது கூலி அடிமைகளாக ஆக்கியது. அந்தக் கூலி அடிமைத்தனம் அவர்களை அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களில் இருந்து அந்நியப்படுத்தியது. அவர்கள் வாழும் சமூகத்தில் எந்தவகையான முக்கியத்துவமும் அற்ற மனிதர்களாக அவர்கள் அந்நியப்பட்டு நின்றனர். இந்த நிலைக்கு வித்திட்டது முதலாளித்துவம் அறிமுகம் செய்த வேலைப் பங்கீட்டு முறையாகும். நவீனத் தொழிலாளி எந்தவொரு பொருளையும் முழுமையாகச் செய்வதில்லை. அதனைப் பல கூறுகள் இட்டு ஒவ்வொரு கூறையும் ஒரு தரப்புத் தொழிலாளர்கள் செய்கின்றனர்.

இத்தகைய உற்பத்திமுறை தொழிலை அடிப்படையாகக் கொண்டு நமது சமூகத்தில் நிலவிய ஜாதிய அடிப்படைக்கு முற்றிலும் ஒத்துப் போகாததாக இருந்தது. சமூகத் தேவைகள் மிகவும் குறைவாக இருந்த வேளையில் அதாவது சமூகத்தில் மக்கள் உபயோகிக்கும் பொருட்கள் மிகச் சிலவாக அதாவது அவர்கள் உயிருடன் வாழ்வதை மட்டும் உறுதி செய்வதாக இருந்தபோது சமூக உற்பத்தியும் இங்கு சிக்கலில்லாததாக இருந்தது. எனவே பழைய நான்கு வர்ண அடிப்படையைக் கொண்ட ஜாதியக் கட்டமைப்பு அந்தச் சூழ்நிலைக்கு முற்றிலும் உகந்ததாக இருந்தது.

ஆனால் மக்களின் உபயோகப் பொருட்கள் பலவாக மாறிய நிலையில் பொருட்கள் லாப நோக்குடன் உற்பத்தி செய்யப்பட்டதால் அவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்தினால் இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற அடிப்படையில் வேலைப் பங்கீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டு அதில் பல வேலைகளைப் பலர் செய்ய நேரிட்டதால் ஜாதியக் கட்டமைப்பு அடிப்படையில் சரிந்துவிட்டது.

விவசாயத்தைத் தங்களது தொழிலாகக் கொண்டிருந்த பலர் நிலமற்ற ஏழை விவசாயிகள் ஆக்கப்பட்டனர். நாளடைவில் ஏழை விவசாயிகள் என்ற அந்த அந்தஸ்த்தையும் இழந்து விவசாயக் கூலிகள் ஆக்கப்பட்டனர். இதே பகுதியிலிருந்துதான் எந்திரத் தொழில் உற்பத்தி முறையில் வேலை செய்யப் பலர் சென்றனர். அவ்வாறு சென்றவர்கள் எந்தவொரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களாக மட்டும் இருக்கவில்லை. தங்களது முன்பிருந்த வாழ்வாதாரத்தை இழந்த அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு தொழிற்சாலைகளில் வேலை செய்யச் சென்றனர்.

அதில் கல்வி அறிவு இல்லாது உடல் உழைப்பு மட்டும் செய்ய முடிந்தவர்கள் பொருள் உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டனர். ஓரளவு கல்வி வாய்ப்புப் பெற்றவர்களாக இருந்தவர்கள் எழுத்தர், மேலாளர், கணக்கர் போன்ற வேலைகளுக்குச் சென்றனர். எந்திரத் தொழில் உற்பத்தி முறையை மென்மேலும் விரிவுபடுத்தும் சூழல் தோன்றிய போது கல்விப் பரவலாக்கலை ஆட்சியாளர்கள் கொண்டுவந்தனர். முதலாளிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் அதனைச் செய்ய வேண்டியது அவசியமாயிற்று. அத்தகைய கல்விப் பரவலாக்கல் கல்வியின் மொத்தக் குத்தகைதாரர்களாக சமூகத்தில் அதுவரை விளங்கிய பார்ப்பனர்களை அந்த நிலையை முன்போல் தக்கவைக்க விடவில்லை.

பணம் தான் அனைத்தும் என்ற எந்திரத் தொழில் உற்பத்திமுறை அறிமுகம் செய்த முதலாளித்துவ சமூக அமைப்பின் அடிப்படைத் தன்மை பிறப்பை அடிப்படையாகக் கொண்டு உயர்வு தாழ்வு பாராட்டிய பழைய நிலவுடமை சமூகத்தின் முதுகெலும்பை முறித்தது. மேலும் அவர்கள் அறிமுகம் செய்த போக்குவரத்து வசதி மக்களை அவர்கள் கட்டுப்பட்டுக் கிடந்த, போக்குவரத்து வசதியின்றித் துண்டாடப்பட்டுக் கிடந்த கிராமச் சூழலிலிருந்து விடுவித்தது. இது ஜாதியத்தின் மேல் விழுந்த மற்றொரு அடியாக இருந்தது. இந்த அடிப்படைகளில் தான் வெள்ளையர் ஆட்சி இந்திய சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது என்று மார்க்சிய அறிஞர்கள் எடுத்துரைத்தனர்.

வர்க்க முரண்பாடே அடிப்படையானது

மார்க்சிய சிந்தனை பொருள்முதல்வாத சிந்தனை என்று அறியப்படுவது. அதாவது ஒவ்வொரு சிந்தனைப் போக்கிற்கும் பின்னணியில் ஒரு புறச்சூழ்நிலை அதாவது ஒரு சமூக அமைப்பு உள்ளது என்பதை வலியுறுத்திக் கூறுவது. அந்தப் புறச்சூழ்நிலையில் நிலவும் போக்குகளையும் முரண்பாடுகளையும் மையமாக வைத்தே மக்களின் சிந்தனைகள் உருவாகின்றன. ஆனால் முரண்பாடுகளைப் பெருமளவு வெளியே தெரியவிடாமல் செய்து கொண்டு அச்சமூகம் ஒரு நிரந்தரத் தன்மை கொண்டதாக இருக்கிறது என்று காட்டுவதற்கு ஆளும் வர்க்கங்கள் முயலுகின்றன.

ஆனால் சமூகத்தில் நிலவும் முரண்பாடுகள் குறிப்பாக எந்திரத் தொழில் உற்பத்திமுறை அறிமுகம் செய்த முதலாளித்துவ சமூக அமைப்பில் இருக்கும் மையமான முரண்பாடான வர்க்க முரண்பாடு ஆளும் வர்க்கம் எவ்வளவு தூரம் அதை மூடிமறைக்க முயன்றாலும் அது அதனைச் சுற்றி எழுப்பும் மூடுதிரைகள் அனைத்தையும் கிழித்துக் கொண்டு வெளிவரவே செய்தது. அந்த வர்க்க முரண்பாடு சமூகமாற்றச் சிந்தனைகள் சமூகத்தில் தோன்றுவதற்கு ஏற்ற புறச்சூழ்நிலையை உருவாக்கித் தந்தது.

பார்ப்பன எதிர்ப்பு என்ற போக்கை நாம் எடுத்துக் கொண்டால் பிராமண ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துக்களும் இயக்கங்களும் தோன்றுவதற்கு ஏற்ற புறச்சூழ்நிலையை வேறெந்த சமூக அமைப்புகளைக் காட்டிலும் அதாவது உற்பத்திமுறை சார்ந்த வேறெந்த சமூக அமைப்புகளைக் காட்டிலும் முதலாளித்துவ சமூக அமைப்பே அதனைச் செவ்வனே செய்தது.

எனவே எத்தனை மிகப்பெரிய சிந்தனையாளராக கெளதம புத்தர், மகாவீரர் போன்றவர்கள் இருந்தாலும் பிராமணர்கள் பரப்பிய குருட்டுத்தனங்களுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எதிரான மனநிலையை உருவாக்கவல்ல புறச்சூழ்நிலை முதலாளித்துவம் அறிமுகம் செய்த விஞ்ஞானம் நிகழ்த்திய கண்டுபிடிப்புகள் மூலம் நிகழ்த்தப்பட்டது போல் புத்தர் மகாவீரர் போன்றவர்களாலும் அவர்களது பெளத்த, சமண மதங்களாலும் நிகழ்த்தப்படவும் இல்லை; நிகழ்த்தப்பட்டு இருக்கவும் முடியாது.

இந்தப் பின்னணியில் கெளதம புத்தரும் வர்தமான மகாவீரரும் அறிமுகம் செய்த பார்ப்பன எதிர்ப்பு அப்படியே ஒரு அடையாளமாகத் தொடர்ந்து வந்த கொண்டேயிருந்தது; அந்த அடையாளத்தை நாம் பார்க்கத் தவறிவிட்டோம்; கெட்டிகாரத் தனமாக திராவிட முன்னேற்றக் கழகம் அதனைப் பார்த்துவிட்டது. அதனால் அதைப் பயன்படுத்தி அது வளர்ந்துவிட்டது என்று கூறுவது தி.மு.க. போன்ற பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சியின் பின்னணியில் இருந்த மற்றொரு புறச்சூழ்நிலையைப் பார்க்கத் தவறி அது குறித்த ஒரு மிகத் தவறான சித்திரத்தை முன்வைப்பதாகும்.

விடுதலைப் போர்

வெள்ளையர் ஆட்சியை எதிர்த்த போராட்ட உணர்வு பிரதானமாக இந்தியாவில் எந்திரத் தொழில் உற்பத்திமுறை அறிமுகம் செய்யப்பட்ட பின்னணியில் தோன்றிய உடமை வர்க்கத்தினரிடமேயே தோன்றியது. அதாவது ஒரே பூகோளப் பகுதியில் வாழும், ஒரே மொழி பேசும் பின்னணியில் ஒரு தேசிய இனமாக விளங்கும் நம் மக்களையும் நமது இயற்கை வளங்களையும் சுரண்டி நமது இனத்தைச் சேராத வேறொருவன் பொருள் குவிக்கிறான்; அத்தகைய வாய்ப்பைப் பெற்றவர்களாக நாம் ஏன் ஆகக்கூடாது என்ற மனநிலை நமது நாட்டில் வாய்ப்பு வசதிகளுடன் இருந்த ஒரு சிலரிடமே அதாவது முதலாளிகளிடமே பிரதானமாகத் தோன்றி வளர்ந்தது.

ஆனால் எண்ணிக்கையில் மிகச் சிலராக இருந்த அவர்கள் வெள்ளை ஏகாதிபத்தியம் போன்ற சக்திவாய்ந்த எதிரியைத் தங்களது சக்தியை மட்டும் கொண்டு எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்திருந்தனர். அதன் காரணமாகச் சமூகத்தின் மற்ற பகுதியினரையும் அதில் இணைத்துக் கொண்டனர்.

இயல்பாகவே ஆண்டு அனுபவிப்பதற்கு என்று எதுவும் இல்லாதவர்களாக இருந்த சாதாரண இந்திய மக்கள் தங்களது உயிரையும் கூடப் பொருட்படுத்தாமல் அப்போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். அதாவது விடுதலைப் போராட்டப் பின்னணியில் இப்படிப்பட்ட முதலாளிகளுக்குச் சாதகமான மறைமுக அஜெண்டா இருப்பதை அவர்கள் புரிந்து கொள்ளாதிருக்குமாறு நேர்த்தியான வகையில் முதலாளித்துவ வாதிகளால் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடாக இருந்ததும் ஒரு வித்தியாசமான பாத்திரத்தை வகித்தது. அதாவது இங்கிருந்த தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவே விடுதலை பெற விரும்பினாலும் அத்தகைய விடுதலையைச் சக்திவாய்ந்த ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து அவை தனித்தனியாகப் போராடிப் பெறமுடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை. அதனால் தேசிய இனங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து வெள்ளையரை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபட்டன. அவ்வாறு ஏற்பட்ட ஒற்றுமை பாரதி போன்றவர்களிடம் ஒரே இந்தியா என்ற கண்ணோட்டத்தைக் கொண்டுவந்தது.

ஆனால் ஏற்றத் தாழ்வை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடிய எந்த சமூக அமைப்பும் பரந்த அளவிலான உண்மையான தேசிய இனங்களின் ஒற்றுமையைக் கொண்டுவர முடியாது. மேலும் விடுதலைப் போராட்டம் காந்தியடிகள் தலைமையில் போர்க்குணமிக்கதாகவும் முழுவீச்சிலும் நடைபெறாதிருந்தது இயல்பாக வளர்ந்திருக்க வேண்டிய தேசியஇன ஒற்றுமையையும் கூட வளர்க்காமல் போனது.

பிராந்திய முதலாளித்துவக் கட்சி

அதன் காரணமாக விடுதலை பெற்ற பின் நமது நாட்டிலிருந்த தேசிய இனங்களுக்கிடையே முன்பிருந்த நம்பிக்கை இல்லாமல் போய் அவநம்பிக்கை தோன்றி வளரலாயிற்று. குறிப்பாக ஹிந்தி மொழி பேசக்கூடிய பகுதிகளைச் சேர்ந்த தேசிய முதலாளிகள் பெரும் மூலதன வலுக்கொண்ட பார்சி, மார்வாடி முதலாளிகளாக இருந்ததால் விடுதலைக்குப் பின் அமைந்த மத்திய அரசு அவர்களுக்குச் சாதகமானதாக ஆகிவிடும்; அந்த நிலையில் அம்முதலாளிகளின் மூலதனம் நமது பகுதிகளிலும் படையெடுத்துவிடும்; அது தங்களது தொழில் வாய்ப்புகளைப் பெருமளவு பாதிக்கும் என்ற எண்ணப்போக்கு நமது தமிழ் தேசிய முதலாளிகளிடையே வளர்ந்தது. இந்தப் பின்னணியிலேயே பாரதிதாசன் போன்ற கவிஞர்கள் திராவிடம் பேசினர்.

ஆனால் தமிழ் தேசிய முதலாளிகளில் சில குழுமங்கள் அகிலஇந்திய அளவில் போட்டியிடும் அளவிற்கு மூலதன வலுக் கொண்டவையாக இருந்ததால் அவர்களுடைய விருப்பம் தமிழ்நாட்டில் தங்களுக்கு இருக்கக்கூடிய முதலீட்டு வாய்ப்பை அப்படியே தக்கவைத்துக் கொண்டு அகில இந்திய அளவிலும் தங்களது முதலீட்டு வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதாக இருந்தது. எனவே அவர்கள் தமிழ் இனத்தின் உரிமை என்ற அடிப்படையில் தமிழ் நாட்டில் தங்களது மூலதன வாய்ப்பைப் பராமரிக்க விரும்பிய அதே சமயத்தில் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லவும் விரும்பவில்லை.

இந்த பிராந்திய முதலாளிகளின் எண்ணப் போக்கிற்கு உருக்கொடுக்கும் விதத்தில் அவர்களின் அரசியல் கருவியாக உருவானது தான் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாய்க் கட்சிகளான நீதிக்கட்சி, திராவிடர் கழகம் போன்றவை எவ்வளவுதூரம் பிராமண எதிர்ப்பு வாதத்தை முன்வைத்தாலும் அவற்றின் முழக்கத்தின் பலனாக ஏற்பட்ட சூழ்நிலை தங்களுக்குச் சாதகமாக இருந்ததால் டி.வி.எஸ். போன்ற பிராமண முதலாளித்துவக் குடும்பங்களுக்குக் கூட அது வெறுப்பு எதையும் ஏற்படுத்தவில்லை.

மாறாகப் பொருளாதார ரீதியான பலன்களை அதாவது அடிப்படைப் பலன்களை அவர்களுக்கு அந்த முழக்கம் ஏற்படுத்தித் தந்ததால் அது அவர்களுக்கு உவகை தருவதாகவே இருந்தது. இதுதான் தி.மு.க. வளர்ந்ததன் பின்னணி.

இந்தப் பேராசிரியர்கள் முன்வைப்பது போல் தொடர் ஓட்டப் பந்தயத்தில் கெளதம புத்தர், வர்தமான மகாவீரர் தொடங்கி அவர்களால் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி வரை கைக்குக் கைமாறி வரும் அடையாள அரசியல் குச்சியால் சாதிக்கப்பட்டதல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி.

கோளாறான அடிப்படை அரசியல் வழி

அகில இந்திய முதலாளித்துவ நலன் கருதும் அரசியல் பிராந்திய முதலாளிகள் நலன் கருதும் அரசியல் போன்றதல்ல கம்யூனிஸ்ட்கள் முன்வைக்கும் சமூகமாற்ற அரசியல். அது நிலவும் சூழ்நிலைகளுக்கு எதிரான எதிர் நீரோட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம் வளர வேண்டியது.

தற்போது இத்தகைய அடையாள அரசியல் முழக்கத்தை மிகப் பெரிதாக எழுப்பும் பேராசிரியர்களின் பின்னணியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதிலிருந்து பிரிந்த சி.பி.ஐ(எம்). மற்றும் பல அதிதீவிர இடதுசாரிக் குழுக்கள் இவை அனைத்துமே அத்தகைய எதிர் நீரோட்டத்தை ஏற்படுத்த முடியாதவையாக அவர்கள் பின்பற்றிய அடிப்படை அரசியல் வழியில் இருந்த கோளாறின் காரணமாக ஆகிவிட்டன.

அதாவது போர்க்குணமிக்க போராட்டங்கள் மூலமாகப் பெருமளவில் சாதிக்கப்படவில்லை என்றாலும் 1947 ஆகஸ்ட் 15ம் நாள் நடந்தது ஒரு வர்க்கத்தின் கையிலிருந்து மற்றொரு வர்க்கத்தின் கைக்கு நடந்த அரசியல் மாற்றமே என்பதை ஒன்றாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சி அன்று அங்கீகரிக்கவில்லை. நமக்கு சுதந்திரமே கிடைக்கவில்லை என்ற கூற்றை அக்கட்சி அப்போது முன்வைத்தது. அதாவது நமது நாட்டின் தேசிய முதலாளி வர்க்கத்திற்கு அது எவ்வித தங்குதடைமின்றி வளர்வதற்கு ஏற்றதொரு சுதந்திரம் கிடைத்துள்ளது என்பதை ஒன்றுபட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகரிக்கவில்லை.

நிச்சயமாக அந்த சுதந்திரம் ஏழை எளிய பாட்டாளி மக்களுக்கான சுதந்திரமாக இல்லை. அதனால் நாம் சுதந்திரமே பெறவில்லை என்ற வாதத்தை அக்கட்சி முன்வைத்த போது அதனைச் சித்தாந்த ரீதியாகப் பெரிய அளவிற்கு உணர்வுமயப் படுத்தப்படாதவர்களாக இருந்த அக்கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள் நம்பவே செய்தனர்.

இதனால் என்ன மோசம் போய்விட்டது என்ற கேள்வி இங்கு எழலாம். ஆனால் இந்திய முதலாளிகளின் கையில் ஆட்சியதிகாரம் வந்துவிட்டது; அவர்க்கமே இனி இந்திய உழைக்கும் வர்க்கத்தின் முழுமுதல் எதிரி என்பதை முன்வைக்காததால் அதாவது அந்நிய ஏகாதிபத்தியமும் இந்திய நிலப்பிரபுத்துவமும் அந்நிய ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து வளர்ந்த பெரு முதலாளித்துவ வர்க்கமுமே நமது எதிரிகள் என்ற கணிப்பை அவர்கள் கொண்டிருந்ததால் பரந்த அளவில் தேசிய முதலாளி வர்க்கம் நடத்தும் ஆலைகளில் வர்க்கப் போராட்டங்களை உரிய விதத்தில் கூர்மையுடன் நடத்த அவர்கள் தவறிவிட்டனர்.

அதுமட்டுமின்றி கிராமப்புறங்களிலும் வர்க்கப் பிரிவினையை அவர்கள் அடையாளம் காணத் தவறி ஒட்டுமொத்த விவசாயிகளையும் நேசசக்திகளாக கருதும் போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். நாட்டுப்புற அரங்கில் அவர்கள் எதிரிகளாகப் பாவித்தவர்கள் எத்தனை பெரிதுபடுத்திக் காட்டும் பூதக் கண்ணாடியை வைத்துப் பார்த்தாலும் அதற்குத் தென்படவே செய்யாத நடைமுறையில் இல்லாது அவர்களுடைய மூளையின் உருவாக்கமாக மட்டும் இருந்த நிலப்பிரபுத்துவ வர்க்கமே.

இந்த அடிப்படைப் பலவீனத்தின் காரணமாக அவர்கள் கம்யூனிஸ்ட்கள் உருவாக்க வேண்டிய எதிர் நீரோட்டத்தை அகில இந்திய அரங்கிலும் தமிழக அரங்கிலும் ஏற்படுத்தத் தவறிவிட்டனர். இந்தச் சித்தாந்தத் தெளிவற்ற போக்கு அவர்களை முழுமையான நாடாளுமன்ற வாதத்திற்குள் தள்ளிவிட்டு விட்டது.

நியாயப்படுத்தும் வாதம்

அதன் காரணமாக நாடாளுமன்ற அரசியலிலும் அக்கட்சி வளராமல் போனது. அதனை நியாயப் படுத்துவதற்காகத் தாங்கள் பிரதானமாக எடுக்க வேண்டிய வர்க்க அரசியலைத் தூக்கியயறிந்துவிட்டு ஜாதிய அரசியலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிலிருந்து பிரிந்த கட்சிகளும் கையிலெடுத்துள்ளன. அதைத் திறம்படச் செய்வதற்கு அக்கட்சிகளைச் சேர்ந்த கருத்து உற்பத்தியாளர்கள் அவர்களுக்குத் தயாரித்து வழங்கியுள்ள பொம்மை ஆயுதம் தான் இந்த அடையாள அரசியல்.

பல்கலைக்கழக அரசியல்

ஆனால் இந்த அடையாள அரசியல் குறித்த கருத்துக்களை அவர்கள் ஆர்வத்துடனும் முழுவீச்சுடனும் முன்வைப்பதற்கும் ஒரு பின்னணி இருக்க வேண்டும். அத்தகைய பின்னணி பல்கலைக்கழக வளாகங்களில் நிலவும் பல்கலைக்கழக அரசியலாகும்.

பல்கலைக்கழக அரசியல் என்ன அத்தனை பெரிய அரசியலா? என்ற எண்ணப்போக்கு சிலர் மனதில் எழலாம். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஒருமுறை கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவின் இருபெரும் முதலாளித்துவ ஆதரவு அரசியல் கட்சிகளில் ஒன்றினால் தெரிவு செய்யப்பட்டார். அப்போது பலர் அவரிடம் நீங்களோ ஒரு கல்லூரிப் பேராசிரியர் நீங்கள் எவ்வாறு அமெரிக்க அரசியலில் அவ்வப்போது எழும் சூறாவளிகளை எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு அவர் கூறிய பதில் மிகவும் சுவைகரமானது. அவர் கூறினார் பல்கலைக்கழக அரசியலில் 40 ஆண்டுகளுக்கு மேல் ஈடுபாடுகள் கொண்டவனாக இருக்கும் எனக்கு இந்த அமெரிக்க நாட்டை நிர்வகிக்கும் அரசியல் ஒரு குழந்தை விளையாட்டைப் போன்றதாகத்தான் இருக்கும் என்று கூறினார்.

நாம் நினைக்கிறோம் பல்கலைக் கழகங்கள் கலைமகளின் கோவிலாக விளங்குகின்றன என்று. ஆனால் பதவிப் போட்டியும் தான் என்ற அகந்தையை மையமாக வைத்து நிலவும் பூசல்களும் மற்ற துறைகளில் நிலவும் அளவிற்குச் சிறிதும் குறையாமல் அங்கும் நிலவுகின்றன.

மேலும் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களுக்கு ஓய்வு நேரமும் அதிகம். அவ்வாறு கூடுதல் ஓய்வு நேரம் அவர்களுக்கு வழங்கப்படுவதன் நோக்கம் அவர்கள் அதனைப் பல நூல்களைப் படிப்பதற்குப் பயன்படுத்திக் கற்பிப்பதைச் சிறப்புடன் செய்ய வேண்டும் என்பதே.

ஆனால் எத்தனை பேராசிரியர்கள் அதனை அந்த விதத்தில் பயன்படுத்துகின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. பலர் அந்நேரத்தை அவ்வாறு பயன்படுத்தவில்லை என்பது அனேகம் பேருக்குத் தெரியும்.

மேலும் கல்லூரி ஆசிரியப் பணி ஆற்றுபவர்களுக்கு சமூகத் தொடர்பு மற்ற துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு இருக்கும் அளவிற்கு இருப்பதில்லை. எனவே விசயங்களைத் தன்வயமான போக்கில் புறச் சூழ்நிலைகளுடன் பொருத்திப் பார்க்காமல் பார்ப்பது அவர்களிடம் அளவிற்கதிகமாகவே உள்ளது. அதனால் சமூக மக்களின் வாழ்க்கையோடு இயைந்து வாழ்ந்து அவர்கள் ஏட்டில் படித்ததை யதார்த்த வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து அதனைச் செறிவு செய்வது தேவைப்பட்டால் அவற்றின் பெருத்தமற்ற விசயங்களை மாற்றவும் துணிவது என்பதை அவர்கள் பெரும்பாலும் செய்வதில்லை.

இந்தப் போக்கை மனதிலிருத்தியே மக்கள் ஜனநாயகம் மலர்ந்துவிட்ட சீனத்தில் பேராசிரியர்களை அணைகள் கட்டுவது போன்ற உடலுழைப்புச் சார்ந்த கட்டுமானப் பணிகளிலும் ஈடுபடச் செய்ய வேண்டும் என்று மாபெரும் மார்க்சிய சிந்தனையாளர் மாவோ பல சமயங்களில் வலியுறுத்தினார். இங்கு ஆளும் வர்க்கத்தின் சேவகனாக இருக்கும் அரசு அவர்களுக்குச் சம்பளம் வழங்குவதாக இருப்பதால் அதற்குத் தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தாத வகையில் ஏட்டுப் புழுக்களாக இருந்து அரசுடன் ஒத்துப் போகவே அவர்கள் விரும்புகின்றனர்.

இந்தப் போக்கிற்கு எடுத்துக் காட்டுகளைத் தேடி வெகுதூரம் போக வேண்டியதில்லை. சமீபத்தில் அம்பேத்கர் மற்றும் நேரு குறித்த கேலிச் சித்திரம் நாடாளுமன்றத்தில் கிளப்பிய சர்ச்சையை ஒட்டி அமைக்கப்பட்ட தோரட் என்பவரின் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையை வைத்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.

பல நிபுணர்களைக் கலந்தாலோசித்த பின்னரே அந்தக் கேலிச் சித்திரத்தோடு வேறு பல கேலிச் சித்திரங்களையும் சி.பி.எஸ்.சி. அரசியல் அறிவியல் பாடப் புத்தகங்களிலிருந்து அகற்றலாம் என்ற பரிந்துரையைத் தான் சமர்ப்பித்ததாக தோரட் கூறினார். தற்போது ஒருவர் பின் மற்றொருவராக அவர் கலந்தாலோசித்த நிபுணர்களில் பலர் தாங்கள் அந்தக் கேலிச் சித்திரங்களை நீக்குமாறு தோரட் கமிட்டியிடம் கூறவில்லை என்று நாளிதழ்களில் எழுதிக் கொண்டுள்ளனர்.

அந்தக் கமிட்டி அத்தகைய பரிந்துரையை முன்வைக்கக் காரணம் தற்போது ஆட்சியிலிருப்பர்களின் விருப்பம் அது தான் என்று புரிந்து கொண்டு அவர்களை மகிழ்விப்பதற்கேயாகும்.

அணா பைசா தொழிற்சங்கங்களாகிவிட்ட ஆசிரியர் அமைப்புகள்

இந்தப் போதாமையைப் போக்க வேண்டுமென்றால் அதைப் பேராசிரியர்களின் அமைப்புகள் தான் செய்ய முடியும். அதாவது வெளி உலகிற்கும் ஆசிரியர் சமூகத்திற்கும் இடையிலான பாலமாக அதுவே விளங்க முடியும். மேலும் ஆசிரியரின் கூட்டு வலிமையைப் பெற்ற அமைப்பு என்ற ரீதியில் உண்மையை அதனைக் கூறுவதால் பாதிப்படைவது அரசாக இருந்தால் கூட உரத்துக் கூறு முடிபவை ஆசிரியர் அமைப்புகளாகத் தான் இருக்க முடியும். அறிவுத் துறையில் செயல்படும் அமைப்பு என்ற ரீதியில் ஆசிரியர் அமைப்புகளுக்கு இந்தத் தார்மீகப் பொறுப்பும் உண்டு.

ஆனால் அந்த அமைப்புகள் இந்த வழியில் பெரும்பாலும் செயல்படுவதில்லை. மாறாக அரசை நோகச் செய்யும் இதுபோன்ற ஆக்கபூர்வப் பணிகள் எதனையும் அவை செய்வதில்லை. அரசை நோகச் செய்யாமல் நல்ல மனநிலையில் வைத்திருந்தால் தானே பொருளாதார ரீதியிலான பலன்களைத் தங்கள் உறுப்பினர்களான ஆசிரியர்களுக்குப் பெற்றுத் தந்து தங்களது உறுப்பினர் எண்ணிக்கை குறையாமல் வைத்திருக்கலாம் என்றே அமைப்புகளின் தலைமைகள் கருதுகின்றன.

ஜாதியக் கண்ணாடி

இந்தப் பின்னணியில் பல்கலைக் கழகங்களில் உயர் பதவியிலிருப்போர் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு சலுகை செய்வது போன்ற கோளாறுகள் அனைத்தையும் ஜாதியக் கண்ணாடி போட்டுப் பார்த்து ஜாதிகளே அனைத்திற்கும் அடிப்படை என்று காட்ட இப்பேராசிரியர்கள் முற்படுகின்றனர்.

ஆனால் ஒன்றை இவர்கள் பார்க்கத் தவறுகின்றனர். பணம் கொடுத்தால் அனைத்தும் நடக்கும் என்பது மருத்துவக் கவுன்சில் தொடங்கி மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் வரை கல்லூரி உரிமம், ஆசிரியர் பணி நியமனம் ஆகிய அனைத்திலும் பரவியுள்ளதைப் பார்க்கவும் அதிலிருந்து படிப்பினை எடுத்துக் கொள்ளவும் இவர்கள் தவறுகின்றனர். ஒரே ஜாதியைச் சேர்ந்தவராக இருப்பது பணம் கொடுப்பதற்கு அறிமுகத்தை மட்டுமே ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை அவர்கள் உணரவில்லை. ஜாதிய அடையாளத்திற்கு முக்கியத்துவம் என்று ஏதாவது இருந்தால் அது இந்த அளவிற்குத் தான் உள்ளது என்பதையும் அவர்கள் பார்க்கத் தவறுகின்றனர்.

இன்று நிலவும் முதலாளித்துவ அமைப்பில் எண்ணிக்கையில் மென்மேலும் பல்கிப் பெருகி வருவதாக இருக்கும் உழைக்கும் வர்க்கம் அது உற்பத்தி செய்யும் பொருளிலிருந்தும் வாழும் சமூகத்திலிருந்தும் அன்னியமாகி மனிதன் என்ற தனது அடையாளத் தையே இழந்து நிற்கிறது. இதே காலத்தில் இப்பேராசிரியர்கள் பிராமண எதிர்ப்பு அடையாளத்தின் முன்னோடி களாகக் கூறும் பெளத்த, சமண மதங்கள் அவற்றின் சமூகப் பொருத்தம் மற்றும் தேவை என்ற உள்ளடக்கத்தையே இழந்து சடங்குகளையும் சம்பிரதாயங் களையும் மட்டுமே பற்றி நிற்கின்றன.

பெளத்தத்தின் அஹிம்சை என்ற உள்ளடக்கம் அழிந்து அதன் பேரில் இனப் படுகொலைகள் இலங்கையில் நடந்து கொண்டுள்ளன. மேலும் இந்தியாவில் தோன்றிய புத்த மதம் இங்கு கருதப்படக் கூடிய ஒரு மத நிறுவனமாகவும் இல்லை. இன்னும் பார்த்தால் இவர்கள் பெரிய எதிரியாகச் சித்திரிக்கும் பிராமணியத்தின் உள்ளடக்கமும் அழிந்து அதன் சடங்குகளும் சம்பிரதாயங்களுமே மிஞ்சி நிற்கின்றன. மதங்கள் அனைத்துமே வரலாற்று ரீதியாகப் பொருத்தமற்றவையாகி விட்டதால் அவை அனைத்துமே அவற்றின் உள்ளடக்கங்களை இழந்து வடிவங்களாக மட்டுமே சமூகத்தைப் பின்னுக்கு இழுக்கும் சக்திகளாக இருந்து கொண்டுள்ளன.

அடையாளம் அறியப்பட வேண்டியது உள்ளடக்கத்தில்; வடிவத்திலல்ல

எந்த ஒன்றின் அடையாளமுமே அடிப்படையில் அதன் உள்ளடக்கத்தில் தான் இருக்க முடியுமே தவிர அதன் வடிவத்தில் இருக்க முடியாது. அந்த அடிப்படையில் அடையாளம் இல்லாது சடங்கு, சம்பிரதாய வடிவங்களில் மட்டும் இருக்கும் பெளத்த, சமண மதங்களின் பிராமண எதிர்ப்பு ‘அடையாளம்’ வழிவழியாக வந்து சீக்கிய மதத்தில் சீறிப் பாய்ந்து மனிதன் என்ற அடையாளத்தையே இந்த முதலாளித்துவ சமூகத்தில் இழந்து நிற்கும் சமூகத்தின் மிகப்பெரும் பகுதியாக இருக்கும் கருத்தாலும் கரத்தாலும் பாடுபடும் உழைக்கும் மக்களிடையே விரவிப் பரவி தி.மு.க. போன்ற கட்சிகளின் வெற்றிக்கு உதவியுள்ளது என்று நகைப்பிற்கு இடமளிக்கும் விதத்தில் இப்பேராசிரியர்கள் கூற வருகிறார்கள்.

இத்தகைய இல்லாத ஒன்றை உருவாக்கி நிலை நிறுத்த வேண்டுமானால் அதற்கு நிறைய எழுதவும் பேசவும் வேண்டும். அதையும் யாரிடம் மிக அதிகமாகச் செய்ய முடியும் எனில் உள்மதிப்பீட்டில் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்ற கருத்தில் சுதந்திரமான சிந்தனையைப் பாறையைப் போல் கட்டுப்படுத்தி வைக்கும் மாணவர் மற்றும் ஆராய்ச்சியாளர் மத்தியில் தான் செய்ய முடியும்.

ஆளும் வர்க்கம் அடையும் பலன்

இந்தக் கருத்து நிலவுவதிலும் பரவுவதிலும் நமது நாட்டின் ஆளும் வர்க்கத்திற்கும் பலன் உண்டு. அதாவது வெளிப்படையாக சமூகத்தில் நிலவும் அதனைப் பாதிக்கும் வர்க்க முரண்பாடு இதனால் பின் தள்ளப்படும். இல்லாத ஜாதிய அடையாளத்தை மையமாகக் கொண்ட கண்ணாமூச்சி விளையாட்டை இன்னும் பலகாலம் மக்களை விளையாட விடலாம். இந்த அடிப்படையில் ஆளும் வர்க்கத்திற்கு இதனால் நன்மை கிட்டவே செய்யும். வர்க்க வேறுபாட்டைப் பின்தள்ளி இதுபோன்ற கருத்துக்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்குவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

அடிப்படை சமூக மாற்றக் கண்ணோட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டு விட்ட இவர்களைக் கருத்துப் பெட்டகங்களாகக் கருதும் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் இந்தியாவில் செயல்படும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதிலிருந்து பிரிந்த கட்சிகளுக்கு இவர்களது இந்த மகத்தான வழங்கல் இரண்டு வகைப் பலன்களைத் தருகின்றது. ஒன்று இக்கட்சிகள் ஏன் வளரவில்லை என்பதற்கான காரணமாக அடையாள அரசியலைக் கையிலெடுக்கத் தவறியதை முன் வைக்கிறது. இன்னொரு புறம் ஆளும் வர்க்கத்திற்கு உகந்த நாடாளுமன்றக் கட்சிகளாக இவைகள் தங்களை ஆக்கிக் கொள்வதற்கும் இது உதவுகிறது. அவ்வாறு தங்களை ஆக்கிக் கொண்டு ஜாதிய அரசியல் மாவை முடிந்த மட்டும் தங்கள் கருத்தாலைகளில் ஆட்டவும் இவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

பாரதியின் பன்முகப் பரிமாணம்

அதற்காக இவர்கள் முன்பு கொண்டிருந்த சில சரியான கருத்துக்களிலும் கூட மாற்றங்கள் கொண்டுவரத் தொடங்கிவிட்டனர். பொதுவுடமை இயக்கங்கள் பாரதியை உயர்த்திப் பிடித்தன. பிராமண எதிர்ப்பு மனநிலை கொண்ட பாரதிதாசனுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றெல்லாம் கூறத் தொடங்கியுள்ளனர். இவர்களது அகராதியில் இந்தியாவில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் கருதப்பட வேண்டிய ஒன்றே இல்லை என்பது போல் ஆகிவிட்டது.

இந்தியாவின் மறுமலர்ச்சியுகம் உருவாக்கிய இரு மகா கவிகள் தாகூரும் பாரதியும் ஆவர். அவ்விருவரில் பாரதி வெள்ளை அரசின் அடக்குமுறையையும் நேரடியாகப் பல வகைகளில் எதிர் கொண்டவன். அரசியல் ரீதியாக விடுதலைப் போரில் பங்கேற்றதோடு பெண்விடுதலை, ஜாதி ஒழிப்பு ஆகிய சமூக சீர்திருத்த அம்சங்களையும் கொண்டிருந்தவன். அவனிடமிருந்த போதாமைகளை அவன் வாழ்ந்த காலகட்டத்தை மனதிற்கொண்டு பார்க்க வேண்டும். விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பலவீனத்தையும் மனதிலிருந்திப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் காந்தியடிகளின் சமரசவாதத் தலைமையைக் காட்டிலும் மேலானதாக இருந்த திலகரின் தலைமையில் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஈடுபட்டவன் அவன்.

அவனது பல பரிமாணங்களில் மிகச் சிலவற்றை மட்டும் கொண்டிருந்தவரே பாரதிதாசன்; இருவரையும் ஒப்பிடவே முடியாது. இருந்தாலும் அடையாள அரசியலை தனது கவிதைகளில் முன்னிலைப் படுத்தியது பாரதிதாசன்; அவருக்கு உரிய முக்கியத்துவத்தைப் பொதுவுடமை இயக்கம் தரவில்லை என்ற சுயவிமர்சனத்தை இவர்கள் செய்து கொண்டுள்ளனர்.

உண்மையான அறிவு ஜீவிகளை ஜீரணிக்க முடியவில்லை

தவறான நிலைகள் எடுப்பதற்கான அடித்தளத்தை தங்களது அடிப்படை அரசியல் வழிக் கோளாறினால் ஆரம்பம் முதற்கொண்டே கொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உண்மையான ஆராய்ச்சியாளர்களை என்றுமே ஜீரணிக்க முடியாததாகவே இருந்தது. மிகச் சிறந்த விஞ்ஞானியும் அரசியல் மற்றும் வரலாற்றியல் அறிஞருமான டி.டி.கொசாம்பி, வரலாற்றியல் ஆராய்ச்சியாளர் ராகுல சாங்கிருத்யாயன் போன்றவர்கள் இந்த அமைப்பில் இணைந்து இயல்பாக இயங்க முடியவில்லை.

இன்று அந்த அமைப்பு அப்பட்டமான நாடாளுமன்ற வாதத்தால் இன்னும் சீரழிந்துள்ள நிலையில் இந்த அடையாள அரசியல் பேராசிரியர்கள் தான் இவர்களது கருத்துப் பெட்டகங்களாக விளங்குகின்றனர். இதுபோன்ற போக்கை இன்னும் பருண்மையாகப் பார்க்க வேண்டுமானால் லெனினது எம்ப்ரியோ கிரிட்டிஸிஸம் எனும் நூலை இன்னும் ஒரு முறை நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் கனத்த மனதுடன் அக்கூட்டத்தை விட்டு வெளிவரும் போது நமக்கு ஏற்பட்டது.

Pin It