உலகமயமாதல் பின்னணியில் ஒரு விசயம் நிச்சயமாக நடந்தேறியுள்ளது. அதாவது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முதலாளித்துவ உற்பத்தி முறை அனைத்து நாடுகளிலும் பல்கிப்பரவி அது திட்டவட்டமான ஒரு சர்வதேச அமைப்பாக மாறியுள்ளது. முதலாளித்துவ அமைப்பின் முக்கிய மூன்று விசயங்கள் உலகளாவியனவாக மாறியுள்ளன. அதாவது முதலாளித்துவ உபரிமூலதனக் குவிப்பு, முதலாளித்துவப் போட்டி, சமூகத்தின் பொருள் மற்றும் கருத்து உற்பத்திகள் அனைத்தும் சந்தை சரக்காவது ஆகியவை உலகின் எல்லா நாடுகளிலும் நிலவும் வெளிப்படையான விசயங்களாகிவிட்டன.

முதலாளித்துவ கலாச்சாரப் பரவல்

இந்த முதலாளித்துவ உற்பத்திமுறை உலகில் அனைத்து நாடுகளிலும் அடிப்படையான உற்பத்தி போக்காக மாறியுள்ளதானது பல்வேறு நாட்டு மக்களின் கலாச்சாரத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முதலாளித்துவ கலாச்சாரமே அனைத்து மக்களின் கலாச்சாரம் என்ற சூழலை அது ஏற்படுத்தியுள்ளது. முதலாளித்துவமயம் குறித்த மிக எளிமையான ஒரு எடுத்துக்காட்டை நாம் நமது கிராமங்களில் பார்க்கலாம்.

நமது கிராமப்புறங்களில் காலங்காலமாக தச்சு வேலை செய்து வந்தவர்களில் பலர் தற்போது பிரதானமாக அந்த வேலை செய்வதை விட்டுவிட்டு மரக்கடைகளுக்கு முன்னால் காதில் பென்சில் ஒன்றை செருகிக் கொண்டு மரம் வாங்க வருபவர்களை தாஜா செய்து அழைத்துச் சென்று அவர்களை மரம் வாங்க வைத்து அதில் கமிசன் மட்டும் பெறுபவர்களாக ஆகிவருகின்றனர்.

அனைத்து அறிவும் சந்தைச் சரக்கே

அதாவது மரத்தைப் பற்றி சாதாரண மக்களைக் காட்டிலும் தச்சர்கள் விபரம் தெரிந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு தெரிந்துள்ள விபரம் தற்போது சந்தை சரக்காகியுள்ளது. வளர்ந்து வரும் இந்தப் போக்கு இதற்கு முன்பு அவர்களிடமிருந்த உழைத்து சாப்பிடும் நேர்மையான தொழிலாளர்கள் என்ற தரத்தை இழக்கச்செய்துள்ளது.

மக்களின் வாங்கும் சக்திக் குறைவின் காரணமாக பயனுள்ள உபயோகப் பொருட்களின் உற்பத்தியில் முதலீடு செய்தால் அப்பொருட்கள் விற்காது என்ற நிலையில் மூலதனம் முதலாளிகளின் கரங்களில் குவிந்துள்ளதால் முன்பு கைவினைஞர்களால் செய்யப்பட்ட தொழில்களிலும் பெரும் மூலதனம் ஈடுபடுத்தப்பட்டு அவையும் ஆலைத் தொழில்களாக மாற்றப்படுகின்றன. அந்த அடிப்படையில் மரவேலைகள் செய்வதும் ஒரு நிறுவனத் தொழிலாக மாறியுள்ளது. அதனால் ரெடிமேட் கதவுகளும் ஜன்னல்களும் தற்போது இயந்திரங்கள் மூலம் கடைசல் செய்யப்பட்டு ஆலைப் பொருள்களாக மாறியுள்ளன. உபரி மூலதனக் குவிப்பு அது முதலீடு செய்யப்படுவதற்கான சூழலைத் தேடியலையும் தவிப்பு என்ற முதலாளித்துவ அம்சம் இதன் மூலம் வெளிப்படுகிறது.

அதே வேலையை ஒரு தச்சரிடம் கொடுத்தால் அவர் அதற்குக் கூலியாக தனது அன்றாட வாழ்க்கைச் செலவை குறைந்தபட்சம் வைப்பார். ஆனால் வேலைப் பங்கீடு செய்து நவீன கருவிகளைப் பயன்படுத்தி செய்வதால் ரெடிமேட் கதவு அல்லது ஜன்னலின் ஒட்டுமொத்த விலை அது தச்சரிடம் செய்து வாங்குவதைவிட மலிவானதாக இருக்கும். எனவே அப்போட்டியில் ஈடுகொடுக்க முடியாமலும் தச்சு வேலை செய்யும் பலர் இவ்வாறு தரகர்களாக மாறிவிடுகின்றனர். முதலாளித்துவத்தின் மற்றொரு விதியான போட்டியும் அதன் விளைவாக கைவினைஞர்களும் சிறு உற்பத்தியாளர்களும் காணாமல் போகும் நிலையும் இவ்வாறு அரங்கேறுகிறது.

ஒரு காலத்தில் உழைக்கும் மக்களிடையே பரவலாக காணக்கிடந்த நேர்மையாக தொழிலில் ஈடுபடுவது; அதற்கு உரிய கூலியை போராடி பெறுவது என்ற தொழிலாளி வர்க்க கலாச்சாரம் இப்போது நிலவவில்லை. உழைக்கும் வர்க்க இயக்கங்களுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவினை இந்தத் தொழிலாளி வர்க்கத்தினரிடம் தற்போது புகுந்துள்ள முதலாளித்துவ கலாச்சார பரவல் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய தர வர்க்கத்தின் மீதான நுகர்வோர் கலாச்சாரத்தின் தொற்றுநோய்த் தாக்குதல்

நமது நாட்டை பொருத்தவரையில் கல்வி அறிவு பெறுவதற்கு ஓரளவு வாய்ப்புள்ள வர்க்கமாக நடுத்தர வர்க்கம் இருப்பதால் அவர்களின் அறிவுபூர்வ பங்களிப்பும் பங்கேற்பும் முற்போக்கு இடதுசாரி இயக்கங்களில் பெரிய அளவில் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய தாராளவாதக் கொள்கை இந்த மத்தியதர வர்க்கத்தை படிப்படியாக வளர்ந்துவரும் நுகர்வோர் கலாச்சாரத்தின் தொற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாக்கியுள்ளது. அதனால் அவர்கள் இதற்குமுன்பு ஆற்றிய பங்கினை இடதுசாரி முற்போக்கு இயக்கங்களில் ஆற்றமுடியாதவர்களாக ஆகி வரும் அவல நிலை தோன்றியுள்ளது. இதுவும் இடதுசாரி முற்போக்கு இயக்கங்களுக்கு ஏற்பட்டுள்ள வருந்தத்தகுந்த பின்னடைவாகும்.

நுகர்வோர் கலாச்சாரம் அரசுகளின் வரப்பிரசாதம்

இந்த நுகர்வோர் கலாச்சாரம் முதலாளித்துவ நலன்கருதி செயல்படும் மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக சாலைப் போக்குவரத்துத் துறையை எடுத்துப் பார்த்தால் அது பல மாநிலங்களில் பெரும்பாலும் அரசின் வசம் உள்ளது. இப்போது இந்த மாநில அரசாங்கங்கள் முன்புபோல பொது போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டியதில்லை.

அரசு பேருந்துகளை அரசே இயக்கும் வேலையை செய்தால் தேவைக்கு உகந்த விதத்தில் புது பேருந்துகளை அது இயக்க வேண்டியிருக்கும். இது அரசாங்கங்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்தது. அதாவது அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெரும்பாலும் லாபம் ஈட்டுவதில்லை. இதற்கான ஒரு மிக முக்கிய காரணம் அரசுத் துறைகளில் நிலவும் ஒரு ஊழல் மலிந்த போக்கு. போக்குவரத்தில் தனியார் துறையும் அரசு துறையும் ஒரு சேர இயங்குவதால் தனியார் பேருந்து முதலாளிகளிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அதிக பயணிகள் ஏறும் நெரிசலான நேரங்களை அவர்களுக்கு விட்டுக்கொடுத்து அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அபரிமித சுயலாபம் ஈட்டுவதில் பல இடங்களில் ஈடுபடுகின்றனர்.

இது போன்ற பல உயர்மட்ட ஊழல் நடவடிக்கைகளால் அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாய் பாதிக்கப்பட்டு அது கட்டண உயர்வை மக்கள்மேல் அடிக்கடி திணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறது. அப்படி கட்டண உயர்வை திணித்தால் அதனை எதிர்த்து போராட்டங்கள் வெடிக்கும். இது போன்ற தலைவலிகளை சமாளிக்க பல மாநில அரசாங்கங்கள் ஒரு அளவிற்கு மேல் புது பேருந்துகளை இயக்காமல் மினி பஸ் போன்றவற்றை அறிமுகப்படுத்தியும், இருக்கும் பேருந்துகளிலேயே முண்டியடித்து மக்கள் செல்லும் நிலையை உருவாக்கியும் ஒரு அவதிப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

கார் வாங்கும் மனநிலைக்குத் தள்ளப்படும் மத்தியதர வர்க்கம்

இது அலுவலகம் செல்வோரின் போக்குவரத்து தேவையில் கடுமையான நெருக்கடியை தோற்றுவிக்கிறது. இந்த நெருக்கடியும் நமது ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பரப்பப்படும் நுகர்வோர் கலாச்சாரமும் நிதி நிறுவனங்கள் வழங்கத் தயாராக உள்ள கடனும் சேர்ந்து மத்திய தர வர்க்கத்தினரிடம் ஒரு மனநிலையை அதாவது இந்த சிரமமான நிலையில் நாம் ஒரு கார் வாங்கிவிட்டால் நமக்கு பிரச்னை ஏதுமில்லையே என்ற எண்ணப்போக்கை ஏற்படுத்துகிறது.

அமெரிக்க அனுபவம்

இதே எண்ணப்போக்கு அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்டுத்தான் அங்கு 90 சதவீத மக்கள் கார் வைத்திருப்பவர்களாக மாறினர். பொது போக்குவரத்து அமைப்பை அமெரிக்க அரசு படிப்படியாக கைவிட்டதன் விளைவாக சுற்றுபுற சூழலை மாசுபடாமல் பராமரிப்பதில் மண் விழுந்தது. எண்ணெய் விலை உயர்வு நேரடியாக பெரும் சுமையினை மக்கள் மீது ஏற்றி வைத்தது. இத்தகைய பிரச்னைகளுக்கு இடமளிக்காத மின்சாரத்தால் இயக்கப்படும் பேருந்துகளும், ரயில் வண்டிகளும் இயக்குவது அமெரிக்க அரசால் கைவிடப்பட்டது.

இதில் ஜெனரல் மோட்டார்ஸ் என்ற பகாசுர கார் நிறுவனத்திற்கு பெரும் பங்கு இருந்தது. அது தனக்கு அதிக ஆதாயம் ஈட்டித்தரும் டீசல் வாகனங்களின் உற்பத்தியையும், தனியார் கார்களின் உற்பத்தியையும் மிக அதிகமாக நடத்துவதற்காக அமெரிக்க அரசாங்கத்திடம் மிகப்பெரும் செல்வாக்கினை செலுத்தியது. (இது குறித்து 20.11.08 அன்று ஹிந்து நாளிதNல் திரு. சாய்நாத் அவர்கள் எழுதியுள்ள சிந்தனையை தூண்டும் கட்டுரையைக் காண்க).

அமெரிக்காவின் பொது போக்குவரத்து முறையில் திட்டமிட்டு ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற கம்பெனிகளின் தூண்டுதலால் உருவாக்கப்பட்ட நெருக்கடியும், பரப்பிவிடப்படும் நுகர்வோர் கலாச்சாரமும் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஆதாயம் ஈட்டுவதற்காக எளிதாக வழங்கும் கடன் வசதியும் சேர்ந்து நடுத்தர மக்களிடையே கார் வாங்குவதற்கான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

லாபத்திற்காக தொழில் நடத்தும் முதலாளியைப் புனிதராக்கும் வேலை

டாடா சிங்குரில் உருவாக்க நினைத்து தற்போது குஜராத்திற்கு கொண்டு சென்றுள்ள 'நானோ' கார் தயாரிப்பு திட்டமும் இந்த பின்னணியில் உருவானதுதான். மலிவு விலையில் கார் தயாரித்துக் கொடுத்தால் இந்த பின்னணியில் அது நன்கு விற்கும். அதனால் தனக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்ற லாபநோக்கத்தின் அடிப்படையிலேயே இது உருவாக்கப்பட்டது. இந்த இலாப நோக்கை டாடா-வின் கனவுத் திட்டம் - இவ்வாறு அவர் கார் தயாரிக்கத் திட்டமிட்டது மக்களுக்கு ஆற்றக்கூடிய ஒரு பெரும் சேவை என்பது போன்ற- இலாபத்திற்காக தொழில் தொடங்கும் ஒரு முதலாளியை-புனிதர் ஆக்கும் வேலையை நமது ஊடகங்கள் செய்து வருகின்றன.

அவருக்கு தங்களது வாழ்வாதாரமான நிலத்தை அரசு நிர்ணயித்த - விவசாயிகளால் ஏற்றுக் கொள்ள முடியாத - விலைக்கு விற்பதை எதிர்த்து நடத்தப்பட்ட பாராட்டத்தகுந்த போராட்டத்தின் விளைவாக கார் தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவ்வாறு அவர் அவரது 'கண்ணின் கருமணி' போன்ற இந்த நானோ கார் தொழிற்சாலை திட்டத்தை மாற்ற நேர்ந்ததற்கான முழுப் பொறுப்பையும் நஷ்டஈட்டு தொகையையும் விவசாயிகளது 400 ஏக்கர் நிலம் திருப்பிதரப்பட வேண்டும் என்ற முழுக்கமுழுக்க ஜனநாயகபூர்வ போராட்டத்தை நடத்திய கட்சிகளே ஏற்க வேண்டுமென்று உள்ளம் உருக நமது ஊடகப் பிரமுகர்கள் எடுத்துக்கூறவும் எழுதவும் செய்கின்றனர். எத்தனை அருமையான எஜமான விசுவாசம்!

யதார்த்தமாக பார்த்தால் டாடாவிற்கு இருக்கும் ஏராளமான தொழிற்சாலைகளில் நானோ கார் தொழிற்சாலை மற்றொரு தொழிற்சாலை. ஆனால் அத்தொழிற்சாலைக்காக கட்டாயமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சொந்தக்காரர்களான சிறு விவசாயிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரமே அவர்களது நிலங்கள் தான். இத்தகைய தீரம் மிக்க போராட்டத்தை நடத்தியிராவிட்டால் அவர்கள் தரப்பில் இருந்த நியாயமும் நிலம் கையகப்படுத்தப்படுவதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும் வெளியே வராமலேயே போயிருக்கும்.

விவசாயிகளின் பாதிப்பு பல மடங்கு

டாடா-விற்கு நேர்ந்த இதை ஒரு பாதிப்பு என்றால் இதனைப் போல பல லட்சம் மடங்காக விவசாயிகளின் பாதிப்பு இருக்கும். ஆனால் இந்த சமூக அமைப்பில் ஏழையாக இருப்பவன் என்றும் கஷ்டப்படவே பிறந்தவன் அவனது சிரமம் ஒரு எறும்பு கடித்தது போன்ற சிறு உணர்வைக் கூட முதலாளித்துவ ஊடகங்களில் ஏற்படுத்தாது. மாறாக டாடா-வினுடைய இந்த பாதிப்பு தொடர்ச்சியாக ஒரு நாள் முழுவதும் மின்னணு ஊடகங்கள் மூலமாக ஒலிக்கப்பட்டது. டாடா-வின் பேட்டி அவர்மேல் மிகப்பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தத்தக்க விதத்தில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகள் மூலம் உள்ளம் உருக வெளிப்படுத்தப்பட்டது.

இன்று தோன்றியுள்ள நுகர்வோர் கலாச்சாரமும் மத்தியதர வர்க்கத்தை அது பீடித்துள்ள விதமும் இதனால் பொது போக்குவரத்து முறையை பராமரிக்கும் கடமையில் இருந்து கையைக் கழுவுவதற்கு மாநில அரசாங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பும் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இதுபோல் தங்களது வாழ்நிலையின் மேம்பாட்டை பறைசாற்றுவதற்காக என்ற ரீதியில் கார்களை வாங்குவதும் அது ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலும் அதன் விளைவாக உண்டாகும் பொருள் விரையமும் சுற்றுப்புற சூழல் பாதிப்பும் விமர்சனப் பொருளாக்கப்பட வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த அமைப்பில் மத்தியதர வர்க்க ஊழியர்கள் உட்பட அனைவரும் கூலி அடிமைகளே என்ற அவலம் உருவாக்கும் போராட்ட மனநிலையை மயக்க மருந்து கொடுத்து மாற்றுவது போன்றதொரு சூழலை சொந்தமாகக் கார் வாங்குவதும்- வைத்திருப்பதும் எவ்வாறு உருவாக்குகிறது என்பதும், இதனால் முதலாளித்துவக் கலாச்சாரமும் பெருமளவில் நடுத்தரமக்கள் மத்தியில் வேரூன்றி அவர்கள் உழைக்கும் மக்களோடு தொடர்பேதும் இல்லாதவர்களாக ஆவதற்கு எவ்வாறு உதவுகிறது என்பதும் இடதுசாரி சிந்தனை உள்ளவர்களால் மக்களிடையே மிகத்தெளிவாக அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

இல்லை என்றால் அது இன்று புரட்சிகர முற்போக்கு இயக்கங்களின் சமூக மாற்றக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் சென்றடைவதற்கு மிகப் பெரும் குறுக்கீடுகளை உருவாக்கும். இன்று உலகம் முழுவதும் முழுமையாக முதலாளித்துவ உற்பத்தி முறைக்குக் கீழ் உலகமயத்தின் மூலமாக வந்துள்ள சூழல் அதற்குப் பேருதவி செய்யும்.

 

வாசகர் கருத்துக்கள்
kannan
2009-03-12 03:12:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

sir this article is very super

Pin It