பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கு பெரியார் முன்வைத்த கருத்துகள்:

  • காது குத்துவது பெண்களை அடிமைப்படுத்துவதற்குத்தான். உடலில் மூக்கு, காதுகளில் ஓட்டை போட்டு நகைகளை மாட்டி விட்டால் ஆண்களின் வன்முறையை எதிர்த்து திருப்பி அடித்து விடக்கூடாது என்பதற்குத் தான் இந்தச் சடங்குகளை உருவாக்கினார்கள்.
  • பெண்கள் முடியை கத்தரித்துக் கொண்டு கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்; பெண்களின் கூந்தல் அழகை புலவர்கள் வர்ணிப்பார்கள். செயற்கை மணமா? இயற்கை மணமா? என்று ஆராய்ச்சி செய்கிறார்கள் கணவன் மனைவியைத் தாக்குவதற்கு கூந்தலைப் பிடித்து தாக்குகிறான். நீண்ட முடி பெண் சுதந்திரத்துக்கு தடை!
  • நகை அணியக் கூடாது; பெண்கள் அலங்கார பொம்மைகளாக மாற்றப்படுகிறார்கள். நகை அணிவதால் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. உலக நாடுகளில் பெண்கள் நகை அணிவதில்லை. அளவுக்கு மீறி நகை அணிந்தால் தண்டனை அல்லது வரி விதிக்க வேண்டும்; நகை அணிவதில் அழகு இல்லை!
  • நன்கு படித்துவிட்டு திருமணத்துக்குப் பிறகு பெண்கள் வீட்டு வேலை செய்வதை அனுமதிக்கக் கூடாது. ஒரு பெண்ணைப் படிக்க வைத்து விட்டு ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கவும், குழந்தை வளர்க்கவும், நகை அணியும் அலங்காரங்களுடன் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் செய்தால் படிக்க வைத்த பணம் வீண் என்பதோடு, அது தேசிய குற்றமும் ஆகும்.
  • அழகு உணர்வு வேண்டாம் என்று கூறவில்லை; அது எளிமையாக இருக்க வேண்டும்.
  • பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்று அழைக்காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். ஆண்கள் பெயரை சூட்ட வேண்டும். உடைகளையும் ஆண்களைப் போலவே உடுத்த வேண்டும். உலகத்தில் ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்காத மாதிரி உடை அணிய வேண்டும்.
  • பெண்களைக் காவல்துறையிலும், இராணுவத்திலும் சேர்க்க வேண்டும். பெண்கள் படிப்பதையே ஆச்சரியமாக பார்த்தார்கள். சைக்கிள், ஓட்டுவதை வேடிக்கையாகப் பார்த்ததார்கள்; பிறகு பழகிவிட்டது! அதேபோல் பெண்கள் கையில் துப்பாக்கியை கொடுப்பதையும் மக்கள் காலப்போக்கில் ஏற்றுக் கொள்வார்கள்.
  • ஆண்கள் பெண்கள் உடையில் பாகுபாடு கூடாது; பெண்கள்- ஆண்கள் உடையை அணிய வேண்டும். பெண்களுக்கே உருவாக்கப்பட்ட உடைகள் அவர்கள் சுதந்திரத்தைப் பறிப்பதற்காகவே உள்ளன.
  • பெண்கள் தங்கள் வாழ்க்கை முறையாக நடத்தக் கூடிய அளவுக்கு ஊதியம் பெறும் வகையில் படிக்க வைக்க வேண்டும்.
  • பெண்களும் ஆண்களும் ஒன்றாக படிக்க வேண்டும். ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் பெண்களை ஆசிரியர்களாக்க வேண்டும்.
  • பெண்களுக்கு கும்மியும், கோலாட்டமும், தையலும் தான் கற்பிக்க வேண்டும் என்ற நிலையை மாற்ற வேண்டும்.
  • தங்கள் கணவர்களைப் பெண்களே தேர்வு செய்ய வேண்டும்; அதைப் பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.
  • பெற்றோர்கள் பார்த்து செய்யும் திருமணம் ஒழிய வேண்டும்.
  • தாலி கட்டுவதை நிறுத்த வேண்டும்; பெண்களை ‘முண்டச்சி’ ஆக்குவதற்கும், சகுனத் தடையாக்கவும், ஆண்கள் பெண்களை மிரட்டவும், அடிமைத்தனத்தை நிலை நிறுத்தவும் மட்டுமே தாலி பயன்படுகிறது.
  • நகை-தாலி-சடங்கு இல்லாமல் நடக்கக்கூடிய திருமணம் மட்டுமே சுயமரியாதைத் திருமணம் ஆகிவிடாது! பெண்களுக்கு சொத்தில் ஒரு பங்கு தர வேண்டும்!
  • ஆணும் பெண்ணும் சேர்ந்து பெற்றெடுப்பது தான் பிள்ளை. ஆனால் பிள்ளையை தகப்பன் அடையாளத்தோடு தான் கூறுகிறார்கள். தந்தை என்பது ஒரு உத்தேசம்தான். 10-மாதம் சுமந்து பெற்றெடுக்கும் தாய் அடையாளமே உறுதியானது.
  • குழந்தை பெறுவதை ஒன்று இரண்டோடு கட்டுப்படுத்த வேண்டும். குழந்தைகள் இல்லாமல் இருப்பது சுதந்திரமான வாழ்க்கை.
  • மனிதன் ஒழுக்கம் கெடுவதற்கே காரணம் இந்த பிள்ளை குட்டிகளைப் பெற்றுக் கொள்வதுதான்.
  • பெண்கள் விடுதலைக்காக பொதுவெளிக்கு வருகிறவர்கள் இந்து மத சாஸ்திரத்தையும், புராணங்களையும் விலக்கி வைத்து விட்டுத்தான் வரவேண்டும்.
  • பெண்களை அடிமைப்படுத்தும் கொடுமை ஒழியவில்லையானால் திருமணமே கட்டாயம் குற்றமாக்கப்பட வேண்டும்.
  • இப்போது பொது ஒழுக்கமும் பொதுக் கட்டுப்பாடும் எப்படி இருக்கிறது: ‘நான் திருடுவது குற்றமல்ல; நீ திருடுவது தான் குற்றம்; நான் பொய் சொல்வது குற்றமல்ல; நீ பொய் சொல்வது தான் குற்றம்” என்ற பார்வையில் இருக்கிறது. இது ஒருபோதும் பொது வாழ்க்கைக்கு சமத்துவத்துக்கும் சுதந்திரத்திற்கும் சிறிதும் பயன்படாது.

(பூந்தமல்லியில் நடந்த வான்மதி- கந்தசாமி இணையேற்பு விழாவில் கழகப் பொதுசெயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து..)

கட்சி மாறினால் பதவி, பணம்; ஜாதி மாறினால் மரணமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாத்தான்குடி கிராமத்தில் ஜாதி மாறி காதலித்த இளைஞர்களை ஜாதிவெறி உயிர்ப்பலி வாங்கியிருக்கிறது. பட்டியல் இனப் பிரிவைச் சேர்ந்த 19 வயது இளைஞரும் பிளஸ் டூ வகுப்பை முடித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 17 வயது பெண்ணும் காதலித்துள்ளனர்.

பெண்ணின் பெற்றோர்கள் ஜாதி வெறியுடன் எதிர்ப்பு தெரிவித்து பட்டியல் இனப்பிரிவு இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பொறையார் காவல் நிலையத்தில் திங்கட்கிழமை இளைஞர் புகார் செய்திருக்கிறார்.செவ்வாய்க்கிழமை விடியற்காலை தங்களது மகளைக் காணவில்லை என்றும் பட்டியல் சமூகத்தின் இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பெண்ணின் பெற்றோர்கள் புகார் செய்துள்ளனர். புகார் பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் காதலர் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பெண்ணின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜாதி மாறி திருமணம் செய்ய விரும்பினால் அவர்கள் உயிருடனே வாழ முடியாது என்ற கொடூரமான சமூக அமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புரையோடி நிற்கும் இந்த ஜாதி அவலங்களைப் பேசுவதற்கு எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை. கட்சி மாறினால் பதவியும் பணமும் கிடைக்கும். ஜாதி மாறி காதலித்து வாழ விரும்பினால் மரணம் பரிசாக கிடைக்கும். இதுதான் இங்கே சனாதன தர்மம்!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.