தமிழ்நாட்டுத் தலைவரும் தமிழர்களின் நண்பருமான உத்தம பாளையம் முதலியார் என்கின்ற மதுரை ஸ்ரீமான் எம்.டி. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் வியாழக் கிழமை இரவு காலஞ்சென்றார் என நண்பர் திரு. பி.டி. ராஜன் அவர்களின் தந்தியால் தெரிந்து திடுக்கிட்டுப் போனோம். தலைவர் முதலியார் அவர்களுக்கு ஏற்பட்ட நீரழிவு வியாதியானது எவ்வளவு சிகிச்சை செய்தும் குணப்படாமல் அவரது உயிருக்கு ‘கூற்றுவ’னாகவே முடிந்துவிட்டது.
திருவாளர் முதலியார் அவர்கள் தமிழ்நாட்டின் பழங்குடி மக்களுள் முதன்மையானவர். தென்னாட்டில் நாயக்கர் அரசாங்கம் ஏற்பட்டிருந்த காலத்தில் அவருக்கு பிரதம மந்திரிகளில் ஒருவராகிய திரு. அரியநாயக முதலியாரின் சந்ததியில் வந்தவர். மதுரை ஜில்லாவிலுள்ள பெரிய மிராசுதார்களில் முக்கியமானவர். பாரம்பரியமாகவே செல்வமும் செல்வாக்கும் பெற்ற குடும்பத்தவர். அரசாங்கத்தாராலும் சுதேச மன்னர்களாலும் புராதன ஜமீன்களாலும் மிகுதியும் போற்றப்பட்டவர்.
நமது மன்னராகிய ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியவர்களின் முடிசூட்டு வைபவத்திற்கு அழைக்கப்பட்டு இங்கிலாந்து சென்றவர். இவையாவும் அவரது மேன்மையையும் அந்தஸ்தையும் காட்டக் கூடியதானாலும் நாம் அவரைப் போற்றி துதிக்கும் தன்மை என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள மற்ற செல்வவான்களைப் போல் தமது வாழ்வுக்கும் திருப்திக்கும் தமது செல்வத்தை உபயோகிப்பதும், தமது சுயநலத்திற்காக செல்வம் சம்பாதிக்க வாழ்வு நடத்துவதும் போன்ற செல்வவான்களைப் போலல்லாமல், இவர் தமிழ் மக்களின் மேன்மைக்கும், சுயமரியாதைக்குமாக பெரிதும் தமது வாழ்வையும் செல்வத்தையும் உபயோகப்படுத்தி வந்தவர்.
பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஆரம்பித்த காலம் முதற் கொண்டு அவ்வியக்கத்திற்கு ஸ்தம்பமாய் இருந்து வந்தவர். அன்றியும் எந்தக் காரணம் கொண்டும் அவ்வியக்க சம்மந்தமாய் மற்றவர்களைப் போல் அடிக்கடி அபிப்பிராய மாறுதல் அடையாமல் ஒரே நிலையில் இருந்து அவ்வியக்கத்திற்கு தொண்டு செய்து வந்தவர். தென் இந்திய நல உரிமைச் சங்கத்திற்கு உபதலைவர்.
சென்ற சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் தோல்வி அடைந்த காரணத்தால் இயக்கமே மறைந்து விட்டது என்று நினைக்கும்படியாக ஏற்பட்ட நெருக்கடியான காலத்தில் மதுரையில் பெரிய மகாநாடு கூட்டுவித்து இயக்கத்திற்கே புத்துயிரளித்த பெரியார். நமது மக்களுக்காக இன்னும் எவ்வளவோ அரிய பெரிய காரியங்கள் செய்ய வேண்டும் என்றும் இவ்வியக்கத்தினரிடம் பிணங்கி பிரிந்து நிற்கும் மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்றும் பெரிதும் கவலையுடன் பல பெருந் திட்டங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தவர்.
சுருங்கக் கூறின் பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு சென்னை தவிர வெளியிடங்களில் யாராவது உண்மையான தலைவர்கள் இருப்பார்களானால் அவர்களுள் நமது முதலியாரே முதன்மையானவர். இப்பேர்ப்பட்ட ஓர் பெரியார் இந்நிலையில் நம்மைவிட்டுப் பிரிந்ததானது நமது தவறு காலம் என்றே சொல்ல வேண்டும். அவர்களது அருமை குமாரருக்கும் அவரது சகோதரருக்கும் மற்றொரு சகோதரரின் குமாரரான திரு. பி.டி. ராஜன் அவர்களுக்கும் மற்றும் அக்குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். எல்லாம் வல்ல சக்தியானது அவர்கட்கு ஆறுதல் அளிப்பதாக.
(குடி அரசு - தலையங்கம் - 25.03.1928)