தமிழில் நூற்றுக்கணக்கான சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. ஒவ்வொரு இதழும் கவிதை, கதை, அரசியல் என சமூகம் சார்ந்த படைப்புகளைத் தாங்கி வருகின்றது. ஆனால் பெரும்பாலான இதழ்கள் போதுமான பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் ஆரம்பித்த சில வாரங்களிலோ, சில மாதங்களிலோ, சில வருடங்களிலோ நின்று விடுகின்றன. சமுதாய மாற்றம் விரும்பும் அனைவரும் சிற்றிதழ்களை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கில் வெளிவரும் பகுதி இது.

நாளை விடியும்

தமிழ், தமிழன் என்கிற உயிர்ச் சொற்களை வைத்துக் கொண்டு தங்கள் பிழைப்பைச் சுகமாக நடித்துக் கொண்டிருப்பதும், அன்னிய சக்திகளுக்கு கதவைத் திறந்து விட்டு, எதிர்ப்பது போல பாசாங்கு காட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. இப்போலித்தனங்களுக்கு இடையில் கருப்பு பண அக்கறையிலும் சில பாசாங்கு குரல்கள் எழுகின்றன.

இது பற்றியெல்லாம் கவலைப்படுவதற்கோ, மழுங்கிய சொரணையை கூர்படுத்துவதற்கோ, இங்கே ஆட்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். இளைஞர்களுக்கோ, இங்கே வேறு வேலைகள் இருக்கின்றன. யாரோ சம்பாதிக்க, காவடி தூக்கவும், உருவப்படங்களுக்கு பால் ஊற்றி வழிபடவுமே நேரம் போதாத போது, தமிழைக் காப்பாற்ற அழைக்க முடியாது.

தொடர்ந்து தமிழர்களுக்காகவும், தமிழருக்காகவும் உண்மையான கவனத்தோடு, குரல் கொடுத்து வருகிற இதழ் "நாளை விடியும்' பெயரிலேயே நம்பிக்கையை வெளிப்பபடுத்துகிற வெளிச்சம்.

மூட நம்பிக்கைகளை ஒழிக்கப் புறப்பட்டவர்கள் காலம் செய்த கோலத்தால் அதே மூட நம்பிக்கைகளை விதைக்கிறவர்களின் புகழ்பாட நேர்ந்த அவலத்தில் துவங்கி, தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளான முல்லைப் பெரியாறு பிரச்சினை, நூல் விமர்சனம், இன உணர்வுக்கான கவிதைகள் என்று அனைத்துத் தளத்திலும் செயல்பட்டு வருகிற ஒரு இலட்சிய இதழ்.

மக்களின் மீது அனாவசியமான மன உளைச்சல்களையோ, பொய் நம்பிக்கைகளையோ திணிக்காமல், காலம் எப்படி போராட்டச் சூழலாய் பரிணாமமாகிறது என்பதையும், நம்மைச் சுற்றியுள்ள நச்சுச் செடிகளை அறிமுகப்படுத்தும் விதமாகவும், வந்து கொண்டிருக்கும் "நாளைவிடியும்' இதழ் அனைவரின் கரங்களிலும் இருக்க வேண்டிய இதழ்.

ஆசிரியர்: பி.இரெ.அரசெழிலன்,
இதழ்க்கட்டணம்: ரூ.40/
முகவரி: 7. ஆ.தமிழ்ச்சுடர் இல்லம்,
எறும்பீசுவரர் நகர், மலைக்கோயில் தெற்கு,
திருவெறும்பூர். திருச்சி 620013.
பேசி: 94433 80139


சமுதாய மறுமலர்ச்சி

சிற்றிதழ்களை சமூக அக்கறையும், வணிக இதழ்களின் போக்கில் கோபமும் கொண்டு துவங்கப்படுகிற இதழ்களாகவும் பெரியளவில் பத்திரிகையை துவங்குகிற எண்ணம் ஈடேறாமல் குறைந்த பக்கங்களில் ஒரு வணிக இதழை உருவாக்க சிறு வியாபாரத்தன்மையாகவும் வகைப்படுத்த முடியும்.

சமூக நலனும், சமுதாயத்தின் தறிகெட்ட போக்கை சுட்டிக் காட்டுகிற பொறுப்பும் மிகுந்திருக்கும் இதழ்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பதிவு பெற்ற இதழா? பக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு? எத்தனை காலம் தாக்குப் பிடிக்கும்? என்கிற வினாக்களை புறம் தள்ளிவிட்டு அதன் நோக்கத்தை மட்டும் கவனித்தால் அந்த இதழின் வாழ்நாளும் கணக்கிடப்பட்டு விடும்.

கலை, இலக்கிய, இலட்சிய, பகுத்தறிவு, தமிழ் திங்கள் இதழாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதுடன் "இக்கொள்கை தோற்கின் எக்கொள்கை வெல்லும்?' என்ற முகத்துடன் கொங்கு மண்டலத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிற இதழ் "சமுதாய மறுமலர்ச்சி'.

இதழின் உள்ளடக்கத்தில் தமிழ், தமிழர் மாண்புகளை அடையாளப்படுத்தும் அக்கறையே அதிகம் வெளிப்பட்டுள்ளது. "சமூக நீதி' தொடர், பார்ப்பனியத்தின் போலித்தனங்களைத் தோலுரிக்கிறது.

"எல்லோரும் எழுத்தாளராகவும்..' தொடர் புதிய படைப்பாளிகளை வழிப்படுத்தும். பேரறிஞர் அண்ணாவின் "சந்திர மோகன்' நாடகப் பகுதியும் உண்டு.

கொள்கைகளைப் பிரகடனப்படுத்துகிறபோது கூட கவிதை அழகியலை பின்பற்ற முடியும் என்பதை இளம் படைப்பாளிகளுக்குச் சொல்லும் பொறுப்பும் இதழுக்கு உண்டு.

இதழ்: சமுதாய மறுமலர்ச்சி (மாத இதழ்)
ஆசிரியர்: தொ.சி.கலைமணி.
ஆண்டுக் கட்டணம் ரூ.85/
முகவரி:
சமுதாய மறுமலர்ச்சி,
225, முதல் தெரு, காந்திபுரம், கோவை641012.

நவீன அகம்புறம்

அண்மைக் காலத்திய கவிதைகளின் வரவில் தரமான கவிதைகளை தந்து கொண்டிருப்பவர் பொ.செந்திலரசு. வழக்குரைஞராக பணியாற்றுகிறவர். இவரை ஆசிரியராகக் கொண்டு சேலத்திலிருந்து வருகிற காலாண்டிதழ் ‘நவீன அகம்புறம்'.

பதினாறு பக்கங்களெனினும் நேர்த்தியான வடிவமைப்பில் மனதைக் கவர்கிறது. தலையங்கத்தில் ஆரோக்கியமான விவாதத்தை ஆதங்கத்தோடும், கோபத்தோடும் பதிவு செய்திருக்கிறார். சமூக அக்கறையும், இலக்கிய தாகமும் கொண்டு உலா வருகிற சிற்றிதழ்கள் ‘கயர்லாஞ்சி', ‘நொய்டா, சம்ஜாதா' குண்டு வெடிப்பு சம்பவங்களுக்காக வருத்தப்பட்ட அளவு பிப்.16ல் வெளியான கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் மூவர் உயிரோடு கொளுத்தப்பட்ட வழக்குத் தீர்ப்பு குறித்து எந்தப் பதிவும் செய்யப்படவில்லை. என்பதை குற்றச்சாட்டாய் முன் வைக்கிறார்.

'நிகழ்காலம்' குறித்த கட்டுரையும் உண்டு. இதுவரை பொன்.குமார், இதயவேந்தன், அன்பாதவன், க.அம்சப்ரியா ஆகியோரின் நேர் காணல்களை வெளியிட்டுள்ளது. இது இதழுக்கு மகுடம்.

தரமான கவிதைகள், சிந்தனையோட்ட மைய ஓவியங்கள், நூல் விமர்சனம், குறும்பட விமர்சனம்,சிறு கதையென்று ஆழ்தளத்தில் செயல்படுகிறது. குறைந்த பக்கங்களில் வெளியாகிற சிற்றிதழ், சிறுகதைகள் எவ்வளவு தூரம் அதன் தரத்தின் உச்சத்தை எட்டுகிறது என்பது யோசிக்க வேண்டியதாக உள்ளது.

தரமான சிற்றிதழ் ஒன்றினை பாசாங்கில்லாமல் வெளிக்கொணர தீவிர செயல்பாட்டுணர்வு மிக்கவராக மிளிரும் பொ.செந்திலரசுவின் வளர்ப்பில் அகம்புறம் மேலும் தன்னை செதுக்கிக் கொள்ளும்.

இதழ்: அகம்புறம் (காலாண்டிதழ்)
தனி இதழ் ரூ.4 ஆண்டுக் கட்டணம் ரூ.15/
முகவரி:
நவீன அகம்புறம்
5/311, இராசிபுரம் முதன்மைச் சாலை
சே, பாப்பாரப்பட்டி (அஞ்சல்)
சேலம்-637501 தொலைபேசி: 9942576296.

மெய்யறிவு மாத இதழ்

சிற்றிதழ்களின் அட்டைப் படங்களில் தனித்தன்மையோடு சுருக்கென்று செய்தி சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ள சீரிய இதழ் மெய்யறிவு. முதல் பக்கத்திலேயே தனக்கான கடமையை துவங்கி இறுதிப்பக்கம் வரை தொடர்கிறது.

"அறிவை முதன்மைப் படுத்துவோம்! மனிதர்களை ஒன்றிணைப்போம்!' இது தான் இதழின் கொள்கை. கூர்மையான தலையங்கம் இதழின் சிறப்பு. பெட்டிச் செய்திகளில் பகுத்தறிவுக்கான திறவுகோல்கள் கொட்டிக் கிடக்கின்றன. பொருத்தமான திறவுகோல்களைத் தேர்வு செய்து கொள்ள வாசகர்களுக்கு நல்வாய்ப்பு. "கடவுள் எப்படியிருப்பார்? கட்டுரை புதுமைச் சிந்தனைக்கு வெளிச்சம்'.

"கேளுங்கள் கொடுக்கப்படும்' பகுதியில் காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் மூட நம்பிக்கை கருத்துகளை மாற்றும் வகையில் பதில்கள் அமைந்துள்ளன.

அரசு அதிகாரத்தில் இருப்பவர்களின் மூட நம்பிக்கையையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. ராசிபலன்களாலும், மாதாந்திர பலன்களாலும் மக்களை மயக்கத்திலாழ்த்தி கல்லா கட்டும் வணிக பத்திரிகைகளுக்கிடையில் மெய்யறிவு போன்ற இதழ்கள் மிக அவசியம்.

மெய்யறிவு கருத்துப் பரிமாற்றத்திற்கான பாலம். இதில் மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தில் பங்கேற்க விரும்புகிறவர் எவரும் மெய்யறிவில் உறுப்பினர் ஆகலாம்!

இதழ்: மெய்யறிவு மாத இதழ்
ஆசிரியர்: கவிவர்.குடந்தையான்
இரண்டாண்டு சந்தா ரூ.200/
முகவரி:
எண் 3/433டி குமரன் நகர், 11வது தெரு,
மடிப்பாக்கம், சென்னை-6000 091.


Pin It