சென்னை அய்.அய்.டி.யில் மத்திய அமைச்சர்கள் நித்தின் கட்காரி, பொன். இராதா கிருஷ்ணன் பங்கேற்ற விழாவில், ‘மகாகணபதி’ என்ற சமஸ்கிருதப் பாடல் இறை வாழ்த்துப் பாடலாக பாடப்பட் டுள்ளது. வழக்கமாக அரசு விழாவில் பாட வேண்டிய தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டுள்ளது. சமஸ் கிருதத்தைவிட மூத்த மொழி தமிழ் என்று அண்மையில் மோடி அளித்த ஒரு பேட்டிக்காக மோடிக்கு பாராட்டு மாலை களைத் தூக்கிக் கொண்டு ஒரு அணியே நீண்ட வரிசையில் நின்றது. இப்போது மோடி ஆட்சியின் உண்மையான முகம் ஒரு வாரத்துக் குள்ளேயே கிழிந்து தொங்குகிறது.

மாணவர்கள் தாமாகவே முன் வந்து சமஸ்கிருதப் பாடல்களைப் பாடினார்கள் என்று அய்.அய்.டி. இயக்குனரான பாஸ்கர் இராமமூர்த்தி விளக்கமளித்திருக் கிறார். மாணவர்கள் தாமாக முன் வந்து தான் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தைத் தொடங் கினார்கள். அதை மட்டும் ‘இராம மூர்த்திகள்’ தடை செய்தது ஏன்?

மாணவர்கள் தாமாகவே முன் வந்து அய்.அய்.டி. வளாகத்தில் மாட்டுக்கறி விருந்து நடத்தினால் இந்த இராமமூர்த்திகள் அனுமதித்து விடுவார்களா?

அய்.அய்.டி.யில் சமஸ் கிருதத்தை ஒரு விருப்பப் பாடமாக்க வேண்டும் என்பது மோடி ஆட்சியின் கொள்கை. அய்.அய்.டி.யில் கற்பிக்கப்படும் அறிவியல் தொழில்நுட்பப் பாடங்களை சரியாகப் புரிந்து கொள்வதற்கு சமஸ்கிருதம் கற்பது பெரும் உதவியாக இருக்கும் என்று மத்திய அமைச்சரே கூறியிருந்தார். அந்த வழியில் தான் ‘சமஸ்கிருதம்’ இப்போது பாடப்பட்டிருக்கிறது.

“கணபதி” தாமாகவே முன் வந்து, “பாஸ்கர், பாஸ்கர், சமஸ் கிருதத்திலேயே என்னை வாழ்த்திப் பாடு; உனக்கு பதவி நீட்டிப்புக்கு நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று என்னிடம கேட்டார். அது கணபதியின் நேயர் விருப்பம்’ என்று பாஸ்கர் இராமமூர்த்திகள் விளக்கங்களைக் கூறாமல், காதில் பூ சுற்றும் வேலைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Pin It