உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அண்மையில் (ஜூன் 23-27) மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. வெகுமக்களுக்கும் ஆய்வாளர்களுக்கான நிகழ்வுகள் தனித்தனியே ஏற்பாடு செய்யப்பட்டன. ஆய்வரங்குகள் அமைப்பதிலிருந்து ஆய்வாளர் கட்டுரை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் தெளிவாக செய்யப்பட்டிருந்தன. மாலையில் வெகுமக்களுக்கும் ஆய்வாளர்களுக்குமேற்ப தனித்தனியே கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. இவ்வாறு ஒவ்வொரு நிகழ்விலும் சிறு பிசகு கூட ஏற்பட்டுவிடக் கூடாதென்பதில் நிர்வாகம் பெருமுயற்சி எடுத்துக் கொண்டது. அதேசமயம் ஆய்வரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தரம் குறித்த விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இது ஒருபுறமிருக்க, இம்மாநாட்டை ஒட்டி பெரும் பாலான பதிப்பகங்களும் பத்திரிகை நிறுவனங்களும் நூல்களையும் சிறப்பு மலரையும் வெளியிட்டுள்ளன. அவற்றுள் தீக்கதிர், தினமணி, விடுதலை, நக்கீரன் ஆகிய பத்திரிகைகள் வெளியிட்ட சிறப்பு மலர்களைக் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். மேலும் செம்மொழி மாநாடு நடத்தப்படுவது குறித்த கடும் விமர்சனங்களை முன்வைத்த அறிஞர்கள் இணைந்து தமிழ்நேயம் (கோவை ஞானி) வெளியீடாக மலரொன்றைத் தயாரித்துள்ளனர். அம்மலர் தமிழ்-தமிழியக்கம்-தமிழ் நாகரிகம்-தமிழ்க் கல்வி, சங்க இலக்கியம் - தற்கால இலக்கியம் - புலம்பெயர் இலக்கியம், கவிதைகள், நூல் அரங்கு, நினைவுக் குறிப்புகள் என ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளன. முதல் கட்டுரையாக உலகத் தமிழ் அமைப்புக் குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்ட விதம், எட்டு தமிழ் மாநாடுகள் நடந்த விதம் முதலானவை குறித்து விரிவாக எழுதியுள்ளார். அதில் தமிழகம் தவிர்த்த பிறநாடுகளில் நடந்த உலகத் தமிழ் மாநாடுகள் ஆராய்ச்சி மாநாடுகளாக அமைந்தன என்றும் தமிழகத்தில் நடைபெற்ற மூன்று மாநாடுகளும் அரசியல் ஆரவார மாநாடுகளாக அமைந்துவிட்டன என்றும் குறிப்பிடுகிறார். மேலும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்கள் அறிவியல் மற்றும் ஆட்சியாளர்களின் தலையீடின்றி செயல்படவேண்டுவதன் அவசியம் குறித்தும் தமிழ் நிறுவனங்கள் இனி செய்யவேண்டிய பணிகள் குறித்தும் தெளிவாக உணர்த்தியுள்ளார். ம.இலெ. தங்கப்பாவின் கட்டுரையும் இதனையட்டியே அமைந்துள்ளது.

மு.அருணாசலம் இசை குறித்து எழுதிய இரு பெருநூல்கள் குறித்த மதிப்புரையாகவும் அறிமுகமாகவும் தமிழண்ணலது கட்டுரை அமைந்துள்ளது. ‘கருநாடக சங்கீதம்’ என்ற ஒன்று இல்லை. அந்தப் பெயராக சொல்வதெல்லாம் தமிழிசைதான். அவை தமிழிசையைத் தெலுங்கு மொழியில் பாடிய கீர்த்தனங்கள் என்னும் மு. அருணாசலரின் கருத்தை பல்வேறு சான்றுகளுடன் தெளிவாகவும் சுருக்கமாகவும் தமிழண்ணல் விளக்கியுள்ளார். கருநாடக இசை வளர்த்த மும்மூர்த்திகள் மட்டுமே நமக்கு சொல்லப்பட்டு வந்தனர். ஆனால் தமிழிசை வளர்த்த, பாடிய ஆதிமும்மூர்த்திகள் குறித்தும் இசைவேளாளர்களிடம் இருந்து பறித்துக்கொண்ட இசையைக் ‘கருநாடக சங்கீதமாக’ (ஏ) மாற்றியது குறித்தும் இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் பண்டைய வரலாற்று நூலான ‘மகாவம்சம்’ குறித்த அறிமுகத்தையும் ஆய்வையும் எஸ்.பொ. நிகழ்த்தியுள்ளார். மகாவம்சத்தை சிங்களருடைய நூல் என ஒதுக்கிவிடாமல் தமிழனத்தின் தொன்மையை நிறுவுவதற்கான வலுவான ஆதாரங்கள் கொண்ட நூல் எனக் கருதியாவது பயிலவேண்டுமெனக் கூறுகிறார். மேலும் ‘பௌத்த சிங்களாய’ கருத்தாக்கத்தையும் சிங்களர் வரலாற்றையும் பதிவு செய்தனர். ஆனால் தமிழர்களோ குறிப்பிட்டச் சாதிகளின் மேன்மையைப் பேசும் ‘யாழ்ப்பாண வைபவமாலை’ முதலானவற்றையே எழுதினர் எனத் தமிழரின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் குறிப்பிடுகிறார். தமிழ்மொழியில் உள்ள வளங்களை ஆவணப்படுத்தாமல் நடைமுறையில் பயன்படுத்தாமல் மொழி மீது உயர்வுநவிற்சி மனப்பான்மை கொண்டுள்ள நம்மைக் குறித்து ‘நாய் பெற்ற தெங்கம்பழம்’ என நாஞ்சில் நாடன் கட்டுரை எழுதியுள்ளார். பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் தமிழர் பிரச்சனையில் எவ்வித சுரணையும் அற்று ஒதுங்கியிருத்தல் குறித்த வரலாற்றுப் பிரக்ஞையுடைய விமர்சனமாக, சூரிய தீபனின் ‘தமிழ்த் தேசியத்தினூடாகப் படைப்பாளிகள் பயணம்’ எனும் கட்டுரை அமைந்துள்ளது. ஈழத்தில் நடந்தேறிய இனப்படுகொலை மீதான சில வெளிப்பாடுகள் தவிர, பெரும்பாலானவர் மௌனம் காத்தனர். அதேபொழுதில் இலக்கிய விவகாரம் என்று வருமெனில் தெருவில் இறங்கிச் சண்டையிடுகிறது போல் அரங்கேற்றுபவர்கள் தாம் என்பது இவருடைய ஆதங்கம். கல்வியை ‘மறந்து’ ஆங்கிலக் கல்வியைத் தேடும் மனநிலைமையில் மாற்றம் கொண்டு வரவேண்டுவதன் அவசியத்தை ந. மார்க்கண்டன் கூறுகிறார்.

‘தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும்’ எனும் ப. மருதநாயகத்தின் கட்டுரை ஆய்வு முறைமை யியலிலும் எடுத்துரைப்பியலிலும் தனித்துச் சுட்டப்பட வேண்டியது. தொல்காப்பிய உரைகள், தொல்காப்பிய ஆய்வுகள், மேலைநாட்டுக் கோட்பாடுகள், அவற்றை மேலைநாட்டு அறிஞர்கள் அμகிய விதம் எனப் படிப்படியாக இக்கட்டுரை வாசகன் பின்பற்றுவதற்கு எளிதாகவும் அரிய தகவல்களைத் தருவதாகவும் அமைந்துள்ளது. க. பஞ்சாங்கம் ‘தொல்காப்பியம் - எடுத்துரைப்பியல் நோக்கு’ எனும் கட்டுரையை எழுதியுள்ளார். தமிழ்க் கவிதையியலை வடிவமைப்பதில் தமிழ்ச் சமூகம் எந்த அளவுக்கு கூர்மையாக இயங்கியுள்ளது என்பதை இக்கட்டுரையில் உணர்த்துகிறார். ‘இயற்கையான காம உணர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு மிருகங்களுக்கு ஆண்-பெண் எனப் பெயரிட்டு அவற்றின் காமச் செயல்பாட்டை மற்றொரு தளத்திற்கு, அதாவது காதல் தளத்திற்கு மாற்றவேண்டிய மனித சமூகப் பரிமாணத் தேவையின் நெருக்கடியில் தொல்காப்பியத்தின் கவிதையியல் தோற்றம் கொண்டுள்ளது. அதனால்தான் ஆண் யார்? பெண் யார்? என்று வரையறைப்படுத்துதல் தொல்காப்பியத்தில் நிகழ்கிறது. அதாவது பரிணாம வளர்ச்சியில் செயல்படும் தேர்வு, விலக்கல் அதிகாரச் செயல்பாடுகள் நிகழ்கின்றன. பெருமையும் வரனும் உடையவன்தான் ஆண் என அடையாளப்படுத்தப் படுகிறான். அச்சமும் நாணமும் மடமும் உடையவள்தான் பெண் என்ற வரையறைக்குள் வருகிறாள்.’ எனச் சமூக வரலாற்றையும் அதன் மீதான விமர்சனத்தையும் நேர்மையாகப் பதிவு செய்கிறார்.

‘குறுந்தொகை ஆய்வுகள்: இதுவரையும் இனியும்’ எனும் கட்டுரையை இரா. அறவேந்தன எழுதியுள்ளார். இதுவரை குறுந்தொகை தொடர்பாக செய்யப்பட்ட ஆய்வுகளின் தரவுகளை அடிப்படையில் வகைப்படுத்திக் கூறியுள்ளார்.‘பண்டைய தமிழ் மக்கள் வாழ்வியலைப் பொற்கால வாழ்வியலாகக் கருதிச் சமகால மக்கள் முன்மாதிரி ஏற்றுப் பின்பற்றத்தக்க அறவாழ்வியலாகக்’ காட்டக்கூடிய தன்மையிலேயே குறுந்தொகை ஆய்வு செயல்பட்டுள்ளதை இக்கட்டுரை மதிப்பீடு செய்துள்ளது. அயலகத் திறனாய்வு முறைகளோடு இணைத்து சங்க இலக்கியங்கள் ஆய்வு செய்யப்படவேண்டும் என்று குறிப்பிடுகிறது. இதனை நிறைவேற்றும் வகையில், சங்க இலக்கியங்களை அமைப்பியல் கோட்பாட்டின் வழி அμகுவதற்கான தேவையையும் அதற்கான அμகு முறையையும் குறித்து த. விஷ்μகுமாரன் விரிவாக எழுதியுள்ளார்.

புலம்பெயர் எழுத்தாளர்களுக்கு பன்முகப் பண்பாட்டையும் மொழியையும் அறிந்து கொள்ளும் சூழலும் அவ்விடத்தில் வரும் அனுபவங்களும் இணைந்து அவர்களின் எழுத்துகளை வளப்படுத்தும் தன்மை குறித்து க. பூரணசந்திரன் எழுதியுள்ளார். இ.பா.வின் ‘ஏசுவின் தோழர்கள்’ தமிழவனின் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ ஆகிய இரண்டு ‘உலக’ நாவல்கள் குறித்த விரிவான விவாதங்களையும் விமர்சனங்களையும் யமுனா இராஜேந்திரன் அவருக்கே உரித்தான மொழியில் பதிவு செய்துள்ளார். அதே போல் சு. வேμகோபால் தமிழ்த் திறானாய்வுலகில் க.நா.சு., சி.சு.செ., தொ.மு.சி.,வெ.சா, பிரமிள், சுந்தரராமசாமி, கோவை ஞானி, தமிழவன், எஸ்.வி.ஆர். ஆகியோர் செய்த பங்களிப்பு குறித்து பதிவு செய்துள்ளார். தமிழ்ச் சிற்றிதழ்கள் குறித்து கோவை வாணன் எழுதியுள்ளார்.

சிறந்த புத்தகங்களாயிருந்தும் பரவலாக அறியப்படாத நூல்கள் குறித்த மதிப்புரைகள் (திராவிடரும் திராவிட இந்தியாவும் - எஸ்.எல்.சாகர், பலுச்சிஸ்தான் விடுதலைப் போராட்டம், முதலானவை) நூல் அரங்கு பகுதியில் இடம்பெற்றுள்ளன. நினைவுக் குறிப்புகள் எனும் பகுதியில் நாத்திகம் இராமசாமி, குருவிக்கரம்பை வேலு, பூ.அர.குப்புசாமி, ப.சிங்கராயர், புலவர் கி.செல்வரங்கன் ஆகிய அறிஞர்கள் பற்றிய அரிய குறிப்புகளும் அவர்களின் இலக்கிய, சமூகப் பணிகளும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. மேலும் ம.ர.போ. குருசாமி மற்றும் ப. குப்புசாமி ஆகியோர் எழுதிய கட்டுரைகளில் பல தமிழறிஞர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு தமிழியல் ஆய்வை முன்னெடுத்துச் செல்வதற்கு இம்மாநாடும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளது. இவர்களின் பணி மதிக்கத்தக்கது. ஆனால் புனைகதை மரபின் மீது சிறப்புக் கவனம் செலுத்தும் கோவை ஞானி தொகுத்த மலரில் புனைகதை மரபு கட்டுரைகள் இல்லாதது வியப்பளிக்கிறது. இடைக்கால இலக்கியங்களான பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், இடைக்கால இலக்கணங்கள் முதலானவை பற்றிய கட்டுரைகள் அமைந்திருந்தால் தொகுப்பு முழுமை பெற்றிருக்கும் எந்தவொரு நிறுவனப் பின்புலமோ, நிதி உதவியோ இல்லாமல் தன்னார்வத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட மலரில் ‘முழுமை’ குறித்து கவலைப் படுவது தேவையற்றதுதான். தமிழியல் ஆய்வு குறித்த அக்கறையுடைய ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. இத்தகுதியைப் பெற்றிருந்தும் நிதிப் பற்றாக் குறையினால் இந்நூல் வெளிவராமல் இருப்பது தமிழ்ச் சூழலின் துரதிர்ஷ்டம்.

செம்மொழி மாநாட்டையட்டி தீக்கதிர், விடுதலை, தினமணி, நக்கீரன் முதலான பத்திரிகைகளும் தரமான மலர்களை வெளியிட்டுள்ளனர். விடுதலை மலர் தொகுப்பு பெரும்பாலும் ஏற்கெனவே இதழ்கள் மற்றும் நூல்களில் வெளிவந்துள்ள கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து ஆவணப்படுத்தியுள்ளது. காந்தியடிகள் தன் கைப்பட தமிழில் எழுதிய கடிதத்தை இம்மலரின் மூலம் பலருக்கும் வெளிப்படுத்தியுள்ளனர். பெரியார், காந்தி, பாவாணர் முதலான ஆளுமைகளின் எழுத்துகளைத் தேர்ந்தெடுத்து ஆவணப்படுத்திய மலர்க்குழுவினர் முனைவர்பட்ட ஆய்வாளரான வெ.பிரகாஷ் எழுதியுள்ள கட்டுரையையும் தேர்ந்தெடுத்து தொகுத்துள்ளனர். இவர்களின் தேடலுக்கும் தரத்திற்கு மதிப்பு தரும் நேர்மைக்கும் இது நல்ல சான்று. தமிழ் மொழி மதநீக்கம் செய்யப்பட வேண்டுமென்பதும் இந்தியைத் தமிழுடன் கலக்கிவிடக் கூடாதென்பதும் இம்மலர் முழுக்க இழை யோடியிருக்கும் கருத்தியல். இதற்கு மாறாக, தமிழ்மொழியில் இந்தி மட்டுமல்ல; ஆங்கிலமும் கலந்துவிடக்கூடாது. இந்தியை எதிர்ப்பதற்காக ஆங்கிலத்தை அளவுக்கு மேல் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியது திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பிழை என்பது தீக்கதிர் கட்டுரைகளின் மதிப்பீடாக உள்ளது. ச.தமிழ்ச் செல்வன் மற்றும் சு.வெங்கடேசன் ஆகியோரது கட்டுரைகள் இதனை வரலாற்றுபூர்வமாக விளக்குகின்றன.

ஒட்டுமொத்த தேசியத்துக்குள் மக்களின் முன்னேற்றத்திற்கும் நன்மைக்கும் மொழிவழித் தேசியங்கள் தேவைப்படுவதின் அவசியத்தையும் அதற்கான பொதுவுடமை¬யாளர்களின் போராட்டங்களையும் பிரகாஷ் காரத் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகிறார். மேலும் மொழிவழி மாநிலங்கள் மென்மேலும் துண்டாடப்படுவதினூடாக ஆளும் வர்க்கங்களும் முதலாளிகளும் தங்கள் அதிகாரத்தைச் செலுத்துவதும் மக்களைச் சுரண்டுவதும் எளிதாகும் அபாயத்தையும் சுட்டுகிறார். அருணனுடைய கட்டுரை இந்தியாவின் மொழிக்கொள்கை பிரதேச மொழிகளை ஆக்டோபசாக விழுங்குவது குறித்த விமர்சனமாக அமைந்தள்ளது. வா.செ.குழந்தைசாமி தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து தொடர்ந்து சிந்தித்தும் பேசியும் வருகிறார். அதன் எழுத்து வடிவமாக அவருடைய கட்டுரை அமைந்துள்ளது. தினமணி மலரில் இதனை மறுக்கும் வகையில் க.சி. அகமுடைநம்பியின் கட்டுரை வெளிவந்துள்ளது.

சங்க இலக்கியம் முதல் பாரதி வரையிலான தமிழ் இலக்கியப் பரப்பின் வரலாறாக ந. சுப்பிரமணியனின் செறிவான கட்டுரை அமைந்துள்ளது. ஈரோடு தி.தங்கவேல் தமது கட்டுரையில் பல்வேறுபட்ட சித்தர் மரபுகளை, அதன் பின்புலங்களை தர்க்கபூர்வமாக விளக்கியுள்ளார். குறளின் கொல்லாமை எனும் அதிகாரம் இடம் பெறுவதற்கான சமுதாயப் பின்னணி குறித்து பல்வேறு அரிய தரவுகளுடன் அவருக்கே உரித்தான ஆய்வுமுறை மையில் பா.வீரமணி எழுதியுள்ளார். நடுகற்களின் வழி, தமிழ்ச் சமூக வரலாற்றைக் கட்டமைப்பது குறித்து சான்றுகளுடன் சி.இளங்கோ பதிவு செய்துள்ளார். சோழர்காலத்தில் உருவாக்கப்பட்ட தேவரடியார் முறைமையின் வேதனை குறித்தும், அவர்களிடமிருந்த ‘சதிர்’ மரபு பறிக்கப்பட்டு பரத நாட்டியமாக ‘மேம்பட்டது’ குறித்தும் நர்மதா எழுதியுள்ளார். தமிழ்ப் பாடநூல்களின் குழப்பிகள் குறித்த ஆய்வை முத்துநிலவன் எள்ளலுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி, நக்கீரன் மலர்கள்

மேற்குறித்த இரண்டு இதழ்கள் தயாரித்த மலர்களிலும் எந்தெந்தப் புலங்கள் குறித்து பேசுவது அதனை யார் யார் பேசுவது என்பது குறித்த தெளிவான திட்டமிடல் இருந்தது. ஆயினும் பக்க அளவு குறைவு என்பதால் அதனை விரிவாகவோ, விமர்சனபூர்வமாகவோ பேசுவதற்கான வாய்ப்பற்றுப் போகிறது. ஆயினும் தினமணி மலரில் கி.ரா., ம.இராசேந்திரன் முதலானோர் அரைப்பக்கத்துக்குள்ளேயே வாசகனை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி சிந்திக்கத் தூண்டுகின்றனர். இரா. குறிஞ்சிவேலன். புலம்பெயர் தமிழர்கள் அனுபவிக்கும் வலிகள், தங்கள் மொழியைக் காப்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் போராட்டம், மொழியை இழந்த தமிழர்கள் சடங்குகளின் வழியாகவாவது தங்கள் பண்பாட்டைக் காப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் முதலானவை குறித்து பதிவு செய்துள்ளார்.

அகராதி குறித்த கிரிகிரி ஜேம்ஸின் கட்டுரை தெளிவாகவும் செறிவாகவும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ‘வளரி’ ஆதிக்க வர்க்கங்களை எதிர்க்க சமவெளிப் பழங்குடிகளால் பயன்படுத்தபட்டமை குறித்த மணிமாறனின் கட்டுரை தனித்துவமுடையது. நாவல், திறானாய்வு, சினிமா ஆகியன குறித்து முறையே பொன்னீலன், முருகேசபாண்டியன், தியடோர் பாஸ்கரன் ஆகியோர் தங்களின் விரிவான வாசிப்பினூடாக எழுதியுள்ள கட்டுரைகள் இம்மலருக்கு சிறப்பு சேர்ப்பவை. இவ்வாறு தமிழியலின் அனைத்துப் புலங்கள் குறித்த பதிவுகளும் இம்மலரில் இடம் பெற்றுள்ளன. மேலும், தமிழ் வளர்த்த சான்றோர்கள் 100 பேர், தமிழ்ப் படைப்பாளிகள் 40 பேர் ஆகியோர் பற்றிய குறிப்புகள் புகைப்படங்களுடன் இடம் பெற்றுள்ளன. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலமையாளர்கள் பற்றிய குறிப்புகளும் புகைப்படங்களுமே அரிதாகிவிட்ட சூழலில் இப்பணி சிறந்த ஆவணமாக அமைந்துள்ளது. நக்கீரன் இதழும் செம்மொழி மாநாட்டையட்டி தமிழுக்குத் தன் பங்களிப்பைச் செய்துள்ளது. தமிழ் செம்மொழியாவதற்கு அறிஞர்களும் அமைப்புகளும் அரசும் மேற்கொண்ட போராட்டங்கள் குறித்த வாலாற்றுச் சுருக்கமாக கலைஞரின் கட்டுரை முதலில் அமைந்துள்ளது. இதன் விரிவாக்கத்தை நக்கீரன் பதிப்பகம் தனியாக வெளியிட்டுள்ளதோடு இம்மலரின் இறுதியிலும் அமைந்துள்ளது. தமிழை உணர்வுபூர்வமாக பார்க்காமல், அறிவியல் பூர்வமாக பார்க்கும் பெரியாரின் அμகுமுறை அவருடைய கட்டுரையில் புரிபடுகிறது. தமிழ் மற்றும் தமிழனின் பெருமை, முன்னேற்றம் குறித்த அண்ணாவின் உணர்ச்சி வசப்பட்ட நிலை அவரது எழுத்திலும் உள்ளது. பரிதிமாற் கலைஞரின் கட்டுரை தமிழ் உயர்தனிச் செம்மொழியே என்பதைச் சான்றுகளுடன் நிறுவுகிறது. தமிழனின் பிறந்தகம் தென்னாடே என்பதை இலக்கியம் மற்றும் மொழியியல் சான்றுகள் வழி பாவாணர் நிறுவியுள்ளார். தமிழ்மொழி செம்மொழித் தகுதியடைவது குறித்து தொடர்ந்து பேசியவரும் கருத்தியல் ரீதியாகப் போராடியவரும் மணவை முஸ்தபா. அவர் தமிழ் செம்மொழி தகுதியடைவதற்கு முன்னெடுத்த போராட்டங்களையும் தகுதியடைந்தபின் நமக்கிருக்கும் வாய்ப்புகள் பற்றியும் எழுதியுள்ளார். ‘தமிழ்’ எனும் சொல்லிலிருந்து ‘திராவிடம்’ எனும் சொல் வந்ததனை மொழியியல் ஆய்வின் மூலம் கால்டுவெல் தன் கட்டுரையில் நிறுவியுள்ளார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அரசியல் ஆரவார மாநாடாக அல்லாமல் தமிழ்மொழிக்கு செய்யவேண்டிய நிலையான பணி குறித்த தெளிவான அறிவுறுத்தலை ஆ.சிவசுப்பிரமணியம் செய்துள்ளார். சோழர் காலத்தில் கோவில் பெரு நிலவுடைமை நிறுவனமாக இயங்கியது குறித்தும் கோவில் பணி செய்பவர்களின் தேவையை நிவர்த்தி செய்ய விவசாயக் கூலிகள் நசுக்கப்பட்டது குறித்தும் நா.வானமாமலை விரிவான சான்றுகளுடன் நிறுவியுள்ளார். வானம்பாடிகள் இயக்கம் குறித்து சிற்பி பாலசுப்ரமணியம் எழுதியுள்ளார். இவரும் ஒரு வானம்பாடி என்பதால் தன்னனுபவத் தன்மையையும் புதிய தகவல்களையும் இக்கட்டுரை கொண்டுள்ளது. இணையத் தமிழ் குறித்து மா.ஆண்டோ பீட்டர் மற்றும் சுபாஷினி டிரெம்மல் எழுதிய கட்டுரைகள் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டியன.

மேற்கண்ட மலர்கள் அனைத்திலும் வடிவமைப்பு மற்றும் மெய்ப்புத் திருத்தம் சிறப்பாக உள்ளது. கடந்த பத்து வருடங்களுள் அச்சுத்துறையில் கணினி பயன்பாட்டின் காரணமாக எளிதாகவும் அழகாகவும் இதுபோன்ற மலர்களைக் கொண்டுவரமுடிகிறது. இம்மலர்கள் அனைத்தும் தமிழியல் குறித்த அறிமுகத்தையும் சிந்தனையையும் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது. இம்மலர்களிலுள்ள அனைத்து முக்கியமான கட்டுரைகள் குறித்து உரையாட முடியவில்லை. அதேபோல் சிலர் கட்டுரைகள் பற்றி விரிவாகப் பேசவேண்டிய தேவையிருந்தும் பக்க அளவு கருதி தவிர்க்கப்பட்டுள்ளது. ஆயினும் வாகர்களே படித்து அறிவார்கள் எனும் நம்பிக்கை உள்ளது.

Pin It