முதல் பிரவேசம் 

முதல் பிரசவமும், முதல் பிரசுரமும் வலியில்லாமல் நிகழ்வதில்லை. எனது முதல் பிரசுரமும் அப்படித்தான். 1986 இல் செம்மலர் நடத்திய சிறுகதை போட்டிக்கு கதை எழுதியிருந்தேன். அதுதான் எழுதிய அனுப்பிய முதல் கதை.Jananesan

செட்டிநாட்டுப் பகுதியில் உழைப்பாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏன் அதிகம் கல்வி கற்க இயலவில்லை? ஏன் அப்பகுதியில் தொழிற்சாலைகள் ஏதும் உருவாக்கப்படவில்லை. அந்த சூட்சமத்தை ஒரு பத்தாம் வகுப்பு மாணவனின் படிப்பு தடைபடும் பின்னணியில் அம்மாணவனின் நினைவோட்டமாய் கதை சொல்லியிருந்தேன். கதை தலைப்பு “சுழல் காற்று’’. இக்கதை போட்டிக்கான குறிக்கோளுக்கு அப்பால் ஒரு சமூக அவலத்தை ஒரு மாணவனது மனநிலையிலிருந்து வெளிப்படுத்துவதால் பிரசுரிக்கத் தகுந்த கதைகள் 10 இல் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டு அறிவிப்பு வந்தது.

அப்போது நான் ஒரு தனியார் நிறுவனத்தில் குறைந்த ஊதியத்தில் எழுத்தராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அரசு வேலைகளுக்கு மனுச் செய்திருந்தேன். அதனால் சொந்தப் பெயரில் எழுதாமல் திடீரென புனைப் பெயரும் பூணாமல் என் தந்தை பெயரான ‘‘இராஜகோபாலன்’’ என்ற பெயரில் அனுப்பி இருந்தேன். தமுஎச செயலாளராகவும் இருந்தேன். அறிவிப்பு வந்த ஒவ்வொரு மாதச் செம்மலராய் பார்த்து பார்த்து ஏமாந்தேன். அறிவிப்பு வந்து பத்து மாதங்கள் ஊர்ந்து விட்டன.

செம்மலர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அ. குமரேசனிடம் விசாரித்தேன். “ஆசிரியர் குழுவில் சொல்கிறேன்’’ என்றார். மனது சமாதானப்படவில்லை. ஆசிரியர் தோழர் கே. முத்தையாவின் அறைக்குச் சென்றேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் படித்து குறிப்பெடுத்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு நான் பேசுவதை அக்கறையோடு கேட்டார். கதை சுருக்கம் சொன்னேன். என் கையில் அன்றைய தீக்கதிரை கொடுத்து “படி’’ என்று சொல்லிப் போய் 5 நிமிடம் கழித்து எனக்கு ஒரு க்ளாஸில் டீ கொண்டு வந்து கொடுத்தார். பதறிப் போய் டீயை வாங்கினேன். என்னைப் பார்த்து இயல்பாக இருக்கச் சொன்னார். உங்க கதை நல்லாயிருக்கும் போலிருக்கு. அடுத்த செம்மலரில் வரும். ஒரு படைப்பு வெளி வரலைன்னு எழுதாம விட்றாதீங்க. நிறைய படிங்க. எழுதுங்க. திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று தோளில் தட்டி வழி அனுப்பினார். மறுமாதம் அக்கதை பிரசுரமானது. உடம்பெல்லாம் இறக்கை முளைத்தது. கால்களைக் காணவில்லை. திரும்பத் திரும்ப வாசித்தேன். நண்பர்கள் மகிழ்ந்தார்கள்.

கதாசிரியனாகியதும் புனைபெயர் தேட ஆரம்பித்தேன். திருமூலரின் பாடலில் வரும் “.....நடமாடும் கோயில் நண்பர்....’’ என்பதை “நடமாடுங் கோயில் நம்பி’’ ஆக்கிக் கவிதைகள் எழுதினேன். இப்பெயர் நவீனமாக இல்லை என்பதால் அப்பெயரின் இயல்பே என்னியல்பாக இருப்பதால் “ஜனநேசன்’’ என்று மாற்றி கவிதைகளைப் பல இதழ்களுக்கு அனுப்பினேன். ‘பாக்யா’ இதழில் ஜனநேசன் என்ற பெயரில் “சுமைதாங்கி’’ என்ற கவிதை பிரசுரமானது. தோழர் கந்தர்வனிடம் காட்டினேன். “கவிதை நல்லா இருக்கு, பேரு என்ன நேசன் கீசன்னு......’’ என்று சொல்லி என் முகத்தை ஊடுருவினார். “நீங்க கந்தர்வன்னு வச்சிருக்கீங்களே?’’ அருகில் இருந்த முத்து நிலவன், “அப்படிப் போடு’’ என்று ஒற்றை வரியில் சொன்னார். ”....எல்லாம் நல்லாப் பேசப் பழகிட்டீங்கப்பா’’ என்று சொல்லி என் முதுகில் செல்லமாகத் தட்டினார்.

ஜனநேசன் என்ற பெயரில் “வசூப்’’ என்னும் சிறுகதை வண்ணக்கதிரில் வெளிவந்தது. “கதை வரும் உருவமும் உள்ளடக்கமும் பொருந்தி வந்திருக்கிறது’’ என்று கந்தர்வன் சொன்னார். தொடர்ந்து வண்ணக்கதிரில் எழுதினேன். தோழர்கள் கே. முத்தையா, குமரேசன் போன்றவர்களோடு மேலாண்மை பொன்னுச்சாமியும் உற்சாகப்படுத்தினார். மெருகேற்றினார். ஆனால் இப்படி எழுதப்பட்டு வெளிவந்த கதைகளை தொகுப்பாக்குவதும், அதனை விற்பனை செய்வதும் வலி மிகுந்ததாக இருக்கிறது. பிரசவ வைராக்கியம் போல் முயற்சிகள் தொடர்கின்றன. முதல் தொகுப்பு “வரிசை’’யை ஸ்ரீராசா பதிப்பித்தார். திருப்பத்தூரில் 1998 இல் நடந்த சிவகங்கை மாவட்ட தமுஎச மாநாட்டில் சு. சமுத்திரம் வெளியிட்டு மதிப்புரைத்தார் என்பதே. தொகுப்பைக் கொண்டு வருவதில் ஏற்பட்ட ரணத்திற்கு மருந்தாக இருந்தது. கவிதைத் தொகுப்பு “ஆலிவ் இலைகளேந்தி’’யை புதுக்கோட்டையில் 93இல் நடந்த தமுஎச மாவட்ட மாநாட்டில் வெளியிட்டு உரையாற்றினார். இவ்விரு தொகுப்புகளும் எனது முகவரி அட்டைகளாகவேத் திகழ்ந்தன. அதன்பின் தோழர்கள் தி.க.சி, கழனியூரன் உதவிக்கரம் நீட்ட சந்தியா பதிப்பகத்தார் “ஆளுமை’’ என்னும் தொகுப்பை வெளியிட்டனர்.

 

Pin It