நாவல் என்பது படைப்பாளி தான் கண்ட, கேட்ட, வாழ்ந்த - வாழ்க்கையை மறுபடைப்பு செய்வதாகும். முழு நாவல் அவ்வாழ்வின் சகல பகுதிகளையும் வாசகர் முன் பந்தி விரிக்கும் என்றால் குறுநாவல் என்பது அவ்வாழ்வின் ஒரு சில பகுதிகளை மட்டும் சுவைக்கச் செய்யும் சிற்றுண்டியாகும்.

kashyapan_400இவ்வகையில் முற்போக்கு இயக்கவாதி நாடகம், சிறுகதைகள், காப்பீட்டு ஊழியர் சங்கம், பத்திரிகை ஆசிரியர் என்ற பலவகையில் பல தளங்களில் தடம் பதித்த காஸ்யபன் “கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து...” என்னும் குறுநாவலைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குப் படைத்து அளித்துள்ளார். இந்நவீன காலத்தில் இந்திய வாழ்வை அலைக்கழிக்கும் ஒரு காரணியான தீவிரவாதத்தின் வேர்களை, அதன் விஷ விருட்சத்தை நவீனத்துவத்துடன் கூடிய மர்ம நாவலின் உத்தியில் சிறுசிறு வாக்கியங்களில் உணர்வோட்டமும், செறிவான சொற்களில் வாசகர் சரளமாக, ஆர்வமாகப் படிக்கும் நடையில் நாவலை படைத்துள்ளார்.

நதிக் கரைகள் நாகரிகத்தின் தொட்டில்கள் மட்டுமல்ல! மாற்றங்களின் தாய் மடி என்பதும் வரலாறு உணர்த்தும் பாடம். கிருஷ்ணாநதிக் கரையில் எழுந்த தெலுங்கானா விவசாயிகளின் கிளர்ச்சியைத் தொடர்ந்த ஆயுதம் ஏந்திய போராட்டம் ஜதராபாத் நிஜாம் படைகளுடன் பிரிட்டிஷ் இந்திய ராணுவ படைகள் கொண்டு ஒடுக்கப்படுகிறது. எண்ணற்ற தலைவர்களும், விவசாயிகளும் வீர மரணம் அடைகின்றனர். தப்பிய தலைவர்களில் ஒரு பகுதியினர் ஜனநாயக முறையில் மக்களைத் திரட்டிப் போராட முயன்று வருகிறார்கள். விரக்தியுற்ற இன்னொரு பிரிவினர் தீவிரவாத நடைமுறைகளைக் கைக்கொண்டு வன்முறைகள், வங்கிக் கொள்ளைகள், ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல் எனத் திசை மாறுகிறார்கள். இவர்களைப் பற்றிய கதை தான் “கிருஷ்ணா நதிக் கரையிலிருந்து” என்ற குறுநாவல். இது கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து தாமிர பரணி கரை வரை நீள்கிறது.

1940களிலிருந்து 1970 வரை நீளும் இந்நாவலில் சிந்து பூந்துறை சண்முகம் அண்ணாச்சி, சுப்பையா என்ற மக்களால் பிரியமுடன் அழைக்கப்பட்ட தோழர் சுந்தரய்யா போன்றோர் உயிர் பெற்று உலாவுகிறார்கள். தாமிரபரணி கரை முதல் கிருஷ்ணா நதிக்கரை வரை நல்ல பரிச்சயத்தோடு வாழ்ந்த அனுபவத்தை அந்தந்த மண்ணின் உயிர்ப்பை காஸ்யபன் பதிவு செய்கிறார். ஐதராபாத் நிஜாமின் கொடுங்கோன்மைக்கு இரையாகும் மக்கள், குறிப்பாக, பெண் மக்களின் பிரதிநிதியாக வரும் அமராவதியின் தீரமும், தியாகமும், அமராவதி - லட்சுமி நாராயணன் காதல் நிகழ்வுகள் மனதை உருக வைக்கின்றன.

தீவிரவாதிகள் எப்படி இயங்குகின்றனர் என்பதனை ஒரு மர்ம நாவலின் பாணியில் மிக சுவாரஸ்யமாகச் சொல்லப்படுகிறது. தீவிரவாதி விஜி யார் என்று மர்ம முடிச்சு அவிழ்க்கப்படும் விதமும் நாவலின் கருவுக்கு வலு சேர்க்கிறது. இப்படியான இயக்கங்கள் குறித்த நேரடி அனுபவமும், கேட்டறிவும் கொண்ட இந்த முற்போக்குப் படைப் பாளி குறுநாவலாக அல்லாமல் ஒரு முழு நீள நாவலாகப் படைத்திருக்கலாமே என்ற ஏக்கம் வாசக நெஞ்சில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதுவே இவரது படைப்பாளுமைக்குக் கிடைத்த வெற்றியே! பெயருக்கேற்ப சிறப்பான அட்டைப் படமும், அச்சும் அமைப்பும் கொண்ட இந்நாவலை வெளியிட்ட நியூ செஞ்சரி புத்தக நிலையத்தார் பாராட்டத்தக்கவர்களே!

கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து...

குறுநாவல்

ஆசிரியர் : காஸ்யபன்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.45.00

Pin It