வீடு முழுக்க வானம், சே.பிருந்தா, பக்:84,ரூ.60,காலச்சுவடு, நாகர்கோவில் - 1.

எது கவிதை? இந்தக் கேள்விக்கான விடையைக் கவிஞர்கள் அவரவர் அநுபவப் பதிவுகள், பட்டறிவு ஆகியவற்றின் அடிப்படையில் பலவிதமாகச் சொல்லி வந்திருக்கிறார்கள். கவிஞர்கள் அல்லாதவர்கள், கவிதை என்பதும் கவியுலகம் என்பதும் சாதரண மனிதர்கள் யாரும் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாத, கூடாத ஒர் அபூர்வமான தவம் என்றும் உள்மனத் தேடல் என்றும் விதவிதமான வரையறைகள் தந்து வாசகர்களை மிரட்டுவதும் உண்டு. ஆனால் 1999-ம் வருடம் தனது முதல் கவிதைத் தொகுதியான மழை பற்றிய பகிர்தல்கள் நூலில் சே. பிருந்தாவின் குரல் வித்தியாசமானதாய் வெளிப்பட்டது. அக்கா சமைப்பதைப் போலவும், காற்றில் நெற்பூக்கள் அசைந்து சாய்வதைப்போலவும் மிக இயல்பான ஒன்றாகக் கவிதை எழுதுவதைக் கூறியிருந்தார்.

திரும்ப யோசிக்கையில், வெகு அபூர்வமும், விரோதமும் கூடிய கணம் எழுத்தில் உறைகிறது அல்லது சலிப்பூட்டும் வாழ்வின் தவிர்க்கவியலா நெருடல் கவிதையாக உருக்கொள்கிறதுஎன்று, பத்தாண்டுகால இடைவெளிக்குப் பின் இப்போது வெளியாகியுள்ள வீடு முழுக்க வானம் தொகுப்பின் என்னுரையில் கூறுகிறார் பிருந்தா. இந்த இடைக்காலத்தில் அவரது பார்வைக் களமும், கவிதா மொழியும், சொல்லாடல்களும் கூர்மையும் - ஆழமும் - விரிவும் பெற்று வளர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

தனது பாதை ஒற்றையடிப் பாதையாக இருப்பினும் அது வானத்திலிருந்து நீண்டு கிடக்கிறது என்ற பெருமிதம் அவருக்கு உண்டு. கல் தெறிப்பில் சிதறுகிற குளமும், பூக்களில் மணக்கும் காற்றும், கனவுகளில் முயங்கும் இரவும், கடிகாரத்தில் நகர்கிற காலமும் ஆக பிருந்தாவின் கவிதைத் துளிகள் நிறைந்த வானம் இப்போது வீடு முழுக்க வந்திருக்கிறது.

ஜான்சிராணி லட்சுமிமாய், போர்க்களத்தில் குதிரையேறிப் பாய்ந்த வேளைகளில் குழந்தையை முதுகில் இறுகக்கட்டியவாறு இருக்கும் சித்திரங்களும் - சிலைகளும் சிறுவயது முதல் பார்த்து வந்ததுதான். எதனால் அது? ஒரு நாட்டுக்கே ராணி - அவளுடைய குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாருமில்லையா? யாரிடமும் நம்பிக்கையற்றுப் போய் விட்டதா? ரத்தம் -மரண ஓலத்துக்கு நடுவே ஏன் குழந்தையைத் தூக்கிட்டு வந்தாங்க...? - நகர வாழ்வில் அலுவலகத்திற்குப் போகிற ஆயிரமாயிரம் மகளிருள் ஒருவாரய், தனது செல்ல மகளுக்கான காப்பகம் தேடி அலைகையில் இக் கேள்வி சுரீரென்று உரைத்தது என்கிறரர் கவிஞர். ஜான்சிராணி பற்றி இந்தக் கோணத்தில் இதற்கு முன் யாராவது இப்படியரு கேள்வியை முன்வைத்திருக் கிறரர்களா? தேரியவில்லை. ஆனால், வாழ்க்கை அனுபவமும் - வாசிப்பு / காட்சி அனுபவங்களும் ஒன்றோடொன்று உராயும் போதுதான் ஆழமான சிந்தனைப் பொறிகள் தெறிக்கின்றன என்பதற்கு இவரின் என்னுரை நல்ல சான்று.

நம்மை எதுவாகவோ இருக்கச் சொல்லி வற்புறுத்துகிற நேரம், நட்சத்திரங்களில் காணாது போக முயன்று கொண்டிருக்கிறோம் நாம். இடையனின் பார்வைக்குத் தப்பினாலும் பொட்டல்வெளியில் புல் மேயும் ஒற்றை ஆடு கனத்த மேகங்கள் கண்காணிப்பில் - எப்படியும் தப்ப முடியாமல் என்போலத்தான அதுவும்,,, என்கிறது கவிதை. எத்தனை பேரின் கண்கள் - விரல்களாய்... என்ற நான்கு வார்த்தைகளில் வெளிப்படும் சீற்றம் மருட்டுகிறது.

இன்றைய வாழ்வில் - அதன் சகலவிதமான நெருக்கடி களுக்கு நடுவே ஒருவரையருவர் எதிர்கொள்வதில் உள்ள நெருக்கடியை உணர்த்தும் வலுவான கவிமொழி கைவரப் பெற்றிருக்கிறது பிருந்தாவிற்கு. நாம் சுமந்து திரிகிற நம் தனிமையை ஆமையின் ஓடுபோல உதிர்க்கவே முடியாத ஒன்று என்கிறரர்.

இத்தொகுப்பிலுள்ள உயிர் விளையாட்டு கவிதை, சாகித்ய அகாடமியின் காலாண்டு இதழான இந்தியன் லிட்டரேச்சர்-இல் ஆங்கிலத்தில் மொழியாக்கப் பெற்று சமீபத்திய இதழில் வந்துள்ளது. உயிர்ச் சேதம் விளைவிக்கக் கூடிய கண்ணாமூச்சு விளையாட்டு - நீயும் நானுமே ஆட்டக் காரர்கள் - எனக்கெவ்வளவு தொலைவோ - அவ்வளவு நெருக்கமும் நீ- எனத் தொடங்கும் இக் கவிதை, நானொரு கொடூர மிருகம் - நம்பினால் நம்புங்கள் - என் கூர் பல்லும், நகங்களும் - அனபாலானது.. என்று முடிகிறது. நித்தம் நடக்கிற இந்த உயிர் விளையாட்டில் காயம் படாதவர்கள் யாரிருக்க முடியும்?

எதையும் சொல்லாமல், பெய்கிற மழையும், வீசும் காற்றும், ஒளிரும் நிலவும் - வழி காட்டுகின்றன. நேசிப்பதை இனி வார்த்கைகளால் சொல்லப் போவது கிடையாது. மௌனத்தைக் காதலாக மொழி பெயர்க்க முடிந்தால் செய்து கொள் என்கிறது கவிதை.

மரணம் குறித்துப் பல கவிதைகள் பேசுகின்றன. இயற்கையான, விபத்தினால், அகலமான - இப்படியாக. இவற்றையெல்லாம் தாண்டி விட முடிகிறது. ஆனால், தீயாய்ச் சுடும் வார்த்தைகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. வார்த்தைகளை விடவா வலிக்கும் மரணம்? என்றொரு கேள்வியில் வெளிப்படும் ஆற்றாமைக்கு யாரிடம் பதில் இருக்கிறது இங்கே...?

எழ மறந்த இரவிலேயே எப்பவும் மழை பெய்கிறது; தலையைத் துவட்டுகிறது; அதே மழை - உதட்டில் ...வேறு சுவை, வேறு உணர்தல்... என மழையெனும் அற்புதம் குறித்த வெவ்வேறு விதமான பதிவுகள் நிரம்பித் ததும்புகின்றன - தொகுப்பெங்கும்.

செத்துப் போன எனது கவிதை - ஓர் ஒப்பாரி என்ற கவிதையின் அங்கத மொழி, இவரின் பிற கவிதைகளிலிருந்து தனித்த -வித்யாசமான ஒன்று. சரி, செத்து விட்டது. கண்களைத் துடைத்துக் கொண்டு, தேம்புவதை நிறுத்தியாயிற்று கடைசியாக ஒன்று - ஒன்றே ஒன்று.

செத்ததை எனக்குள் எரிக்கவா, உங்களுக்குள் புதைக்கவா?- என இக்கவிதை நிறைகிற போது - நுண்ணுணர்வு மிகுந்திருக்கக் கூடிய ஒரு வாசகரின் மனதில் இக்கவிதை ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் விளக்கமே தேவைப்படாதவைதாம்.

ஒரு தனிமையான மனதின் வியப்புகளும், மகிழ்ச்சிகளும், சீற்றங்களும், புகார்களும்தான் பிருந்தாவின் படைப்பாக்கத்தின் அலகுகள். இயற்கை மீதான நேசம், காதலின் இனிய கசப்பு, குழந்தைகளுடனான பரிவு, நகர வாழ்க்கை தரும் மூச்சுத் திணறல், உறவுகளின் நெருக்கம், பிரிவு - ஆகிய உணர்வுகள் தனிமைப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணின் அனுபவங்களாக வெளிப்படுத்தப்படுகின்றன.... - என்று தமிழின் முன்னணிப் படைப்பாளிகளுள் ஒருவரான சுகுமாரன் கச்சிதமாக வரையறுத்திருக்கிறார், தன் முன்னுரையில்.

பிருந்தாவின் கவியுலகம் மிக மிக மென்மையானது. குரூராமான வாழ்க்கை நிகழ்வுகளைக் கூட, அதிராமல், வெறுப்பைக் கொட்டாமல், குரலை உயர்த்தாமல் காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது இவரால். அனுபவங்களை நேரடியாக, நறுக்குத் தேறித்தாற்போல் முன்வைக்கிறார். ஒற்றையாய்த் தனிமையைத் துரத்திக் கொண்டிருக்கும் மேகத்தைப் பார்த்தபடி இயல்பான உதிர்த்தலில் பறவைக்கும் - தனக்கும் இழப்பேதுமில்லை என அமைதியடைய முடிகிறது இவரால். வார்த்தைகளின் பூ வாசத்தில் நெகிழ்ந்து முகத்தில் மோதுகிற மழைக்கால வண்ணத்துப் பூச்சிகள் சில வற்றின் சித்திரம் தீட்டியிருக்கிறார்.

ஓடிக் கொண்டேயிருக்கிற நதி

போய்க் கொண்டேயிருக்கிற மேகம்

தினம் பூக்கிற மரம்

***

குரலெழுப்பாமல் இசைக்கிற காற்று

வீடு முழுக்க வானம்

வானம் நிறையப் பறவைகள்..

***

இதுபோதும்

இவை போதும்

வாழும்படிதான் இருக்கிறது

வாழ்க்கை..... - என அமைதியடைகிறார் கவிஞர். ஆம், மனிதர்கள் எத்தனை துயரங்களுக்கிடையேயும் வாழ்க்கையை நேசிப்பதில்தானே வாழ்வதற்கான உயிராற்றலைப் பெற முடியும்? மென்மையாகவோ - நளினமாகவோ இல்லாத இந்தக் குரூர வாழ்க்கை அவலங்களைக் கூட - கவிதா ரசனைப் பின்புலத்தில் மென்மை ததும்பத் தர முடிவது வியப்புக்குரிய ஒன்றுதான். பிருந்தாவிற்கு அது இயல்பாகக் கைவந்திருக்கிறது!

 

 

Pin It