செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் கடந்த மாத இறுதியிலும் இம்மாதத் தொடக்கத்திலுமாக இரண்டு கருத்தரங்குகளை நடத்தியது. மார்ச் 28 - 30 ஆகிய மூன்று நாட்களில் பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மை எனும் பொருண்மையிலும் ஏப்ரல் 02-04 ஆகிய நாட்களில் தமிழ் மருத்துவத்தின் தொன்மையும் தனித்தன்மையும் எனும் பொருண்மையிலும் இவ்விரு கருத்தரங்குகள் நடைபெற்றன. பண்டைத் தமிழரின் ஆளுமைகள் இவ்விரு துறைகளில் எவ்விதத்தில் செயலாக்கம் பெற்று வந்தன என்பதனை இவ்விரு கருத்தரங்கக் கட்டுரைகளும் சுட்டிக்காட்டின.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர், தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் முதற் கருத்தரங்கினையும் தமிழகத் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டாவது கருத்தரங் கினையும் தொடங்கி வைத்தனர். பண்டைத் தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்தும் தமிழ் மருத்துவம் குறித்தும் பண்டைய இலக்கியத் தரவுகளை முன்வைத்து முறையே இருவரும் சிறப்புரை ஆற்றினர்.

பழந்தமிழகத்தில் உழவுத் தொழில், நெசவுத் தொழில், கட்டடக் கலை, நாகரிகம், பண்பாடு அனைத்தும் சிறந்து விளங்கியது என்பதற்கு ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. உலக அறிஞர்கள் இதனை ஒப்புக்கொண்டு பாராட்டியுள்ளனர். நீர்மேலாண் மையைப் பொறுத்தவரை பண்டையத்தமிழர்களின் பண்பட்ட அறிவும் ஆற்றலும் நம்மை வியக்க வைக்கின்றன என்றார் கலைஞர். மேலும் இரண்டாயிரம் ஆண்டுகாலத்திற்கு முன்பே நீர் மேலாண்மை குறித்த தெளிவு தமிழர்களிடத்து இருந்துள்ளமையைச் சங்க இலக்கியம், கீழ்க்கணக்கு நூல்களிலிருந்து சான்றுகளை மேற்கோள்காட்டிப் பேசிய அவர் இன்றைய சூழலில் நீர்ப் பற்றாக்குறை மாநிலமாகத் தமிழகம் இருப்பதை நினைவுகூர்ந்தார்.

பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மைக் கருத்தரங்கிற்கு நிறுவனத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் தலைமை உரை ஆற்றினார். நீர் பற்றாக்குறை காரணமாக உலகெங்கும் பிரச்சினைகள் உருவெடுக்கும் இன்றைய சூழலில் பண்டைத் தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்த வரலாற்றுத்தரவுகள் நமக்கு வழிகாட்டுவனவாக உள்ளன. இதற்குத் தமிழ்நாட்டில் கிடைக்கப்பெற்ற நீர் மேலாண்மை குறித்த வரலாற்றுத் தரவுகளை மேற்கோள் காட்டிப் பேசிய குழந்தைசாமி, இலக்கிய, கல்வெட்டுப் பதிவுகளை முக்கியத் தரவாகச் சுட்டிக்காட்டினார்.

தமிழக அரசின் நீர்வள ஆலோசகர் பேராசிரியர் ஆ. மோகனகிருஷ்ணன், தொல்லியல் துறை முன்னை இயக்குநர் திரு நடன. காசிநாதன், முனைவர் குமரி அனந்தன் ஆகிய மூவரும் வாழ்த்துரைகளை வழங்கினர்.

கருத்தரங்கப் பொருண்மை குறித்த அறிவிப்பின் மூலமாக நூற்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வரப் பெற்றன. துறைசார் வல்லுநர் குழுவால் குறிப்பிட்ட கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டு, கட்டுரையாளர்கள் அழைக்கப்பட்டனர். அவ்வாறு தெரிவு செய்யப்பெற்ற 28 கட்டுரைகள் ஒன்பது அமர்வுகளில் வாசிக்கப்பெற்றன. பேராசிரியர் கா. ராஜன், பொறியாளர் வெங்கடசுப்பு, முனைவர் கி.இரா. சங்கரன், திரு. நடன. காசிநாதன், மரு.செ.நெ. தெய்வநாயகம் முதலானோரின் கட்டுரைகள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கனவாகும். இவர்கள் துறைசார்ந்த செயல்பாடுகளில் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருப்பவர்கள் என்பது முக்கிய அம்சமாகும்.

முனைவர் சங்கரன் ‘கி.பி. 8 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றில் நீர்ப்பாசன முறை’ என்பது குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர். தொடர்ந்து அத்துறையில் ஆய்வு மேற்கொண்டு வருபவர் . இவரின் கட்டுரை சமூகவியல் பின்புலத்துடன் கூடிய செறிவான தரவுகளின் மூலமாகப் பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மை குறித்த பதிவுகளை வாசகர்களுக்கு வழங்கியது. பொதுவாகத் தமிழர்களின் நீர்வளங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான பண்டைய நீர்வளங்களும் எவ்வாறு அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை எச்சரிக்கை செய்வனவாக இக்கருத்தரங்கக் கட்டுரைகள் இருந்தன.

இக்கருத்தரங்கின் நிறைவுவிழா 30.03.2010 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. ‘சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி’ சான்றோர் கவிபோல தெளிந்த நிலையில் ஓடிய காவேரி என்று கம்பன் சொன்ன வரிகளைச் சுட்டிக்காட்டிச் செம்மொழி நிறுவன முதுநிலை ஆய்வறிஞரும் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தருமான முனைவர் இ. சுந்தரமூர்த்தி தலைமை உரை வழங்கினார். மேலும், இன்றைய ஆற்றின் நீரோட்டமின்மைக்குக் காரணம் மனிதன் இயற்கையிலிருந்து விலகியதே எனத் தம் உரையில் குறிப்பிட்டார். ‘நதியின் பிழையன்று நறும்புனலின்மை, அது நம் மதியின்பிழை’ என நீர்வளம் குன்றியதற்கான காரணங்களை எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழத் துணைவேந்தர் முனைவர் கல்யாணிஅன்புச் செல்வன் நிறைவுரையுடனும் பங்கேற்பாளர் இருவரின் கருத்துரையோடும் நிறைவு விழா நிறைவுற்றது. தமிழ் மருத்துவத்தின் தொன்மையும் தனித் தன்மையும் குறித்த கருத்தரங்கிற்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் தலைமை யுரையை வழங்கினார். கருத்தரங்க நோக்கவுரையைப் பேராசிரியர் புது. செயப்பிரகாசு நாராயணனும், வாழ்த்துரையைப் பேராசிரியர் மயில்வாகனன் நடராசன், பேரா. இரா. தி. சபாபதி மோகன், மருத்துவர் ச. தணிகாசலம் மூவரும் வழங்கினர்.

இருநூறு ஆண்டுகாலக் கண்டுபிடிப்பின் விளைவாக உருவான அலோபதி மருத்துவத்தால் அனைத்து நோய்களையும் தீர்க்கமுடியாத நிலையில் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் அறிவியல் சார்ந்ததா எனக் கேள்வி எழுப்பும் சூழலில் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் அறிவியல் சார்ந்தது எனும் கருத்தை முன்வைத்துப் பேசினார் பேராசிரியர் புது. செயப்பிரகாசு நாராயணன். மேலும் நார்ச்சத்தின் அவசியம் குறித்து இன்றைய நவீன மருத்துவர்கள் வலியுறுத்துவதை சித்தர்கள் சொன்ன கருத்தோடு ஒப்பிட்டுக் காட்டினார்.

இக்கருத்தரங்கக் கட்டுரைகளுடன் முறையான அறிவிப்பின் மூலமாக வரப்பெற்ற கட்டுரைகளுள் வல்லுநர் குழுவால் 37 கட்டுரைகள் தெரிவு செய்யப்பெற்று கட்டுரையாளர்கள் அழைக்கப்பட்டனர். ஒன்பது அமர்வுகளில் இக்கட்டுரைகள் வாசிக்கப்பெற்றன. 04. 04.2010 அன்று எட்டாவது அமர்விற்குத் தலைமை வகித்த மரு.செ.நெ. தெய்வநாயகத்தின் தலைமை உரையும், கட்டுரைகள் குறித்த அவரின் மதிப்பீட்டு உரையும் மதிக்கும்படியான உரையாகும். இன்றைய உலகமயமாக்கச் சூழலில் தமிழர்களின் மரபார்ந்த மூலிகைகள் பன்னாட்டு முதலாளிகளிடம் விலைபோய்க் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி வன்மையான உரையை அவர் முன்வைத்தார்.

இக்கருத்தரங்கின் நிறைவு விழா 04.04.2010 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் நிறைவு விழாவிற்கு வருகைதந்து உரையாற்றினார்கள். சித்த மருத்துவம் குறித்த தன் அனுபவம் சார்ந்த கருத்தினைப் பேராசிரியர் பகிர்ந்துகொண்டார். இரு கருத்தரங்கத்தின் தொடக்க, நிறைவு விழா நிகழ்ச்சியில் வரவேற்புரை, நன்றியுரையை முறையே நிறுவன இயக்குநர் பேராசிரியர் ச.மோகன் அவர்களும் நிறுவனப் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க. இராமசாமி அவர்களும் வழங்கினார்கள்.

பல்வேறு துறைசார்ந்த செயல்பாடுகளை முன்னெடுப்பதில் சமீப காலமாக செம்மொழி நிறுவனம் முனைப்போடு செயலாற்றி வருகின்றது. அந்த வகையில் தமிழோடு தொடர்புடைய பிற துறைசார்ந்த பொருண்மையிலான கருத்தரங்குகளை வரும் காலங்களில் செம்மொழி நிறுவனம் முன்னெடுக்கும் எனும் கருத்தினை பேரா. இராமசாமி அவர்கள் நன்றியுரையில் பேசினார். பண்டைத் தமிழர் தம் ஆளுமைகளை இன்றைய தலை முறையினருக்கு எடுத்துச் சொல்லவும் அவற்றை வளர்த்தெடுக்கும் பணியையும் செம்மொழி நிறுவனம் இதைப் போன்ற கருத்தரங்கச் செயல்பாட்டின் மூலமாகச் செயலாற்றும் என்றார்.

அதற்கு முன்னோடிக் கருத்தரங்கமாக இக்கருத் தரங்குகள் அமைந்துள்ளன என்றும் செம்மையான முறையில் கருத்தரங்கம் நடைபெற ஊக்கம் தந்த அனைவருக்கும் நன்றி சொல்வதற்குச் செம்மொழி நிறுவனம் கடமைப்பட்டுள்ளது என்றும் பேசினார். இரு கருத்தரங்குகளையும் நிறுவன ஆய்வறிஞர் முனைவர் சு. அரிமளம் பத்மநாபன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தினார்கள்.

Pin It