இந்தக் கட்டுரையை நான் கணினியில் எழுதி உங்களுக்கு அனுப்பினால் உங்கள் கணினித் திரையில் படிக்க முடியுமா? நான் பயன்படுத்திய அதே “எழுத்துரு வடிவம்” தரும் மென்பொருள் என்ற ஒன்று உங்களிடமும் இருந்தால் முடியும். தற்போது நாளிதழ்களும் பருவ இதழ்களும் அரசு அலுவல் குறிப்புகளும் இணையப் பக்கங்களாகவும் கிடைக்கப்பெறுகின்றன. ஆனால் தகுந்த எழுத்துரு வடிவம் இருந்தாலன்றி அவற்றுடன் எழுத்து பரிமாற்றம் செய்ய இயலாது. ஒவ்வொன்றுக்கும் ஒரு எழுத்துரு வடிவம் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். ஆங்கிலத்தைப் போன்று தமிழையும் கணினியில் கையாள முடியாதா?

ஆங்கிலம் அல்லாத மற்ற இலத்தீனக் குடும்ப மொழிகள், கீழை நாட்டு மொழிகளான சீன, கொரிய மற்றும் ஜப்பானிய மொழிகள் ஆங்கிலத்தைப் போலவே கணினியில் இயல்பாகக் கையாளப்படுகின்றன. அப்படி என்றால் தமிழ் மொழி கணினிக்கு உகந்தது அல்ல என்று கூறமுடியாது. கணினியின் “மொழி” எழுத்து மொழி அல்லவே.

கணினியில் பயன்பாட்டுக்காக தமிழில் எண்ணற்ற எழுத்துருக்கள் உள்ளன, ஒவ்வொன்றும் அதனை உருவாக்குபவரின் சொந்தத் தெரிவாக உள்ளது. அவற்றுக்கிடையே அடிப்படை ஓர்மை (Chiversal) வழங்கப்பட்டுள்ளது. இந்த வழங்குதல் (Assignment) உலக அளவில் ஏற்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வடிவங்கள் விருப்பத்திற்கேற்பப் பயன்படுத்தப்படுகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட ஆங்கிலம் அல்லாத மொழிகளின் பயன்பாட்டுக்காக விசைப்பலகைகளில் ஆங்கிலத்தில் இருந்து வேறு மொழிக்கு மாறுவதற்கும் ஆங்கிலத்திற்கு திரும்புவதற்கும் ஒரு பொத்தான் இருக்கிறது. இந்தப் பொத்தானின் இயக்கத்துடன் எழுத்துரு வழங்குதல் ஒருமித்த ஏற்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட வன்பொருள் மற்றும் மென்பொருள் நுட்பங்களுடன் இசைந்த விசைப்பலகை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே ஓர்மை ஒழுங்கமைவு (Universality) அல்லது (Universal Informity) ஆகும். விசைப்பலகைப் பொத்தான்களுக்கு எழுத்துரு வழங்குதல் தமிழில் கூட ஒன்றும் புதிதல்ல. தட்டச்சு எந்திர யுகத்தில் பின்பற்றப்பட்டதுதான்.

ஆங்கிலத்தோடு தமிழ் மொழி பயன்பாடும் கூடிய விசைப்பலகை உருவாக்கப்படவேண்டும். தமிழ் நாட்டில் விற்பனைக்கு வரும் அனைத்து கணினிகளும் இந்த இருமொழி விசைப்பலகையோடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கணினி தயாரிப்பாளர்களுக்கு இது தொழில்நுட்ப மற்றும் வணிக நோக்கில் புதிதல்ல. ஆங்கிலம் அல்லாத மொழிகளுக்கான சந்தையில் இருக்கிறார்கள். இந்தியாவில் அதற்கான தேவை இல்லை என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். இங்கு கணினி நுகர்வோர் ஆங்கில அறிவு பெற்றவர்கள். தங்கள் மொழியில் படிக்காதவர்கள். தங்கள் மொழியில் கணினியில் தகவல் பரிமாறிக் கொள்ளும் அவசியம் இல்லாதவர்கள். ஆகையால் கணினி தயாரிப்பாளர்கள் இதில் முனைப்புக் காட்டாதது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.

பல்வேறு தளங்களில் அரசு இ-ஆளுமை (E-Governance) மூலம் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கிறது. இதில் எழுத்து பரிமாற்றம் இன்றியமையாதது. இருமொழி விசைப்பலகையைக் கணினிப் பயன்பாட்டில் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். மைய, மாநில அரசுகள் முழு வரிச்சலுகை வழங்கினால் இந்த இருமொழிக் கணினிகளின் விலை குறைவாக இருக்கும். இதனால் தயாரிப்பாளர்களும் நுகர்வோர்களும் இருமொழிக் கணினிகளில் ஆர்வம் கொண்டு சந்தை வளர்ச்சி பெறும்.

செம்மொழித் தமிழ் மாநாடு நடக்கும் இந்த ஆண்டே ஆங்கிலமும் தமிழும் கொண்ட இருமொழி விசைப்பலகைக்கான ஓர்மை ஓழுங்கமைவு ஒன்றை உருவாக்கி கணினி தயாரிப்பாளர்களுடன் பேசி தொழில் நுட்பம் நடைமுறையில் சாத்தியமாகும் வண்ணம் தமிழக அரசு முனைய வேண்டும். அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் இருமொழி விசைப்பலகையோடு கூடிய கணினிகளைத் தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தி வாங்கும்போது இருமொழிக் கணினிகளின் சந்தை உருவாகத்தொடங்கும். தமிழில் கணினி ஆளுமை சாத்தியமாகும்.

 

Pin It