சமஸ்கிருதம் இந்திய அரசால் செம்மொழி என்று அங்கீகாரம் செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் கழித்து, தமிழர்களின் பல்வேறு அமைப்பினரின் பல்வேறு விதமான கடும் போராட்டத்திற்குப் பின், ஒரு வழியாக மத்திய அரசு தமிழைச் செம்மொழி என்று அறிவித்த பின், தமிழக அரசால் சரியாகச் சொன்னால் முதல்வர் கலைஞரின் ‘தனிப்பட்ட’ பேரார்வத்தின் பேரில் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்பட இருக்கிறது.
மொழி தொடர்புக்கருவி என்பது அதன் அறிவியல் மற்றும் பயன்பாடு. ஆனால் அதனையும் தாண்டி அது அரசியல் கருவியாகவும், பண்பாடு, வரலாறு, அரசியல் சமூக உளவியல், மானுடவியல், அறிவியல், உணர்வியல் என்று சமூகவாழ்வின் சகல கூறுகளிலும் ஊறிப் பொதிந்து கிடக்கிற ஒரு உயிர் என்பது அடிப்படை அறிவியலைத் தாண்டி இயங்கியல் தன்மையில் சிந்திக்கும் எவருக்கும் புலப்படுகிற கருத்து நிலையாகும்.
உலகின் மிகத் தொன்மையான மொழிகளுள் ஒன்றாகிய தமிழ் தம் இயல்பிலேயே செம்மாந்த தன்மையுடையதுதான். புதிய சொற்களை உருவாக்கிக் கொள்ளத் தேவையான அளவற்ற வேர்ச்சொல் வளம் மிக்க மொழி. அதனால்தான் ஒரு முறை யுனெஸ்கோ கூரியர் இதழின் தமிழ்ப்பதிப்புக்குப் பொறுப்பாளராக இருந்த அறிஞர் மணவை முஸ்தபா மதுரையில் நடந்தக் கூட்டத்தில், ‘மற்ற மொழிப் பதிப்புகளுக்கெல்லாம் நான்கைந்து ஆசிரியர்கள் , குறிப்பாக இந்தியில் மொழி பெயர்க்கவென்று நிறைய ஆசிரியர்கள். தமிழில் எண்ணிறந்த வேர்ச்சொற்கள் இருப்பதால் தமிழ்ப் பதிப்புக்கான மொழிபெயர்ப்புக்களை நான் ஒருவனே செய்துவிட முடிகிறது. மற்றவர்களெல்லாம் அதனைக் கேட்டு ஆச்சரியப்பட்டனர்’ என்றார். தமிழ் இன்றளவும் வளமோடிருப்பதற்கு இந்த வேர்ச்சொல் வளமே மிக முக்கியக் காரணமாகும்.
மேலும் ஓர் இனம் பன்னெடுங்காலமாகப் பூமிப்பந்தில் நிலை கொண்டிருப்பதன் அடையாளமே அதன் வளமான மொழிதான். வரலாற்றில் அரசு முறைகள் தோன்றிய பின், மொழியின் வாழ்வியல் பாத்திரம் மிகுந்த சிக்கலான வடிவங்களை எடுத்துள்ளது. தமிழ்ச் சமூகத்தின் சங்ககாலத்தில் மிகுதியும் கேட்ட மக்களின் வாழ்வியல் குரல் மங்கி, வரலாற்று வளர்ச்சிப்போக்கில் மூவேந்தர் அரசுகளின் தோற்றத்தின் பின் ‘அரசு மொழி’ என்கிற கருத்தாக்கம் அரசியலின் வழி மக்கள் தொகுதியினரின் வாழ்வியலை எளிமையாக்கவோ அல்லது மேலும் சிக்கலாக்கவோ உதவி வந்துள்ளது. அது மொழி, மொழி சார்ந்த கல்வி, இலக்கியம், கலைகள் என்று யாவற்றையுமே தம் வயப்படுத்தி தமக்கு ஏவல் செய்யும் குறும் பேய்களாக வைத்திருப்பதிலேயே குறியாக இருந்தனர். சங்க காலத்தின் வள்ளல்களைச் சார்ந்தியங்கிய இலக்கியம், பின்னர் அரசவை சார்ந்தே இலக்கியம், அரசர் முன்னிலையில் அரங்கேற்றம், அரசர் உதவியால் புலவர் உயிர் தரித்தல், அரசரின் தானத்தால் உயிர் வாழ்தல், என்று பின்னர் பக்தியாக அது உருமாற்றம் கொண்டது. பக்திவேடத்தோடு அரசு புது முறையில் தனது இருப்பை மக்கள் திரளிடையே உறுதி செய்தது. பேரரசுகள் சிதைந்த காலத்தில் இலக்கியம் தன் சப்பாணித் தன்மையை இழக்காமல், குறு நில மன்னர்கள், பண்ணையார்களைப் பாடித் தொடர்ந்தது. அப்புறமும் வரலாறு நடந்த காலத்தில், மன்னர் முறை தகர்ந்து மக்கள் இலக்கியத்துக்கான களம் அமைந்தது. மக்கள் இலக்கியம் அரசு வழியிலல்லாமல் தனித்த பாதையில் சொலவடைகள், நாட்டுப்பாடல்கள், சடங்குப் பாடல்கள், சித்தர் இலக்கியம் என்று அது ஒரு தனிப்பட்ட வகைமையில் பயணித்தது.
தமிழரின் வாழ்வியலை மிகுதியும் சித்தரித்த செவ்வியல் தன்மையிலான இலக்கியங்களின் காலமாகச் சங்க இலக்கியங்களின் காலம் இருந்தது. தொடர்ந்து சமூகத்தில் ஏற்பட்ட வரலாற்றுவழிக் குழப்பங்கள் அற இலக்கியங்களின் தோற்றத்திற்கு இட்டுச் சென்றிருக்கலாம். அடுத்துத் தோன்றிய பல்லவர் காலம், களப்பிரர் காலம், சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கு, அவர்கள் படைத்த பல இலக்கியங்கள், அது தமிழரின் வாழ்வியலில் விளைவித்த விளைவுகளின் தொடர் நிகழ்வாகச் சைவ, வைணவ எழுச்சியைத் தொடர்ந்து இலக்கியம் பக்தியின் வழிப்பட்டுப் பயணித்தது. மத வகைப்பட்டதாக இல்லாமல் இந்தக் காலத்தில் எதிர்நிலையிலிருந்த பயணப்பட்டுத் தனித்தியங்கின சித்தர் இலக்கியங்கள்.
பேரரசுகள் தகர்ந்த காலத்தில் சிற்றிலக்கியங்களின் வகை வகையான பெருக்கம் தமிழில் நிகழ்ந்தது, நிகழ்கிறது. பின்னல் நிகழ்ந்த ஐரோப்பியர் வருகை, அதன் விளைவுகள், நவீனக் கல்வி முறை, ஐரோப்பிய எதிர்ப்பு, விடுதலைப் போராட்டம், விடுதலை, விடுதலைக்குப் பிந்திய நவீன சமூகம், சமூகம் சார் போராட்டங்கள், தேசிய, திராவிட, பொதுவுடமை, தலித்தியம், பெண்ணியம், அரவாணி இலக்கியம், குழந்தை இலக்கியம், நவீன இலக்கியம், இலக்கணவியல், மொழியியல், கணிணிஇயல், மருத்துவவியல், பொறியியல் என்று பல வகைகளில் கிளை பிரிந்து வகை பிரிந்து கிடக்கிறது தமிழ் மொழி. தமிழ் மொழி மட்டுமல்ல இன்றைய உலகின் அனைத்து மொழிகளுமே பல்வேறு துறை சார்ந்த வகை பிரிந்தே கிடக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் பல வகையான இலக்கியங்களின் மீள் கண்டுபிடிப்புக்கள் நிகழ்த்தப்பட்டன.
திராவிட இயக்கமும் மொழி சார்ந்த அடையாளத்துடன் தம் அரசியலை முன்னெடுக்க இத்தகைய புறச் சூழல்கள் உதவின. ஆனால் கால காலமாக நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. அது தமிழ் கூறும் நல்லுலகு நோக்கிப் பல் தேயத்தினர், பன்மொழி சார்ந்தவர்களின் படையெடுப்பு. குறிப்பாக வட மொழியின் படையெடுப்பு. தொல்காப்பியல் காலத்திலிருந்தே துவங்கிய இந்த மொழிக்கலப்பு, அதனைப் பண்பாட்டுக் கலப்பென்றும் கொள்ளலாம். மொழி குறித்த பழமை சார்ந்த, பிரபுத்துவ வகைப்பட்ட கருத்தியல்கள், முதலாளித்துவ வகைப்பட்ட கருத்தியல்கள், நவீன சமூக வாழ்வின் மொழி வகைப்பட்ட மதிப்பீடுகள், சமகாலப் பிழைப்புக்கும் மொழிக்கும் இடையிலான தொடர்புகளின் வேறு பட்ட தன்மைகள் போன்றவை இன்றைய சம காலத் தமிழ் வாழ்வின் சகல துறைகளிலும் நிலவுகின்ற மாபெரும் மொழி சார்ந்த குழப்பமாக நிலவுகின்றன.
இன்றைக்கும் வழிபாட்டு மொழி, கல்வி மொழி, அலுவல் மொழி, பிழைப்பு மொழி, தொடர்பு மொழி என்று தமிழ் வாழ்வின் சகல கூறுகளிலும் நிலவும் மொழி சார்ந்த குழப்பங்களை நாம் தமிழ் மக்களின் வரலாற்றிலிருந்தே உய்த்துணர முடியும். அதற்கான தீர்வுகளையும் நாம் வரலாற்றிலிருந்தே உருவாக்கிக் கொள்ள முடியும்.
என்றாலும் ஐரோப்பியர் வருகைக்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் விளைந்த நவீனக் கல்வி முறையின் அறிமுகம், தொடர்ந்த கல்விப் பரவல், காகிதக் கலை மற்றும் அச்சு ஊடகங்களின் தோற்றம்- வளர்ச்சி, இதழியல் துறையின் தோற்றம்- வளர்ச்சி, புதிய புதிய எழுத்து முறைமைகளுக்கான தேவைகள், மேலை இலக்கியத்தின் அறிமுகம், நாவல், சிறுகதை, கட்டற்ற கவிதை முதலான மேலை இலக்கிய வடிவங்களின் அறிமுகங்கள், ஐரோப்பிய வகைப்பட்ட அரங்கு முறைகளை, நேர மேலாண்மை முதலானவற்றை உள்ளடக்கிய நாடக அறிமுகங்கள், மருத்துவம், பொறியியல், இரசாயணம், இயற்பியல், உயிரியல், கணக்கியல் போன்ற நவீனப் பகுப்பாய்வு முறைகளைக் கொண்ட விஞ்ஞானங்களின் அறிமுகம், நவீன வரலாற்றியல், புவியியல் அறிவுகளின் அறிமுகம், நவீன நூலகக் கோட்பாடுகள், நூல் சேகரிப்பு முறைகள், அறிவுச் சேகரிப்பு, அறிவுப் பகுப்பாய்வு முறைகள், பிற துறை சார்ந்த ஆய்வு முறைகள் போன்ற பல நவீனக் கருத்தியல் மற்றும் நடைமுறைகளின் விளைவாகத் தமிழ் வாழ்வில் ஏற்பட்ட அசைவுகளே இன்றைய நவீனத் தமிழின், தமிழரின் வளர்ச்சிக்கும் தளர்ச்சிக்குமான காரணிகளைக் கொண்டு வந்து சேர்த்தன. புதிய புறச் சூழல்களை உள்வாங்கி பாரதி சொன்ன சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற அறைகூவல் உணர்வின் வழி இயங்கிய பலரும், பல்துறை சார்ந்து முயன்று தமிழ்ப் பனுவல்களை உருவாக்கியவர்களே தமிழின் வளர்ச்சிக்கு உரமும், வளமும் சேர்த்த அறிஞர்களாக இன்று நம்மால் நினைக்கப்படுகிறார்கள்.
தமிழ் வாழத் தமிழர் வளர்வார். தமிழர் தமிழோடு வாழத் தமிழும் வளரும். வரும் தலைமுறை தமிழின் சீரிளமைத் திறம் வியந்து, செயல் புரிந்து வாழ்த்தும்.