சமரசம் உலாவும்
உலகின் அறிவுகளும்
அறிவின் அணுக்கர்களும்
அறிவு தேடி அலைபவர்களும்
அறிவுக்காய்த் தாகித்தவர்களும்
அறிவை மோகித்தவர்களும்
அமர்ந்திலங்கும் நவீன
அறிவின் விழுதுகள் இறங்கிய
ஆலமரம் தானா கிடைத்தது?
அண்ணா நினைவு நூற்றாண்டு
நூலகம் தானா கிடைத்தது?

அண்ணாவின் பேரால் கட்சி
அண்ணாவின் உருவந்தாங்கிய கொடி
அண்ணாவின் பெயர் பொறித்த நூலகம்
அவர் செய்ததால் பொறுக்காமல் இடி!
அண்ணாவின் திராவிடர்கள் மட்டும்
முன்னேறவே கூடாதா?

அதிகாரத்தின் பூட்ஸ் கால்களில்
குழந்தை மருத்துவப் படம் மாட்டி
குழந்தைகளின் உடல் நலத்தை
நாடுகிற படம் காட்டி
அவர்களிடமிருந்து காலகாலமாய்ச்
சுரந்த அறிவின்
சுரக்கப் போகும் அறிவின்
ஊற்றுக்கண்களை அழித்துச சிதைக்கிற
குரூரத்தை மறைக்கிறது

மீண்டும் மீண்டும்
உழைக்கும் மனிதர்களின் மூளைகளில்
அறிவு சென்று
பதிந்து விடாமலும், பதிந்து
வளர்ந்து விடாமலும் இருக்க
காதுகளின் வழியை அடைக்க
இந்திய வரலாறெங்கும்
மனுவின் கை
ஈயம் காய்ச்சிக் கொண்டே இருக்கிறது

உலகமெங்கும் இப்படித்தான்
அதிகாரங்கள்
அறிவுகளை அழித்துவருகின்றன

நாளந்தாப் பல்கலை
நடந்த சுவடில்லை...
அனல்வாதம் புனல்வாதம் நடத்தி
அழித்த தமிழரின் அறிவுகள் எத்தனை... !
யாழ் நூலகம் எரித்த
கயமைக்கு அளவில்லை..
அமெரிக்கர் சிதைத்த ஈராக்கின்
அருங்காட்சியகம் மறக்குமா?

பால்விலை உயர்வால்
பற்றியெரியும் வயிறுகளின் நேரமிது
பேருந்துக் கட்டண உயர்வால்
சக்கரமாய் வாழ்க்கை
தேய்கிற காலமிது
மின்சார வயர்களில்
சுருக்கு மாட்டித்
தொங்கிச் சீரழியும்
தருணங்கள் இவை
வீட்டுவரிச் சீரமைப்புக் கத்திகளைத்
தீட்டிக் கொண்டிருக்கிறது மாநகராட்சி

நாளொரு அதிரடி
பொழுதொரு தருமஅடி
முகமூடி வேண்டாம்
கத்தி, துப்பாக்கி, எறிகுண்டுகள்
என்று எந்த ஆயுதமும் வேண்டாம்
அடியாட்களும் வேண்டாம்

ஒரு நள்ளிரவுச் சட்டம் போதும்
நாள்தோறும் கொள்ளையடிக்கிற
ஏடிஎம் இயந்திரங்களாய்
வாக்களித்த மனிதர்களின்
பாக்கெட்டுகளை மாற்ற...
ஒரு அமைச்சரவை முடிவு போதும்
வாக்களித்த மக்களுக்கு
அறிவு கிடைக்காமல் நூலகத்தை
அதிரடியாய் இடம் மாற்ற

இம்மென்றால் தரும அடி
ஏனென்றால் மரண அடி
எதுவுமே இல்லையென்றால்
பழைய ஆட்சிப் பூச்சாண்டி

ஆகிப்போச்சு ஆறுமாசம்
இன்னும் இருக்குது
ஒன்பது பாகம்...
ஒசத்தி கண்ணா ஒசத்தி
பேசுங்க பேசுங்க
பேசிக்கிட்டே இருங்க
கேளுங்க கேளுங்க
கேட்டுக்கிட்டே இருங்க
பாருங்க பாருங்க
பாத்துக்கிட்டே இருங்க

இது உலகத் தொலைக்காட்சிகளில்
முதன்முறை இல்லை...
24 மணிநேரமும்
எல்லாக் காலமும்
எங்கேயும் எப்போதும்
ஒளிபரப்பாகும்
அரசு வன்முறைத்
தொல்லைக் காட்சிகளின்
அதிரடி ஒளிபரப்பு.

தெருவில் இறங்கிப்
புதிய படங்களை ஒளிபரப்புகிறார்கள்
எழுச்சியின் செய்தியை
உலகுக்குச் சொன்ன
டுனீசிய மக்களும்
முபாரக்கையும் தொடர்ந்து
துரோக ராணுவத்தையும் எதிர்க்கிற
எகிப்தின் மக்களும்
வால் தெருவில்
போர்வடம் பிடிக்கும்
அமெரிக்க மக்களும்
மேன்மை தாங்கிய
போராட்டக் குழுவினராய்
மாற்றம் கண்ட
லண்டன் தெரு வாசிகளும்

மக்கள் கவிஞனின் பாட்டுவரிகள்
இப்போதும் நினைவுக்கு வருகின்றன
"தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா-எல்லாம்
பழைய பொய்யடா.."

Pin It