ப.கவிதா குமார் எழுதிய

உத்தப்புரங்களும் சாதியத்தின் அந்தப்புரங்களும்

அழகியலோடும், இடதுசாரிக் கவிஞனுக்கே உரிய அரசியலோடும் தம் கவிதைகளைப் படைத்துவருபவர்            ப.கவிதா குமார், உத்தப்புரங்களும் சாதியத்தின் அந்தப் புரங்களும் என்ற இந்நூலின் மூலம், தீக்கதிர் நாளிதழ் மற்றும் கீற்று இணைய இதழ் போன்றவற்றில் அவ்வப்போது எழும் பிரச்சனைகளையொட்டித் தாம் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டதன் மூலம் இடதுசாரி அரசியல் சார்ந்த எழுத்துலகோடு தம்மை உறுதியாக நிலை நிறுத்த முயன்றுள் ளார்.

சமீப காலங்களில் தமிழக அரசியலில் சூடு கிளப்பிக் கொண்டிருக்கும் உத்தப்புரம் சிக்கல்கள், ஆயுள் தண்டனைக் கைதிகளின் நிலை, மதுரை மேலவாசல் மக்களின் இடப் பெயர்வுப் பிரச்சனை, நவீன முறையிலான அரிசி கடத்தல், கொத்தடிமைகள், நவீன கொத்தடிமைத் திட்டமான சுமங்கலித் திட்டம், கந்துவட்டிக் கொடுமைகள், சிதிலமாகிவரும் சிட்கோ வீடுகள் போன்ற பல சமகால நிகழ்வுகள் கவிதா குமாரின் கைவண்ணத்தில் கட்டுரையாகியுள்ளன.

பிற இதழ்களில் இத்தகைய பொருட்கள் குறித்த கட்டுரை கள் எழுதும்போது அது தனிப்பட்ட இயக்கங்கள், நபர்கள் பற்றிய எத்தகைய விமர்சன எல்லைகளையும் நீட்டித்துச் செல்ல வாய்ப்புள்ள கருப்பொருட்கள் இவை. ஆனால், அவற்றை யெல்லாம் கூர்மையான சமூகப் பார்வையோடு பார்க்கப் பயின்றிருக்கிறார் ப.கவிதா குமார்.

இந்த நூலில் தனித்துத் தெரிவது அதன் கடைசிக் கட்டுரையான “கண்ணாமூச்சி ரே. . . ரே...”. கவிதா குமாரின் எழுத்து அடுத்துப் பயணிக்க வேண்டிய திசைவழியைச் சுட்டும் கட்டுரையாகும் இது. தன் வாழ்வின் இளமைப் பருவத்தில் கடந்த காற்றை வெகு அற்புதமாகவும், அதே நேரம் அதன் சமூக விமர்சனத் தன்மை குன்றாமலும் இக்கட்டுரை உருவாகி யுள்ளது. தம் காலத்தில் தாம் அனுபவித்த சுற்றுச் சூழல்கள், விளையாட்டுக்கள், விளையாடுவதற்கான இடங்கள் போன்றவை தம் குழந்தைகளுக்கு இல்லாமல் போனதன் ஏக்க வெளிப்பாடாகவும், அதே நேரம் நம் காலத்தின் குழந்தைகளுக் கான சுற்றுச் சூழல் களங்கள் நாகரிகத்தின் பெயரால் கொடூர மாகச் சிதைக்கப்பட்டதன் சாட்சியங்களை மனவலியோடு எடுத்துவைக்கும் கட்டுரையாக இது மலர்ந்துள்ளது.

நூலின் இதர கட்டுரைகளில் பல நாளிதழின் அன்றாடத் தேவைகளுக்கான விவரத் தொகுப்புக்களாகச் சுருங்கி விடுகின் றன. தமக்கான  இடங்களைப் படைப்பூக்கமுள்ள கட்டுரைகளுக் கான தளமாக மாற்றும் வித்தையும், தேவையும், அதற்கான உழைப்பும் தொடர் எழுத்தின் மூலமாகக் கவிதா குமாரின் கைளை வந்தடைதல் இடதுசாரி எழுத்துலகத்தின் இன்றைய தேவைகளுள் ஒன்றாக உள்ளது.

- ஸ்ரீரசா

வெளியீடு: கயல் வெளியீட்டகம்,

னு-1, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு,

சொக்கிகுளம், மதுரை- 625 002. விலை ரூ. 50.

Pin It