மும்மொழி அறிஞர் மு.அருணாசலனார், முத்தமிழில் ஒன்றாகிய இசைத்தமிழ் பற்றிய வரலாறு ஒன்றை மிக விரிவாக எழுதியுள்ளார். முதல் நூல் தமிழ் இசை இலக்கிய வரலாறு 20+748 பக்கம் கொண்டது. இரண்டாம் நூல் தமிழ் இசை இலக்கண வரலாறு 20+644 பக்கம் கொண்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் இசை வளர்ந்த வரலாற்றை, தக்க ஏற்புடைய சான்றாதாரங் களுடன் விளக்கும் இப்பெரு நூல்கள் தமிழின் இசை தொடர்பான அனைத்தையும் ஆவணப்படுத்துகிற களஞ்சியமாகும்.

இந்நூல்கள் தருகிற அரிய செய்தி, பழைய தமிழ்ப் பொருளுக்குப் புதிய சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டினர் என்பது தான். “கருநாடக சங்கீதம் என்ற ஒன்று இல்லை; அந்தப் பெயரால் சொல்வதெல்லாம் தமிழிசை தான். திருவையாற்றில் தியாகையர் பாடியதெல்லாம் தமிழிசையைத் தெலுங்கு மொழியில் பாடிய கீர்த்தனங்கள்’’, என்னும் கருத்தை சான்றாதாரங்களுடன் இவை நிறுவுகின்றன.

இந்நூல்களுள் தெளிவு தர வேண்டுமென்பதற்காக கருநாடக சங்கீத மும்மூர்த்திகள் பற்றிய, அடிப்படை வரலாறுகள் தரப்பட்டுள்ளன. தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தன இசைகளின் தோற்றம்; வளர்ச்சி பற்றிய விவரங்களையும் இந்நூல்கள் தருவதன் காரணம், அவை எவ்வாறு தமிழிசையினின்று மொழிமாற்றம் பெற்றன என்பதை அறிவுறுத்துவதற்கேயாம். சமஸ்கிருத இசை இலக்கண நூல்கள் பற்றிய விவரமும் விளக்கமும் இவற்றில் உள்ளன. இவ்வடமொழி குறிப்புகள் முக்கியமானவை. இந்நூல்களில் வரும் தெலுங்கிசை பற்றிய செய்திகள், இன்று தெலுங்கிசையே இசை எனக்கூறி அத்தெலுங்கிலேயே பாடுகிறவர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக இந்நூல்கள் தரும் செய்திகள் தமிழிசை வரலாறு பற்றி மட்டும் அமையாமல், தமிழகத்தில் நிகழ்ந்த பொது இசை பற்றிய அனைத்து வரலாறுகளையும் தெரிவிக்கின்றன.

அருணாசலனார், தமிழிசையே தெலுங்கு மொழியில் பாடப்பட்டது; வடமொழி இசை இலக்கண நூல்களுக்கு அங்கு சாகித்தியம் இல்லை; தமிழே அவற்றுக்கான இசை இலக்கியத்தைப் பெற்றிருந்தது; தமிழிசைச் சங்கம் எனத் தொடங்கியது தவறு; ஆதி கருநாடக இசைச் சங்கம் எனத் தொடங்கியிருக்க வேண்டும் என்ற கருத்துக்களை மிக வலுவாக முன் வைக்கிறார். அதாவது தமிழிசையே தெலுங்கு மொழியில் பாடப்பட்டது, கருநாடக இசை என்பது தமிழிசையே, பெயர்மாற்றியுரைக்கப்பட்டதே தவிர இசையில் மாற்றமில்லை என்ற இக்கருத்து, பலருக்கு வியப்பை விளைவிக்கக்கூடும்; அநேகருக்கு ஆச்சரியமாயிருக்கும்; நம்புவது கூடக் கஷ்டமாயிருக்கும் எனக் குறிப்பிடுகிறார். இதனாலேயே உண்மை உண்மை யல்லாமல் போனது என்பது இவரது தீர்மானம், முடிவு. தமிழிசை வேறு, கருநாடகஇசை வேறு என்ற கருத்தைநாமே ஒப்புக்கொண்டு பரப்பிவிட்டதாக வருத்தப்படுகிறார். கருநாடக இசை என்பது தமிழிசை யினின்றும் வளர்ந்தது என்பதைவிட, அது தமிழிசையே என இவர் நிறுவுகிறார். தமிழிசையைத் தெலுங்கு மொழியில் பாடினால், அது எவ்வாறு தமிழிசை ஆகாது போய்விடும் என்பதே இவர் எழுப்பும் வினா. மொழி மாற்றம் உண்டே தவிர இசை ஒன்றே என்பதை இவர் தொடர்ந்து தக்க ஆதாரங்களுடன் நிறுவுகின்றார். 

களப்பிரரும் பல்லவரும் ஆண்ட கி.பி.250 முதல் 850 வரையிலான அறுநூறு ஆண்டுகள் ஆங்கிலத்தைப்போலவே தமிழகத்தை வடமொழி பற்றிக்கொண்டது. இவ்வாட்சிகள் நீங்கி, சோழராட்சி மலர்ந்த பிறகும் வடமொழியின்மேலாதிக்கம் மாறவில்லை. தமிழுக்கு அது பொற்காலமாயினும் வடமொழியின் மேலாதிக்கம் மாறவில்லை. ஆங்கிலேயர் போனபிறகும் ஆங்கிலம் நம்மைப் பற்றிக் கொண்டிருப்பதுபோல, வடமொழியும் தமிழகத்தில் நீடித்தது. மேலே கூறிய ஆங்கிலத்தின் நிலையனைத்தும் வடமொழிக்குப் பொருந்தும்.

இதனை முழுமையாக உணர்ந்தாலன்றி, அருணாசலனாரின் கருத்துகள் பலருக்குத் தெளிவுபடுவது கடினமே.

மேலும் சமண புத்த சமயங்களில் நல்ல கருத்துக்கள் பல உண்டெனினும், அவை தமிழர் பண்பாட்டுடன் இயைந்து வரவில்லை. அவையும் வடமொழியையும் அதன் பாகதங்கள் எனப்பட்ட பாலி,அர்த்தமாகதி மற்றும் தென்னாட்டிற்கென உருவாக்கிய கிரந்தம் ஆகிய இவற்றையே தூக்கிப் பிடித்தன. பிறகு மக்களை ஈர்க்க வேண்டுமென்பதற்காக தாய் மொழிக்குப் பணி செய்ய முந்தின. இதிலும் ஐரோப்பிய பாதிரிமார்கள் சமயத்தைப் பரப்ப என்று வந்தவர்கள் தமிழ்ப் பணியில் மேம்பட்டது போன்ற நிலைமை காணப்படுகிறது.

தமிழர்கள் தங்கள் சமயம் பண்பாடு மொழி ஆகியவற்றைக் காத்துக்கொள்ள வைதிகத்தை நாடவும், வைதிகர்கள் தங்களுக்கு எதிரான புத்த சமண சமயங்களை வெருட்டவும் மடைமாற்றவும் தமிழர் சமய வழிபாடுகளுடன் கலக்கவும் ஒரு ‘கொள்கையில்லா கூட்டணி’ ஏற்பட்டு அது மிக நீண்ட காலத்திற்கு நீடித்தது.

இன்றுள்ள குழப்பங்களுக்கெல்லாம் இதுவே காரணம். ஏன் தமிழரின் பண்பாட்டில் வேரூன்றி விளைந்த இசை, சிற்பம், நாட்டியம், ஆகமம், கோயிற்கலைகள், வழிபாடுகள் எல்லாம் வட மொழி மயமாகக் காணப்படுகின்றன என்றால், இப்பின்னணியே காரணமாகும்.

ஊர்ப்பெயர், மக்கட்பெயர், இறையவர் பெயர், வானியல் கணியவியல் முதலான அறிவியல் என அனைத்தும் சமஸ்கிருதமயமாக்கப்பட்டன. தமிழ்ப்பெயர்களும் அடிவேர்களும் மறைக்கப் பட்டு, அழிக்கப்பட்டுப் போயின. தமிழர்களே இன்றைய ஆங்கில மோகத்தில் அழுந்திக் கிடப்பதுபோல், அன்று தங்களை இழந்து, தாழ்வு மனப்பான்மைக்கு இரையாகினர். தமிழர்களுக் கேயுரிய பெரியபுராணமும் திருவி¬ளாடற் புராணமும் சமஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அவ்வடமொழி நூல்களிலிருந்து அவை தமிழுக்கு வந்ததாகக் கதை கட்டினரென்றால் வேறென்ன வேண்டும்!

மேலும் தொடக்க காலக் கபிலர், பரணர் முதலான தமிழக அந்தணர்கள் போலாது, பல்லவர் நாயக்கர்கள் காலத்தில் புதிது புதிதாகக் குடியேற்றப்பட்ட பார்ப்பன‌ர்களால் இங்கு தொன்று தொட்டு வாழ்ந்தவர்களும் மாறிப் போயினர்.

தமிழிசை என்ற மாளிகையைத் தாங்கி நிற்கின்ற தூண்கள் நான்கினை இவர் குறிப்பிடுகிறார். முதல் தூண் சிலப்பதிகாரம். அப்போது இந்தியாவில் வேறு இசை இல்லை என்பதை நிறுவுகின்றார்.

இரண்டாம் தூண் திருஞானசம்பந்தர். இதுதமிழைக் காத்த தெய்வ இசையாக மலர்ந்தது.

மூன்றாம் தூண் அருணகிரிநாதர். அது தாளத்தை முக்கியமாக்கி தமிழ் இசையை வளர்த்தது. நான்காம் தூண் முத்துத்தாண்டவர். அதுவே கீர்த்தன வடிவத்தை முழுமையாக்கித் தமிழுக்குத் தந்தது.

தியாகையர் போன்றவர்கள் இந்த மாளிகையிலிருந்து சுகமாகவும் இனிதாகவும் எளிதாகவும் இசை பாடினார்கள். இதனை நிறுவுமாறு பிற விளக்கம் பலவும் அமைகின்றன. தியாகையருக்கு இசையறிவு காவேரிக்கரையில், திருவையாற்றில் வளர்ந்ததேயன்றி, ஆந்திராவிலன்று; தெலுங்கு மொழிபேசியோர் சூழலிலன்று. உண்மையில் தியாகையரின் தெலுங்கை, தெலுங்கர் ஏற்றுக் கொண்டனரா என்பது ஐயமே. அன்று ஆந்திர முதலமைச்சராயிருந்த என்.டி..ராமராவ், தியாகையருக்கு அங்கே விழா எடுக்க மறுத்ததை எண்ணிப் பார்க்க வேண்டும்.

திருவையாற்றுக் கோயில் மேளக்காரர்களிடமிருந்தே தியாகையர் தம் இசைப் புலமையை வளர்த்துக் கொண்டார். அவர் தாயார் சீர்காழி அருணாசலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகளைத் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பாராம். தியாகையர் சிவநெறியினராயினும், அவரிடம் இராமபக்தி வளரக் காரணமும் இதுவே.

கீர்த்தன வடிவமே இன்று அவர்கள் போற்றும் கலிப்பாடல்களிலிருந்தும், யாப்பருங்கல விருத்தியிலுள்ள மேற்கோள் பாடலிலிருந்தும் அப்பர், சம்பந்தர் தேவாரப் பாடல்களிலிருந்தும் இவ்வடிவம் தோன்றி வளர்ந்ததை இவர் தெளிவுபடுத்துகிறார். கி.பி. 16ஆம் நூற்றாண்டில், மேளக்காரர் - இசை வெள்ளாளர் மரபில் தோன்றிய முத்துத் தாண்டவரே, கீர்த்தன வடிவத்தின் ‘பிதாமகர்’_ அவரே கீர்த்தன வடிவத்தை முதன்முதல் அமைத்துத் தந்தவர் என நிறுவுகிறார்.

முத்துத் தாண்டவருக்குப் பிறகு வந்த பாபநாசம் முதலியார், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை மூவருமே கருநாடக இசையின் ஆதி மும்மூர்த்திகள் என நிறுவுகிறார். இன்று எதிர்பாராமல் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பாதில், கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என்று, சியாமா சாஸ்திரி, தியாகராச சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் மூவரையும் கூறி, அவர்களிடமிருந்தே கர்நாடக சங்கீதம் வளர்ந்து சிறந்தது என்பதுபோல் ஒரு சாரார், தமது மேலாண்மையால், பிறரை வாயடைக்கச் செய்து பரப்பி வருகின்றனர். இதை உடைத்தெறிந்து, அவர்களுக்கு முன்பே வளர்ந்த தமிழ் இசை வரலாற்றை மட்டுமின்றி, அம்மூவர் வரலாற்றையும் விளக்கமாகத் தருகிறார் இப்பேரறிஞர். வெறுமனே அவர்களையும் தெலுங்கிசை யையும் வானளாவப் புகழும் இசைவாணர்களே அறியாத செய்திகளை இவர் தருகிறார். அறிஞர் மு. அருணாசலம் அவர்கள் எழுதிய இவ் இரு நூல்களையும் முழுமையாகக் கற்றால், எவரும் இவரது கருத்துக்களுக்கு மாறாகப் போகமாட்டார்கள். அந்த அளவு காரண காரியத்தோடும் சான்றுகளோடும் ஆதாரங்களுடனும் இவை எழுதப்பட்டுள்ளன.

ஊத்துக்காடு வேங்கடசுப்பையர், மகா வைத்தியநாத அய்யர் போலும் பலரை, பாபநாசம் சிவனுட்பட அறிஞர் நன்கு நினைவூட்டுகிறார்.

இவ்வளவிற்கும் தியாகையருக்கு அவருடைய சமாதியில் 1907 வரை ஆண்டுதோறும் ஓரளவு இசையுடன் பூசை மட்டுமே நடந்து வந்தது. 1908 முதல் இசைக்கச் சேரிகள் நடத்தப்பட்டன. ஆராதனை தொடங்கிய சகோதரர்கள் நரசிம்ம பாகவதர், பஞ்சு பாகவதரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இரண்டு கட்சியாகப் பிரிந்து நடந்த மோதல்கள் பல. 1920இல் சுவாமிகளுக்காக பெங்களூர் நாகரத்தினம் அம்மாள் தன் சொத்து அனைத்தையும் தியாகம் செய்து, சமாதி மீது கற்கோயில் கட்டி, சுவாமிகளின் கற்சிலையையும் நிறுவினார். இவரும் சாதி வேற்றுமை காரணமாகப் புறக்கணிக்கப் பட்டார். இதனால் மூன்று கட்சிகள் உருவாகி, நீதிமன்றம் வரைபோய் நடந்தவை உலகம் நகைக்கும்படி ஆயிற்றாம். ஆயினும் அதன்பிறகு ஆராதனையை விரிவு படுத்தினர். மேலும் தமிழில் பாடுக என்று கேட்பது’ பாஷைத் துவேஷம்’ என்றும் இசைக்கு மொழி கிடையாதென்றும் வறட்டுப் பிடிவாதமாக இன்றுவரை வாதமிட்டு வருவதை அறிஞர் மிகக் கடுமையாகக் கண்டித்து எழுதுகிறார்.

வடமொழியில் இலட்சண கிரந்தங்கள் என இசை இலக்கண நூல்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. பிருகத்தேசி, சங்கீத மகரந்தம், நாரத சிட்சை, சங்கீத ரத்நாகரம் என இவ்வாறு பதின்மூன்று நூல்களை இந்நூல் விளக்கிக் கூறுகிறது. அந்த இலக்கண நூல்களுக்கான இலக்கியங்கள் தமிழில் இருந்தனவே தவிர, வடமொழியில் இல்லை. ஆயினும் அவ்வடமொழி நூல்களில் மிகப் பல புனைவுகள் இருந்தனவே தவிர, தமிழ் அடிப்படை பற்றி சிறுகுறிப்புக்கூடக் காட்டவில்லை.

காசி இந்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர், டாக்டர் எம்.ஆர். கௌதம் 1980 இல் வெளியிட்ட ‘இந்தியாவின் பரம்பரை இசைச் செல்வம்’ என்னும் நூலில் கர்நாடக இசை என்ற ஆறாம் அத்தியாயத்தில் தேவாரம் முதலான இசை பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அடுத்து ரங்க ராமானுஜ ஐயங்கார் ஒருவரே இங்கு தமிழ்ச் சாகித்தியத்தைப் பற்றிப் பேசுகிறார். சிலப்பதிகாரமும் தேவாரப் பாசுரங்களும் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களுமே இராகங்களை அவற்றிற்குரிய திட்டமான வடிவத்தில் நமக்குக் காட்டுகிற மூலநூல்களாகும்! அவரது ஆங்கில நூலில் இவ்வாறு எழுதுகிறார்.

சாகித்தியம் (இலக்கியம்) இங்கே, இலக்கணம் அங்கே என்ற முரண்பட்ட நிலையைக் காண்கிறோம். ஆகமங்கள் பற்றிய கதையும் இதுதான். கோயில், வழிபாடு, சிற்பம், இசை, நாட்டியம், இறைவழிபாட்டுச் சடங்கு நெறிமுறைகள் என்ற அனைத்தும் இங்கே உள்ளன. அவை பற்றிய நூல்கள் ஆகமங்கள் என வடமொழியில் உள்ளன. ஆகமங்கள் குறிப்பிடுகிற எச்செய்தியும் வடநாட்டில் இல்லை. முன்னே கூறியவாறு வடமொழி வல்லாண்மைக் காலத்து விளைவுகள் இவை. வடமொழியில் சாமகானம் என்ற சுரசங்கீதம் ஒன்றே காலத்தால் முற்பட்டது.

பிறயாவும் பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகே வடமொழியில் தோன்றுகின்றன. அவையும் தமிழ் அடிப்படையில் தோன்றியனவே.

‘நாட்டிய நன்னூல்’ என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அடியார்க்குநல்லார் தமிழில் பரதநூல் இருந்ததைக் குறிப்பிடுகிறார். வடமொழிப் பரதநூல் தமிழிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது. சிலப்பதிகார மூலமும் பழைய உரை, அடியார்க்குநல்லார் உரை போல்வனவும் தமிழிசைக் கருவூலங்கள். வல்வில் ஓரியை வன்பரணர் பாடும்போது, ‘பாடுவல், விறலி ஓர் வண்ணம், நீரும் மண்முழா அமைமின், பண்யாழ் நிறுமின்’ என்று ஏழு இசைக்கருவிகளை உடன் இசைக்குமாறு பாணர் கூறுவதாக வருகிறது. நெடும்பல்லியத்தனார், நெடும் பல்லியத்தை என்ற பெயர்கள் இன்று ‘ஆர்க்கெஸ்ட்ரா’ என்று கூறுவது போன்ற, பல வாத்தியங்கள் (பல்+இயம்) வாசித்த திறனை வெளிப்படத்துகின்றன.

பரிபாடல் முழுமையாகக் கிடைத்திலது. இருந்தாலும் இக்காலத்திற்போல், இசைப்பாடலைப் பாடியவர் பெயரும், அதற்கு இசை வகுத்தவர் பெயரும் தனித்தனியே குறிக்கப்படுகின்றன. தமிழில் இசைக்கலைக்கு உயிரூட்டிய_பண் சுமந்த பாடல் களைப் பாட வழிகாட்டிய காரைக்காலம்மையார் நட்டபாடை, இந்தளம் எ ன்ற இரு பண்களில் மூத்த திருப்பதிகங்கள் பாடியுள்ளார். குரல், துத்தம், கைக்கிளை முதலாய ஏழு சுரங்களின் பெயர்களை அவர் குறிப்பிடுகிறார்.

திருஞானசம்பந்தர் 23 பண்களிலும் திருநாவுக்கரசர் 10 பண்களிலும் சுந்தரர் 17 பண்களிலும் பாடியுள்ளனர். திருநீலகண்டயாழ்பாணர், மதங்க சூளாமணியார் இருவரும் சம்பந்தர் தேவாரப் பாடல்களை இசையோடு பாடுவதற்குத் துணையாக யாழ் வாசித்துள்ளனர். சம்பந்தர் தம் பாடல்களில் பண்களைக் குறிப்பிடுகிறார். ‘செந்து’ என்ற பண்ணை சம்பந்தர் அடிக்கடி குறிப்பிடுகிறார். அப்பண்ணில் அவருக்கிருந்த ஈடுபாடு புலனாகிறது. அவர் பாடிய யாழ்மூரிப் பண் பற்றிய அறிஞர் கருத்து ஏற்புடையதாக உள்ளது.

திருஎருக்கத்தம் புலியூர் நங்கை என்ற பெண்பாலர் தேவாரம் முழுவதற்கும் பண் வகுத்தமை சிறப்பானதொரு செய்தியாகும். தமிழில் பன்னிரு திருமுறையில் காணப்படும் இசைச் செய்திகள் அனைத்துமே, ஒரு கலைக் களஞ்சியமாகும். நாலாயிரம் திவ்வியப் பிரபந்தத்திற்கு நாதமுனிகள் பண் வகுத்தார். ஆனால் அதை திராவிட வேதம் எனக்கூறிய இராமானுசர், அவற்றை வேதத்தை ஓதுவதுபோல ‘ சுர சங்கீதமாக’ ஓத வைத்துவிட்டார். ஆயினும் ‘அரையர் சேவை’ ஆடலுடன் கூடிய பாடல்கள் உடையதாய்ச் சிறந்து விளங்குகிறது.

சுர சங்கீதம் வேறு; பாவ சங்கீதம் வேறு. முன்னது ஆலாபனம் என்ற பெயரால் பாடகர், பக்கவாத்தியக்காரரிடையே ஒருவித ‘குஸ்தி’ போட வைப்பது. பல சமயம் தெலுங்கு பாடும் இசைவாணர்கள், ‘இசை சர்க்கஸ் வித்தை’ காட்டித் தங்கள் மேதாவிலாசத்தைப் பறை சாற்றுவார்கள். இசை மனத்தை உருக்க வேண்டும். அது தெய்வ அருளைத் தோற்று விக்க வேண்டும். அது பாவ சங்கீதத்தில் தான் முடியும்; அதுவும் பொருள் புரியும் தாய்மொழி இசையில் தான் வாய்க்கும்.

நிகண்டுகள், யாப்பருங்கல விருத்தி, சீவக சிந்தாமணி, கல்லாடம், பெரிய புராணம், விறலி விடுதூது, நம்பி திருவிளையாடல், சித்தர் பாடல்கள் எனத் தமிழிலுள்ள ஓரு நூல் கூட விடாமல் தேடித் தொகுத்து இசைச் செய்திகளை வாரி வழங்குகிறார். இவ்இசை வள்ளல். இவ்வளவிற்கும் இவர் பாடகர் அல்லர். தமக்கு இசை தெரியாது என்று சொல்லிக் கொண்டே, இசை பற்றிய அனைத்து நுட்பங்களையும் வரலாற்று நோக்கில் வரிசை மாறாதுஎடுத்துரைக்கிறார்.

ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு - பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை 13 நூல்களில் இவர் தமிழ் இலக்கிய வரலாற்றைக் காலமுறப்படி எழுதியுள்ளார். வடமொழி, தெலுங்கு மொழிகளில் இசை பற்றி வருவனவற்றை இவரளவு யாரும் படித்தவரும் இலர்; எழுதியவரும் இலர். வடமொழி ஆர்வலர்களே அறியாத தமிழ்ப் பார்ப்பன‌ரும் அம்மொழியில் உள்ள இசை பற்றி எதுவும் அறியார். தமிழிசைவாணரேயன்றி, அவ்விரு சாராரும் இந்நூல்களைப் படித்தால் தெளிவு பெறுவர். இந்நூற் கருத்துகளை மறுப்பதென்பது எளிதன்று. அத்துணைச் சான்றாதாரச் செய்திகளுடன் இவை எழுதப்பட்டுள்ளன.

இசை நூல்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் தோன்றிய தமிழிசைவாணர்கள், பிறமொழி இசைவாணர்கள் பற்றிய செய்திகளை எல்லாம் இவர் படித்தும் கேட்டும் தேடித் தொகுத்துத் தந்துள்ளார். தமிழர் பயன்படுத்திய கஞ்சக்கருவி, துளைக்கருவி, தோற்கருவி, நரம்புக்கருவி பற்றி இவர் ஒன்றுவிடாமல் தந்துள்ள செய்திகள் வியப்பளிப்பனவாகும். அன்னமாசாரியார், புரந்தரதாசர், சேத்ரக்ஞர், சவாதித் திருநாள் போல்வார் மீது, பெயரைக் கூறிப் பக்திப் பரவசமாகும் மெய்யன்பர்கள், அவர்களைப் பற்றிய விவரமறிந்து போற்ற வேண்டுமென்றால், அவர்கள் இந்நூல்களைப் பயில வேண்டும்.

தமிழில் மேடை நாடகங்களில் முழங்கிய மதுரை பாஸ்கரதாஸ், விசுவநாததாஸ் போல்வாரைப் பற்றியும் இவர் குறிப்பிடாமல் விடவில்லை. இசைச் செல்வப் பரப்பு எந்த மூலையிலிருந்தாலும் தொட்டுக் காட்டி விடுகிறார். இவ்விரு பெரு நூல்களைப் பற்றிய அறிமுக உரையோ, மதிப்பீட்டுரையோ இக்கட்டுரையில் அடங்காது. இவற்றிலுள்ள ஒவ்வொரு இயலுக்கும் தனி ஆய்வுரை எழுதலாம்.

எங்கோ மூலையில் கிடந்து, மறைந்துபோன தமிழ் நூல்களின் வரிசையில் இவையும் சேர்ந்துவிடாமல் இவற்றை உலகமறிய வெளிப்படுத்திய அருணாசலனாரின் மைத்தர் சிதம்பரநாதனுக்கும் மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் உல. பாலசுப்பிரமணியனுக்கம் தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. அரசு இசைக் கல்லூரிகள் இந்நூல்களின் சிறப்பறிந்துத் தக்க வகையில் போற்ற வேண்டும். இந்நூலின் பல்வேறு இயல்களைச் சிறுசிறு நூல்களாகப் பதிப்பித்துப் பரப்ப வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் இவையும் பிறர் பலரும் எழுதிய நூல்களும் வெவ்வேறு வகையில், உரிய அளவில், பகுதி பகுதியாகப் பாடமாக வைக்கப்பட வேண்டும்.

நூல்களைப் படிக்க வைத்தல், ஆராய்தல் தேவையே. ஆனால் அவை ஏட்டுச் சுரைக்காயாக நின்றுவிடும். அது போதாது. தமிழ்பேசும் நாடுகளனைத்திலும் தமிழிசை முழங்க, பயிற்சிக் கூடங்கள் அமைதல் வேண்டும். பல்லாயிரவர் பாடித் தொழுது தமிழில் இசையையும் இசையில் தமிழையும் குழைத்துத் தரவேண்டும்.