உ.த.க. கிளைப் பொறுப்பாளர்களுக்கு!

 அன்புத் தமிழ்நெஞ்சங்களே!

கனிந்த கைகூப்புகள்! உங்கள் ஊரில் பைந்தமிழ்த் தொண்டாற்ற, பாவாணர் நெறி பரப்ப உலகத் தமிழ்க் கழகக் கிளை தோற்றுவித்துள்ள உங்களைப் பாராட்டு கிறோம். உறுப்பினரையும் பொறுப்பினரையும் நன்றியோடு வரவேற்கிறோம்.

உங்கள் கிளையின் செயற்பாட்டைப் பார்த்து ஊரார் போற்றவேண்டும். அவர்தம் உறவார் உள்ள ஊர்களில் இதுபோன்றதொரு கிளை தோற்றுவிக்க வேண்டும் என்று உறவார்க்கு ஊரார் சொல்லும் நிலை உருவாக வேண்டும். 

உலகத் தமிழ்க் கழகம் ஓர் உண்மைத் தமிழ்க் கழகம். ஊர்தோறும் உ.த.க. கிளைகள் தோன்றவேண்டும். உலகத் தமிழர்களை ஒன்றிணைக்க, உயரிய அவர்தம் எண்ணங்கள் செயலாக்க, தமிழ், தமிழர், தமிழ்நாட்டை மேம்படுத்த, வளர்த்து வாழ்விக்க உலகத்தமிழ்க் கழகம் வளர்ந்து பரவுவது காலத்தின் கட்டாயத் தேவை.

 உலகத் தமிழ்க் கழகத்தின் இதழாக - கொள்கை முழக்கமாகப் பாவாணர் கண்ட ‘முதன்மொழி’ இதழ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒருசில மாதங்களில், திங்களுக்கொரு முறை குறிப்பிட்ட நாளில் வெளிவரும் வகையில் செப்பம் செய்யப்பெறும். இதழின் பதிவு வேலைகளும் தொடங்கியுள்ளன. உலகத் தமிழ்க் கழகத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் முதன்மொழி வாங்கிப் படிக்கவேண்டும். மேலும் வாழ்நாள் உறுப்பினர்களையும் புரவலர்களையும் மிகுதியாகச் சேர்க்க முயற்சி மேற்கொள்ளவேண்டும். அனைவரும் பாராட்டும் வகையில், ஆவணமாகக் காத்துவைக்கும் வகையில், ஆழமான கருத்துகளையும் அழுத்தமான கொள்கைகளையும் தாங்கித் தமிழ்க் கருவூலமாக முதன்மொழி வந்து கொண்டுள்ளது. மேலும் சிறப்புடன் வெளிவரும். 

உ.த.க. கிளைப் பொறுப்பாளர்களே! 

* உலகத் தமிழ்க் கழகத்தை உங்கள் ஊர் மக்களுக்குப் பயன்படும் வகையில் செயலாற்றுங்கள்.

* உ.த.க. உறுப்பினர்களைப் பயிற்சியளித்துத் தகுதியுடையவர் ஆக்குங்கள். (தனித்) தமிழ்ப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கிக் கிழமைதோறும் தக்காரைக் கொண்டு நடத்துங்கள். தொடக்க நாளில் அழைத்தால் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் வந்து கலந்து கொண்டு பயன் நல்குவர். இவ்வகுப்பில் உறுப்பினரொடு பொதுமக்களும் கலந்துகொள்ளலாம்.

* மாணவர்களுக்கும் மற்றவர்க்கும் திருக்குறள் வகுப்பு நடத்தலாம்; வாழ்வியல் கல்வியை வழங்கலாம்.

* ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்களோடு தொடர்புவைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் இசைவுபெற்று, அறிவிப்புப் பலகைகளை ஆங்காங்கு வைக்கலாம்; அன்றாட வாழ்வில் - வழக்கில் புழங்கும் பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களைப் பட்டியலாக எழுதலாம்; தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்கலாம்; தமிழரின் பண்பாட்டுக் கூறுகளைப் பறைசாற்றலாம். தமிழ்நாட்டின் மேன்மையைப் புலப்படுத்துவதுடன், தமிழ்நாட்டில் செய்ய வேண்டுவனவற்றை வேண்டுகையாக வைக்க லாம்; தமிழ்ப் பெயர் பட்டியல் தரலாம்; பிறமொழிப் பெயர்களுக்கான தமிழ்ப் பெயர்களை வரிசைப்படுத்த லாம். இப்பலகைகளை கிளையிருக்கும் இடத்திலும், ஊர்ப் பொதுவிடங்களிலும் வைக்கலாம். இதற்கான வழிகாட்டுதல்களைத் தலைமைக் கழகத்திலிருந்து பெறலாம்.

* தமிழர்கள் தமிழ்ப் பெயர்களையே தாங்க வேண்டும்; தம் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயரையே சூட்டவேண்டும் என்று மக்களை வலியுறுத்தலாம். அவ்வாறு செய்பவர்களுக்கு வழிகாட்டுதலையும், தேவையாயின் சிறு பரிசுகளையும் வழங்கலாம். இதனை, தமிழ்ப் பெயர் சூட்டுவிழா, தமிழ்ப் பெயர் மாற்றுத் திருவிழா என்று விழாவாகவும் கொண்டாடலாம்.

* வணிக நிலையங்கள், தொழிற் கூடங்கள் முன்வைக்கும் விளம்பரப் பெயர்ப் பலகைகள் மேலே, தூயதமிழில் பெரிய எழுத்திலும் கீழே பிறமொழிகளில் சிறிய எழுத்திலும் எழுதத் தூண்டலாம்; வேண்டுகோள் விடுத்து எழுதச்செய்யலாம்.

* பாவாணர், மலைமலையடிகளார், பாவேந்தர், பெருஞ்சித்திரனார் போன்றோர் பிறந்த நாள் விழாக்களையும், வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் விழாக்களையும் கொண்டாடலாம்.

* மாணவர்களுக்குப் போட்டிகள் வைத்து, நூல்களைப் பரிசுகளாக வழங்கலாம்.

* கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், பயிலரங்கு கள் நடத்தலாம்.

* பள்ளி மாணவர்களுக்குப் பாடம் தொடர்பான பயிற்சி வகுப்புகள், தமிழ் இலக்கண வகுப்புகள் போன்ற வற்றைத் தக்காரைக் கொண்டு நடத்தலாம்.

* ஊரிலுள்ள பொதுவான சிக்கல்களைப் போக்கி யும் ஊர்க்குத் தேவையானவற்றைச் செய்தும், செய்ய வைத்தும் ஊர்மக்களோடு இணைந்து செயலாற்றலாம்.

* தமிழ்நாட்டில், தமிழ்வழிக் கல்வி போன்ற பொதுக் கோரிக்கைகளை வென்றெடுக்க, பிற அமைப்புகளை இணைத்துக்கொண்டு, பிற அமைப்பு களோடு இணைந்தும் செயலாற்ற வேண்டும்.

* ஊரில் உள்ள இளைஞர்களையும் பெரியவர் களையும் உறுப்பினர்களாகச் சேர்க்க முனைதல் வேண்டும். பிற கட்சி, அமைப்புகளில் இருப்பவர்களும் உறுப்பினராகச் சேர்க்கலாம். அவர்கள், தமிழ்ப்பெயர் (புனைபெயராகவாவது) வைத்துக் கொள்ள முன்வருபவ ராகவும், உதகவின் நோக்கங்களை ஏற்று நிறைவேற்று பவராகவும் இருக்கவேண்டும்.

* உறுப்பினர் பட்டியல் விடுக்காத கிளைகள் உடன் விடுத்துவைக்க வேண்டும். இனியும் காலந் தாழ்த்தல் கூடாது. பகுதித் தொகையும் உடன் விடுக்க வேண்டும்.

* தி.பி. 2042ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் புதுப்பிப்புப் பணியை நளி, சிலை திங்கள்களிலேயே தொடங்கி முடித்து உறுப்பினர் பட்டியலும் தொகையும் தலைமைக் கழகத்திற்கு விடுக்கவேண்டும்.

* உ.த.க. கொடி அணியமாகியுள்ளது. தேவையான வர் பெற்றுப் பயன்படுத்தலாம்.

* முதன்மொழி இதழ் 10 வாங்கி ஒவ்வொரு கிளையும் விற்றுத் தொகை விடுக்கலாம். 10க்கு மேல் வாங்குவோர் 25% கழிவு நீக்கித் தொகை விடுக்கலாம்.

* மனநலம், பணவளம் சிறந்தோர்களிடம் உலகத் தமிழ்க் கழகத்திற்கும் முதன்மொழி இதழுக்கும் நன்கொடைகள் வாங்கி விடுக்க முயற்சி மேற் கொள்ளுங்கள்.

 

இவையனைத்தும் செய்யச் சொல்வதன் நோக்கம், நம் மொழியும் நம் இனமும் நம் நாடும் செழிப்புற இயங்கும் உலகத்தமிழ்க் கழக அமைப்பும், முதன்மொழி இதழும் தொய்வு ஏற்படாமல் காக்கப்படவேண்டும் என்பதற்காகவே அன்றி, வேறில்லை.

 

மாவட்ட அமைப்பாளர் மாற்றம்

சென்னை மாவட்ட அமைப்பாளராக அமர்த்தப் பெற்ற திரு. விண்மணி, 56/11, கோட்டூர்புரம், சென்னை - 600 085 அவர்க்குப் பகரமாகப் பின்கண்ட தமிழ் நெஞ்சினர் சென்னை மாவட்ட அமைப்பாளராக அமர்த்தப் பெற்றுள்ளார்.

 

மாவட்ட அமைப்பாளர் : இரா.இளவழகன், ப.எ. 3 (பு.எ. 5), தெலுங்குப் பிராமணர் தெரு, வேளச்சேரி, சென்னை - 600 042. பேசி : 9962674078.

 

திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் அமர்த்தம்

திரு. சொ.செ.இளங்கோவன், 741, மின் நகர் 2ஆம் தெரு, வேங்கிக்கால், திருவண்ணாமலை - 601 604. பேசி: 9442312845.

அவ்வம் மாவட்டத்தில் கிளை தொடங்கவும் பிறவற்றிற்கும் அவ்வம் மாவட்ட அமைப்பாளர்களைத் தொடர்புகொள்ளவும்.

 

உ.த.க. கிளைகள் தொடக்கம் :

8) வேலாயுதம் பாளையம் (கரூர் மாவட்டம்)

கிளை - 639 117.

தலைவர் : க.நாச்சிமுத்து,

செயலாளர் : கு.பழனிச்சாமி

பொருளாளர் : நா.பெரியசாமி

கலந்துகொண்டோர் : க.துரையரசன்.

9) பெரம்பலூர் - 621 212 கிளை

தலைவர் : புலவர் செம்பியன்

செயலாளர் : குறளடியார்

பொருளாளர் : காப்பியன்

கலந்துகொண்டோர் : பாவலர் ஆடல்

10) திருவண்ணாமலை - 601 604 கிளை

தலைவர் : புலவர் புயல்மொழியார்

துணைத் தலைவர் : பேரா. தமிழ்மாறன் (சங்கர்)

செயலாளர் : பேரா. சு.வேலா

துணைச் செயலாளர் : ஆசிரியர் இரா.சிவா

பொருளாளர் : ஆசிரியை இளஞ்சுடர் (கி.பாலா)

கலந்துகொண்டோர் : கதிர்.முத்தையன், உ.த.க. துணைத்தலைவர், பொறிஞர் ச.தமிழியலன், சாத்தனூர் மு.ஆறுமுகம்.

 

மேலும் கிளைகள் தோன்றச் செய்வீர்!

 

நன்றி!

அன்புடன்

தா.அன்புவாணன் வெற்றிச்செல்வி, பொதுச்செயலாளர், உலகத் தமிழ்க்கழகம்