திருப்பூரின் அவசரகதியான தொழில் சூழலிலும், அதன் பரிணாமம் வாசிப்பின் எல்லைகளில் விரிவடைகிறது. அவசரங்களுக்கு இடையேயும் புத்தகங்களை நேசிப்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஏழு வருடங்களாக திருப்பூரில் நடத்தப்பட்டு வரும் பாரதி - பின்னல் புத்தகக் கண்காட்சி இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதோடு, விடா முயற்சியுடன் புத்தக விற்பனையை நடத்தி வரும் மேலும் சிலரை புதிய புத்தகம் பேசுதுக்காக நாம் சந்தித்தோம்.

எஸ்பிஎஸ் ஸ்டோர்ஸ் சுதாகர்:

நகரின் மத்தியில் ரயில் நிலையத்தை ஒட்டியவாறே அமைந்திருக்கிறது எஸ்பிஎஸ். 45 வருடங்களுக்கு முன்னாள் பொன்னுசாமி, சீனிவாசன் என்ற இரண்டு நண்பர்கள் இணைந்து இக்கடையை துவக்கினார்கள். இப்போது இரண்டாவது தலைமுறையாக, அவர்களின் மகன்கள் சுதாகர் (43), பி.ராஜசேகர் (43) விற்பனையை தொடர்கிறார்கள். திருப்பூரில் புத்தகங்களுக்காக அதிகம் பேர் நாடும் கடை என்ற பெருமை இவர்களுக்கு உண்டு.

எப்படி துவக்கினீர்கள்?...

முதலில் பள்ளி, கல்லூரிப் புத்தகங்கள்தான் விற்பனை செய்துவந்தோம். நாவல்கள், வரலாற்றுப் புத்தகங்கள், கவிதைகள் உள்ளிட்ட புத்தகங்கள் தேவைப்படுபவர்கள் தொடர்ந்து எங்களை அணுகி வந்தார்கள். அப்போதுதான் மக்களிடையே பொதுவான புத்தகங்களுக்கு தேவை இருப்பதை உணர்ந்தோம். முதலில் குறிப்பிட்ட புத்தகங்களை மட்டும் விற்கத் துவங்கினோம். நல்ல வரவேற்பு இருந்ததை அடுத்து 10 ஆண்டுகள் முன்பாக புத்தகங்களுக்கென்றே தனிப் பிரிவை ஏற்படுத்தினோம். அப்போதும் கூட வாசகர்களின் முழு எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முடிவதில்லை.

வாசகர்களின் தன்மை குறித்து...

தொழில் முனைவோர், தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் என பொதுவாக எல்லாத் தரப்பினரும் புத்தகங்களை விருப்பத்துடன் வாங்குகிறார்கள். வரலாறு, அரசியல், தன்னம்பிக்கை தலைப்புகளிலான நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன. ஆனால் மாணவர்களின் வருகை பெரிய அளவில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு ஈடாக இல்லை என்றாலும், விடுமுறை நாட்களில் விற்பனை நன்றாக நடக்கிறது. வேலைப் பளுதான் புத்தகங்களுடனான நெருக்கத்தை குறைக்கிறது. திருப்பூரின் தொழில் சூழலில் பலருக்கு விடுமுறையே கிடைப்பதில்லை. ஓய்வு நேரத்தை திட்டமிட்டு ஏற்படுத்துவதன் மூலம் வாசிப்பு பழக்கத்தை தூண்டலாம்.



மஹேஸ்வரிஏ.மகாதேவன்

விஜயா புத்தக நிலையத்தில் ஒரு தொழிலாளியாக பணியாற்றி வந்த மகாதேவன், 8 வருடங்களுக்கு முன்பாக திருப்பூர் வந்தார். அவரும், குடும்பத்தாரும் சேர்ந்து மஹேஸ்வரி புத்தக நிலையத்தை துவக்கினார்கள். குமரன் சிலை அருகே உள்ள மாநகராட்சி விற்பனை மையத்தில் இருக்கும் அவர்களின் கடை திருப்பூரின் புத்தக நேசர்கள் பலருக்கும் பரிட்சயம்.

விற்பனை எப்படி இருக்கிறது?

ஆரம்ப காலத்தில் விற்பனை மிகவும் குறைவாகவே நடக்கும். இந்தக் கடையை மட்டும் நம்பி குடும்பம் நடத்தமுடியாத நிலை இருந்தது. கடையைத் தேடி வாசகர்கள் வராத நிலைதான் இருந்தது. புத்தகம் வேண்டுபவர்கள் கோவை, சென்னை போன்ற நகரங்களுக்குத்தான் சென்று வந்தனர். ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் திருப்பூரிலேயே புத்தகம் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள், புதிய வாசகர்களும் உருவாகி வருகின்றனர்.

எப்படி இந்த மாற்றத்தை சாதித்தீர்கள்?

பாரதி - பின்னல் புத்தகக் கண்காட்சிக்கு பெரும் பங்கு இருக்கிறது. முதல் கண்காட்சியின் வாயிலாகத்தான் திருப்பூருக்கு புத்தக ஆர்வம் அதிகரித்தது. அத்துடன் எங்களின் கடையும் அறிமுகமானது. முன்பிருந்தே நாங்களும் சிறப்பு கண்காட்சிகளை சிறிய அளவில் நடத்தி வருகிறோம். அத்துடன் மாணவ மாணவிகளுக்கு இலக்கியப் போட்டிகள் நடத்துவது, அவ்வப்போது சொற்பொழிவு நிகழ்ச்சிகள், சிறப்பு விற்பனை என பல்வேறு வகைகளில் வாசகர்களை தேடிச் சென்றோம். திருப்பூர் மாவட்டத்திலும், கோவை, ஈரோடு நகரங்களிலும் நடைபெறும் கண்காட்சிகளில் தொடர்ந்து கலந்துகொள்கிறோம். இப்போது இரண்டு கடைகள் தேவைப்படும் அளவுக்கு முன்னேற்றம் கிடைத்திருக்கிறது.

வாசகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

திருப்பூரின் வாசகர்கள் பெரிதும் விரும்பி வாங்குவது, அரசியல், வரலாற்றுப் புத்தகங்களைத்தான். அதற்கு ஈடாக தன்னம்பிக்கை, தொழில் முன்னேற்றப் புத்தகங்களும் விற்பனையாகிறது. ஜவுளி, பின்னலாடை தொழில் நுணுக்கங்கள், புதிய தொழில் நுட்பங்கள் தொடர்பான நூல்களுக்கு தேவை இருக்கிறது. இந்தத் துறைகளில் எழுத்தாளர்கள் உருவாக வேண்டும். அவ்வாறான புத்தகங்களை எதிர்காலத்தில் வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

அறிவுத்துறைக்கு சேவை செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதே துறையில் சாதிக்க வேண்டும். அடுத்த கட்டமாக ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிப் புத்தகங்களையும் உள்ளடக்கிய புதிய விற்பனை மையத்தை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு சொல்லும்போது அவர்களின் கண்களில் நம்பிக்கை பிரகாசிக்கிறது.



நேஷனல் கே.ஏ.கே.சீனிவாசன்:

திருப்பூரின் மையமான பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கடை நேஷனல் சில்க்ஸ்”. எந்நேரமும் மனிதக் கூட்டம் மொய்த்து குவிந்திருக்க அந்த வீதி பரபரப்பாக இயங்குகிறது. எல்லோரும் வியாபாரத்தில் கண்ணாக இருக்கிறர்கள். இங்கு மட்டும் சிறு வித்தியாசம், கடையின் மத்தியில் புத்தகங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

இந்தச் சிந்தனை உங்களுக்கு எப்படி உதித்தது?

நேஷனல் சில்க்ஸ் நிறுவனர் அருணாசலம் என்னுடைய மாமா. அவரும் புத்தக ஆர்வலர். நானும் அதிகம் படிப்பதால் அதுபற்றி அடிக்கடி பேசுவேன். இந்த அனுபவம் அனைவருக்கும் ஏற்படவேண்டும் என்று தோன்றியது. மாமாவிடம் அது குறித்து பேசினேன். மகிழ்ச்சியுடன் இசைவு கூறினார். கடையிலும் நல்ல புத்தகங்களை வைத்து அறிமுகப்படுத்த துவங்கிவிட்டோம். லாப நோக்கத்திற்காக அல்லாமல், அடுத்த தலைமுறைக்கு கல்விச் செல்வத்தை எடுத்துச் செல்வதே எங்கள் நோக்கம்.

புத்தக ஆர்வம் பற்றி சொல்லுங்கள் ...

எனக்கு சிறுவயதில் இருந்தே புத்தகங்களின் மீது காதல் உண்டு. விளையாடப் போகும்போதும், பள்ளிப் புத்தகங்கள் படிக்கும் போதும் கையில் துணைக்கு ஒரு நாவலை வைத்திருப்பேன். சாண்டில்யனின் யவன ராணி, மு.வ. எழுதிய அகல் விளக்கு போன்றவற்றை பலமுறை படித்திருக்கிறேன். ஓய்வு நேரங்களை புத்தகத்துடன் இணைத்துக் கொள்வது எனக்கு பிடித்திருந்தது. இதனால் ஒரு சிறிய நூலகத்தையே வீட்டில் ஏற்படுத்திவிட்டேன். அதில் 2000க்கும் அதிகமான புத்தகங்கள் வைத்திருக்கிறேன். படிக்கும் பழக்கம் என்னை இளமையாக வைத்திருக்கிறது. தடங்கலின்றி பேசவும், மனதை தெளிவாக வைத்திருக்கவும் உதவுகிறது. பணம் இருந்தாலும் என் செல்வம் புத்தகங்களும், வாசிப்பு பழக்கமும்தான் என்று சொல்வேன்.

வாடிக்கையாளர்கள் குறித்து ...

5 வருடங்கள் முன்பாக புத்தக விற்பனையை துவக்கினோம். இதனால் புத்தகங்களையே அறியாத பலரும் நல்ல எழுத்துகளை வாங்கிச் செல்கிறார்கள். மாணவர்கள் புத்தகங்களை ஆர்வத்துடன் எடுத்துப் பார்க்கிறார்கள். புதிய புத்தகங்கள் தேவைப்படுபவர்கள் ஆர்வத்துடன் கேட்கிறார்கள். திருப்பூரில் புத்தக வாசிப்புப் பழக்கம் அதிகரித்திருப்பது தெரிகிறது.

பேச்சுக்கிடையே பல்வேறு புத்தகங்களையும், புகழ்பெற்றவர்களின் வாசகங்களையும் மிக எளிதாக சொல்லிச் செல்கிறார். வாசிப்பு அவரை பக்குவப்படுத்தியிருப்பது தெரிகிறது. இதே அனுபவம் இன்னும் லட்சக்கணக்கானவர்களை எட்ட வேண்டும். அந்த ஆர்வம் அவரிடமிருந்து வெளிப்பட்டது. ஒரே எண்ணம் கொண்டோர் இணைந்து நிற்கும்போது, அது சாதிக்கப்படும் ... நம்பிக்கை நமக்கும் ஏற்படுகிறது. புத்தகங்கள் திருப்பூரை வசீகரிக்கட்டும்.

- செம்மலர் இரா.சிந்தன்

Pin It