எனது முதல்பிரவேசம் என்பது முதல் கவிதைத் தொகுப்பு என்பதைவிட அதற்கு முன் 1988-இல் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருக்குவளையின் ‘முத்தமிழ்மன்ற’ இலக்கிய விழா கவியரங்கில் “நெஞ்சில் விதைப்போம் ஒற்றுமையை” என்ற தலைப்பின் கீழ் கவிதைகள் என வசனங்களை எழுதி வாசித்ததைத்தான் கூற வேண்டும். எங்கள் ஊரின் இலக்கியத் திறனும் சமூக நோக்கமும் உடைய புலவர் அ. பாலையன் அவர்களும், மு.காளிமுத்து ஆசிரியர் அவர்களும் அதே விழாவின் பட்டிமன்றத்தில் பேசுவதற்காக அவரவர் மிதிவண்டியில் புறப்பட்டனர். நானும் வாடகை மிதிவண்டி எடுத்து என் தங்கையை பின் இருக்கையில் அமரவைத்து அவர்களோடு எங்கள் ஊரான சாட்டியக்குடியில் இருந்து திருக்குவளைக்குப் புறப்பட்டோம் குறுகலான உடைந்த கிராமத்து தார்ச்சாலை நெடுகிலும் வைக்கோல் காயப்போட்டிருந்தார்கள்.

வைக்கோல் அடர்த்தியாகப் போடப்பட்ட இடங்களில் மிதிவண்டியை மிதிக்க முடியாமல் இறங்கி இறங்கி தள்ளிக்கொண்டே சென்றதில் தாமதமாகிவிட்டது; விழாவின் முதல் நிகழ்வே கவியரங்கம் என்பதால் சென்றவுடனேயே வியர்க்க விறுவிறுக்க மேடையேறியும் பாடியாயிற்று கவிஞர் ஞானச்செல்வன் அவர்கள் தலைமையில் என்னுடன் சேர்த்து ஆறுகவிஞர்கள் கவியரங்கம் முடிந்து கீழிறங்கியவுடன் என் கவிதை சிறப்பாக  இருந்ததாக சிலர் கூறவே எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது.

அடுத்த நிகழ்வாகப் பட்டிமன்றம் தொடங்கியதும் பட்டிமன்றத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் அருகில் வந்த முதியவர் ஒருவர் உனக்குத் ‘தமிழ்’ என்று கூட சரியாக உச்சரிக்கத் தெரியவில்லையே நீ எப்படி கவிஞரானாய் பாப்பா? என்றதும் நொடியில் சோகமாகி விட்டேன். ல,ழ,லி,ண,ந,ர,ற வேறுபாடுடன் அப்போது எனக்கு உச்சரிக்கத் தெரியாது. எனக்கு  வருகிறார்போல்தான் உச்சரிப்பேன். இதுவே நான் கவிஞராக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு. முதல் கவியரங்கம்; முதல் விமர்சனம்; அதன் பிறகு வெளியிடங்களில் தயக்கமாக இருந்ததால் உச்சரிப்பு முறை குறித்து ஆசிரியர்களிடம் கேட்க அச்சப்பட்டு.. விவரமான தோழிகள் சிலரிடம் அவர்களின் கேலியை கண்டுகொள்ளாது ஓரளவிற்கு கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அப்போது இவ்வாறு கவியரங்கில் கவிதைகள் வாசித்ததற்கு முன்னும் பின்னும் எழுதிய கவிதைகளில் சிலவற்றை தஞ்சையிலிருந்து இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கும் சுந்தரசுகன் இதழுக்கு அனுப்பி வைத்தேன். அனுப்பியதற்கு அடுத்தமாதம் எனக்கு அஞ்சலில் “சுந்தரசுகன்” இதழ் வந்ததும் என் கவிதை வந்திருக்கிறதா, என பரபரப்புடன் தேடினேன். ‘வரதட்சணை ’ என்ற தலைப்பில் எழுதிய சிறிய கவிதை அதில் வந்திருந்தும்...... உற்சாகத்தைக் கட்டுப்படுத்தமுடியாமல் ‘அம்மா என் கவிதை புத்தகத்தில் வந்துவிட்டது. என்பெயர் கூட போட்டிருக்கிறார்கள் என்று கூறியதும் அம்மா, அந்தக் கவிதையை படித்துக்காட்டச் சொல்லியதோடு என் கவிதையும் பெயரும் புத்தகத்தில் உள்ள இடத்தையும், பக்கத்தையும் காட்டச்சொல்லி வாங்கிப் பார்த்துக் கொண்டே... உங்கப்பாவுக்கும் எனக்கும் கல்யாணம் முடிக்கயில கூட பத்திரிக்க அடிச்சி பேர் போடல... சும்மாத்தான் மாரியம்மன் கோயில்ல தாலிகட்டி வச்சாங்க... உம்பேராவது பொஸ்தகத்துல எல்லாம் வருதே’ என பெருமைப்பட்டார்.

இவ்வாறாக நான் எழுதி சேர்த்த கவிதைகளை கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களிடம் கொடுத்து திருத்தி தரும்படி கேட்டேன். அவர் திருத்தம் செய்து தந்ததோடு தொகுத்து புத்தகமாக்கி விடலாம் என்றும் அதற்கு கொஞ்சம்தான் பணம் செலவாகும் என்றும் கூறினார். அவர் கூறியதை நான் அப்படியே அம்மாவிடம் சொல்லி புத்தகம் போட பணம் வேண்டுமென்றதும் “தாயி தவிட்டுக்கு அழுகையிலே மக இஞ்சிமிட்டாய் கேட்ட கததான் உன்கத, இருக்குற நெலமையிலே இப்ப அதுதான் நமக்கு கொறச்சலா இருக்கா” எனக்கூறி மறுத்துவிட்டார். அதாவது தாய் பசி பொறுக்க முடியாமல் எங்காவது தவிடு கிடைத்தால் கூட களி கிண்டி சாப்பிட்டு பசியாறிவிடலாமே என அழுது கொண்டிருக்கும் போது மகளோ... எனக்கு சாப்பிட்டது ஜீரணமாக இஞ்சிமிட்டாய் வாங்கி கொடு என அழுதாளாம் என்பதுதான் அம்மா கூறிய பழமொழியின் பொருள்.

ஆசிரியப்பயிற்சி முடித்துவிட்டு பணி கிடைக்காது அம்மா அக்காக்களுடன் நாற்று நட, களைபிடுங்க, என நான் வயல் வேலைக்கு சென்று கொண்டிருந்த காலமது (1990) எனவே என் கூலிப்பணத்தை நானே சேர்த்துவைத்துக் கொள்ளப்போகிறேன் என்றதற்கும் ‘அவரவர் கூலியை அவரவரே தனித் தனியாக வைத்துக்கொண்டால்.... அரிசியும், மண்ணெண்ணையும், எப்படி வாங்குவது’ என அம்மா அதற்கும் சத்தம் போடவே அடுத்தநாள் காலை “என்னால் பொழுதனைக்கும் வெய்யிலில் நிற்கமுடியாது. குனிந்து கொண்டே வேலை செய்வது முதுகு வலிக்கிறது. இன்றைக்கு என்னால் வேலைக்கு வரமுடியாது” எனக்கூறி வீட்டில் தாங்கிவிட்டேன் “சரி உன் சம்பள பணத்துல பாதிய நீயே எடுத்துக்க” என அடுத்த நாள் அம்மா என்னை வேலைக்கு கூட்டிச் சென்றுவிட்டார்.

இது தவிர அம்மா வீட்டில் இட்லி வியாபாரமும் செய்து வந்தார். வேலை முடிந்து வந்து மாலையில் அரவை மிஷினில் தினமும் நான்கு ரூபாய் கொடுத்து மாவரைத்து தூக்கி வந்து கரைத்து வைப்பது என்வேலை. வீட்டில் பெரிய குடக்கல்லிருந்தது (ஆட்டுக்கல்) எனவே நாமே அரைத்து கொடுத்துவிட்டு இந்த நான்கு ரூபாயையும் சேர்த்து வைக்கலாமே எனத் தோன்றவே அம்மாவிடம் கேட்டேன். பல்வேறு நிபந்தனைகளுக்குப் பின் ஒப்புக்கொண்டார். அரிசிமாவை பெரும்பாலும் மசிந்தவுடன் அள்ளச் சொல்லி விடுவார். உளுந்தமாவை சிறிது கையிலெடுத்து ஊதிப்பார். மாவு காற்றில் பறக்கவேண்டும். அப்போதுதான் அள்ளவேண்டும், இல்லையெனில் இட்லி கல்லாகிவிடும் என்பார்.

இது மட்டுமின்றி எங்கள் ஊரில் பூ வியாபாரம் செய்யும் பன்னீர் அண்ணன் சீட்டும் பிடித்தார். அவரிடம் தினமும் ஒரு ரூபாய் என சீட்டுக் கட்டி நூறு ரூபாய் சேர்த்திருந்தேன். இவ்வாறாக நான் சேர்த்த கணிசமான தொகையிலும் கவிஞர் தமிழ்நாடன் அவர்களின் முயற்சியிலும் பத்திரிகையாளர் மானா பாஸ்கரன் அவர்களின் கவித்துவமான அணிந்துரையுடன் திருவாரூர் திரு.வி.க. அச்சகத்தில் பள்ளி மாணவர்கள் வைத்துப்படிக்கும் ‘வாய்ப்பாடு’ அளவிற்கான எனது முதல் கவிதைத் தொகுப்பு ‘இளவேனில் பாடல்கள்’ புத்தகமானதும் நூல்களை இரண்டுப் பெரிய பைகளில் போட்டு 18-ஆம் எண் பேருந்தில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு வந்து நடுசுவற்றில் தூக்கி வைத்துவிட்டேன். அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியவில்லை.

அதன் பிறகு வெளியீட்டு விழா நடத்த வேண்டும் என்றும், அது எவ்வாறு நடத்துவதென்றும் ஆசிரியர் கூறக் இலக்கிய ஆர்வலர்கள் கூறக்கேட்டு, அதன்படி எனது தந்தையார் 25 ஆண்டுகளுக்கு மேல் காரியக்காரராக விவசாயப் பண்ணை முதலாளி அவர்களை விழாவில் பங்கேற்க கேட்பதற்காக.. அப்பாவுடன் சென்று தொகுப்பை அவர் கையில் கொடுத்துவிட்டு “ஐயா பஞ்சவர்ணம் பொஸ்தகம் எழுதியிருக்கு, அதுக்கு விழா நடத்தனுமாம் நீங்க வரணுமுனு ஆசைப்படுகிறோம்.” என அப்பா... தயங்கித் தயங்கி தனது முதலாளியிடம் சொன்னார். அவர் சில பக்கங்களை புரட்டிப் பார்த்துவிட்டு “எல்லாம் நீயே எழுதியதா உனக்கு யார் எழுதக் கற்றுக்கொடுத்தார்கள்?” என்று கேட்டார். யாரும் சொல்லித் தரவில்லை நானாகத்தான் எழுதுகிறேன் என்றதும் சபாஷ் என பாராட்டி..... விழாவிற்கு தான் நிச்சயம் வருவதாகவும், ஒலிபெருக்கி செலவை நான் பார்த்துக்கொள்வதாகவும்  கூறினார்.

ஒரு ஞாயிறு மாலை நான் எட்டாம் வகுப்பு வரை படித்த எனது உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஊர்ப் பெரியோர்கள், இலக்கியவாதிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்து எனது முதல் கவிதை நூலான இளவேனில் பாடல் வெளியீட்டு விழா நடந்தது (1990). எங்கள் ஊரில் அறுவடைக்காலங்களில் வந்து ஓரிருமாதங்கள் தங்கி ஈயம் பித்தளை பூசும் ஜனங்களைப் பற்றி “விட்டுப்போன பாத்திரங்களை / வீடு வீடாய்க் கேட்டு பத்தவைக்கும் நாங்கள் மட்டும் ஊருக்கொரு பாத்திரமாய் சிதறிக் கிடக்கிறோம் வயிற்றுக்காக ” என்ற கவிதையை எல்லோரும் எடுத்துக்காட்டிப் பேசினார்கள். இதுவே என் முதல் கவிதை நூலின் சிறப்பான பிரவேசம்.

- இளம்பிறை

Pin It