நூல் அறிமுகம்

 

"தமிழ்ஒளி கட்டுரைகள்"(ஆய்வும் விமர்சனமும்) என்னும் இந்நூல் கவிஞர் தமிழ்ஒளி அவர்களால் (1924-1965) அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து திரு. செ. து. சஞ்சீவி அவர்களால் வெளியிடப் பட்டுள்ளது.

கவிஞர் படைப்பு வரிசையில் பதின்மூன்றாவது நூலாக இது வெளிவந்துள்ளது. கவிஞர்தமிழ்ஒளி என்னும் மாமனிதரைத் தமிழுலகம், உலகளாவிய நிலையில் அறிந்து கொள்ள வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்தவர் திரு.செ.து.சஞ்சீவி அவர்கள். கவிஞரின் படைப்புகளையெல்லாம் வெளியிடுவதற்கென்றே முனைந்து தம் சக்திக்கு மீறி "புகழ் புத்தகாலயம்" என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தை உருவாக்கினார், அதன் வழியாகக் கவிஞரின் நூல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் விடுபட்டிருந்த தமிழ்ஒளியைத் தமிழுலகம் புரிந்து கொள்ளச் செய்திருக்கின்றார்.

இந்நூலின் முதல் கட்டுரை கலைஞன் பதிப்பகத்தால் தனிநூலாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது எனினும் கவிஞர் பொருட்டு திரு. செ.து. சஞ்சீவி அவர்கள் பதிப்பகம் தொடங்கியபோது, அந்நூலின் மறு பதிப்பினை வெளிட்டுக் கொள்ள அனுமதி பெற்றிருந்தார். கால இடைவெளிகடந்து, இந்நூலின் முதல் கட்டுரையாக அதைச் சேர்த்துள்ளார்.

"தமிழ் ஒளி என்னும் விமர்சகர்" என்று தலைப்பிட்டு முன்னுரை வழங்கிச் சிறப்பித்துள்ள போரசிரியர் வீ.அரசு அவர்கள் சிறந்ததொரு தெளிவான விளக்க முன்னுரையை வழங்கியுள்ளார். இந்நூலைப்படிப்பதற்கு முன்னர் இம்முன்னுரையைப்படித்தல் வாசகர்களுக்கு நல்லதொரு வழிகாட்டுதலாக அமைவது உறுதி, நூல் முழுமையையும் படித்து முடித்தபின் மீண்டும் ஒரு முறை முன்னுரையைப் படித்தால் நல்லதொரு நிறைவு கிடைக்கும். ஆகவே படிக்கும் முன்னரும், படித்த பின்னரும் நுண்ணியதாகப் படிக்கவேண்டிய எழிலார்ந்த நூலின் சுருக்க விளக்கமாக இம்முன்னுரை அமைந்துள்ளமை பாராட்டிற்குரியது.

கவிஞர் தமிழ் ஒளியை எங்கே- யாருக்குப் பின் அடையாளப்படுத்துவது என்றொரு கேள்வியாக இது நாள் வரையிருந்த நிலையில் பாரதி, பாரதிதாசன், தமிழ் ஒளி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று நேர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் தமிழ் ஒளி கவிஞர் மட்டுமல்லர் அவர் ஒரு தேர்ந்த இலக்கிய விமர்சகர் சிறந்த ஆய்வாளர் என்பதையும் இந்நூல் அவர் ஒரு மேன்மையான கட்டுரையாளர் எனவும் நன்கு தெளிவுபடுத்துகின்றது.

கவிஞர் தமிழ்ஒளி திருக்குறள் தொடர்பாக கொண்டிருந்த மதிப்பீடுகள் "முன்னணி " மனிதன் " பாரதம்" முதலான இதழ்களில் சமகால இலக்கியப் போக்குகள் குறித்து கவிஞர் எழுதியவை. இவை, இன்று காணக்கிடைக்காத நிலையில் தொகுப்பாசிரியர் கண்டு இந்நூலில் உருவாக்கியிருப்பது முக்கியமானது என்று கூறலாம்.

திருக்குறளுக்கு பரிமேலழகர் உரையை மறுத்து எழுதும் கவிஞரது விளக்கம் வரலாற்றுண்மையும், இலக்கியச்சான்றும் இலக்கணத் தெளிவும் நிறைந்ததாகும்.

சமகால இலக்கியத்தின் போக்குகளைத் தமிழ்ஒளி மதிப்பீடு செய்துள்ள திறத்தினை இந்நூல் வழி புரிந்துகொள்ள முடிகின்றது. அவ்வகையில் முதலில் வெறும் பிரச்சாரம், இலக்கிய நண்பர்கள் சங்கம் என்று க. நா. சு உள்ளிட்டோரையும் இரண்டாவதாக பிரச்சார இலக்கியத் தோழர்கள் என்றும் கூறுகின்றார். இந்த இரண்டாவது வகையில் கவிஞர் தம்மையும் இணைத்துக் கொண்டு, ‘உலகத்தில் பிரச்சாரம் இல்லாமல் எதுவுமில்லை’ என்ற ஆக்கப் பூர்வமாக வரையறுத்து விவாதிக்கும் திறத்தினை வியந்து போற்றுகின்றோம்.

(ப.66) மனிதன், தன் கருத்தைப் பேச்சுஉருவில், பாடல் உருவில், பாவனை உருவில் பலப்பல விதமாக வெளியிடுகிறான். கலை உருவில் அவன் தன் கருத்தை வெளியிடும்போது அஃது இலக்கியமாகிறது. அப்படியென்றால் தன் கருத்துப்பிரச்சாரத்தை இலக்கிய உருவில் வெளியிட்டிருக்கிறான் என்றுதான் அர்த்தம் (ப. 67) என்று கவிஞர் நவின்றிருப்பது நம் சிந்தனைக்கு விருந்தாகும்.

“ராமாயணத்தைப்பாடி, கம்பன் தமிழிலக்கியத்திலே கவிச்சக்கரவர்த்தி என்றும் பெயரெடுத்தான், நான் குப்பனையும் கந்தனையும் பாடி மகாகவி என்று வாழ்வேன் “ என்ற அர்த்தத்தை நாமே உணர்ந்து கொள்ளும்படியும், பாரதி தனது ஒப்பற்ற புரட்சிப் பாடல்களைப் பாடியிருக்கிறான் என்று ஒரு தேர்ந்த பாரதியின் படப்பிடிப்பாக இக்கட்டுரை உள்ளது (முன்னணி 5.12.1948)

வீராயிநூலுக்கு எழுதிய முன்னுரையில் கவிஞர் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றார்,

“மக்களுக்காக, மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள், உலகம் முழுவதும் உருவாகிக்கொண்டு வரும் உழைக்கும் இனத்தின் கூட்டு முன்னணிக்கு உங்கள் எழுத்து உறுதுணையாகட்டும்’’ இதுதான் வேண்டுகோள், “முடிந்தவரையில் வீராயியை ஏழையப்பரின் இதய எதிரொலியாகச் செய்ய முயன்றிருக்கிறேன், முழுதும் வெற்றியடைந்தேனா என்பதை நீங்களே சொல்லுங்கள் என்றும் கேட்டிருப்பது கவிஞர் தமிழ்ஒளியின் ஆய்வுத்திறனுக்கும் அடையாளமாகின்றது.

இக்கட்டுரை நூலில் காணும் விமர்சன வீதி பகுதி ஒரு நூல் விமர்சனம் எவ்வாறு எழுதப்பெறுதல் வேண்டும் என்பதாய் அமைந்துள்ளது. கட்டுரையாளர் காய்தல் உவத்தல் அகற்றி எழுதியிருப்பதைக் கண்டு சுவைக்க முடிகின்றது, சொல்லவேண்டிய குறைகளைக் கூட எத்துணை நாகரிகமாகக் கூறியுள்ளார் என்று பார்க்கின்றோம், இந்தப் பகுதியில் கவிஞர் குயிலன், சிதம்பர ரகுநாதன், புதுமைப்பித்தன், வ.வே.சு. அய்யர் ஆகியோரைச் சந்திக்க வைக்கின்றார், இவர்களின் படைப்புகளை முறைப்படிச் சிந்திக்கச் செய்கின்றார் (பக்-84-120)

“இலக்கியம் எங்கே’’ என்னும் கட்டுரை வினாவும் விடையுமாக அமைந்து இன்றைய இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் ஒரு முனையைத் தெளிவுபடக் காட்டுகின்றது. இதைப் பிரதிபலிக்கும் ஒரே இதழ், ‘தாமரை’ என்று துணிந்து கூறுந்திறன் யாருக்கு வரும்? கவிஞர் தமிழ்ஒளிக்கு மட்டுமே அந்தத் துணிச்சல் உண்டு.

அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ள சிறுகதைகள், நாவல்கள் ஆகிய எவையும் தொட்டுக் கொள்ளாமல் பட்டுக்கொள்ளாமல் “சமுக அமைப்பை” மாற்றும் பணியினின்றும் விலகிச் சென்றுள்ளதை உண்மை நன்கு வெளிப்படும் என்று விமர்சனம் செய்கின்றார். விஞ்ஞானக் கண்ணோட்டத்தைத் தவிர மற்றவை குருட்டுப் போக்கு என்று சித்தரிக்கின்றார்.

இலக்கியம் என்பது மிக உயர்ந்த கடமை. மக்களின் வாழ்கையை உயர்த்துவது என்று கொண்டால், இன்றைய படைப்புகள் பல அக்கொள்கையை நிறைவேற்றவில்லை என்பது அவரது கருத்தாகும் (ப. 126)

ஒரு நாட்டில் ஏற்படும் மாறுதல்கள் அந்நாட்டில் ஏற்படும் தொழில் வளர்ச்சியை ஆதாரமாய்க் கொண்டவையாகும் என்பது கட்டுரையாளரின் கருத்தாகும்.

சமுகத்தைப் பின்னுக்குத் தள்ள முயலுவது நிலப்பிரபுத்துவமே என்பது அவரது கருத்தாகும், ஆகவே அத்தன்மையினின்றும் சமுகம்,சமூகவுடைமைத் தன்மையைப் பெற்ற சமூகமாகப் புதிதாய்ப் பிறக்க வேண்டும், அப்போதுதான் எதிர்காலச் சமூகத்தின் அமைப்பும் சமூகவுடைமைத் தன்மையைப் பெற்றதாகவே அமையும் என்று கூறும் தமிழ் ஒளி Ôஇக்கொள்கையைப் புரிந்து கொள்ளும் எழுத்தாளனுக்குத் தன் கடமையைப் புரிந்து கொள்ளவும் தெரியும். எழுத்தாளன் என்பவன், சமூகத்தைச் செப்பனிடும் சிற்பி அல்லவா? என்றும் ‘பாரதம்’ இதழில் மார்ச்சு திங்கள் 1960 ஆம் ஆண்டு கவிஞர் எழுதிய தொடர்கட்டுரைகள் அவரது எழுத்துதர்மத்தை நன்கு தெளிவுபடுத்துகின்றது (ப. 138)

முடிவாக தமிழில் உள்ள இலக்கணம், இலக்கியங்களை நன்கு கற்றவர். அவற்றில் அவரது அறிவு ஆழங்கால் பட்டுள்ளதை இந்நூல் உணர்த்துகின்றது, மரபுப் புலமையோடு கூட சமகாலப் பார்வையில் அணுகும் பார்வை அவருக்கு நிரம்ப இருப்பதை உணர முடிகின்றது. நாட்டு நடப்புகளை உணர்ந்து கூறும் நுண்மாண் நுழைபுலம் புலப்படுகின்றது.

நாட்டிலே நடக்கும் பல இயக்கங்களின் பல்வேறு அணுகுமுறைகளை இக்கட்டுரை நூல் மூலம் பதிவு செய்திருக்கின்றார் கவிஞர் தமிழ்ஒளி. நாற்பது ஆண்டுகளே இந்நிலவுலகில் வாழ்ந்த ஒருவர், படைப்புப் பணிகளினூடே ஆய்வுப்பணியும் ஆற்றியுள்ள திறனை இந்நூல் மூலம் கண்டு பிரமிப்படைய முடிகிறது.

இலக்கிய விமரிசனம் செய்வோருக்குச் சிறந்ததொரு தேர்ந்த வழிகாட்டும் கட்டுரைகளாகவும் கலங்கரை விளக்காகவும், சிறந்த கைகாட்டியாகவும் பொலிவதை இந்நூலைப்படித்தே உணர முடியும்.

படித்துப் பாருங்கள் - உங்களுக்கு மேலும் பல செய்திகள் விருந்தாகக் காத்திருக்கின்றன.

 

கவிஞர் தமிழ்ஒளி கட்டுரைகள்

தொகுப்பு, செ,து, சஞ்சீவி,

புகழ் புத்தகாலயம்

சென்னை-30,

பக்: 176 | ரு. 70

Pin It