பா.ச.க. மேலவை உறுப்பினர் தருண் விஜய், தமிழ்மொழி, திருக்குறள், திருவள்ளுவர் பற்றி பெருமையாக அவ்வப்போது பேசி வருபவர். அவரது தமிழ்ப் பற்றில் புல்லரித்துப் போன வைரமுத்து போன்றவர்கள் அவரை தமிழ்நாட்டுக்கு அழைத்து பாராட்டுவிழா நடத்தி புளகாங்கிதம் அடைந்தனர்.

தருண் விஜய் பா.ச.க.வின் ஊது குழலாக செயல்படுபவர்; காவி அலை (Saffron surge) என்ற ஆங்கில பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறார். அதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். ஏட்டின் ஆசிரியராக பல்லாண்டு காலம் பணியாற்றினார். பா.ச.க.வின் மதவாத கருத்துகளை தீவிரமாக ஆதரித்தும் அபாயகரமான இந்துத்துவ கருத்துகளை ஏற்றும் பரப்பியும் வருபவர்.

இந்த பின்புலத்தில் இருந்து வரும் தருண் விஜயின் தமிழ் மீதான பற்று ஒரு போலி நாடகம் என்றும், தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பா.ச.க.வின் அரசியல் சித்து விளையாட்டுகளில் ஒன்று என்றும் திறனாய்வு செய்ததை, அப்போது யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தருண் விஜய் மீதான திறனாய்வுகளை “இனவாதம்” என்று இடித்துரைத்தவர் களும் உண்டு!

நொய்டாவில் நைஜீரியர்கள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது. “இந்தியர்களின் இனவெறித் தாக்குதல்” என ஊடகங்கள் இந்த நிகழ்வை தலைப்பாக்கி வெளியிட சிக்கல் பூதாகரமானது. இதற்குப் பதில் அளித்த பா.ச.க.வின் நடுவண் அமைச்சர் சுஷ்மா சுவராஜ், “இந்தியர்கள் இனவெறியர்கள் அல்ல” என்று சப்பைக்கட்டு கட்டினார்.

அதற்கு மறுநாள் நைஜீரியர்கள் தாக்குதல் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தருண் விஜய், ”இந்தியர்களை இனவெறியர்கள் என்று கூறுவதில் நியாயமில்லை.  நாங்கள் இனவெறியர் களாக இருந்தால், கறுப்பர்களான தென்னிந்தியர்களுடன் எப்படி இணைந்து வாழ்வோம்? தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கறுப்பர்கள் நிறைந்துள்ளனர்’’ என்று கூறிய தருண் விஜய், “எங்களை சுற்றி கறுப்பர்கள் இருந்தாலும் அவர்களுடன் இணக்கமாக வாழ்ந்து வருகிறோம்’’ என்று கருத்து தெரிவித்தார். இனவெறிக்கு எதிராக பேசுவதாக பா.ச.க. வின் இனவெறியை தோலுரித்துக் காட்டி விட்டார்!

இதற்கு முன்பே மலையாள நடிகர் செயராம், தன் வீட்டில் வேலை பார்த்த தமிழச்சியை “கருப்பு நிற தடித்தத் தோலுடையவர்’’ என்று பேசியது நினைவிருக் கலாம். இப்பொழுது, தருண் விஜய் அதே போல பேசியிருப்பது, தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் குறித்து இப்படித்தான் சித்திரம் தீட்டப்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது! 

இவர்தான் இத்தனை ஆண்டுகளாக திருவள்ளுவர், தமிழ் என்று ஏமாற்றி வந்துள்ளார். நிறவெறி கருத்தின் மூலம், தருண் விஜயின் முகத்திரை கிழிந்து தொங்கி விட்டது.

தருண் விஜயின் கருத்துக்கு தென்னிந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த பா.ச.க. தலைவர்கள் யாரும் தருண் விஜயின் கருத்தைக் கண்டிக்கவில்லை.

தருண் விஜயின் கருத்தை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? நம்முடைய நிறம் பற்றிய தாழ்வுமனப் பான்மை நமக்கில்லை. கருப்பு நிறத்தை இழிவாக சித்தரிக்கும் அழகு சாதன பொருட்களின் விளம் பரங்களை கடுமையாக எதிர்ப்பவர்கள் நாம்.

அதே நேரத்தில தமிழர்கள் உள்ளிட்ட தென் மாநில மக்களை பா.ச.க. தலைவர்கள் மற்றும் வட நாட்டு அரசியல்வாதிகள் எந்த நோக்கில் பார்க் கிறார்கள் என்று இந்தச் சிக்கல் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அவர்களது மனத்தில் தமிழர்கள் உள் ளிட்ட “தென்னிந்தியர்கள்” பற்றிய தாழ்வான எண்ணம் இருப்பதைத்தான் இது காட்டுகிறது.

கருப்பு நிறத் தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர் களோடு வாழ்வது ஏதோ அவர்களின் பெருந்தன்மை போல நிறவெறியோடு தருண் விஜய் பேசியிருக்கிறார்.

தமிழர்கள் உள்ளிட்ட பிற தென்னிந்திய மாநிலத் தவர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து தருண் விஜய் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து விட்டார்.

பா.ச.க.வின் சுப்பிரமணிய சாமி தமிழர்கள் “பொறுக்கீஸ்” என்கிறார். தமிழ்நாட்டில் உள்ள பா.ச.க. வின் எச். இராசா, தமிழர்களை “தேச விரோதிகள்’’ என்கிறார். பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினரும் நடுவண் அமைச்சருமான பொன். இராதாகிருட்டி ணன் தமிழர்கள் தங்கள் முகத்தில் தாரைப் பூசிக் கொள்ளுங்கள் என்றார். இப்போது தருண் விஜய் கருப்பர்கள் என்கிறார்.

தருண் விஜயின் கருத்துக்கு தமிழ்நாட்டின் பா.ச.க. தலைவர்கள் தமிழிசையும் பொன் இராதாகிருட்டி ணனும் கண்டனம் தெரிவிக்காத நிலையில், அவர்கள் “சோற்றில் உப்பிட்டுத்தான் சாப்பிடுகிறார்களா?” என்று சமூக வலைத்தளங்களில் பலரும் ஐயம் எழுப்பி னார்கள்.

“பொறுக்கீஸ்’’ என்றார்கள், “முகத்தில் தார் பூசிக் கொள்ளுங்கள்’’ என்றார்கள், “தேசவிரோதிகள்” என்றார்கள். “கருப்பர்கள் தாழ்ந்தவர்கள்” என்றார்கள். இன்னும் என்னென்ன சொல்லப் போகிறார்களோ? அதையெல்லாம் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறோமா?

“வெள்ளையர்கள் ஆளப் பிறந்தவர்கள்; கருப்பர்கள் அடிமைகளாக வாழப் பிறந்தவர்கள்” என்ற கொள்கையை பூடகமாகக் கொண்டே, பா.ச.க. இந்துத்துவா மற்றும் இந்தியத்தேசிய வெறி ஆகிய இரண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நமது நிறம் கருப்பு. நமது இனம் தமிழ் இனம். நம்மை அடிமையாக்க நினைக்கும் “காவி இந்தியா”வை புறக்கணிக்க போகிறோமா இல்லையா?

Pin It