கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கல்வியே சமூக மாற்றத்திற்கான திறவு கோல் என்று கூறலாம். இன்றைய தொழில் நுட்ப யுகத்தில், “வானமே எல்லை” என்று கூறும் அளவிற்கு இளைஞர்களுக்கு கல்வி, வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் பரவிக் கிடக்கின்றன.

மருத்துவம், துணை மருத்துவம், கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, வனவியல், மீன் வளம், பொறியி யல், கலை, அறிவியல், கல்வியியல், மேலாண்மை, சட்டம், நூலக அறிவியல், உணவக வேளாண்மை, சுற்றுலா, இதழியல், வடிவமைப்பு, நுண்கலை, நிதி மற்றும் கணக்கியல், சமூகப்பணி, மனை யியல், விளம்பரத் துறை, மொழியியல், மானுடவியல், பொதுத் தொடர்பு, காப்பீடு, வங்கியியல், உடற்கல்வி, மறுவாழ்வியல், அழகுக்கலை, சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை, உணவு பதப்படுத்தல், உளவியல், உடற் கல்வி, காட்சி ஊடகவியல் போன்ற பலதுறைகளில் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் வளமாக உள்ளன. தொழில் முனைவோர் ஆக விரும்பும் இளைஞர்களுக்கும் ஏற்ற பல்வேறு படிப்புகள், இங்கே தாராளமாக வழங்கப்படுகின்றன.

ஆனால் நம் மக்களின் மனங்கள் சுருங்கி, சில குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே, வளர்ச்சி இருப்பதாக கருதி, அனைவருமே அந்த துறைகளில் சேர போட்டி யிடுவதுதான், தற்போதைய அடிப்படைச் சிக்கலாக உள்ளது.

கல்வி பெருமளவில் வணிகமயமாகிவிட்ட இன்றையச் சூழலில் தனி மனித முன்னேற்றத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பயனளிக்கும்  கல்வியைப் பயில வேண்டியது மிக அவசியமாகிறது. ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும், அவருக்கேயுரிய தனித்திறன்கள் மற்றும் விருப்பங்கள் இருக்கும்.

முதலைக்கு தண்ணீரில் தான் பலம் அதிகம் என்பதைப்போல அவரவருக்கும் விருப்பமான துறைகளில் படித்தால், வாழ்வில் மிகச் சிறப்பாக வர முடியும். எனவே வாழ்வில் வெற்றி என்பது வேலைவாய்ப்புள்ள துறையைத் தேடுவதில் இல்லை; தமக்கு விருப்பமான துறையில், அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதில் தான் உள்ளது.

பரிதாபத்திற்குரிய செய்தி என்னவென்றால், இன்றைய பெற்றோர்களும், மாணவர்களும், “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?’’ என்பதைப் போல, எந்த படிப்பை, எந்த கல்லூரியில் படித்தால் அதிக ஊதியத்தில் வேலை கிடைக்கும் என்பதை மட்டுமே கொண்டு, உயர்கல்வியைத் தெரிவு செய்கின்றனர். உயர்கல்வியைத் தேர்வு செய்திட, மாணவரின் தனித் திறன் மற்றும் விருப்பம், குறிப்பிட்ட உயர்கல்வியில் சேர்வதற்கான தகுதி, அந்த மாணவரின் குடும்ப, சமூக, பொருளாதார சூழல், அந்த படிப்பை முடித்த பின் மேற்கொண்டு படிக்கவும் ஆராய்ச்சி செய்திடவும் கூடிய வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி தாமாகத் தொழில் தொடங்கி நடத்துவதற்கான வாய்ப்புகள், போன்ற பல்வேறு காரணிகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இந்தச் சமூகத்தில் தனிமனிதர் ஒரு கூறு. இங்கு நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ இயலும். எனவே எல்லோருடைய பங்களிப்புமே சமமான  அளவில் இந்தச் சமூகத்திற்கு தேவைப்படுகிறது. எனவே சில துறைகளே உயர்ந்தவை என்ற சமூகத்தின் மனத்தடையை உடைத்து, மாணவர்கள் தங்களுக்கு  விருப்பமான துறைகளில் படிக்க வேண்டும்.

விருப்பமான துறையில் அர்ப்பணிப்புடன் பணி யாற்றுவது மட்டுமின்றி மனித நேயத்துடன் செயலாற்ற வேண்டும். ஐஸ்வர்யாராய்களை விட அன்னை தெரசாக்களே அழகானவர்கள். தற்போது அவர்களே அதிகம் தேவைப்படுகிறவர்கள்.

பெற்றோர் தாங்கள் மட்டுமே உழைத்து தம் பிள்ளைகளை உயர்த்தி விட்டதாக இறுமாப்பு கொள்வதில்தான், மனித நேயமும், சமூக சிந்தனையும் அற்றுப் போய் முழுமையாக நுகர்வு சிந்தனையு டனையே, தம் பிள்ளைகளை உயர்கல்விக்கு செலுத்து கிறார்கள். “தம் பிள்ளைகளின் உணவுக்காக உழைத்த விவசாயி, உடையளித்த நெசவாளி மற்றும் தையற் தொழிலாளி, பயிற்றுவித்த ஆசிரியர், சிகிச்சை யளித்த மருத்துவர், பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநர் புத்தகம் அச்சிட்டு வழங்கியவர்”, என ஆயிரக் கணக் கான மக்கள் உழைப்பில் தான் அந்தக் குழந்தை கள் மட்டுமின்றி நாமும் சமூகத்தில் வளர்ந்திருக் கிறோம் என்பதை உணர்ந்தால், அந்த சமூத்திற்கு நாம் பங்களிக்க வேண்டியது, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் கடமையே என்பதையும் புரிந்து கொள்ள லாம்.

எனவே அவ்வாறான சமூக மாற்றத்திற்கான மற்றும் தனி மனித முன்னேற்றத்திற்கான உயர் படிப்புகள் என்ன? அவற்றை எங்கு படிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்ன? போன்ற தகவல்களை இப்பகுதியில் வழங்கிட முனைகிறோம்.

வாருங்கள்! சேர்ந்துழைப்போம்!

 (வாய்ப்புகள் வளரும்)