பாரதிதாசனை பாவேந்தர் என்று தமிழகமே கொண்டாடி மகிழ்ந்த காலத்தில் பாரதிதாசன், மகாகவி பாரதிக்கு சீடராக இருந்தார். திராவிட இயக்கத்துடன் ரத்தமும் சதையுமாகக் கலந்து சுயமரியாதைச் சுடராக - தமிழினப் போர்வாளாக விளங்கினாலும், பொதுவுடைமைச் சிந்தனைகளையும் இணைத்துப் பாடினார். உலகப்பண் பாட்டே பேருதாரணம். "நான் ஏன் பிறந்தேன்" படத்தில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திக்கொண்ட பாவேந்தர் பாடல், தொழிலாளரின் வியர்வையின் வலிமைபேசும்.

பாவேந்தர் பாரதிதாசனின் சீடராக வாழ்ந்து வளர்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அப்போது பாடல்புனையும் ஆற்றல்மிக்கவர் கல்யாணசுந்தரம் என்பது பாவேந்தருக்குத் தெரியாது.

பாவேந்தர் நடத்துகிற இலக்கிய இதழில் ப.கல்யாணி என்ற கவிஞரின் கவிதைகள் பாவேந்தரை கவனிக்க வைத்தது. பண்டிதத்தனமில்லாத கவிதை. இலக்கணக்கட்டு விலகாத கவிதை. இருண்மையற்ற எளிமையான கவிதை.

'யாரிது? ' என்று விசாரித்தார் பாவேந்தர்.

"ப.கல்யாணி" என்றனர் உதவியாளர்கள்.

"பெண்ணா?"

"அல்ல. ஆண்தான்".

"அற்புதமான சுத்தமான கவிதையாக இருக்கிறதே, யார் அது?"

"உங்க சீடர் கல்யாணசுந்தரம்தான்"

காலடிச் சேவகனாக உலவுகிற எளிய கிராமத்துச் சிறுவனுக்குள் இப்படியோர் கவிதையாற்றலா என்று வியந்தவர், கல்யாண சுந்தரத்தைப் பாராட்டி தட்டிக்கொடுத்து கவிதைகள் தொடர்ந்து எழுதும்படி உற்சாகமூட்டினார். அவர் மீது தனிக்கவனம் செலுத்தினார்.

திராவிட இயக்கத்தின் சுயமரியாதைக் கவிஞரான பாவேந்தரின் சீடராக வளர்ந்தாலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கொள்கை ரீதியாக மார்க்சியவாதியாகவும், பொதுவுடைமைச் சிந்தனையாளராகவும் வளர்ந்தார். இயக்கத்துடன் பின்னிப் பிணைந்துவளர்ந்தவர்.

'ஜனசக்தி' ஏடு மலர்ந்தபோது, 'தாமரை' இலக்கிய இதழ் பிறந்தபோது, தவறாமல் வாழ்த்துக் கவிதைகள் எழுதி, தமது இயக்கத் தொடர்பை மறைக்காமல் பிரகடனப்படுத்தினார். மதுரையில் விவசாய சங்க மாநாடு பெரிய அளவில் நடந்தபோது "கண்ணின் மணிகள்" என்ற நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்திற்கான அத்தனை பாடல்களையும் அவரே எழுதினார்.

திரைப்படத்தில் பிரபலமாக இருக்கிற கவிஞர் "தனக்கு நேரமில்லை" என்று சொல்லி ஒதுங்காமல், பொதுவுடைமை இயக்க விவசாய சங்க மாநாடு என்றவுடன் அந்நியோந்யமான உரிமையுடன் முன்வந்து பாடல்கள் எழுதித்தந்தார்.

வாழ்வின் எல்லாத் தருணங்களிலும், இயக்கப் பற்றுறுதி மிக்க மார்க்ஸீயராகவே வாழ்ந்தார். மனத்துணிவும், கொள்கைப் பற்றுறுதியும் மிக்கவராக திகழ்ந்தார்.

திரைப்படத்தில் பாட்டு எழுதுகிற கவிஞருக்கு எண்ணிலடங்காத இன்னல்கள் வந்துநிற்கும். பிடிக்காத கருத்துடன் பாடல் எழுதவேண்டிய நெருக்கடி நிகழும்.

கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டெறும்புப் பாட்டும், ஒட்டகத்தை கட்டிக்கோ போன்ற பாடல்களும் அப்படிப்பட்ட நெருக்கடிகளுக்கு நெளிந்துகொடுத்து எழுதிக்கொடுக்கப்பட்டவை.

கதையின் சூழலுக்கு கட்டுப்பட்டு கவிதை பாட வேண்டிய கட்டாயம் சினிமாவில் தவிர்க்கமுடியாதது. கதையின் காட்சிக்கேற்ப எழுதியாக வேண்டும்.

கவியரசு கண்ணதாசன்கூட ஒரு கட்டுரையில் கசந்த குரலில் கூறியிருந்தார். "உரித்த கோழி மாதிரியான ஒரு பெண்ணைக் கொண்டுவந்து நிறுத்திக்கொண்டு, இவள் காமஆட்டம் ஆடி மயக்கமூட்டுகிற மாதிரியான சூழலுக்கு ஒருபாட்டு வேண்டும் என்று டைரக்டர் கேட்கிறபோது, தத்துவப் பாடலா எழுத முடியும்? சித்தாந்தக்கருத்தா அந்தப் பாடலில் சொல்லமுடியும்?"

என்று மனக்கொந்தளிப்புடன் கேள்வி கேட்டார். அதனால்தான்...." துடிக்கும் ரத்தம் பேசட்டும்/ துணிந்த நெஞ்சம் நிமிரட்டும்/ உழைக்கும் வர்க்கம் சேரட்டும்/ உரிமை உடமை காணட்டும்/" என்ற கவித்துவ சிவப்புப்பாடல் எழுதிய கவியரசு, "எலந்தைப்பயம், எலந்தைப்பயம் என்று கொச்சைப்பாடலும் கொட்டியழுது தீரவேண்டியதிருந்தது. கதைச் சூழலுக்கேற்ப, பாத்திரத் தன்மைக்கேற்ப பாடல் எழுதித்தீரவேண்டியது திரைக்கவிஞரின் கட்டாயம். இதில் சமரசம் பண்ணாமல் தப்பிப்பது சாத்தியமேயில்லை.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும் அந்த மாதிரியான நெருக்கடிகள் நிகழ்ந்ததுண்டு. தமது கருத்துக்கு ஒத்துவராத முரண்பட்ட கதைச்சூழல்கள் எதிர்ப்பட்டது உண்டு.

"தங்கப்பதுமை" என்றொரு திரைப்படம். கட்டிய மனைவியையும், குழந்தைகளையும், குடும்ப மானமரியாதைகளையும் தனியாக தவிக்கவிட்டுவிட்டு ஏதேதோ பெண்களுடன் ஆட்டம்போட்டுவிட்டு உடல் நோயுற்று திரும்புகிற கணவன். அப்போதும், கணவனை திட்டாமல், கடுஞ்சொல் சொல்லாமல், 'இப்போதேனும் வந்து சேர்ந்தீர்களே' என்று கொண்டாடுகிற பதிபக்தியான மனைவியின் அழுகை. கதறல். இப்படிப்பட்ட துயர நிலைக்கு ஆளாக்கிய விதியை எண்ணி புலம்புகிற காட்சி.

இதுதான் கதைக்காட்சி. இதற்கேற்ப பொருத்தமான பாடல் எழுதவேண்டிய கட்டாயம் பட்டுக்கோட்டைக்கு.

பெண்ணுரிமையில் - பெண்ணுக்கு சமத்துவம் என்ற கொள்கையில் பிடிப்புள்ள பட்டுக்கோட்டைக்கு, பெண்ணடிமைத்தனத்தை போற்றிப் புகழ்ந்து எழுதியாக வேண்டிய நெருக்கடி.

இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டார். ஒரு மார்க்ஸீயவாதிக்குரிய போர்க்குணத்துடன் அந்த நெருக்கடியை துணிச்சலாகவும், கொள்கை பற்றுறுதியாகவும் எதிர்கொண்டார்.

சூழலுக்கு உட்பட்டாலும், போராட்டத்தால் சூழலை மாற்ற முடியும் என்ற தத்துவத்தெளிவு உள்ளவர் பட்டுக்கோட்டை.

"ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான். இதயத்தில் கொந்தளித்த இளமையை தின்றவன் நான். வாழத் தகுந்தவளை வாழாமல் செய்துவிட்டு பாழும் பரத்தையின் பின்னால் அலைந்தவன் நான்" என்று ஆண்குரலாக, கணவனின் குற்ற உணர்ச்சியாக பாடலைத் துவக்கினார், பட்டுக்கோட்டை. பெண்குரலாக வரும் எல்லாவரிகளும் கதைச்சூழலுக்கு நியாயம் செய்கிற வார்த்தைகள். துயரப்பட்ட கணவனின் அலங்கோலம் குறித்து வருத்தப்படுகிற சோக வார்த்தைகள். கதையின் காட்சிக்கு ஏற்ப பத்தினியின் சோகப் புலம்பல்கள். அதற்கும் கணவனின் குரலாக பட்டுக்கோட்டை பாடுகிறார்.

"மனைவியை குழந்தையை

மறந்து திரிந்தவனை

வாழ்த்துதல் ஆகாதடி - தங்கம்

மன்னிக்கக்கூடாதடி"

மன்னிக்கக்கூடாது என்றால், அதற்குள் சொல்லப்படாத செய்தியாக உணர்த்திநிற்பது, 'அப்படிப்பட்டவனை தண்டிக்க வேண்டும். விளக்குமாறு பிய்ந்து நார்நாராகிறவரை சாத்தவேண்டும்' என்ற குரல்தான்.

கதைச்சூழலுக்கு குறைவைக்காத நியாயமும் அழகும் செய்துவிட்ட கவிஞர், கருத்து ரீதியாக சமரசம் செய்துகொள்ளாமல், நெளிந்து ஒடிந்துபோகாமல், தமது பெண் சமத்துவச் சிந்தனையையும் அழுத்தமாக பதித்துவிட்டார். "கட்டெறும்பாக" கறுத்துப் போகாமல்,"எலந்தைப்பழமாக" சிறுத்துப்போகாமல், சூழலுக்கு பலியாகிவிடாமல், சூழலை எதிர்கொண்டு தத்துவ வலிமையாய் வென்றுநிற்கிற கம்பீரத்தை பட்டுக்கோட்டை என்கிற பாமரக் கவிஞரிடம் தரிசிக்க முடிகிறது.

தத்துவ பலத்தால் சூழலை வென்று காட்டியது மட்டுமல்ல, சொந்த வாழ்க்கை நடைமுறைகளிலும் ஒரு மார்க்சிஸ்ட் மனிதருக்குரிய போர்க்குணத்துடன் வாழ்ந்தவர் பட்டுக்கோட்டை.

ஒரு தயாரிப்பாளரை சந்திக்கவேண்டிய கட்டாயம் பட்டுக்கோட்டைக்கு. சோபா கிடந்தது. கவிஞரை உட்காரச் சொல்லவில்லை. நின்றுகொண்டேயிருந்தார் கவிஞர்.

"கொஞ்சம் இருங்க. உள்ளே போய்ட்டு வர்றேன்" என்று தயாரிப்பாளர் சொல்லி விட்டு அலுவலகத்தின் உள் அறைக்குள் போய்விட்டு வந்துபார்த்தால், நின்றுகொண்டிருந்த கவிஞரைக் காணோம். மேஜையில் ஒரு துண்டுச்சீட்டு இருந்தது. அதில் ஒரு கவிதை இருந்தது. தயாரிப்பாளர் எடுத்துப்படித்தார்.

"தாயால் பிறந்தேன்

தமிழால் வளர்ந்தேன்

நாயே உன்னை நடுவீதியில் சந்தித்தேன்

நீயார் என்னை நில்லென்று சொல்வதற்கு?"

செருப்படிகளாக தயாரிப்பாளர் முகத்தில் மோதிய வார்த்தைத் தெறிப்புகள்.

Pin It