சிறுகதை இன்றைய அவசர உலகிற்கு பொருத்தமான இலக்கிய வடிவமாகும். கடந்த நூறு ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் பிரபலமாகி வரும் இப்புனை கதை வடிவம் இன்று உன்னத நிலையை அடைந்துள்ளது. நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்குள் கதையின் கருப் பொருளைச் சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்லிட வேண்டும். கதாபாத்திரங்களைப் பற்றிய விவரணை, அவர்களுக்கிடையே நடக்கும் பிணக்கம், இணக்கம் அதன்பால் ஏற்படும் உரையாடல், கதைக்கான சூழலை உருவாக்குதல், சம்பங்களின் ஊடே கதையை நகர்த்திச் செல்லுதல் என்று அத்தனை நுட்பமான விஷ்யங்களையும் கவனத்துடன் செய்திட வேண்டும். கதையின் முடிவில் வாசகனைத் திகைக்க வைக்கும் எதிரபாராத திருப்பம் என்று பல இலக்கியக் கூறுகளையும் உள்ளடக்கியதாகும் சிறுகதை.

 தமிழ் சிறுகதை வானில் இன்று மிகப் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக மின்னுபவர் ச.சுப்பாராவ். “குருவிகள்” என்ற முதல் தொகுப்பைத் தொடர்ந்து “தாத்தவின் டைரிக் குறிப்புகள்” என்ற இரண்டாவது தொகுப்பையும் வெற்றிகரமாகக் கொண்டு வந்துள்ளார். தொகுப்பினை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. தமிழ்ச் செல்வன் அவர்களின் அணிந்துரையுடன் பாரதி புத்தகாலாயம் மிகவும் நேர்த்தியுடன் வெளிக் கொணர்ந்துள்ளது. தொகுப்பினை “அபூர்வ மலர்கள்” என்று மிகப் பொருத்தமாக தமிழ்ச் செல்வன்குறிப்பிட்டுள்ளார். தாத்தாவின் டைரிக் குறிப்புகளை மிகுந்த ஆர்வத்துடன் படிக்கும் பேரன் இறுதியில் தாத்தா டைரி எழுதியதே

தன் தாயின் மாத விலக்கைக் கண்காணிப்பதற்குத்தான் என்று அறிந்து நொந்து போகிறான். அமெரிக்க hவின் சிறுகதை எழுத்தாளர் ஓ.ஹென்றி அளவிற்கு வாசகன் சற்றும் எதிர்பாராத திருப்பத்தைக் கதையின் முடிவில் கொடுக்கிறார் சுப்பாராவ். இத்தகு எதிர்பாராத திருப்பங்களே சிறுகதையின் வெற்றிக்குக் காரணமாகும். தன் மகள் கொண்டு வரும் செடியை நடுவதற்காக செம்மண் தேடி அலையும் தகப்பனைக் காட்டிஒரு காலத்தில் கடம்பவனக் காடாகக் கிடந்த மதுரை நகரம் இன்று காங்கிரீட் காடாக மாறி நிற்பதை 'செம்மண்’ சிறுகதை நகைச்சுவையோடு காட்டுகிறது.

 தேவலோகத்திலும் பெண்கள் காட்சிப் பொருட்களே போதைப் பொருட்களே என்றறிந்ததும் “சியர் கேர்ல் ஸ்” கதையின் நாயகி லதா தான் நரகத்திற்கே போக விரும்புவதாகச் சொல்கிறாள். நகைச்சுவை சுப்பாராவ்வின் மிகப் பெரிய பலம். வாசகர்களை அவ்வப்போது மெலிதாகப் புன்னகைக்க வைக்கும் சாமர்த்தியம் ஆசிரியருக்கு கைவந்த கலையாக உள்ளது. புராணக் கதைகளிலும் இதிகாசங்களிலும் அவருக்கும் இருக்கும் பாண்டித்தியம் மற்றொரு பலமாகும்.

 புராணக் கதைகளையும் இதிகாசங்களையும் மறுவாசிப்புக்கு உள்ளாக்கும் போது அவருடைய கிண்டலும் நக்கலும் கை கொடுக்கின்றன. ஒரு யட்சன் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கும் ஆழமான பதிலைக் கொடுக்கும் தருமன் கடைசிக் கேள்வியில் தடுமாறி விடுகிறான். “தத்துவ மழையாக பதில் பொழியும் நீ என்ன கேசத்திற்கு மனைவியையும் தம்பிகளையும் வைத்து சூதாடினாய்?” என்று நெத்தியடியாகக் கேட்கிறான் யட்சன்”கடைசிக் கேள்வி” என்ற சிறுகதையில். ஜெபாருன்னிசா கதையில் “மகள் காதலிக்கும் போது எத்தனை நல்ல தகப்பனுக்கும் கிறுக்குப் பிடித்துவிடுகிறது” என்ற கடைசி வரி படிப்பவர்களை உலுக்கிவிடுகிறது. தன் மகளின் ஆசைகள் அனைத்திற்கும் துணைநிற்கும் ஒளரங்கசீப் அவள் காதலை மட்டும் கொடு]ரமான முறையில் நிராகிக்கிறான்.

 மொத்தத்தில் தொகுப்பின் பதினாறு கதைகளும் விருவிருப்பானவை. சுப்பாராவின் கவித்துவமான எளிய உரைநடை சிற்றோடை போல் ஓடி படிப்பவரின் மனத்தைக் குளிர்விக்கின்றது.

 - பேரா.பெ.விஜயகுமார்

Pin It