விடுதலைப் போராட்ட வீரரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர் 90 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த ஆண்டில் வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்நூலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் முன்னுரையும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன் அணிந்துரையும் வழங்கியுள்ளனர்.

தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்களின் தியாக வாழ்க்கையை சுயசரிதையாக எழுதவில்லை. அவர்களின் புரட்சிகர தன்னடக்கம் காரணமாக அளப்பரிய தியாகமும், அர்ப்பணிப்பும் மக்களுக்கும், இளைய தலைமுறைக்கும் உரிய முறையில் தெரிவிக்கப்படாமல் போய்விட்டது. தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய பல வரலாற்று நூல்கள் இந்த குறைபாட்டை ஓரளவு நிவர்த்தி செய்துள்ளது. அந்த வரிசையில் இந்த நூலும் மிகப் பயனுள்ளதாக வெளிவந்துள்ளது. முன்னுரையில் தோழர். ஜி.ஆர்.குறிப்பிட்டிருப்பதுபோல் தனி மனித வரலாறாக மட்டும் அல்லாமல் தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

70 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் மாணவராக, கட்சித்தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, விவசாய சங்க மாநில, அகில இந்திய தலைவராக சங்கரய்யா ஆற்றியுள்ள பணிகள் விரிவாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

சுயமரியாதை இயக்க பின்னணி உள்ள படித்த, மத்தியதர குடும்பத்தில் பிறந்த சங்கரய்யா நாட்டின் விடுதலைப் போரில் பங்கேற்று ஒரு கம்யூனிஸ்ட் தலைவராக உயர்ந்த நிகழ்ச்சிப் போக்குகள் தெளிவாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஒரு தலைவரின் தியாகத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களும் பங்களிப்புச் செய்கின்றனர். ஆனால், பல வரலாற்று நூல்களில் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல் இடம் பெறுவதில்லை. இந்நூலில் சங்கரய்யாவின் குடும்பம் பற்றிய விபரங்களும் இடம் பெற்றிருப்பது சிறப்பு அம்சம். 60 ஆண்டுகளுக்கு முன்னரே சாதி மறுப்பு - மத மறுப்பு திருமணம் செய்தவர் சங்கரய்யா.

1937ஆம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவராக சேர்ந்தது முதல் சங்கரய்யாவின் பொதுவாழ்க்கை துவங்குகிறது. மாணவப் பருவத்திலேயே நாட்டின் விடுதலைப் போரில், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றார். மாணவர் மன்றத்திற்கு ராஜாஜி, சத்தியமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற தலைவர்களை அழைத்து வந்துபேச வைத்தார். நேதாஜி போஸ் 1939ல் மதுரை வந்தபோது மதுரை நகர் காங்கிரஸ் சார்பில் கே.பி.ஜானகியம்மாள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கரய்யா மாணவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் நேதாஜியை பேச வைத்தார். மாணவர் இயக்கத் தலைவராக பணியாற்றிய சங்கரய்யா 1938ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் மாவட்டச் செயலாளராகவும், 1942ம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் மாணவர் சங்க மாநிலச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

தேசிய இயக்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஈர்க்கப்பட்ட சங்கரய்யா 1940 ஜனவரியில் ஜானகி அம்மாள் உள்ளிட்ட 9 தோழர்கள் கொண்ட கட்சி கிளையில் உறுப்பினரானார். 1944-ல் மதுரை மாவட்டச் செயலாளர், 1995-ல் மாநிலச் செயலாளர், 1958 அமிர்தசரஸ் அகில இந்திய மாநாட்டில் தேசிய கவுன்சில் உறுப்பினர், மார்க்சிஸ்ட் கட்சியில் 1986-ல் மத்தியக்குழு உறுப்பினர். 2004 முதல் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எனத் தொடர்ந்து கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இயங்கி வருகிறார். 1964-ஆம் ஆண்டு தேசியக் கவுன்சில் கூட்டத்தில் வெளிநடப்புச் செய்து மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தோழர்களில் இன்றும் நம்மிடையே வாழ்பவர்கள் சங்கரய்யாவும், வி.எஸ். அச்சுதானந்தனும் மட்டும்தான். 1943-ல் நடைபெற்ற கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு தவிர அனைத்து மாநாடுகளிலும் சங்கரய்யா பங்கேற்றார். சிறையில் இருந்ததால் முதல் மாநாட்டில் பங்கேற்க இயலவில்லை.

மொத்தம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் சங்கரய்யா அனுபவித்துள்ளார். அரசியல் கைதிகளின் உரிமைக்காக வேலூர் சிறையில் நடந்த 19 நாள் உண்ணாவிரதம். அப்போது 10-ம் நாள் எந்தவித சோர்வுமின்றி தாய் நாவல் படித்துக்கொண்டிருந்த காட்சிகள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சங்கரய்யா எந்த சிறையில் எந்த ஆண்டுகளில் இருந்தார், அவருடன் சிறையில் இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் பெயர்கள் அனைத்தையும் சேகரித்து என்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். கண்ணனூர் சிறையில் 1943 மார்ச் 20 அன்று கையூர் தியாகிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். அங்கு சங்கரய்யா கைதியாக இருந்தார். தியாகிகளை பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கைதிகளைத் திரட்டி உண்ணாவிரதம் இருந்த நிகழ்ச்சிகளும் உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டுள்ளது.

1938-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்தியநாத அய்யர், முத்துராமலிங்க தேவர் தலைமையில் ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெற்றதையும், மாணவர்களைத் திரட்டி வந்து அம்மன் சன்னதியில் சங்கரய்யா ஆதரவாக நின்ற வரலாற்று செய்திகளும் உரிய முறையில் பதிவாகியுள்ளன.

விவசாய அரங்கில் சங்கரய்யா ஆற்றிய பணிகள் 1967-ல் மாநிலச் செயலாளராகவும் 1986-ல் பாட்னாவில் நடைபெற்ற பொன்விழா மாநாட்டில் அகில இந்திய செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார்.

1967, 1977, 1980 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று மொத்தம் 11 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். அவர் ஆற்றிய உரைகள், எடுத்துக்கொண்ட முக்கிய பிரச்சனைகள், மக்களுக்கு ஆற்றிய தொண்டு விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருத்தல் வாதத்திற்கு எதிரான தத்துவப் போரில் 1963ல் தீக்கதிர் பிறந்தது. மார்க்சிஸ்ட் கட்சி உருவாகி தீக்கதிர் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக அறிவிக்கப்பட்டபோது என்.சங்கரய்யா அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தை உருவாக்குவதிலும், அதற்கு வழிகாட்டுவதிலும் அவரது பாத்திரம் முக்கியமானது. கலை, இலக்கியம் பற்றி செம்மலருக்கு அளித்த பேட்டி இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

இந்நூலைப் படிக்கும்போது 70 ஆண்டு தமிழக அரசியல் வரலாறு கட்சி வரலாறு, நம் கண்முன் விரிகிறது.

ஆடம்பரமும், பதவி ஆசையும், லஞ்சமும், ஊழலும் பரவிக்கிடக்கும் இன்றைய முதலாளித்துவ அரசியல் சூழலில் அப்பழுக்கற்ற பொதுவாழ்வும், மக்கள் சேவையும், மகத்தான தியாகமும் கொண்ட கம்யூனிஸ்ட் தலைவர்களின் வரலாறு மக்கள் மத்தியில் முன்னிறுத்தப்பட வேண்டும். இந்நூல் அதற்குப் பயன்படும்.

அனைவரும் படித்து பயன்பெற, உத்வேகம் பெற உதவிடும் நூல் இது.

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை

சென்னை, 600018

விலை ரூ.90

Pin It