"ஆச்சி! ஆச்சி!... இது யாரு?.... இது மாமா....

இது அத்த... இது... இது...."

பேரன் சிவா தான் போட்டோ ஆல்பத்தைக் கையில் எடுத்துவைத்துக்கொண்டு தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தான். இவ்வளவு நேரமும் அவனோடுதான் எனக்கு விளையாட்டு. சற்றே கண்அசந்துவிட்டேன். ஆச்சியைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று நினைத்தானோ என்னவோ? நேற்று நான் சொல்லிக்கொடுத்ததை ஞாபகமாய் நினைவில் வைத்து அவனே சொல்ல ஆரம்பித்துவிட்டான்.

"இது ரமேஷ் மா...மா. இது.... இது.... அத்த...." நான் அவன் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்தேன். நான் விழித்துவிட்டதைக் கவனித்தவன், "ஆச்சி.... ஆச்சி!... இது யாரு?...." என்று பழைய கறுப்பு வெள்ளை ஆல்பத்தைத் தூக்கிக் காண்பித்தான்.

"இது எப்படி இங்கே வந்தது....? இது பழைய போட்டோல்லா?... உங்க அம்மை இத எடுத்து ஓங்கிட்டே கொடுத்திட்டுப் போயிட்டாளா..." புரட்டிப் பார்த்தேன்.

பழைய கறுப்பு - வெள்ளை புகைப்படங்கள். என்னுடைய சடங்கின்போது எடுத்தது.... கல்யாணத்தில் எடுத்தது... வாகைக்குளத்து அத்தை, கருங்குளத்து ஆச்சி எல்லோருடனும் நான் நிற்கும் போட்டோக்கள்.....

"ஆச்சி! இது யாரு.... இது யாரு?"

பேரன் விடாமல் நச்சரிக்கிறான். சிவா தன் விரலால் சுட்டிக் காட்டியது கணபதி ஆச்சியை!

இரட்டை வடச்சங்கிலியை கழுத்தில் அணிந்திருந்த ஆச்சியின் மடியில் நான் சிறு குழந்தையாய்!

"இந்தப் பாப்பா யாரு?... "கவுன் அணிந்திருந்த குழந்தையைக் காண்பித்துக் கேட்டான்.

நான் சிரித்தபடி, "அதுவாடா செல்லம்! அது நாந்தான்.... ஆச்சிம்மா.."என்றேன்.

அவனுக்குப் புரியவில்லை. நம்பாமல் என்னை நிமிர்ந்து பார்த்தான்.

"அது ஆச்சி... இது எங்க ஆச்சி! கணபதி ஆச்சி!... என்றேன். ஆச்சியின் நினைவு வந்துவிட்டது. எங்கள் எல்லோருக்கும் பிரியமான ஆச்சி... எவ்வளவு நாளாகிவிட்டது அவளை நினைத்து! ஊரிலிருந்து ஆச்சிவந்துவிட்டால் போதும்... வீட்டிலே எல்லோருக்கும் குதூகலம் தான்!

ட்ரங்க் பெட்டியோடு நெற்றியில் விபூதி பட்டையும், உதட்டில் புன்சிரிப்புமாய் வீட்டிற்குள் நுழையும் ஆச்சிக்கு எப்போதும் தடபுடல் வரவேற்புதான்.... அம்மா தான் பெட்டியை வாங்குவாள். ஆச்சி என்ன வாங்கி வந்திருக்கா என்பதிலேயே தம்பி, ஆச்சியை சுத்திச்சுத்தி வருவான். நானும் என் தங்கச்சியும் ஆச்சியைச் சேலையோடு சேர்ந்து தழுவிக்கொள்வோம். வெள்ளைச்சேலையில் உள்ள ஆச்சியின் வாசம்.... அது பல நாட்கள்... பல வருடங்கள் மனதில் உறைந்துபோன வாசம்!

ஆச்சி அடுப்படிக்குள் இருந்த மரப்பெட்டியின் பக்கவாட்டில் இருந்த பாயை எடுத்து விரித்து உட்கார்ந்தாள்.

கொப்பறையில் இருந்து ஆவி பறக்க சூடாக இருந்த ரெண்டு இட்லியைத் தட்டில் வைத்தஅம்மா, "மொதல்ல சாப்பிடு...." என்றாள்.

"ஏளா! பசியில்லே.... அப்புறமா சாப்பிடுதேன்.... மொதல்ல ஒரு மடக்கு காப்பித்தண்ணி இருந்தா கொடு..." என்றாள் ஆச்சி. ஆச்சி, தனது கழுத்தில் கிடந்த ரெட்டைவடச் சங்கிலியில் நூலால் கோர்த்து வைத்துள்ள சாவியால் ட்ரெங் பெட்டியைத் திறந்தாள்.

"ஏட்டி! முருகன எங்க... அவன வரச்சொல்லு..." காரச்சேவு பொட்டலத்தை எடுத்துக்கொடுத்தாள் ஆச்சி.

"ஏல முருகா.... ஒத்தையில திங்காத... அக்காளுக்கு, அண்ணனுக்கு கொடுத்துட்டு நீயும் எடுத்துக்க...." ஆச்சி சொல்வதைக் காது கொடுத்துக் கேட்காதவனாய்ப் பறந்தான் தம்பி.

பெட்டிக்குள் இருந்த சேலைகளைச் சரிபண்ணும் சாக்கில் அதன் அடியில் மறைத்து வைத்திருந்த எல்.ஜி.பெருங்காய டப்பாவைத் திறந்து ரூபாய் பத்திரமாக இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டு பெட்டியை மூடிவிட்டு, சாவியை எடுத்தபோது அது டாலர் போல இரட்டைவடச் சங்கிலியில் ஆடி நின்றது.

ஆச்சியின் ரெட்டைவடச் சங்கிலி எனக்கு ரயில் தண்டவாளங்கள் போலத் தெரியும். அதிலுள்ள தங்கமுகப்பு கழுத்தின் பக்கவாட்டில் பளிச்சென்று தெரியுமாறு அணிவாள் ஆச்சி! எத்தனையோ பேர் ரெட்டைவடச் சங்கிலி போட்டிருந்தாலும் தங்கப்பழமாய் இருக்கும் ஆச்சியின் கழுத்தில் கிடக்கும் ரெட்டைவடச் சங்கிலியின் அழகே தனிதான்!

வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சங்கிலியைக் கழற்றி வைத்துவிட்டுக் குளிப்பாள் ஆச்சி! குளித்து முடித்தபின் வெறும் கழுத்தோடு ஆச்சியைப் பார்க்க எனக்குப் பிடிக்காது. நான் ஓடிப்போய் அதை எடுத்து வந்து போட்டுவிடுவேன்.

ஊரிலிருந்து ஆச்சி வந்துவிட்டால், ஒருநாள் கூட சும்மா இருக்கமாட்டாள். வீட்டில் கிடக்கும் பழைய ஓலைப் பெட்டிகளைப் பிரித்து, ஓலைகளை தண்ணீரில் ஊற வைப்பாள். ஓலைகள் நன்றாகப் பதத்திற்கு வந்ததும், அவற்றை எடுத்துப்பின்னி தடுக்காகச் செய்வாள். உட்கார்ந்து சாப்பிட அப்போதெல்லாம் சமுக்காளம் கிடையாது. தடுக்குகள் தான். ஏழெட்டுகளைச் செய்து ஆணியில் மாட்டி விடுவாள் ஆச்சி.

" ஏட்டி சடம்புக்கயிற எடுத்தா! பாயி மட்ட கண்ணுக்கு எங்கிருக்குன்னு தெரியமாட்டேங்கு..." என்று தன் கண்களை இருக்கியபடியே தடவிப்பார்ப்பாள் ஆச்சி".

சில சமயங்களில் கூழ்வத்தலுக்கு கூழ் காய்ச்சுவாள். வெங்காய சீசனாக இருந்தால் வடகம். கண்கள் எரிய நாங்கள் கண்களைக் கசக்கிக்கொண்டே வெளியே நிற்போம். ஆச்சிக்கு எதுவும் செய்வதில்லை. பச்சை மிளகாய் அரைத்த கைகள் காந்த ப்பூ... பூ... என ஊதும்போது, "ஏட்டீ! நல்லெண்ணெயை எடுத்து கையில தேயி" என வைத்தியம் கூறுவாள்.

கூழ்வற்றல் பிழியும்போது ஆச்சி சொல்லுவாள். "ஏலே குரு! ஒன் மாமா மக சாந்தியை நீ கல்யாணம் பண்ணிக்கிறயா.... அவ செவப்பு ரெட்டு கலர்லே இருப்பா.... என்னோட ரெட்டைவடச் சங்கிலிய வேணா நான் அவளுக்குப் போடுதேன்... நீ கட்டிக்கிறயா?" ஓரக் கண்ணாள் பேரனைப் பார்ப்பாள்.

அண்ணன் குருசாமியும் ஆச்சிக்கு எசவாத்தான் பேசுவான். "ஆச்சி! நான் நூறு பவுன் நகை போட்ட பொண்ணை மொதல்ல கட்டிக்குறேன். அப்புறமா... அந்தக் குரங்குப் பொண்ணை பழனி மலை மேலே கூட்டிட்டுப் போய் உருட்டிவிட்டுட்டு அப்புறமா உன் பேத்தியைக் கல்யாணம் பண்ணிக்குறேன்...."

பேரனின் கேலிப் பேச்சையும் ஆச்சி ரசித்துக்கொள்வாள். ஆச்சிக்குத் தனது மகன் தெய்வநாயகத்தைப் பத்திய கவலைதான் எப்போதும். அஞ்சு பெண்ணைப் பெத்தா அரசனும் ஆண்டியாவானே?

சவத்து மூதிக்கு இது தெரியாம.... வரிசையா அஞ்சு பொட்டைப் பிள்ளைகளைப் பெத்து வச்சுருக்கானே.... கூறு வேண்டாமா கொஞ்சமாவது? என தங்கை சிவஞானத்திடம் கூறுவாள். தன் மனசுள் உருகி உருகி பெருமூச்செறிவாள் ஆச்சி! அப்போதெல்லாம் அவள் கை தன்னையறியாமல் தன் கழுத்திலுள்ள ரெட்டைவடச் சங்கிலியை உருட்டிக்கொள்ளும்.

"அந்த மனுஷன் இதெல்லாம் பார்க்காமல் போய்ச் சேந்துட்டாரு" "நாள் ஒரு ஒத்தப் பனை. நான் என்னத்தைச் செய்யவோ? எனப் புலம்புவாள்.

ஆச்சியின் சங்கிலி எத்தனையோ முறை எங்களுக்கு உதவியிருக்கு. அண்ணனுக்கு வயிற்றில் கட்டி வந்து ஆபரேஷன். கல்லூரியில் அட்மிசன் போன்ற இக்கட்டான தருணங்களில் அவை காணாமல் போகும். அப்போதெல்லாம் ஆச்சியின் கழுத்தில் தங்கம் கட்டிய ருத்ராட்ச மாலை தான்! "சங்கிலி எங்கே" எனக் கேட்டால், "அதுவா? அது பாடம் படிக்கப் போயிருக்கு....? என்று கூறுவாள்.

ஊருக்குச் செல்லும்போது அது ஆச்சி கழுத்தில் வந்து அமர்ந்துவிடும். எனது தங்கைக்கு அம்மைக்கட்டு நோய் வந்தபோது, ஆச்சி ஒரு வாரம் அவள் கழுத்தில் போட்டிருந்தாள். நான் வயசுக்கு வந்ததும் என் கழுத்தில் அந்த ரெட்டைவடச் சங்கிலி அலங்கரித்தது.

ஆச்சி! வேண்டாம்.... இது உன்னோட கழுத்திலேயே கிடக்கட்டும்" எனக் கழற்றினாலும் கேட்காத ஆச்சி, "கூறுகெட்ட கழுத! நாலு பேரு உன்னப் பாக்க வரும்போது வெறுங்கழுத்தா இருப்பியாக்கும்!" என்று மறுத்துவிடுவாள் ஆச்சி!

பக்கத்து வீட்டுக் கல்யாணத்துக்கு அம்மா பட்டுச்சேலை கட்டி புறப்பட்டுப் போனால் ஏளா! இதைப் போட்டுட்டுப் போ.... என அவள் கழுத்தில் போட்டு அழகு பார்த்து அனுப்புவாள் ஆச்சி!

சில சமயங்களில் கண்களை மூடியபடியே ஆச்சி அமர்ந்திருப்பது தியானிப்பது போலிருக்கும்! பேத்திகள் திருமணம் நல்லபடியாய் முடியணும் எனப் பிரார்த்தனை செய்கிறாளோ என்னவோ?

அந்த மாதிரி சமயங்களில் ஆச்சி கூறுவாள்.

"ஏளா! நான் சாகறதுக்குள்ளே அந்த முத ரெண்டு பேத்திகளுக்கும் கல்யாணம் வந்துச்சுன்னா... இந்த ரெண்டுவடச் சங்கிலிய அழிச்சு, ரெண்டு சங்கிலியா ஆளுக்கு ஒண்ணா பண்ணிப் போட்டா போதும்! எனக்கு இந்த ருத்ராட்ச மாலை இருக்கு! என்னால முடிஞ்சது இவ்வளவுதான்...."

அம்மாவும் கண்ணீர் சிந்தியபடி கேட்டுக்கொண்டிருப்பாள். பேத்திகளின் கவலைகளில் உருகியே ஆச்சி ஒருநாள் செத்துப்போனாள்.

மூத்த பேத்தி சண்முகசுந்தரியை கோவில்பட்டியில் கட்டிக்கொடுத்திருந்தது. அடுத்தவள் பார்வதியை சங்கரன்கோவிலில் துணி வியாபாரம் பார்க்கும் சண்முகத்துக்கு முடித்து வைத்திருந்தார்கள். ஆச்சி சொன்னது போலவே ரெட்டைவடச் சங்கிலி இரண்டாய் பிரிந்துபோய், இருவரது வாழ்க்கையிலும் இரண்டறக் கலந்துபோயிருந்தது.

"இந்தப் புள்ளைகளுக்கெல்லாம் எப்படிக் கல்யாணம் ஆகப்போகுது"? எனக் கேட்டவர்கள் வியந்துதான் போனார்கள். அடுத்தடுத்து நடந்த திருமணத்தின்போது, "மரம் வைத்தவன் தண்ணீர் ஊத்துவான்" எனக் கூறிய அக்கம் பக்கத்தவர் ஆச்சியைப் பாராட்டினார்கள். போன மாசம் சுப்பிரமணியன் அண்ணாச்சி வீட்டு கிரஹப்பிரவேசத்தில் மதினிகள் இருவரையும் சந்திக்கும்போது, இருவரும் பூரிப்பில் திளைத்திருந்த மாதிரித் தெரிந்தது.

"மதினி! கழுத்துல கெடந்த ஆட்சியோட சங்கிலி எங்க? அழிச்சு நெக்லஸ் கிக்லஸ் செஞ்சுட்டீகளா?" என்று கேட்nட்ன். கோவில்பட்டிக்காரி சிரித்தபடியே சொன்னாள்.

"ம்.... நெக்லஸா.... வெளங்கிப்போச்சு. அத என் பேத்தி கழுத்தில செயினா போட்டிருக்கேன்... பாக்கலியாக்கும்...." என்னையுமறியாமல் சிரித்தேன்.

ஏட்டி வள்ளி! இங்க வா... ஆச்சி கூப்பிடுதாக பாரு... அந்தச்சிறுமி ஒற்றைக்காலைத் தூக்கி நொண்டியடித்து பாண்டி விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் குனிந்து ஓட்டுச்சில்லை எடுக்கும்போது அந்த ஒற்றைச் சங்கிலி டாலர் இல்லாமல் ஆடியது.

"ஆச்சி! இது யாரு!.... இது யாது?"

என் பேரன் சிவா தரையில் ஒண்ணுக்கு இருந்து தொப்பலாக நனைந்து, ஆல்பத்தை அதில் விரித்துவைத்து கையால் காட்டிய திசையில், கணபதி ஆச்சி சிரித்துக்கொண்டிருந்தாள் ரெட்டைவடச் சங்கிலியின் மினுமினுப்புடன்.

Pin It