பிள்ளையின் அழுகை குறையவில்லை. ஒன்னரை வயதுதான் ஆகிறது. ஆனாலும் அப்பனைப்போல எண்ணியதைச் சாதித்தே ஆக வேணுமென்ற பிடிவாதம்.

கலவை மெசினின் கடகடத்த சத்தத்தையும் மீறி, கேட்டது அதன் அழுகைச் சத்தம். ஒரு மூட்டைக் கலவைமிசினைக் கொண்டு வந்திருந்த தால் வேலை மும்முரமாய் நடந்தேறிக் கொண் டிருந்தது. யாருக்கும் மூக்கு சிந்திப் போடக்கூட நேரமில்லை. உச்சிவெயில் பம்பரமாய்த் தலையில் சுற்றிக் கொண்டிருந்தது. லேசாகச் சுணக்கம் காட்டினால் ஆளுக்காள் போக்குக்காட்டி வேலையே இழுத்துப் போகும். ‘டீ’ டயத்தில் கூட மிசினை நிறுத்தவில்லை. கைமாற்றிச் சாப்பிட வைத்தான். சாப்பாட்டு நேரத்தில் கொஞ்சம் டயமெடுத்துக் கொள்ளலாமெனச் சமாளித்தான் புருசன்காரன். இந்த வேலைக்கு அவன் தான் கங்காணி.

பெருமையாகத்தான் இருக்கிறது. கலியாணத்துக்கு முந்தி நிமிந்தாளாகத்தான் இருந்தான். ‘மொச்சை’ மகன் பாண்டியிடம்தான் கையாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

வேலைக்கு ஆள்ச் சொல்வதிலிருந்து, மிசினுக்கு அட்வான்ஸ் பேசுவது, வேலை யாள்களை மேய்ப்பது வரைக்கும் கழிப்பில்லாமல் செய்து வந்தான். பாண்டிக்கு ‘அல்லக்கை’ என்கிற பேரோடு, பாண்டியன் பொண்டாட்டி அவனை வச்சிருக்காள் என்கிற அவப்பெயரும் மிஞ்சியது. அந்த அளவுக்கு பாண்டியிடம் வீட்டாளாய்க் கிடந்தான்.

அவனது சுறுசுறுப்பும் விளையாட்டுத் தனமும், பொம்பளைகள் எல்லாரையும் அவ னோடு நின்னுபேசச்சொல்லும். அவனோ இவளைக் காதலிப்பதாகச் சொன்னபோது மிரண்டு போனாள். ஆனாலும் நெஞ்சுக்குள் இனித்தது.

“அயாம் லவ்ஸ் செல்வீ. . . !” - என்று ஒருநாள் வேலைத்தளத்திலேயே - கலவைச் சட்டியை தலைக்கு ஏத்திவிடும்போது நெத்தியில் முத்தமிட்டுச் சொன்னான். அடுத்து ஒன்று உதட்டில் தர முனைந்த சமயம் வேலாயி மதினி பார்த்துவிட்டது.

“ச்சீ. . . எடுவட்ட சிறுக்கி விள்ளைகளா. . . வேலத்தளம். . . டீ வீட்டுக்காரெம் பாவம். . . ஒங்க வேகதாகத்த எங்குட்டாச்சும் மறப்புசறப்புல வச்சுக்கங்க. . . ” - என்று முதுகில் போட்டாள்.

அடுத்தடுத்த வேலைத்தளங்களில், பழக்கிவிட்ட மகராசி; ஒருநா ஒரு பொழுதாச்சும் ஒக்காரவச்சு உப்புக்கஞ்சிய ஊட்டிவிட்டவ. . . விடு. . . ! இவளுக்கு சமயத்தில் சுளீரென கோபம் வந்துவிடும் அப்பவும் மறிப்பான். “எதுக்க நின்னு ஏசுறவங்களுக்குத்தே வதுலு குடுக்கணும், ரோட்ல ஆயிரஞ் சத்தங்கேக்கும். அல்லாத்துக்கும் வதுலுச் சொல்ல ஆரம்பிச்சம்னா அம்மள கிறுக்குப் பிடிச்சபயம்பாக. . . விடுத்தா. . . !”

வேலாயி மதினியைக் கூப்பிட்டுச் சாந்துச்சட்டியை அடுக்கித்தரச்சொல்லிவிட்டு, பிள்ளையைத் தூக்கப்போனாள். சுருதி குறைந்து ஊளையிட்டுக் கொண்டிருந்த மகன், இவளது வருகையைக் கண்டதும் மறுபடி பெருங்குரலெடுத் தான்.

“சரீ. . . சரி” இடுப்பில் தூக்கிக் கொண்டாள். கன்னத்தில் இறங்கி ஓடிய கண்ணீர்த்தடத்தை ட்ரம்மிலிருந்த தண்ணீரைத் தொட்டுத் துடைத்து விட்டாள். பிள்ளையின் அழுகை நின்றாலும் விசும்பல் விடாதிருந்தது. வெய்யிலில் நின்றதில் உடம்பெல்லாம் சூடாகியது.

“நெனல்லதெ நின்டு வெளாண்டா என்னாடா. . . ” சொல்லிக்கொண்டே சூடான இடங்களைத் தேய்த்துவிட்டாள். கடைக்கித் தூக்கிப்போனாள்.

“என்னாடா வேணும். . ?” கடையில் தொங்கின தீம்பண்டக் குவியலில், முறுக்கு இரண்டை எடுத்துத் தந்தாள். அதை வாங்கிக் கடித்தவன், “இட்டிலீ?” - கரகரப்பாய்க் கேட்டான். இவளுக்குக் கோபம் வந்துவிட்டது. அவனை முறைத்தாள். . . “இந்தச் சேட்டதான வேண்டான்றது. மட்டமத்தியானத்தில நா இட்டிலிக்கி எங்க போறதூ. . . ”

காலையிலேயே கேட்டிருந்தான். வேலைக்கு ஆள் கூப்பிடும் அவசரத்தில் பிள்ளையைக் கவனிக்க முடியவில்லை. கலவைமெசினை ‘குட்டியானை’ வண்டியில் சேர்த்துக்கட்டி சட்டி மம்பட்டிக் கடையில் சாமான்களை எண்ணியெடுத்து சித்தாள் கள் தலையில் ஏத்திவிட்டு பிள்ளையிடம் வரும் போதே இட்லிப்பாட்டு ஆரம்பித்திருந்தான்.

சோத்துவாளியைத் தூக்கிக்கொண்டு, இட்டிலிக்கார அம்மாவிடம் வந்தபோது சட்டி நிறையப் பணியாரமும் ஆப்பமும் குவிந்து கிடந்தன. இட்டிலி இப்பத்தான் ஊத்தி இருப்ப தாகச் சொன்னார். ‘ரெண்டுநும்சம்’ என்று அமரச்சொன்னார். ஆனால் அது வெந்து எடுக்கும்வரை நிக்கெ நேரமில்லை. ‘குட்டியானை’ புறப்பட்டுவிட்டது. இரண்டு ரூபாய்க்கு பணியார மும் ஆப்பமும் வாங்கிக் கொண்டாள். “வந்து இட்டிலி வாங்கித்தாரேன்” பிள்ளைக்கி வாக்குறுதி தந்து அவனையும் இழுத்து வந்துவிட்டாள். எதை வாங்கிக் கொடுத்தாலும் இட்லி தொக்கத்திலேயே நின்று சாதித்தான்.

“பிள்ளயெல்லா கெழவிகிட்ட விட்டுட்டு வரவேண்டியதுதானடீ. . . ” -வேலாயி மதனி சொன்னதும் கெழவி ஆடிவிட்டாள். “கைப் பிள்ளயா இருந்தாக்கூட கக்கத்தில் வச்சுக்கலாம் கால் மொளச்ச சனியங்க்ளயெல்லாம் கட்டிச் சேவிக்க நமக்கு வயசு பத்தாது ஆத்தா” - அவளும் எங்காவது சாணிப்பொறுக்க தட்டை சுமக்கப் போய்விடுவதால் பிள்ளையைவீட்டில்விட்டு வரும் நினைப்புக்கே இடமில்லை.

நாலு முறுக்கோடு, இரண்டு வாழப் பழத்தையும் வாங்கிக் கொடுத்துவந்தவள். வீட்டுக்குப் போனதும் இட்டிலி வாங்கித் தருவதாக சமாதானம் சொல்லி சமாளித்து வேலைத்தளம் வந்தாள்.

“எவெங்கூடப் போயிக் கொழாவிட்டு வாரவ. . . ?”

கலவைமிசின், கொட்டிய சிமின்ட் கலவையை அவுக அவுக்கென அள்ளிவிட்டுக் கொண்டு இருந்த புருசன்காரன் கேட்டதுதான் தாமதம்.

வடபுதுப்பட்டி கரட்டோரமாய் புதிதாய் எழும்பிக் கொண்டிருக்கும் தொகுப்பு வீடுகள். . . , ஆரவாரமற்ற சரளைக்கல் குன்றுகள். . . , இந்த விரிவாக்கப் பணியாளர்களை நம்பி உருவாகி இருந்த சின்னஞ்சிறு கடைகள். . . வேலைக்காக கட்டிடத்திற்கு முன்னால் நிற்கிற தண்ணீர் டேங்கர்லாரி, தலையில் வேடும் நெஞ்சுக்குள் வேக்காடுமாய்ச் சாந்துசட்டி சுமக்கும் இருபதுக்கும் மேற்பட்ட சித்தாள் பெண்கள். . . கட்டடத்துக்கு இணையாய் நிற்கிற மரச்சாரம். அதில் தொங்கிக் கொண்டு கலவையினை பரத்தலுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் நிமிந்தாட்கள். . . இன்னும் பரத்தலில் வேலை செய்து கொண்டிருக்கும் கொத்தனார், சூப்பர்வைசர், காண்ட்ராக்டர் இத்தனையையும் மீறி உயிரைக்கொத்திக் குதறிக் கொண்டிருக்கும் பங்குனி மாசத்து உச்சிவெய்யில் எதுவும் இவளுக்கு உறைக்கவில்லை. புருசனின் வார்த்தையில் அத்தனையும் பொசுங்கிப் போக வார்த்தைச்சூடு மட்டும் நின்றது.

“ஆ மா. . . ந்தா. . . . அங்க அந்தபொட்டிக் கடக்காரெங்கூடப் படுத்தெந்திரிச்சுத்தே வாரே”

“யேய். . . யே. . . என்னாடி நாறத்தனமான பேச்சு?” என்றபடி ரெண்டுபேருக்கும் நடுவில் வந்து நின்றது வேலாயிமதனி. “யே போசு. . . நாந்தானப்பா அனுப்பிச்சு வச்சேன். . பிள்ளக்கி அழுக அமத்தப்போனாப்பா. . . ”

“யாரோசொன்னமாதிரி. . . ஏல மாட்டாத வளுக்கு பிள்ளமேல சாக்கு. . !” -எகடாசி பேசினான். “ஆமா. . . நாந்தே, பிள்ளையச் சாக்கு வச்சு, பொண்டாட்டியச் சாக்குவச்சு, அரமணிக்கொருதர கழுதமூத்தரத்த ஊத்திட்டு ஊத்தீட்டு வாரே. . . குடிகாரப்பெயெ. . . . ராத்திரிதேங் குடிக்கிறேன்னா வேலத்தளத்துலயுமா இந்தக் கண்றாவி. . . !” - பொருமினாள்.

வெட்டியாய் வாங்கிக்கட்டிக்கொண்டதில் பின்வாங்கினான், “ஏலா, அப்புடியே மம்பட்டியக் கொண்டிப்போட்டேன்னா எங்குட்றி போனேன்னு கேட்டா ஏட்ட எம்பக்கந்திருப்புறயெ. . . !”

“போடா புல்லரிக்காதவனே. . . ! ஒன்ன யெல்லாந் நம்பிவந்தேம்பாரு. . . எம்புத்தியச் செருப்பக் கொண்டியேதெ அடிச்சிக்கிறனு. . . !”

“ஆமா நிய்யு சின்மா நடிக சில்க்கு. . . இவளுக்கு நாங்க பத்தாது. . . போடீ. . ”

“அட்ஜேய் போசூ. . . நெசமாவே எந்தங்கச்சி சின்மா நடிக தாண்டா. . . என்னமோ ஒங்காலம் அது ஓங்கிட்டவந்து செங்கச்செமக்கணும்ன விதி. . . ” -சின்னவாண்டு மம்பட்டியை ஊண்டி நின்று தவிப்பாறிச் சொன்னான்.

“ச். . . அவனப் போச்சொல்லுணே. . . பச்சப் புள்ள காலேலருந்து கத்தீட்டுக் கெடக்கான். . . என்னாண்டு கேக்கத் துப்புஇல்ல. . . மூத்தரத்தண்ணி குடிக்கமட்டும் நாலுதரம் ஓடத்தெரியும். ”

“என்னாப்பா. . . போசூ. . . . என்னா அங்கன ஒரே சத்தம். . . ?” - கேட்டபடி சூப்ரவைசர் சைட்டிலிருந்து கீழே இறங்கி வந்தார்.

“வேறயென்னா. . . ! எங்குட்டாச்சும் போயி தண்ணியப்போட்டுட்டு வந்திருப்பான்!” - காண்ட்ராக்ட்காரர் அனுமானமாய்ச் சொன்னார். சின்னவயசுதான் கண்ணாடிபோட்டு வெளேரென வேட்டி உடுத்தி இருந்தார்.

“சேச்ச. அதெல்லா இல்ல சார். . . ” பொட்டப்பிள்ளை போல போஸ் நாணிக் கோணினான்.

“இல்லாட்டி இம்புட்டு சவுண்டு வராதே. . காமுத்தாயக் கேட்டா தெரிஞ்சிடும். நீ சொல்லுமா. . ” சூப்பர்வைசர் அவளை சாட்சிக்கு இழுக்க அவளோ, பிள்ளையின்மேல் கண்ணாய் இருந்தாள். அத்துவானக்காடு, நாயும் நரியும், கழுதைப்புலியும்கூட வந்து போவதாய்ப் பேசிக் கொள்கிறார்கள்.

“யார்ட்டப்பா காசப்பிடிச்ச. . . சூப்ரவைசரு தலயத்தடவிட்டியாக்கும். . . எம்ட்டனயே ஏப்பம் விட்ருவியே. . . ” காண்ட்ராக்ட்டர் சொன்னதை பெருமையாய் எடுத்துக் கொண்ட போஸ், ‘ஹி. . . ஹி’ எனச்சிரித்தான். அடர்ந்த காடாய்ச் சுருண்டு கிடந்த தலைமுடிக்குள் விரல்களை விட்டுச் சுரண்டினான். “மொதலாளியப் பாத்து நாளாச்சு. . . இன்னிக்கி அய்யாகிட்டதே செலவுக்கு வாங்க ணும்னு இருக்கெ. . . காலேலருந்து சோர் கூடத் திங்கல. . . அய்யாகிட்ட வாங்கித்தே” - அளைந்த விரல்களை பொடனியில் நிறுத்தி கையெடுக் காமல் சுரண்டினான்.

“யே. . . போசு,. . . ஒம்பாஷயெல்லாந் தெரியுமப்பா. . . ரெம்பச் சொரண்டாத. . . ரத்தம் வரப்போது. . . காம்த்தாய அரட்டிமெரட்டி காசப்பிடுங்கி சரக்கேத்தியிருப்ப. . . என்னா, காம்த்தாயி. . . ?” -கலவைமெசினுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவளை இழுத்துப் பேசினார் சூப்ரவைசர். பெயருக்குத் தகுந்தபடி செழுமை யாயிருக்கும் காமுத்தாயின் உடலமைப்பின்மேல் தீராப் பார்வை அவருக்கு.

“அதெல்லாமில்லசார். . . அய்யாவக வேலை லயெல்லா ‘அது’ கண்ரோலாத்தெ இருக்கும். வேலமுடிஞ்சப்பறம் நாங்கேரண்டி சொல்ல முடியாது. அய்யாமேல எப்பவு நல்லமருவாதி வச்சிருக்காப்ல. . . ” - தனக்கே உரிய பாணியில் ஏற்ற இறக்கத்தோடு சொன்னாள்.

பிள்ளை, புங்கமரத்தடியில் முறுக்கைத் தின்றபடி நின்று கொண்டிருந்தான். அருகாமையில் ஒரு செவலைநாய், அந்த மரத்தின் அடிப்பகுதியை முகர்ந்து சோதித்துக் கொண்டிருந்தது. கையிலிருந்த முறுக்கை தூக்கலாய் ஏந்திப்பிடித்துக் கொண்டு, மற்றொரு கையில் அந்த நாயை விரட்டிக் கொண்டிருந்தான்.

இவளுக்கு அடி வயிற்றில் பயம் கவ்விப்பிடித்தது, ‘கடிச்சிறப்போகுதுடா மகனே’. எண்ணியதை சொல்ல முடியவில்லை. ஏற்கெனவே சூப்ரவைசரின் பார்வை சரியில்லை. அந்தாளுக்கு சரிக்குடுத்துப் போகாததால், எல்லாப் பேச்சிலும் கொக்கிபோட்டே பேசுகிறார். பிள்ளைகளை வேலைத்தளத்துக்குக் தூக்கிவரக்கூடாதென கண்டித்தும் இருக்கிறார்.

ஏதோ ஒருவிதத்தில் வேலை ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது காண்டிராக்டர் வேறு உடனிருக்கிறார். இந்த நேரம் தன்னுடைய தொழில்பக்தியைக் காட்ட ஏதுவாகிவிடக்கூடாது. நல்லவேளையாய் நாய், கால்தூக்கி ஒண்ணுக்க டித்துவிட்டு நகர்ந்தது. மரத்தூரில் விழவேண்டிய சிறுநீர், குறிமாறிப்போய் தூக்குச்சட்டியிலும் துணிப்பொதியிலுமாய் பெய்து நனைத்தது.

“கலவகொஞ்சங் களிப்பாத்தெரியுதே. . . !” காண்டிராக்டர் கலவைமிசினுக்குள் விழுகிற சல்லி மணலின் அளவைப் பார்த்துச் சொன்னார்.

“பத்துக்கு இருபதுதான் சார். . . !”

“ஹேய். . . நாந்தே சொன்னேல்ல. . !” ஐந்து விரல்களைக் காட்டிய சூப்ரவைசர், “சேத்துப் போடு” - என்றார்.

“அது நீங்க சொன்னபடிக்குத்தான்சார் நடக்குது. . . ஒங்களுக்கு ரெண்டுகாசு தங்குனாத்தான, எங்களுக்கு காக்காசு கெடைக்கிம். . . வெளியில சொல்றப்ப. . . !” -காமுத்தாய் நாசூக்காய்ப் பேசினாள்.

“எப்பிடிசார் காம்த்தாயி. . . ?” என்று காண்டிராக்டரிடம் கேட்டவர், “ஆமாத்தா. . . ஒம்புருசனவிட ஒன்னவச்சுத்தா வேலயே. . . கணக்காப் பாத்துக்க. . !” என்று சூப்ரவைசர் இவளோடு பேசிக்கொண்டிருக்க, காண்டி ராக்டரிடம் ‘கட்டிங்க்கு’ காச பார்த்துவிட்டான்.

“நாளைக்கி ஆளக் கொறச்சுக்கூட்டிவா. . . ‘செய்ன்’ தொங்கல் படுது. ரொட்டீன்ஒர்க் சரியில்ல ஆளக் கட் பண்ணுனா செய்ன் கரெக்ட் ஆகும். . . சரியா. . . !”-

சிமிண்ட் மூட்டை தூக்குவதிலிருந்து கலவையைக் கிண்டி அள்ளிவிட்டு சாரத்தில் உயரே உயரே பயணித்து, பரத்தல் பரசிவிட காலிச்சட்டி இறக்கவிடுவதுவரை சங்கிலியாய் இயங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு, நளைக்கு யார்யார் பொழப்பில் மண்ணோ என்ற பதைப்பு எறிக் கொண்டது.

“கை மாத்திவிட ஒண்ணுக்கு ரெண்டுக்கு எறக்கிவிட ஆள் வேணும்ல சார்”. . .

“ம் கொஞ்சிக்கொலாவரதுக்கும் கூட ஏற்பாடு செஞ்சிடலாம்ப்பா. . . ” சொல்லிக் கொண்டே ஸ்டோர்ரூமை நோக்கிப் போனார்கள்.

பிள்ளை மறுபடியும் சிணுங்குகிற சத்தங் கேட்டது, “சனி யன நாளைக்கெல்லா எங் குட்டாவது விட்டுத்தொலச்சுட்டுத்தா வரணும். . . ”

மதியசாப்பாட்டிற்குள் அறுபதுமூட்டை ஓடியிருந்தது. கைகழுவி எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தபோது, போஸ் கட்டிங் போட போயிருந்தான். அது போடாமல் அவனுக்கு சாப்பாடு இறங்காது. கறிக்கஞ்சிக்கு மட்டும் எனப் பழகியவன், தண்ணிச்சோறுக்குக்கூட அது இல் லாமல் சாப்பிட முடியாமல் ஆகிவிட்டான்.

ஞாபகமாக பிள்ளைக்கு இட்டலி தேடி வாங்கிவரச் சொன்னாள். அதற்கும் மறக்காமல் அவளிடம் காசும் வாங்கிக்கொண்டான். கூட்டத் தோடு சாப்பிடுகிறபோதும் பிள்ளை அடம் பிடித்தான். ஆளாளுக்கு ‘ஆந்த’ வார்த்தை சொல்லி ஆளுக்கொருவாய் ஊட்டிவிட்டார்கள் வேலை ஆரம்பித்தபிறகே வந்த போஸ், ‘நாலு மணிக்கி மேலதான் இட்டிலி ஊத்துவாங்க-ளாம்’ என்று சொல்லிவிட்டு தனக்கான கஞ்சியைக் குடிக்க வாரம்பித்தான்.

அப்பாவைக் கண்டபிறகு பிள்ளை, மறுபடி அழா ஆரம்பித்தான். “அழாதடா வாணா. . . வணா ந்தா காசவச்சிக்க சாப்பிட்டுப்போயி வாங்கிக் கிடலா. . . ” - பிள்ளை நம்பவேண்டி அஞ்சுரூவாய் தாள் ஒன்றை அதன் சட்டப்பையில் திணித்தான். ரூபாயை எடுத்துப்பார்த்த பிள்ளை, கொஞ்சநேரம் அழுகையை நிறுத்தினான். “கிழிச்சிப் போட்டு றாதடா. . . இட்டலி ஊத்தட்டும் சித்தநேரத்தில காப்பிக்கடைல பெஞ்சில ஒக்காந்து தின்னுட்டு வருவம். . . ” - சொல்லிவிட்டு கொடுத்த பணத்தை பிடுங்க எத்தனித்தபோது சட்டைப்பையிலிருந்து டவுசர்சேப்பிற்கு மாற்றிக்கொண்டு அப்பாவை முறைத்தான்.

“புள்ளய என்னாண்டுபாரு காம்த்தாயீ. . . சும்ம்மா அழுகுறான். . . பசிச்சுஅழுகுறமாதிரி தெரியல. எதோ ஒரு தெய்வகுத்தம் தெரிது. . . நேந்தத எதும் மறந்திட்டியா. . . தலமுடி எறக்கியாச்சில்ல. கொலசாமி காணிக்க எதும் விட்டுப்போச்சா. சும்மா வெல்லா இப்பிடி அழுவமாட்டனே. . . எதோ ஒருமறி நிக்கிது, வெள்ளிக்கிழம வள்ளுவச்சிய பாத்துட்டு வரலாம். . ” - வேலாயி மதனி சொன்னதும் இவளுக்கு இன்னொரு பளு ஏறியது.

மறுபடி அந்த செவலைநாய் வந்தது. இப் போது பிள்ளைக்கருகில் படுத்திக்கொண்டது. பிள்ளை அதனோடு ஏதோபேசிக்கொண்டிருந்தான். அது வாலை ஆட்டுவதும் பிள்ளையின் தொடுகை யில் காதைச் சிலிர்ப்பதுமாய் அவனது சில் மிசங்களை விரும்பியதுபோல தரையோடு தரை யாய் முங்கிப்படுத்துக் கண்மூடிக்கொண்டது.

“பாத்துடா. . . அய்யா. . . ராசா. . . கடிச்சிறப் போவுது. . . சாமீ. . . டேய்ய்” - காம்த்தாய்க்கி அடி வகுறு பதறியது. டீ நேரத்தில் மறுபடியும் காண்ட் டிராக்டர் வர,வேலை வேகம் பிடித்தது.

வேலையாட்களுக்கு டீ வாங்கிவந்த ஆள் இட்டிலிப்பொட்டணத்தோடு வந்தான். சூப்பர் வைசருக்குத் தெரியாமல் அதைவாங்கி மடியில் மறைத்துக் கொண்டாள் காமுத்தாய்.

இன்னமும் பிள்ளை நாயுடனேயே விளையாடிக் கொண்டிருந்தான். சின்னச்செடி ஒன்றைப் பிடுங்கி, நாயை அடித்துக்கொண்டு விளையாடினான். உறக்கச் சடவிலிருந்த நாய், அந்தப் பிள்ளை அடித்ததும் எழுந்து மரத்தின் இன் னொரு நிழல்பகுதிக்குச் சென்றுபடுத்தது. அங்கே யும் அடிவிழ இன்னொருபுறம். . . அடுத்தொரு பக்கம் என, சலிப்பில்லாமல் சுற்றிக்கொண்டே இருந்தார்கள்.

விளையாட்டுப்போக்கில் பிள்ளை, அழுகையை மறந்திருந்தான். அவனுக்கு டீத்தண்ணி தரப்போனவர்களைத் தடுத்தாள் இவள். “வுடுங்க வெள்ளாட்டு மதியில இருக்கான். இருக்கட்டும், கலைக்கவேணாம். . . ! ஓனரு போனபெறகு இட்டிலியக் குடுத்துக்கலாம். . !” -என்றாள்.

டீ குடித்து முடித்த வேலையில் கலவை மெசினில் ‘பிரிவீல்’ பல் உடைந்துபோனது. மெசினை டிரைவர் சட்டென நிறுத்திவிட்டான். கழட்டிப்பார்க்க வேண்டுமாம். மீறி ஓட்டினால் நிறையச் சேதாரம் ஆகுமாம். ஓனருக்கு பதில் சொல்ல முடியாதென மறுகினான்.

கலவைக் குடுவைக்குள் கிடந்த சரக்குகளை அள்ளி, கைக்கலவை போட ஆரம்பித்தனர். சாரத்தி லிருந்த வெள்ளயனையும் அம்மாவாசியையும் இறக்கிவிட்டு காமுத்தாயும் கூடவே நின்று சவுண்டுவிட்டு வேலைவாங்க வேண்டியதாயிற்று.

காண்ட்டிராக்ட்டருக்கு குறைவிழுந்து விடுவோ என்ற பரிதவிப்பு. . . அதை ஈடுகட்டும் வகையில் மடமடவென முடித்து நிமிர, ஆறுமணிச் சங்கு ஊதிவிட்டது.

வெய்யில் காலமாகையால், அப்பவும் பொழுது வெளிச்சம் காட்டியது. சாந்துசட்டிகளைக் கழுவி அடுக்கியவளுக்கு இட்டிலிப் பொட்டலம் அப்போதுதான் உறுத்தியது. பதறிப் போனாள். அடுக்கிய சட்டிகளைப் போட்டுவிட்டு கைகழுவி ஓடினாள்.

“ராசா. . . லேய். . . யய்ய்யா. . . டே. . . மக்கா. . . !” மரத்தடியில் பிள்ளையைக் காணோம். ஆளுக் கொரு பக்கமாகத் தேட ஆரம்பித்தார்கள்.

எப்பிடியோ இன்றைய வேலை திட்ட மிட்டபடிக்கு நடந்துமுடிந்ததில் திருப்தியுற்ற காண்ட்ராக்டர் ‘பைக்கை’ ஸ்டார்ட் செய்தார்.

“இதுக்குத்தேன் பிள்ளகள எல்லாம் வேல நடக்குற எடத்துக்கு கூட்டிவரக்கூடாதுன்னு சொல்றது. . . பதறாதீங்க. . . இங்குட்டுத்தே எங்கி யாச்சும் வெள்ளாடிக்கிட்டிருப்பான். கெடைக் காட்டி எனக்கு போன்பண்ணுங்க. போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்ளய்ண்ட் தந்துருவம். . . என்னாப்பா போசு. . . கௌம்பறம். . . !”

“சார் நீங்க கௌம்புங்கசார். . . நின்னா, இதச் சாக்குச் சொல்லி, கட்டிங் - குவாட்டருக்குத் தண்டந் தரணும். . . ”- சூப்பர்வைசர் கிசுகிசுத்து அவசரப் படுத்தினார். அவரது விசுவாசம் கண்டு மெய் சிலிர்த்துப் போனார் காண்டிராக்டர்.

Pin It