இன்னும் அரைமணி நேரத்தில் ரேணி குண்டா வந்துவிடும். வண்டி சரியான நேரத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது’ என்று மாதவன் நினைத்தான். ‘இந்த வண்டி ஒரு விசித்திரமான போக்குடையது. இதன் பயணம் மிக நீண்ட தூரம் உடையது. மும்பையிலிருந்து நாகர்கோவில் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட நாட்டின் மேற்கு முனையையும் தெற்கு ஓரத்தையும் இணைக்கும் வேலையைச் செய்கிறது. விழுப்புரம் போய்ச்சேர எப்படியும் மாலை ஆறுமணி ஆகிவிடும்’ என்றெல் லாம் எண்ணிக் கொண்டிருந்த அவன் கவனத்தை “அப்பா, பசிக்குதுப்பா” என்ற கண்ணனின் குரல் ஈர்த்தது.

“இதோ திருப்பதி வந்துடும்; அங்க போயி சாப்பிடலாம்” என்று மகனுக்கு மறுமொழி கூறினான் மாதவன்.

“திருப்பதியிலிருந்து எந்த வழியிலிங்க போ கும் “ என்று கேட்டாள் அவன் மனைவி சுகுணா.

“ரேணிகுண்டாலேந்து திருப்பதி போகும்; அங்கேந்து அப்படியே போக வேற வழி கெடயாது. அதால மறுபடி ரேணிகுண்டா வந்து இப்படியே காஞ்சிபுரம் வழியாப்போகும்”.

“திருப்பதியில ரொம்ப நேரம் நிக்குமா?”

“அதான் சொல்றனே; இந்த வண்டியே ஒரு தினுசானது; திருப்பதியில ரெண்டுமணி நேரம் போட்டுடுவாங்க; நிலையத்தை விட்டு வெளியில போயி சாப்பிட்டுட்டே வரலாம்”

“நிலையம்னா என்னப்பா” என்றான் ஆங்கில வழியில் படிக்கும் கண்ணன்.

“அதாண்டா ஸ்டேஷன்னு சொல்றததான் ஒங்கப்பா நெலயம்னு தமிழ்ல சொல்றாரு; தமிழ்வாத்தியார் இல்லியா” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் சுகுணா.

பதிலுக்கு மாதவனும் “ஆமா தமிழ் வாத்தி யார் மட்டும்தான் தமிழ்ல பேசணும்; நீங்கள்ளாம் கலந்து கலந்து பேசுவீங்க” என்றான்.

“ஏன் இப்படிக் கோவிச்சுக்கறீங்க” என்று கேட்டாள் சுகுணா. கண்ணன் எதைப்பற்றியும் கவலையின்றி வேடிக்கை பார்த்துக் கொண் டிருந்தான்.

வண்டி இப்போது ரேணிகுண்டாவில் நின்று விட்டு திருப்பதி நோக்கி போய்க்கொண்டிருந்தது. தமிழ் படித்தவனுக்குத் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கவில்லை. உள்ளூரில் நான்கைந்து ஆண்டு கள் நண்பர்களுடன் சுற்றித்திரிந்த மாதவன் மும்பை யில் டோம்பிவிலியில் தமிழ் கற்பிக்கப் பத்தாயிரம் ஊதியம் என்றதும் பணியில் சேர்ந்து விட்டான். திருமணமானதும் குடியிருக்க வீட்டு வசதியும் இலவசமாகப் பள்ளி நிர்வாகம் ஏற் படுத்தியது கொஞ்சம் வசதியாகத்தான் இருந்தது.

திருப்பதிமலையின் மேல் நடந்துசெல்லும் வழி தெரிந்தது. உடனே சுகுணா அனிச்சைச் செய லாய் கன்னங்களில் கைகளால் போட்டுக் கொண் டாள்.

“அது சாமி இல்லம்மா; நடந்துபோற வழி மாதிரி இருக்கு” என்றான் கண்ணன். மாதவன் சிரித்தான்.

“சாமி இருக்கற எடத்தைக் காட்டற வழியும் சாமிதான்” என்றாள் பதிலுக்கு சுகுணா.

“ஆமா, ஆமா மேல போற பேருந்தும் சாமி தானா?” என்று விடாமல் மாதவன் கேட்க, கண்ணன் சிரிக்க அதனால் முகம் சிவந்த சுகுணா “என்னடா சிரிப்பு?” என்று அவனை அதட்டிய தோடு, போதும் ஒங்க கிண்டல்’ என்று கூறினாள்.

திருப்பதியில் வெளியில் சென்று உணவு வாங்கி வந்தான். சாப்பாட்டுப் பிரச்சனை முடிந் தது. நிலையத்தில் இருந்த பெஞ்சில் உட்கார்ந் திருந்த மாதவன் மிகவும் உற்சாகமாக இருந்தான். பறவைகள் மாலையில் கூடு திரும்பும் போது கொள்ளும் மனநிலை அவனுக்கு வாய்த்திருந்தது.

விழுப்புரத்தில் இறங்கிப் பேருந்தில் ஏறி ஊர்போய்ச்சேர இரவு எட்டுமணி ஆகிவிடும். அவ்வளவுதான். இன்றுவீட்டோடு முடங்க வேண்டியதுதான். நாளை காலையில் சீக்கிரமே எழுந்திருக்க வேண்டும். குளித்த ஏரி, ஆடிய மைதானம், சுற்றிய கோயில், படித்த பள்ளி, பழகிய தெருக்கள், நெருங்கிய நண்பர்கள், அனைவரையும் பார்த்து மூன்று நாட்களில் மீண்டும் மும்பை சென்று இயந்திர வாழ்வுக்குத் திரும்ப வேண்டும்.

அதற்கு மேல் விடுப்பு அளிக்க பள்ளி நிர் வாகம் மறுத்துவிட்டது. படிக்கும் பிள்ளைகளும் இவன் போகாவிட்டால் சுத்தமாகத் தமிழை மறந்துவிடுவார்கள்.

ஊருக்கு வந்து ஏழாண்டுகள் ஆகி இருக்கும் என எண்ணினான் மாதவன். திருமணமாகி சுகுணா வுடன் வந்தபிறகு நாம் போகவில்லையே! தலைப் பிரசவமும் சுகுணா அம்மா இங்கேயே வந்து பார்த்துவிட்டார்கள். கண்ணனுக்கு இப்போது ஆறுவயதாகிறது. ஊர் எல்லாம் மாறி இருக்கும். எப்படி இருக்குமோ? நண்பர்கள் என்ன செய் கிறார்களோ? என்றெல்லாம் சிந்தனை ஓடியது.

நண்பர்கள் என்று பெரிய வட்டாரம் ஏதும் அவனுக்கு இல்லை. கிரிக்கெட் குழுவில் கூட அவன் விளையாடியிருந்தாலும் யாரிடமும் பழக்கம் அதிகம் இல்லை. முருகனும் சின்னசாமி யும்தான் சிறுவயதிலிருந்தே தொடர்பு உடைய வர்கள். ஆனால் அவர்களிருவரும் எதிரெதிர் கொள்கை உடையவர்கள். முரண்தானே நெருக் கத்தை அதிகமாக்குகிறது.

தினமும் கோயில் சுற்றாவிட்டால் சின்ன சாமிக்குத் தூக்கமே வராது. சாமி என்றாலே முருகன் ஒரு காத தூரம் ஓடிவிடுவான். முருகனின் பெயரை வைத்தே கேலிபேசும் சின்னசாமியை மாதவன்தான் அமைதிப்படுத்துவான்.

“பேர்ல என்னடா இருக்கு; மனசு சுத்தமா இருக்கணும் ஒன் பேர்கூட சின்னசாமிதான். நீ என்ன சாமியா? வெறும் ஆசாமிதான?

“டேய் முருகா; இதமாதிரி சாமி பத்தியெல் லாம் கிண்டல் செஞ்சா எனக்குக் கோபம் வரும்; நிறுத்திக்க” என்று அவன் கோபப்பட மாதவன் இடையே புகுந்து “ஏம்பா, இதே ஒங்களுக்கு வழக்கமாப் போச்சு; வேற ஏதாவது பேசுங்க” என்பான்.

ஆனால் மூவரும் உண்ணும் நேரம், உறங்கும் நேரம் தவிர ஒன்றாகத்தான் இருப்பார் கள். ஒரு நாள் காலையில் ஏழுமணி இருக்கும். முருகன் ஓடிவந்தான்.

“மாதவா, கௌம்பு, ஒடனே கௌம்பு; சின்னசாமி வீட்ல ஏதோ தகராறு; அவன் பொண் டாட்டி கையில பெட்டியோட கௌம்பிப் போயிட் டிருக்கு”

“எங்கன்னு கேக்க வேண்டியதுதான”

“கேட்டனே! எல்லாம் எங்க ஊருக்குதான் போறேன்; ஒங்க நண்பரு ஊட்லதான் இருக்காரு; போய்ப்பாருங்கன்னு வித்யாசமா பேசிப் போய்ட்டாங்க”.

சட்டையை மாட்டிக்கொண்டு மாதவன் புறப்பட்டான். சின்னசாமி வீட்டில் தரையில் கைலி கட்டிக் கொண்டுபடுத்திருந்தான். அப்போதுதான் குடித்து முடித்திருந்த காப்பிக்குவளையின் மீது ஈக்கள் உட்கார்ந்திருந்தன. இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் எழுந்து உட்கார்ந்தான். முகம் சிவந்திருந்தது.

போன உடனேயே “ஏண்டா என்னடா ஆச்சு?” என்று கேட்டான் மாதவன். சின்னசாமி பதிலே பேசவில்லை. ஆனால் அவன் கலங்க ஆரம்பித்தான். முருகனும் மாதவனும் அவனின் இரு பக்கங்களிலும் உட்கார்ந்தனர்.

“சொல்லுடா கேக்கறான்ல” என்றான் முருகன்.

“ஒண்ணும் இல்லடா” என்று பதில் சொன்னான் சின்னசாமி. இவர்கள் இருவரையும் பார்த்ததில் அவனுக்குத் துக்கம் அதிகமாகி இருந்தது. அழுதுவிடுவான்போல் தோன்றியது.

“இங்கப்பாரு, எங்களுக்கு எல்லாம் தெரியும். எதையும் மறைக்காத, என்னா நடந்தது சொல்லு?’

“என்னத்த சொல்றது? நேத்து ராத்திரி வழக்கம் போல சண்டை நடந்துச்சு; காலைல காப்பியைக் கொண்டுவந்து ‘டக்’குன்னு வைச்சா; நான் ஒண்ணுகேக்க அவளும் விடாம பதிலும் சொல்ல இப்படியே ஆரம்பிச்சு அதிகமா போச்சு; இனிமே வரமாட்டாளாம்; கோச்சுகினு பூட்டா; போனா போவட்டும்; உடுங்கடா” என்றான் சின்னசாமி.

சற்றுநேரம் அங்கு அமைதிதான் நிலவியது. மாதவன் அமைதியைக் கலைத்துப் பேசினான்.

“எதைடா உடறது? பைத்தியக்காரன் மாதிரிப் பேசற எங்களுக்குத்தான் கல்யாணம் ஆகல; ஒனக்காவது ஆயிடுச்சேன்னு எவ்வளவோ சந்தோஷமா இருந்தோம். நல்ல பொண்ணாதான் பாத்து செஞ்சு வைச்சோம். அவளை வைத்துக் குடும்பம் நடத்தத் தெரியல” என்று அவன் அடுக்கிக் கொண்டே போனான்.

“என் மேலேயே சொல்லுடா; எல்லாக் குத்தமும் நான்தான் செஞ்சனா? அவளுக்குச் சம்பாதிக்கறோம்ற திமிருடா” என்றான் சின்னசாமி.

“இப்படி எல்லாம் சொல்லக்கூடாது சின்ன சாமி. நாங்க போயி பாத்துட்டு வர்றோம். அதுக்குள்ள வண்டி ஏறி இருக்கமாட்டாங்க” ன்னு சின்னசாமியின் பதிலை எதிர்பாராமல் மாதவன், “டேய், கௌம்புடா” என்று முருகனை அழைத்துக் கொண்டு போனான்.

காலை வேளையிலும் பேருந்து நிலையம் கூட்டமாகத்தான் இருந்தது. அவசர அவசரமாக பண்ருட்டி வண்டிகள் நிற்கும் இடத்திற்குப் போய்ப் பார்த்தார்கள். எங்குமே சின்னசாமியின் மனைவி நிர்மலாவைக் காணவில்லை.

“என்னடா முருகா? எங்கயும் அவங்களக் காணல; என்னா செய்யலாம்” என்ற மாதவனுக்கு “வாடா நாமளும் கௌம்பிப் பண்ருட்டி போகலாம்” என்று பதில் சொன்னான் முருகன்.

பண்ருட்டியில் நிர்மலாவின் அப்பா ‘வாங்க’ என்று சோகமான முகத்துடன் வரவேற்றார். மணி பதினொன்று என்று சுவரின் கடிகாரம் காட்டியது. பக்கத்தில் படத்தில் நிர்மலாவும் சின்னசாமியும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“மோர் குடிங்க” என்று நிர்மலாவின் அம்மா கொண்டு வந்து கொடுத்தார். எப்படி பேச்சைத் தொடங்குவதென்று யாருக்குமே தெரியவில்லை. மோர் குளிர்ச்சியாய் நெஞ்சில் இறங்கியது. அவரே பேச்சை ஆரம்பித்தது வசதியாய் இருந்தது.

“ஒங்க ரெண்டு பேருக்காகவும்தான் நிர்மலாவை சின்னசாமிக்குக் குடுத்தது. நீங்க சொல்றீங்கன்னு நம்பிதான் இந்த சம்பந்தம் செஞ்சதே! ஏன்னா ஒங்க அப்பாரெல்லாம் எனக்கு ரொம்ப நாளாப் பழக்கம். அதாலதான் சின்னசாமிக்கு வேலைன்னு இல்லன்னாலும் அம்மா அப்பா பிடுங்கல் இல்ல; ஒரே பையன், கடைவைச்சிருக்காரு, சொந்த ஊடு இருக்கு; சாப்பாட்டுக்கு நெலம் இருக்கு; இல்லாட்டியும் நம்ப பொண்ணுதான் சம்பாதிக்கறாளேன்னுதான் கொடுத்தோம். இப்ப பாருங்க” என்று பேசிக் கொண்டே போனவரை முருகன் இடைமறித்தான்.

“இப்பவும் ஒண்ணும் ஆகலிங்க, இதெல் லாம் குடும்பத்தல சகஜம்தானுங்க; நீங்க பாக்காததா?”

“எதுண்ணே சகஜம்; கடையை ஒழுங்கா நடத்தாம நஷ்டத்துலேயே கொண்டுபோய் உடறதா? கேட்டா எடக்கு மடக்கா பதிலு பேசறதா?” என்று பக்கத்து அறையிலிருந்து வந்த நிர்மலா பொரிந்து தள்ளினாள்.

“நிர்மலா, நீ சும்மா இரு” என்று அதட்டினார் அவள் அப்பா.

“இல்லிங்க, பேசட்டும், எங்களுக்கும் வெவரம் தெரியணும்ல” என்றான் மாதவன்.

“ஏண்ணே! ஒங்களுக்குத் தெரியாததா? ரெண்டு மாசம் முன்னால போஸ்ட் ஆபீஸ்ல வேலைசெய்யற ரகோத்தமன் கல்யாணத்துக்குக் கடன்ல மளிகை சாமான் கொடுத்தார்ல”

“ஆமா, அவன் எங்களுக்குத் தெரிஞ்ச வனாச்சே! மொய்ப்பணம் வந்ததும் மறுநாளே வந்து பாக்கியைத் தீத்துடறேன்னு சொன்னானே”

“ஆமாங்கா அப்படித்தான் அன்னிக்குப் பேசினது” என்றான் முருகன்.

“இன்னிக்கு வரையிலும் வரலிங்க. முழுசா எட்டாயிரத்து எண்ணூத்தி சொச்சம். போயி கேளுன்னு சொன்னாலும் கேக்கமாட்டேங்கறாரு”

“எங்களுக்குத் தெரியாதுங்க; எங்ககிட்ட சின்னசாமி இதைப் பத்தி ஒரு வார்த்தைகூடச் சொல்லலிங்க” என்றான் மாதவன்.

“ஆமா; இதெல்லாம் ஏன் சொல்லப் போறாரு”

“சரிம்மா; இன்னும் ஒரே வாரத்துல நான் வசூல் செஞ்சு தந்துடறேன் போதுமா” என்ற முருகனைப் பார்த்து “நீங்க எதுவானா செஞ்சிக் கிங்க; நான் இனிமே அங்க வர்றதா இல்ல” என்றாள் நிர்மலா. அவள் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது. அவள் அப்பா தொடர்ந்தார்:

“இதோட நேத்திக்கு வேற ஒருத்தருக்குக் கல்யாணத்துக்குக் கடன் கொடுத்திருக்கிறாராம். சாமான்லாம் வாங்கிப்போட்டா கடன் மேலேயே அதிகம் கெடுத்துத் தீத்துடறாரு. வேற வியாபாரம் ஆரம்பிக்கலாம்னு சொன்னாலும் கேக்கமாட் டேங்கறாரு. ”

மாதவன் ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தான். சின்னசாமி பற்றிய புகார்கள் உண்மையானவையே என்பது அவனுக்கு மிகவும் நன்றாகத்தெரியும். ஆனாலும் என்ன செய்வது? ஏதாவது செய்தாக வேண்டுமே!

“சரிங்க! இனிமே எல்லாம் சரியாயிடும்! நிர்மலாவை அனுப்புங்க; நாங்க பாத்துக்கறோம்” என்றான்.

முருகனும் “ஆமாங்க; நாங்க கடைக்குப் போயி யாரு யாருகிட்ட பாக்கின்னு கேட்டு வசூல் பண்ணறோம். அதோட இனிமே யாருக்கும் கடன் கொடுக்க வாணாம்னு கண்டிப்பா சொல்லிட றோம்!”

நிர்மலாவின் அப்பா அவளைப் பார்த்தார். அவளோ தலையைக் குனிந்து கீழே பார்த்துக் கொண்டே “அதெல்லாம் சரியா வராதுண்ணே அவரு யாரு சொன்னாலும் கேக்கமாட்டாரு” என்றாள்.

“இதோ பாரு நிர்மலா; எங்க அப்பாவை உட்டே அவனுக்கு புத்தி சொல்லச் சொல்றேன் போதுமா?” என்று முருகன் உத்தரவாதம் கொடுத்தான்.

அன்றைக்கு மேலும் மூன்று மணிநேரம் வாதாடிப் போராடி நிர்மலாவைக் கொண்டு வந்து சேர்த்தது இப்போது நினைத்தாலும் மாதவனுக்குப் பெருமையாய் இருந்தது. கொஞ்ச நாளில் சின்னசாமியும் மளிகைக் கடையை மூடிவிட்டு வங்கியில் கடன்வாங்கி மிதிவண்டி வாடகை நிலையம் வைத்துவிட்டான்.

மாதவன் மும்பை சென்றும் கடிதத் தொடர்பு வைத்திருந்த சின்னசாமி ஓராண்டாக எதுவும் எழுதவில்லை. அதுபோலவே முருகனும் திருமணமாகி மும்முரமாக விவசாயத்தில் ஈடுபட்டுவிட்டான். அவனிடமிருந்தும் கடிதம் இல்லை.

என்ன செய்வது? வாழ்க்கை எல்லாரையும் பல திசைகளில் இழுத்துக் கொண்டு போகிறது. அதோ காற்றில் பறந்து செல்கிற அந்தத் தாள்போல என நினைத்தான் மாதவன்.

மறுநாள் காலை வழக்கமாகச் சந்திக்கும் தேநீர்க் கடையில் மாதவன் சின்னசாமியைப் பார்த் தான். அவன் ஆளே ஒரு சுற்றுப் பருத்திருந்தான்.

“என்னா எப்படி இருக்க? நிர்மலாஎப்படி இருக்காங்க?” என்று கேட்ட மாதவனுக்கு “எல்லாரும் நல்லா இருக்கோம்; நீங்கள்லாம் எப்படி இருக்கிங்க?” என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னான் சின்னசாமி.

“என்னா திடீர்னு வந்து நிக்கறே?” என்று அவன் தொடர்ந்து கேட்டான்.

“விடுப்பு கெடச்சுது; தத்கல்ல எடமும் கெடச்சுது; இன்னும் மூணுநாள்தான் இருக்க முடியும். சரி, கடை எப்படிப் போறது?”

“கடை நல்லாப் போவுது; ஒண்ணும் பெரிசா பிரச்சனையில்ல. வங்கியில வாங்கிய கடனையும் அடைச்சுட்டேன்” என்றான் அவன் மாதவனுக்கு நிம்மதியாய் இருந்தது.

“சரி; நான் போய் முருகனைப் பாக்கறேன்; மாலையில நாங்க ரெண்டு பேரும் உன் ஊட்டுக்கு வறோம்! நிர்மலா எத்தனை மணிக்கு வரும்” என்று கேட்டான் மாதவன்.

“இன்னிக்கு முடியாது மாதவா. நான் நாலு மணிக்கே கௌம்பி அவ வேல செய்யற எடத்துக்கே போயி கூட்டிக்கிட்டு திருவாரூர் போறோம். வர ஒரு வாரம் ஆவும்; நிர்மலாவோட சொந்தக் காரங்க கல்யாணம்” என்றான் வருத்தமுடன் சின்னசாமி.

“முருகன் வீட்டில் கிடைத்த கூழ் மும்பையில் கிடைக்காதது” என்று சொன்னபோது “ஆமாம்ப்பா நீங்கள்லாம் பெருநகரவாசியா மாறிட்டீங்கல்ல” என்றான் முருகன்.

“நானும்தான் ஒன்ன மும்பைக்கு வான்னு கூப்பிடறேன்; நீதான் வர்றேன் வர்றேன்னு சொல்ற; ஆனா வரமாட்டேங்கற”

“எங்க மாதவன் வர்றது? மாடு, கன்னு, வெவசாயம் இதெல்லாம் பாத்துக்க பொறுப்பா யாரும் கெடைக்கமாட்டேங்கறாங்க; யாராவது கெடச்சா ஒருவாரம் வரலாம்; என் பொண்டாட்டி யும் ஆசையா போயிட்டு வரலாம்னுதான் சொல்றா”

“வழியில சின்னசாமியைப் பாத்தேன்; சாயங்காலம் ஒன்னையும் கூப்பிட்டுகிட்டு அவன் ஊட்டுக்குப் போயி பேசிக்கிட்டிருக்கலாம்; நிர்மலாவையும் பாத்தமாதிரி இருக்கும்னு கேட்டேன்”

“சரி, வாங்கன்னு சொல்லியிருக்க மாட்டானே”

“ஆமா, நீ சரியா சொல்லிட்டியே, மாலையிலேயே கௌம்பி அவனும் நிர்மலாவும் திருவாரூர் போறாங்களாமே, வர ஒருவாரம் ஆவுமாம்”.

“எல்லாம் பொய்யி” என்றான் முருகன் சிரித்துக் கொண்டே.

“என்னடா சொல்ற” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் மாதவன். “ஒங்கிட்ட சொல்றதுல என்ன தப்பு? சின்னசாமி இப்ப ஆளே மாறிட்டான்டா”

“ஏன் என்னா ஆச்சு?”

“மிதிவண்டிக்கடை நல்லாதான் போய்கிட்டு இருந்தது. அவனுக்கு ஒரு குழந்தையும் பொறந்தது. ஆம்பளப்புள்ளதான்; சரி நல்லா முன்னேறிட்டான்னுதான் நெனச்சுகிட்டிருந்தேன்”

“அப்புறம் என்னாச்சு?” என்றான் மாதவன்.

“நான் கடை வைக்கும்போதே அடையாளம் தெரியாதவங்களுக்கெல்லாம் வண்டி தராதேன்னு சொன்னேன். அவன் கேக்கல; மூணுவண்டி போனது திரும்பி வரல; ஸ்டேஷன்ல புகார் குடுத்தா வாங்க மாட்டேங்கறாங்க”

“எப்படிடா மிதிவண்டியெல்லாம் கண்டு பிடிக்க முடியும்” என்று கேட்டான் மாதவன். என்னபேசுவதென்றே தெரியாமல் அவன் மனம் குழம்ப ஆரம்பித்தது.

“சரி சொல்லு அப்புறம் என்னாச்சு?”

“நிர்மலா எவ்வளவு சொல்லியும் கேக்காமல் வார்டு மெம்பர் தேர்தலுக்கு நின்னான். டெபாசிட் கூட வாங்காமல் தோத்தான்”

“நீ எல்லாத்தையும் வேடிக்கை பாத்துகிட்டு இருந்தியா?”

“இதான வாணான்ட்றேன். எவ்வளவோ புத்திமதி சொன்னேன்; கேட்டாதன; எங்க ஊட்டுக்கே கூப்பிட்டு எங்கப்பாவும் நல்லாதான் ஒறைக்கமாதிரி சொன்னாரு. அவன் எதுக்கும் மசியல”

“சரிடா; சீக்கிரம் முடிடா”

“கடை எல்லாம் போச்சு; வேற வேலயும் இல்ல; படிச்சிருக்கீங்க; வீட்லயே நாலு புள்ளங் களுக்கு டியூஷன் சொல்லிக்கொடுங்கன்னு நிர்மலா சொல்லியிருக்கு; தெனம் வீட்ல சண்டைதான். ஒருநாளு நிர்மலா மேல கையை நீட்டிட்டான். அது ஊட்டைவிட்டு போயி பத்துமாசம் ஆச்சு”

“ஏண்டா முன்ன மாதிரி நீ போயிப் பேசறதுதானா?”

“எல்லாம் நானும் எங்கப்பாவும் ரெண்டு தடவப் போய் பேசிக் கூப்பிட்டோம். ஆனா அவங்க அப்பாவே, ‘வேணாம்; உட்டுடுங்க; எங்க கையெழுத்து போடணுமோ நிர்மலாவை போடச் சொல்றேன்’னு ஒரேயடியா சொல்லிட்டாரு; இப்ப இவன் சும்மா சுத்தி வரான்”

மாதவனுக்கு மனம் மிகவும் வலித்தது. ஒன்றும் பேசாமல் வெளியே வந்தான். தன்னிடமே ஏன் சின்னசாமி மறைத்தான் என்பது அவனுக்குப் புரியவில்லை. வீட்டினுள்ளே நுழையும்போது “என்னடா ஒரு மாதிரியா இருக்க? சின்னசாமி கதையைக் கேட்டுட்டு வந்தியா?” என்றாள் மாதவனின் அம்மா.

Pin It