ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகள் நடக்கும் போது, அணிவகுப்பில் நம்முடைய வீரர்கள் மூவர்ணக்கொடிய ஏந்தி நடைபோடும் போது தேசபக்தியால் நெஞ்சு விம்மும். பதக்கப்பட்டியலில் நம்முடைய தாய்த்திருநாட்டின் பெயரை கண்கள் தேடித்திரியும். வெள்ளி, வெண்கலம் என்று ஒன்றிரண்டு பதக்கங்கள் கிடைத்தால்கூட உற்சாகத்தால் துள்ளிக்குதிப்பார்கள் இந்தியர்கள்.

இப்போது தில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி துவங்குவதற்கு முன்பே விளையாட்டு மைதானத்தில் ஊழல் கொடிபிடித்து நடைபோடும் போது ஒவ்வொரு இந்தியனையும் அவமானம் கொத்தித்தின்கிறது. வெட்கத்தால் தலை கவிழ்கிறது.

காமன்வெல்த் என்ற அமைப்பே விசித்திரமானது. அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் மற்றும் அதனால் அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் கூட்டமைப்புதான் அது. அவ்வப்போது இந்த நாடுகள் கூடி தாங்கள் அடிமைப்பட்ட கதைகளை பகிர்ந்துகொள்வதோடு பொருளாதார ஒத்துழைப்பு என்ற பெயரில் பக்கம் பக்கமாக உரையாற்றிவிட்டு திரும்புவார்கள். இந்த கூட்டமைப்பின் சார்பாக விளையாட்டுப்போட்டிகளும் நடைபெறுகிறது. இந்தமுறை காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கே பலகோடி ரூபாய் கைமாறியதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிசங்கர் அய்யர் குற்றப்பத்திரிகை வாசித்தார். காங்கிரஸ் உட்பட பல கட்சிகளும் அவரை கரித்துக் கொட்டின.

ஆனால் இப்போது நடைபெறும் ஊழல்களின் ஊர்வலத்தைப் பார்த்தால் மணிசங்கர் அய்யர் கூறியதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ரூ. 70 ஆயிரம் கோடி அளவிற்கு இந்த போட்டிக்காக இந்திய மக்களின் வரிப்பணம் வாரி இறைக்கப்படுகிறது.

இந்தப்போட்டிக்காக உருவாக்கப்பட்ட விளையாட்டு கிராமத்தில் நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்தது. அதைத்தொடர்ந்து மேற்கூரை கீழே விழுந்தது. விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த குடில்களில் அடிப்படை சுகாதார வசதிகள் கூட முறையாக இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை என்று பல நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தொடர்ச்சியாக அறிவித்தனர். சில நாடுகளில் வீரர்கள் தாங்கள் வெளியில் தங்கிக்கொள்வதாக வினயமாக கூறி விலகிக்கொண்டனர்.

இந்த ஊழல் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை. ஆளாளுக்கு அடுத்தவரை கைகாட்டுகிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங்கோ கடைசி நேரத்தில் பிரசன்னமாகி ஏற்பாடுகள் தயாராகட்டும்! என்று கட்டளையிட்டுவிட்டு கழன்று கொள்கிறார்.

விளையாட்டுப்போட்டி தயாரிப்பு என்றில்லை. அலைக்கற்றை வரிசைகளை ஏலம் விடுவதிலிருந்து அனைத்திலும் ஊழல் ஒரு புற்றுநோய்போல தேசத்தை அரித்துத் தின்றுகொண்டிருக்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஏற்பாட்டில் நடந்துள்ள இமாலய ஊழல்.

விளையாட்டுப்போட்டி பதக்கத்தில் ஜெயிப்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஊழல் போட்டியில் முதலிடத்தில் அனைவரையும் முந்திக்கொண்டு போகிறது மன்மோகன் சிங் அரசு. இந்த ஊழலிலும் யாரும் தண்டிக்கப்படப்போவதில்லை. தொடர்ந்து தண்டிக்கப்படுவது தேசம்தான்.

Pin It