“மொண்டிக் கிட்டுணன் மாதிரி லொள்ளு புடிச்ச பய ஊருக்குள்ளெ எவனுங் கிடையாது. அவனுக்கு காலு ஒண்ணுதான் ஒச்சமாப் போச்சு. ரெண்டு காலும் நல்லா இருந்ததோ இந்த ஊரையே வந்து பாருங்கடான்றிருவான். அவம் பேச்சும் ஆளும் ஒரு நல்ல சாதிக்காரப் பய மாதிரியா நடந்துக்கிடுறான்? ஆடு மேய்க்கிறவன் போலவா உடுப்பு உடுத்துறான்? அவஞ்சூம்பக்காலு தெரியாம வேட்டியை குதிங்காலுக்கு கீழே இறக்கிவிட்டு பெரிய்ய நாட்டாமை கணக்கா தரையெல்லாம் பரச விட்டுக்கிட்டு போறானே படவா இவனை யெல்லாம் கேட்க ஆளில்லாத வாகுதானே! ஊரோட தொக்கை கண்டுக்கிட்டான். மத்த பயக ளெல்லாம் ஒழுங்கா அவனவன் பாடு சோலின்னு கெடக்கல”.

பெரிய பண்ணை வீட்டு மேற்குச் சுவரையொட்டி சின்னக்குச்சிலு. அவம் பூர்வீகத்துல எவனோ ஒருத்தன் விசுவாசமா இருந்தாம்ன்னு சொல்லி, கொஞ்ச நேரம் மேனியை கிடத்திக் கிடவும் இம்புட்டு கஞ்சித்தண்ணி காய்ச்சிக்கிடவும் அப்பொயிருந்த முதலாளி அந்த இடத்தை போனாப் போகுதுன்னு எழுதிவச்சிருக்கார். வகையான பன்னிக நாலுபன்னி உள்ளே படுத்து எழுந்திருக்க முடியாது. அதிலெயிருந்துக்கிட்டு இந்த வரத்து வாரான்.

பிறந்தவுடனேயே இவன் ஆத்தா இவனை பொறட்டிக்கூட பாக்கலை போய்ச் சேந்து போனா. அப்பன்காரனும் பத்து வெள்ளாட்டை இவனுக்கு மொதுலா விட்டுட்டு மகனோட சோளப் பெண்டுக்காலு தரையில ஊனி நிக்கிற வரைக்கும் உசிரை இழுத்துப்புடிச்சி வச்சிருந்த மாதிரி இவன் லொலக்கு லொலக்குன்னு தரையில ஆட்டி ஆட்டி நடந்து வர்ற சித்திரத்தைப் பார்த்த க்ஷணத்துல உசிரை விட்டுட்டான்.

அப்பொதிலிருந்து ஆடுதான் மேய்க்கிறான். அவனா காய்ச்சி கலக்கி குடிச்சிக்கிடுவான். சுத்த பத்தமா உடுத்துவான், கையில கடியாரம் கட்டி யிருப்பான். மணி என்னான்னு கேட்டா பொழுதை பாத்துத்தான் சொல்லுவான். அதுவும் கிட்டத்தட்ட சரியாத்தான் இருக்கும். ஒரு நா ஒரு பொம்பளை ஓடியாந்து, கிட்ணா கிட்ணா மணி என்னப்பா ஆச்சுன்னு கேட்டிருக்கா.

“வா தாயி வா எந்தங்கச்சி பஞ்சவர்ணம் வந்து மணி கேட்டு நான் மணி இவ்வளவு ஆகுதுன்னு சொல்லாம வேற யாருக்கு சொல்லப்போறேன். ஆனா தாயி இப்ப அவசரமா ஒரு வேலையா போய்க்கிட்டிருக்கேன் போயிட்டு வந்ததும் வீட்டுல குடிக்க ஒரு பொட்டுத் தண்ணியில்லை. ஆத்துக்குப் போயி ஒரு குடம் தண்ணி கொண்டு வரணும். தொளுவில ஆட்டாம்புழுக்கை குப்பை ரெண்டு நாளா அள்ளாம ஒரு வண்டி சேந்து கிடக்கு. அதைக்கூட்டி அள்ளணும். ஆடுகளைக் கொண்டு போயி கண்மாயில போட்டுக் கொண்டு வரணும். இன்னும் ஏகப்பட்ட சோலி கிடக்கும்மா. நான் ஒத்தப்பரியாளு. இல்லேன் னா பளிச்சின்னு புறங்கையைப் புரட்டி மணி இன்ன ஆச்சுன்னு பட்டுன்னு தேங்காயைப் போட்டு உடைச்சமாதிரி சொல்லிப்புடுவேன். என் பாடுசோலி அவ்வளவுக்குள்ள இருக்கு. இல்லேன்னா இம்புட்டுத் தேறமாச்சுன்னு மணியைப்பாத்து உனக்குச் சொல்லாம வேற யாருக்குச் சொல்லப் போறேன் வரட்டுமா தாயி”.

ஆட்டைக் கொண்டுவந்து வீட்டுல அடைச் சதும் ஊரு சுத்தக் கிளம்பிருவான். ஊரு இளந்தாரி கள் பூராவும் இவனுக்குப் பின்னாடிதான் அலையுவாங்க. பேச்சுப்பேச்சு பேச்சிலேயே உலகத்தை அளந்திடுவான். பயம்ங்கிறதே அவன் பிறப்புல கிடையாது. யாராயிருந்தாலுஞ் சரி திண்டுக்கு முண்டாத்தான் பேசுவான். ஊர்ச் சம்சாரிகளுக்குன்னா இவனை சுத்தமாப் பிடிக் காது. ஆடுகளைக் கொண்டு போயி முழு வெள்ளா மையில விட்டுப்போட்டு எனக்குத் தெரியவே தெரியாதுன்னுருவான்.

அவன்கூட டவுனுக்கு லாத்தலா போயிட்டு வர்ற இளவட்டங்களுக்கு தினசரியும் எதாவது ஒரு சம்பவம் சிரிப்பும் கும்மாளமுமா ஆகி, அடுத்து எப்படா அவன்கூட போறதுன்னு காத்துக் கிடப் பாங்க. அன்னைக்கி அப்படித்தான் பஸ் ஸ்டாண் டுல வந்து நின்னுக்கிட்டு, பஸ்ஸுல காலே ஜுக்குப் போக காத்திருக்கிற பொம்பளைப் பிள்ளைகள்ல ரொம்ப கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கிற பொம்பளைப் பிள்ளையைக் காட்டி சுத்தியிருக்கிற பசங்ககிட்டே.

“ஏ லேய் அந்தா நிக்கிறாள்லே மஞ்சச் சுடிதார் போட்டு! அவள்ட்டே போயி நான் கூப்புட்டேன்னு சொல்லி கூப்புட்டு வாங்க”.

“ஏய் கிட்ணா எங்களைச் செருப்படி வாங்கச் சொல்றியா?”

“ஏம்பா? நான்தானே கூட்டியாரச் சொல்றேன். என்னைக் கையை காட்ட வேண்டியதானே”.

“நீ ஓடிப்போயிருவே நாஞ்சொல்லலேன்னு. மொத்துக்காப்பு நாங்கள்ல வாங்கணும்.”

“அப்பொச் சரி. இப்படிச் செய்யுவோம். நீங்க இங்கேயே நில்லுங்க. நாம்போயி நீங்க கூப்புட்டு தாச் சொல்லி கூட்டியாரேன்”னு விறுவிறுன்னு நடந்தான். அவ்வளவுதான் அவ்வளபேரும் ஒரே ஓட்டந்தான்.

இந்த வயசுலேயே அவனைப் பத்தியான கதை ஒண்ணா ரெண்டா. ஊருக்குள்ள தெரு அம்மிக் கல்லுல யாராவது மஞ்சள் அரைச்சிட்டு போயிருப் பாங்க. இவம்போயி இவன் துண்டுல அம்மிக் கல்லுலயிருக்கிற மஞ்சளை ஒத்தி எடுத்துக்கிட்டு தோள்ல போட்டுக்கிருவான். பயக என்ன கிட்ணா இதுன்னு கேட்டா, நாம்பாட்ல சிவனேன்னு தெருவழியே நடந்து போயிக்கிட்டிருந்தேன், மெத்து மேலயிருந்து அந்தக் குமரிப்புள்ள மஞ்சத் தண்ணிய ஒரு செம்பு நிறைய இருக்கும் ஊத்தி விட்டிருச்சி அப்டீம்பான். ஆனா எந்த வீடுன்னு மட்டும் சொல்ல மாட்டேம்பான். பயக அன்னைய கொறப்பொழுதும் மெத்து மெத்தா அண்ணாந்து பாத்துக்கிட்டு திரியுவாங்க. இவன் மேல ஊத்து னவா நம்ம மேல ஊத்தமாட்டாளான்னு! நேத்துப் பயதான்னாலும் ஊரைப் பத்தின அத்தனை விவரமும் அவனுக்கு அத்துபடி. வெளியூர் ஆள்கள் எது பத்துன விபரம்ன்னாலும் அதைக் கிட்ணனை கேட்டுத்தான் ஒரு தெளிவுக்கு வருவாங்க. உதாரணத்துக்கு பெண்ணு கொடுக்கல் வாங்கல், மாப்பிள்ளை வீட்டார் நிலவரம் சம்மந்தமா தாட்சண்யமில்லாம சொல்லீருவான். ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணம் முடிக்கிற தாவது. கிட்ணன்கிட்டெ ஒரு பொய் சொல்லீற முடியாது.

“என்ன கிட்ணா! அந்த மூலவீட்டார் வீட்டுல ஒரு மாப்பிள்ளை சம்பந்தமா சாரிக்க வந்தோம். பெரிய சம்சாரின்னாக நெசந்தானா?”

“ஆகா நல்ல குடும்பந்தான். நல்ல குணவான் தான். அவனுக்கென்ன பெண் கொடுக்கிறதுக்கு. ரெண்டேரு விவசாயி. தாராளமா கொடுக்கலாம். என்ன விசயம்ன்னா இந்த ஐப்பசி கார்த்திகை அடை மழை மாதங்கள்லதான் வீட்டுல கஞ்சித்தண்ணிக்கு இருக்காது. மத்தபடி எந்தக் கோளாறும் சொல்ல முடியாது.” ஏத்துன ஜோர்ல டம்முன்னு கீழே போட்டிருவான். இப்படிச் சொன்னா வந்தவன் நிப்பானா, நீ நல்லாயிருப்பே சாமின்னு அவனை ஒத்த கும்பிடு போட்டுட்டு திரும்பிப்பாக்காம ஓடிருவாங்க.

ஊருக்குள்ள இப்படி ஒரு பய இருந்துக்கிட்டு இவனை மீறி ஒரு நல்லது பொல்லது நடக்க மாட்டேங்குதேன்னு ஊரு மொத்தமும் இவம் மேல எப்படா பாயலாம்ன்னு நேரம் பாத்துக் கிட்டிருந்தாங்க. ஊர் பெரிய முதலாளி காதுலயும் போட்டுவச்சாங்க.

அன்னைக்கி ஊர்ல திருநாள். சாத்தூர் டவுனி லிருந்து வெங்கடாஜலபதிசாமி பல்லக்குல இந்த ஊருக்கு வந்து மறுநாள் யானை வாகனத்துல அல்லாருக்கும் அருள் பாலிச்சு முடிச்சு இருப்பிடம் போய்ச் சேருவார். ஊரே சொந்த பந்தத்தோட கோலாகலமாகிப் போயிருக்கும். ராத்திரி உபன் யாசம், கச்சேரி விடிய விடிய நடக்கும். வீட்டுக்கு ஒரு ஆள் சாமி தூக்க வந்து ஆகணும்.

கிட்ணனைப் போயி கூப்பிட்டாங்க. ஜனங் களுக்கு இன்னும் சுமக்கிற புத்தி போக மாட்டேங் குதேன்னு மொணங்கிக்கிட்டே வந்து சொன்னான். இந்தா பாருங்கப்பா அறுபது தேங்காயை எழுபது பிராமணங்க சுமந்த கதையெல்லாம் எங்கிட்டெ வேண்டாம். அது என்னான்னா (அவங்க கேட்காம லேயே இவனா விளக்கமும் சொன்னான்) அறுபது தேங்காயை ஆளுக்கொன்னா கையில வாங்கினா மிச்சம் பத்து பேரும் சும்மா நடந்து வருவான். அந்த வேலையெல்லாம் வேண்டாம். நாம என்ன சுமக் கிறது அவனுக பத்துப்பேரு என்ன கைவீசிட்டு வர்றதுன்னு அவ்வள தேங்காயையும் மூடையாக் கட்டி ஒவ்வொருத்தனும் கொஞ்ச கொஞ்ச தூரம் நாக்குத் தள்ள சுமந்திருக்கான். இதிலே ஏத்திவிடுற இறக்கி விடுற வேல வேற.

அது மாதிரி வெங்கடாசலபதி சாமி. திறமா யிருந்தா கைமுழத்துக்கு ஒரு முழம் இருப்பாரு. அதை ஒரு மஞ்சப் பையில் வச்சு சைக்கிள்ல ஒருத்தன் அரை மணிநேரத்துல ஊருக்கு கொண்டு வந்திரலாம். அதை விட்டுப்போட்டு அத்தம் பெரிய பல்லக்குல ஏத்திக்கிட்டு ஊர்ல இருக்கிற மொண்டி சண்டி மொதக்கொண்டு முறைபோட்டு சுமந்தாகணும்ன்னா பெரிய பைத்தியாரத்தனமா வுள்ல இருக்குன்னு சொல்லிப்போட்டு, மூஞ்சியை ஓரமா திருப்பிக்கிட்டான்.

இதோட விட்டிருந்தா பரவாயில்லே. அன்றைய திருவிழா ராத்திரி ஊர்ப்பொட்டல்ல “பிரணவ மந்திரம்” உபன்யாசம் நடந்தது. ஆச்சாரியார் பக்தி ரசம் சொட்டச்சொட்ட ஓம் என்ற பிரணவமந்திரம் பற்றி ஸ்லோகங்களோட மக்களை பக்தியில் ஆழ்த்திக்கிட்டிருந்தார். வைணவா திருவிழாவுல சைவ உபன்யாசம், இரண்டு தரப்புலயும் நிரந்து சைவ, வைணவ பக்தர்கள் திரண்டு வந்திருந்தாங்க.

கைலேங்கிரியில் முருகன் பிரம்மனை பிடித்து நிறுத்தி கேள்வி மேல் கேள்வி கேட்கிறான். படைப்புத் தொழிலின் மூலமந்திரமான ஓம் என்கிற பிரணவத்திற்கு என்னபொருள்? சிறுவன் முருகன் கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. அதாவது, அதாவது என்று திணறிப் போனார். ஒரு கட்டத்தில் கோபமாகிப்போன முருகன், பிரம்மனின் தலையில் ஓங்கி ஒரு குட்டு குட்டினான்.

பிரம்மா தலையில் குட்டினால் சும்மாவா? ஈரேழு லோகங்களும் கிடுகிடுத்துப்போய் சிவ பெருமான் தலையிலும், அடிவிழுந்தது. உடனே சிவன் முருகனை அழைத்து நீதி கேட்டார். படைப்புத் தொழிலைக் கொண்டவர் மூலத்தை அறியாததினால் அந்தத் தண்டனையை தந்ததாக முருகன் சொன்னான். பிரணவத்தின் அர்த்தம் தெரிந்தவரே தண்டனை தரவேண்டும். உனக்குத் தெரியுமாடா சிறுவா என்று சிவன் கோபத்தோடு முருகனைக் கேட்டார்.

நான் ஆசானாக ஆசனத்தில் அமர்ந்து நீங்கள் மாணாக்கனாக தரையில் அமர்ந்து விளக்கம் கேட்க தயாரானால், ஓம் மந்திரத்தின் விரிவைச் சொல்ல தயார் என்றான் முருகன். அப்படியே சிவன் கீழே அமர்ந்து ஆசனத்தில் வீற்றிருக்கும் முருகனிடத்தில் மந்திராபதேசம் கேட்க ஆரம்பித்தார்.

ஆச்சாரியார் இந்த இடத்தில் உபன்யாசத்தை நிறுத்தி பொதுமக்களைப் பார்த்து “முருகன், தந்தை யான சிவபெருமானுக்கு காதோடு காதாக பிரணவ மந்திரத்தைச் சொன்னார். என்ன சொன்னார்?”

ஆச்சாரியார் பொதுமக்களைப் பார்த்துக் கேட் டார். எல்லாரும் அமைதியாயிருந்தார்கள். ஒரு சிலர் ரெண்டு கையையும் மேலே உயர்த்திக் காட்டி னார்கள். (அவனுக்குத்தான் தெரியுமாம்.)

“என்ன சொன்னார்?” -கூட்டத்தில் இன்னும் அமைதி. “என்ன சொன்னார்?”

“அவனவன் அவனவன் சோலிக்கழுதைய ஒழுங்காப் பாருன்னு சொன்னார்”

இந்த தடாலடி பதிலைக் கேட்டு எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். ஒரு மூலையில் மொண்டிக் கிட்டுணன் நின்றுகொண்டிருந்தான். உபன்யாசர் அவனைக் கோபமாப் பார்த்தார்.

“பிறகென்ன சொன்னாரு?” என்றான் கிட்ணன்.

“எதாச்சும் உளறாதீரும் ஓய்.... கிண்டலடிக்க இது நேரமில்லை. எல்லாம் வல்ல முருகன் சொன்னான். “சகலமும் என்னுள் அடக்கம்” என்று பொருள் சொன்னான்.

“யோவ்! முருகந்தான் அவன் ஐயாகிட்டே காதோட காதா வாய்வச்சு சொன்னானே அது எப்படி உமக்குக் கேட்டது?”

ஆச்சாரியார் வெலவெலத்துப் போனார். “அவனவன் சோலிக்கழுதைய பார்க்கச்சொல்லி சொன்னது ஒம்ம காதுல எப்படி விழுந்தது?” என்று கிட்ணனை மடக்கினார். கூட்டம் பூராவும் “அதானெ...” என்றது.

“அதான் காதோட காதா சொன்னது என்னான்னு எவனுக்குந் தெரியாது. அவனவன் அவனவனுக்கு தகுந்த மாதிரி புளுக வேண்டிய தான!”.

அதுக்கு மேல ஆச்சாரியாருக்கு உபன்யாசம் ஓடலை. பொட்டலத்தைக் கட்டிக்கிட்டு கிளம்பீட் டார். வழக்கமா ஒரு நல்ல காரியம் பண்ணுன திருப்தியில கிட்ணனும் தூங்கப் போயிட்டான். பிறகுதான் விவகாரமே வந்தது.

முதல்நாள் உபன்யாசம் பாக்கப்போன முழிப் புல மறுநாள் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடாமல் நல்லா தூங்கீட்டான் கிட்ணன். ஆடுகள் பெரிய முதலாளி தோட்டத்துல விழுந்து அழிம்பு பண்ணீருச்சி.

ஊர் சம்சாரிகளுக்கு ஒரே கொண்டாட்டம். பெரிய இடத்துல சிக்கீட்டான். வகையா மாட்டிக் கிட்டான். இதோட இவனைத் தாணிச்சிர லாம்ன்னு சந்தோசமாயிருந்தாங்க. தூங்கிக்கிட்டிருந்தவனை கையோட இழுத்திட்டு வரச்சொன் னார் மொதலாளி.

“ஏண்டா மொண்டிப்பயலே! அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில எந்தோட்டத்துலேயே வந்து கைவச்சுட்டியா. நாலு ஏக்கர் கத்திரிச்செடி நாசமாப் போச்சி. ஆயிரம் ரூபாய அபராதமா கட்டிப் போட்டு நாளையிலிருந்து ஆட்டை எழுப்பு”

“நாலுபேரு அழிவைப் பாத்துட்டு சொல்லட் டும் மொதலாளி கட்டுப்படுறேன்”

“ஏலே தாயோளி மொதுலு எம் மொதுலுடா நாலுபேரு எவன்டா பஞ்சாயத்து பண்றது”

“என்னம்மோ மொதலாளி ஆடுன்னு இருந்தா வெள்ளாமையில பச்சையைக் கண்டவுடன் ஒரு கடிகடிக்கத்தான் செய்யும் அது யேற்கை”

“யேற்கையாவது மயிராவது திமிரு. கடிக்குமோ வரப்பு தாண்டிப்போயி”

“பச்சையைக் கண்டதும் வாயில்லா சீவன் பறப் பெடுத்துப்போறது நியாயந்தானே மொதலாளி. இந்த ஒரு தடவை மாப்புக்கொடுங்க மொதலாளி”

“மாப்புக்கொடுக்கலாம்ன்னுதான் பாத்தேன். ஆடு பச்சையில வாய் வெக்கிறது யேற்கைன்னு சொன்ன பாரு. அந்தக் கிரித்திரியத்துக்குத்தான்டா ஆயிரம் ரூபா. கொண்டா எண்ணியவை.”

“சரி சாமி இருக்கிற ஆடுகள்ல ரெண்டு உருப் படிய வித்து உங்க அபராதத்தைக் கட்டிர்றேன். அதே மாதிரி உங்க விசயத்துலயும் நீங்க அப்படியே நடந்துக்கிடணும்”

“அட மயிரே! நா என்ன மயித்துக்குடா ஒங்கிட்டெ வரப்போறேன் வெண்ணே!” மொத லாளி கத்துனார்.

கிட்ணன் திரும்பி நடந்துக்கிட்டே:

“அப்பொ சரி இப்பொ சொல்றேன் கேட்டுக் கோங்க, நாளையிலிருந்து உங்க காரவீட்டு நிழல் எங்கூரைவீட்டு மேல விழுகப்படாது. நாளை காலையிலிருந்து கணக்கு. அப்படி விழுந்ததோ ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா தண்டம் கொடுக்கணும். சொல்லிப்புட்டேன்.”

“டேய் டேய் காரவீட்டு நிழல் இம்புட்டுக்கானு கூரை வீட்டுல விழாம எப்படிடா இருக்கும் அதெல்லாம் யேற்கைடா.”

“யேற்கையாம் யேற்கை எல்லாம் மப்பு”

நடையை வேகமாப் போட்டான்.

மொதலாளி பின்னாடியே ஓடியாந்தார். “டேய் நாலு பேருட்டே சொல்லிப்பாருடா”

 “நாலுபேரு எவன் பஞ்சாயத்து பண்ணுறது. மொதுலு எம் மொதுலுய்யா”.

Pin It