'உணவுப் பொருள் மானியத்துக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது; உரமானியமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது; இதுபோல் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கும் மானியம் ஒதுக்கப்படுகிறது. இதையெல்லாம் இழப்பு என்று கூற முடியுமா?

தில்லியில் 16. 2. 11 அன்று தொலைக்காட்சிகளின் செய்தி ஆசிரியர்கள் கூட்டத்தில் நமது பரிசுத்த பிரதமர் மன்மோகன்சிங், சாமர்த்தியமான எதிர்க்கேள்வியாகக் கருதிச் சொன்னது தான் இது. இதுவரை தேசம் கண்டிராத படி 'மகா பெரிய' மனிதர்கள் நடத்திய மெகா ஊழலினால் அரசுக்கு ஏற்பட்டஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் இழப்பையும், கஷ்டப்படும் எளிய மனிதர்கள் வாங்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசால் வழங்கப்படும் மானியத்தையும் ஒரே கணக்கில் ஒப்பிட்டுப் பேசிய புண்ணியவான் சுதந்திர பாரதத்தில் மன்மோகன்சிங் மட்டுமே!

அரசாங்க சொத்து ஊழல் வழியில் கொளளை போனதை இழப்பு இல்லை என்பதைப் போல் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல, மத்திய அரசின் உயர் அதிகார அமைப்பான பொதுக் கணக்குத் தணிக்கைக் குழுவும் மற்றும் சி.பி.ஐ.யும் - நடந்த ஊழல் குறித்து உரைத்த போதும் அது ஒருதேசத்தின் பொறுப்பான பிரதமருக்கு மனத்தில் உறைக்காதது விந்தை தான்! பூனை கண்ணை மூடிக்கொண்டது போல், 'எனக்கு எதுவுமே தெரியாது' என்று அவர் சொல்லிவிட்டார்!

இவருக்கு முந்தைய வேறு எந்தப் பிரதமரும் இந்தச் 'சாமர்த்திய' பதிலின் பெருமையைப் பெற்றிருக்கவில்லை!

110 கோடி மக்களைக் கொண்ட நம்நாட்டின் மிகப் பெரும்பான்மையோரும் வறுமையில் வாடும் ஏழைகளே! வறுமைக் கோட்டுக்குக் கீழே வதைபடுகிற மக்கள் என்கிற வரையறையிலும் உள்ள மக்கள் பலகோடி. இதுதான் நம்தேசத்தின் நிலைமை. 'பசி ஏப்பக்காரனும் புளிச்ச ஏப்பக் காரணம் ஒண்ணா?' - என்று நமது கிராமத்து மக்கள் சொல்வார்கள். அப்படித்தான் 'பரிசுத்த' மன்மோகனாரின் பொறுப்பற்ற கூற்றும் உள்ளது.

நாடாளும் அரசுக்கு - ஆட்சியாளர்களுக்கு - சமூகப் பொறுப்பு என்பது உண்டு. அது இருக்க வேண்டும். வாழ்க்கையின் நெருக்கடியில் கண்ணீர் சிந்தும் ஏழைகளுக்கு வழங்கும் உதவியில் லாப-நட்டக் கணக்கு பார்க்கக்கூடாது. அப்படிப் பார்க்கும் அரசு - ஆட்சியாளர்கள் ஒரு மக்கள் நல அரசாக-ஆட்சியாளராக இருக்க முடியாது! 'நாங்கள் அப்படிப்பட்டவர்கள் தான்' என்பதைப் பிரதமரின் பேச்சு அப்பட்டமாய்க் காட்டிவிட்டது. கொழுத்த பெரும் முதலாளிகளுக்கெல்லாம் பல்லாயிரம் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு அரசு சலுகை அளிப்பதெல்லாம், தொலைக்காட்சிகளின் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும் போது மன்மோகன் சிங்கின் மனத்தில் எழ வில்லை போலும்!

நாட்டில் பெரும் வசதி படைத்த கனவான்கள் மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டிய வருமான வரிபாக்கி 2 லட்சத்து 48,927 கோடி உள்ளது என்று பிப்ரவரி 22இல் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ரூபாய் 10 கோடிக்கும் அதிகமாய் வரி பாக்கி வைத்திருப்பவர்களும் உண்டாம்! இந்த இடத்தில் இதையும் சேர்த்துப் பார்க்க வேண்டியுள்ளது.

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னவரின் (மன்மோகன் சிங்கின்) கட்சியும், தகத்தகாய தமிழன் ஆ.ராசா ஊழல் செய்யவில்லை என்று கொஞ்சமும் கூச்சநாச்சமின்றிச் சொல்லும் கலைஞரின் கட்சியும் வருகிற மே மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வழக்கம் போல் கரம் கோர்த்து கனந்த பணமூட்டைகளோடும் ஏராளமாய் ஏமாற்றுச் சொல்லாடல்களோடும் களம் இறங்கவுள்ளன.

இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களுக்குத் தேவைப்படுவது பணத்துக்கும் பகல் வேசத்திற்கும் இரையாகாத விழிப்புள்ள நல்ல தேர்வு மனம்தான்.

Pin It